கொரானா அலைகள்
எனக்கும், நம்மில் பலருக்கும், கொரானவின் முதல் தாக்குதலின் போது இருந்த மனநிலைக்கும், இப்போது வீசும் இரண்டாம் அலையின் தாக்குதலின் போது இருக்கும் மனநிலைக்கும் ஒரு பெரிய வேற்றுமை இருக்கிறது.
இது பற்றி ஒரு பாடல்!
உங்கள் கருத்து? அறிய ஆவலாக இருக்கிறேன்!
அன்புடன்
ரமேஷ்
முதலாம் அலை
முதலாம் அலையும் பலமாய் நம்மேல்
மோதிய போது வீட்டினுள் நாமும்
இதுவும் கடந்து போகும் என்று
பதுங்கி இருந்தோம் பாது காப்புடன் !
நாள்தோ ரும்தொலைக் காட்சிச் செய்திகள்
அள்ளித் தெளிக்கும் அவலக் கதைகளை
உள்ளத் துள்ளே இருத்தா தேயோர்
புள்ளிக் கணக்காய் மட்டும் பார்த்தோம் !
நாமும் நம்மைச் சார்ந்த நண்பரும்
மாமன் மருகன் பிற்பல உறவும்
சேமம் குன்றா திருப்பத னாலே
மாமூ லாய்நம் வாழ்க்கையைத் தொடர்ந்தோம்!
இரண்டாம் அலை
பின்பு வந்தயிவ் விரண்டாம் அலையோ
இன்று போடும்வெறி யாட்டம் தன்னில்
நன்கு பழகிய நண்பர்கள் சிலரும்
நண்பரின் நண்பர் என்பவர் பலரும்
தெரிந்தவர் உறவினர் அக்கம் பக்கம்
இருப்பவர் எனப்பலர் நோய்வாய்ப் பட்டு
எட்டி இருந்த நோய்த்தாக் குதலின்
வட்டம் சுருங்கி கிட்ட வருகையில்
முதலாம் அலையின் முழுவுளக் காட்சி * * perspective
முற்றிலும் மாறி பற்றின்மை* போய் *detachement
மனதினில் நிறையுது பெருங்கழி விரக்கம்* * empathy
மனிதம் மீண்டும் உயிர்த்தது என்னுள்!