Search This Blog

Oct 28, 2017

தீபாவளியும் சுற்றுச்சூழலும்

தீபாவளியும் சுற்றுச்சூழலும் 

இது குழந்தைகளுக்காக ( சிறுவர்-சிறுமியர்களுக்காக?) நான் எழுதிய தீபாவளிப்  பாட்டு. 
அளவோடு வெடிகள் வெடித்து சுற்றுப்புறச்ச சூழ்நிலையைக் காப்பாற்ற அவர்களுக்கு ஒரு அறிவுறுத்தல்!
சற்று நாள் கழித்து வந்தாலும் நலன் பயக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன் 
ரமேஷ் 

தீபாவளியும் சுற்றுச்சூழலும் 




விடியற்காலை குளித்தபின்பு  கடவுளை வணங்கியே
மடித்துவைத்த புதியஆடை   உடுத்தியதன் பின்னரே
பிடித்தஇனிப்பு காரவகை பட்சணங்கள் பலவிதம்
கடித்துநொறுக்கி மூக்குமுட்ட உண்டுவிட்ட பின்னரே

சாக்குமூட்டை நிறையவாங்கி  வைத்தவெடிகள் வெடிக்கையில்

கேக்கும்சத்தம் காற்றில்வந்து  காதில்முட்டி முழங்குது.
ராக்கட்டுகள் வானம்முட்டும் தூரம்மட்டும் பறக்குது
தீயைக்கக்கும்  வாணவெடிகள் வர்ணஜாலம் புரியுது.

வெடித்துமுடித்து ஓய்ந்தபின்பு  தெருவில்சென்று நிற்கையில்
வெடிக்கும்போது   வெளியில்வந்த புகையும்எங்கும் சூழ்ந்ததால்
கண்எரிந்து  கண்ணீரும்   பொலபொலவெனக்  கொட்டுது.
கொடியநெடியும்   மூக்கில்ஏறி   மூச்சுமுட்டிப் போகுது

காற்றைஉள் ளிழுக்கும்போது  கலந்துமிதக்கும் துகள்கள்நம்

காற்றுப்பையுள்  போய்நுழைந்து   நுண்துளைகளை அடைத்திடும்.
சுற்றுப்புறச் சூழ்நிலையும் சீர்குலைந்து போவதால்
மற்றும்வேறு  பின்விளைவுகள் மேலும்மேலும் நிகழுமே .

பட்சணங்கள் தின்னும்போது மகிழ்ச்சியாக  இருப்பினும்
உட்கொண்டது   அதிகமென்றால்  வயிற்றுவலியும் வந்திடும்.
பட்டாசுகள்   வெடிக்கும்போது பரவசமாய்  இருப்பினும்
கட்டுக்குள்   இல்லையெனில் கொடியவிளைவு தொடர்ந்திடும்..

ஆதலினால் குழந்தைகளே தீபாவளி நாளிலே

மிதமான அளவோடு வெடிகளை வெடியுங்கள்
சுற்றுப்புறச்  சூழலுக்கு சேதங்களைக்  குறையுங்கள்
கற்றஇந்தப் பாடத்தையே மற்றவர்க்கும் கூறுங்கள்!











Oct 25, 2017

மீண்டும் பிறக்கிறான் நரகாசுரன்

மீண்டும் பிறக்கிறான் ---- 
நரகாசுரன்

அன்று

மூவுலகங்களையும்   தன் காலடிக்கீழ் கொண்டுவந்து
மக்களை வதைத்து
கொடுங்கோலாட்சி செய்த
நரகாசுரனை
அழித்தான் கண்ணன்.

அவன் அழிவைக்  கொண்டாடினர்  மக்கள்.

பிறந்தது தீபாவளி.


இன்று

தீபாவளிக்  கொண்டாட்டத்தில்
வெடிக்கும்  பட்டாசுகள் வெளிவிடும்
விஷப்புகையின்   உருவத்தில்
விஸ்வரூபம் எடுத்து
மக்களை மெள்ள மெள்ள அழிப்பதற்கு

மீண்டும் பிறக்கிறான்
நரகாசுரன்

அவனை அழிக்க
என்று வருவான்
கலியுகக் கண்ணன்?

காத்திருக்கிறோம்.





Oct 21, 2017

ஆதார் இணைப்பு.

