Search This Blog

Nov 8, 2016

காலை நேரக் காற்றில் -3



காலை நேரக்  காற்றில் -3

சென்ற சில வாரங்களாக, நான் அமெரிக்காவில் இருக்கும் என் மகனுடன் இருந்து வருகிறேன். இது கோடை முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பிக்கும் நேரம். இருந்தாலும், என் போன்ற சென்னை வாசிகளுக்கு சற்றுக் குளிரத்தான் செய்கிறது. அதுவும் அதிகாலையில் சற்று அதிகம்தான். இருந்தாலும் , முடிந்த அளவு காலை நடைப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். 
இங்கு நடைப் பயிற்சி செய்வது , சென்னையில் செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவம். **
அந்த அனுபவித்தில் முளைத்த ஒரு பாடல் இது.

அன்புடன்

ரமேஷ்.

** - காலை நேரக் காற்றில் 1 -http://kanithottam.blogspot.com/2015/09/1.html
        காலை நேரக் காற்றில் -2- http://kanithottam.blogspot.com/2015/10/2.html
இவை இரண்டும்  நான் சில மாதங்களுக்கு முன் எழுதியது.  இந்த தொடர்புகளுக்கு சென்று இவைகளையும் ரசிக்கலாமே!


காலை நேரக்  காற்றில் -3


சில்லென்ற வாடைக் காற்று முகத்திலே முட்டி மோதும்.
புல்நுனியின் முனைகள் மீது பனித்துளிகள் பூவாய்ப் பூக்கும்.
நீலமாய் விரிந்த வானம்  இடையிடை பஞ்சுக் குவியல்
காலத்தோ  டாதவன்  உதிக்கக்  காலையில்   பொழுதும் புலரும்.

கதிரவன் கிரணங்கள் நீண்டு பனித்துளியில் புகுந்திடும் போது
உதித்தெழும் வண்ணக் கலவை இயற்கையிடும் வாயிற் கோலம்
நீண்டு நெடிதாய் உயர்ந்து நிற்கின்ற மரங்கள் எல்லாம்
வானோக்கி வாழ்த்துப் பாடி விடியலை வாவென் றழைக்கும்

காலையில் வேலை செல்வோர் இயந்திர ஊர்திகள் எல்லாம்
சாலையின் இருமருங்கில் "சர்-சர்"என  விரைந்து  செல்லும்.
கலையாத தூக்கக் கண்கள்,  கையினில் காப்பிக் கோப்பை
சிலருமே  ஏந்திய வண்ணம் விரைவர்ரயில் நிலையம் நோக்கி

வாலிப வயதின ருடனே  வயோதிக மக்கள் கூட
கால்சட்டை அணிந்த வண்ணம் கால்நடைப் பயிற்சி செய்வார்.
நாமவரைக் கடக்கும் போது நகைமுக முறுவ லோடு
"சேமமுடன் செல்க இன்னாள்" என்றவர் வாழ்த்து ரைப்பார்

வீதிகள் வெறிச்சென் றிருந்தும் வாகனம் ஓட்டிச் செல்வோர்
நீதியுடன் நியமம் காத்து சந்திப்பில் நின்றே செல்வார்.
சாலையைக் கடக்க வேண்டி பாதையின் மருங்கில் நின்றால்
வேலைக்கு விரையும் வண்டியும் வழியினைக் கொடுத்து நிற்கும்.

உயரவே மெள்ள மெள்ள ஆதவன் உயரும் போது
வியர்வையால் உடலும் நனையும்; அயர்வுமே சிறிது நேரும்
நிழல்தரும் மரங்கள் அடியில் நீள்பலகை இருக்கை மீது
பழகியே சிறிது ஒய்வு; பின்னர் போய் வீடடைவேன் !

No comments:

Post a Comment