ஆதார் இணைப்பு



இன்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் இடைவிடாது பேசப்படும் ஒரு தலைப்பு
 "ஆதார் இணைப்பு."கணினியைத் திறந்தாலும், கை  பேசியைத் திறந்தாலும் ,எல்லா 
வங்கிகளிருந்தும், தொலைபேசி நிறுவனங்களிலிருந்தும் ஆதார் எண்ணை இணைக்குமாறு 
அறிவுறுத்தல்!  
கொஞ்ச நாட்களாக, இந்த அறிவுறுத்தலும் மிரட்டலாக மாறி வருகிறது!
நீதி மன்றங்கள் இது பற்றி என்ன சொல்லப் போகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்!
இந்த "ஆதாரை"விட முக்கியமான ஒரு "ஆதாரத்தை" நம்முடன் இணைப்பதைப்  பற்றி  நாம் 
சிந்திக்கிறோமா?

அன்புடன்

ரமேஷ்

ஆதார் இணைப்பு 



வங்கிக் கணக்கு  முடங்கா  திருக்க
-----ஆதார் சீட்டைஅதனுடன்  இணைத்தார் .
சங்கட மின்றி வரிகள் கட்டிட
-----ஆதா  ருடன்பேன் கார்டை* இணைத்தார்.        * PAN CARD

பங்குக் கூறுச் சீட்டோ  டாதார்                                     * பங்குக் கூறுச் சீட்டு =ரேஷன் 
----இணைத்து  எரிவா யுருளை பெற்றார்.             * எரிவாயுருளை = GAS CYLINDER
வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பால் 
----எரிவாய் விலையில்  சலுகைபெற்றார்.

ஆயுள் ஈட்டு உறுதி ஆவணம் *                                                * Life Insurance Policies
-----வருங் காலத்து  வைப்பு நிதிகள்,*                                          * Provident Fund
கையில் ஏந்திய அலைபே சிகள்பின்     
-----கிரெடிட் கார்டுகள்*  அனைத்தையும்  இணைத்தார்   * Credit Cards

ஆனால்

ஆதார் அட்டையை அரசு கொடுத்த 
-----ஆவணம் அனைத்திலும் இணைத்தல் மட்டும் 
போதா திப்பிற  விப்பயன் எய்த !
-----பாரோர் இதனை எப்போ துணர்வார்?

உலகில் உள்ள எல்லாப் பொருட்கும்
-----ஆதா ரம்இறை வன்இதை  மறந்தார்!
மூலா தாரம் அவனோ டின்றே
-----மனதை இணைப்போம்; மேன்மை அடைவோம்.

Oct 19, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 17, 18

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் - 17 ,18


ஈசாவாஸ்ய உபநிஷத்தின் கடைசி இரண்டு ஸ்லோகங்கள் இந்தப் பதிவில். 

சரியோ தவறோ , ஒரு  தைரியத்தில் இந்த உபநிஷத்தை பாடல் வடிவில் அமைக்கவேண்டும் என்ற ஆவலுடன் இதைச் செய்ய முனைந்தேன். இந்த முயற்சிக்கு அடிகோலாய்  இருந்தது, ராமகிருஷ்ணா மடப் பதிப்பகத்தின்  பதிப்பான,  ஈசாவாஸ்ய உபநிஷத்தைப் பற்றிய , சுவாமி அசுதோஷானந்தாவின், புத்தகமே. அவருக்கு எனது மானசீகமான நன்றி. இறையருளால் இதை முடித்துவிட்டேன். 

உபநிஷத்தின்  உட்பொருளை என் பாடல்கள் சற்றேனும் பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன். 

முந்தைய பதிவுகளை படித்து ஊக்குவித்த  அனைவருக்கும் நன்றி.

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு :
இதனுடன் நிறைவு பெரும் இந்தப் பகுதியின் முந்தைய இணைப்புகளைப்  பற்றிய விவரங்களை (( 1 முதல் 16 ஸ்லோகங்கள், அவர்களின் மொழிபெயர்ப்பு, அவை குறித்த எனது பாடல்கள்) கீழே தந்திருக்கிறேன்.  கீழ்கண்ட தொடர்புகளில் காணலாம்.

http://kanithottam.blogspot.in/2015/1/blog-post_22.html
http://kanithottam.blogspot.in/2016/12/1-2.html
http://kanithottam.blogspot.in/2016/12/3_17.html
http://kanithottam.blogspot.in/2016/12/4-5.html
http://kanithottam.blogspot.in/2017/01/6-7_6.html
http://kanithottam.blogspot.in/2017/01/8.html
http://kanithottam.blogspot.in/2017/02/9_3.html
http://kanithottam.blogspot.in/2017/02/11.html
http://kanithottam.blogspot.in/2017/02/12-13-14.html
http://kanithottam.blogspot.in/2017/06/15-16.html






மொழிபெயர்ப்பு **

இந்த  உடம்பு (ஒருநாள்)  சாம்பலாக மாறும்! உடம்பிலிருந்து வெளியேறும் பிராணன் எங்கும் நிறைந்த அழிவற்ற ப்ராணனுடன் கலந்துவிடும். (அதனால்) மனமே, செய்தவற்றை நினைத்துப் பார்!  

எங்கள் எல்லாச் செயல்களையும்  அறிந்த அக்னிதேவனே , ஒளிப்பொருளே!  வினைப்பயனை அனுபவிக்கும் பாதையில் வழிநடத்தி , எங்களைத் தவறுகளில் இருந்து விலக்கு. உமக்கு மீண்டும் மீண்டும் வணக்கங்கள்.


Translation **

May my life merge with in the Immortal
When my body is reduced to ashes.
O mind, medidate on the eternal Brahman.
Remember the deeds of the past.
Remember, O Mind, remember

O God of fire , lead us by the good  path'
To eternal Joy. You know all our deeds.
Deliver us from evil, we  who bow
And pray again and again.

விளக்கம் *


ஆண்டியானாலும் அரசனானாலும் , எல்லார் உயிரும் ஒரு நாள் வெளியேறி ,உடம்பும்  சாம்பலாக மாறும்! நம் செயல்களின் பலனே நிலைக்கும். நிலையற்ற இந்த வாழ்க்கையின் தன்மையை உணர்ந்து தினமும் நாம் செய்யும் செயல்களின் விளைவுகளை ஆராய்ந்து ஒரு சுய சோதனை செய்ய வேண்டும்.  

எங்கள் எல்லாச் செயல்களையும்  அறிந்த ஒளிப்பொருளே!  நாங்கள் புரிந்த செயல்களின் வினைப்பயனை அனுபவிக்கும் பாதையில் வழிநடத்தி , மேலும் வினைப்பயன் சேரா வண்ணம் நாங்கள் நற்செயல்களே புரிய அருள் செய்திடு.

பாடல் 



மண்ணிற் பிறந்தோர் உடல்கள் ஒருநாள் எரிதழற் கிரையாகும் 
விண்ணை நிறைக்கும் ப்ராண   னுடனவர்  உயிரும் கலந்துவிடும்..
தினம்செயும் செயல்களின் நன்மை தீமையின் வினைப்பயன்                                                                                                                                       தொடர்ந்துவரும் 
மனமே அதனால் செய்த செயல்களை தினம்தினம் எடைபோடு!


எங்கள் செயல்களை எல்லாம் அறியும் எழுநாக்  குடையோனே!
மங்கா ஒளியே! அனுபவப்  பாதையில் எங்களை நடத்திவிடு.
மறச்செயல் விலக்கி அறச்செயல் புரிந்து சாஸ்வத சுகமடைய 
இறைவா உந்தன் பாதம் பணிந்து பலமுறை வேண்டுகிறோம்.




*- Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam, Chennai-4 


**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books






Oct 16, 2017

காளிங்க நர்த்தனம்-

 காளிங்க நர்த்தனம் -

தீபாவளி நெருங்கும்போது, நரகாசுகரை அழித்து தீபாவளிக்குக்  காரணமான கண்ணனைப் பற்றி ஒரு பாட்டு.
இது குழந்தைகளுக்கான கண்ணன் பாட்டு.
காளிங்க நர்த்தனத்தைப் பற்றியது.
குழந்தைகளும் ( நீங்களும்) ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்!
முடிந்த அளவு சுலபமான , சிறுவர்களுக்குப் புரியக்கூடிய, வார்த்தைகளையே உபயோகித்திருக்கிறேன். இது பற்றி உங்கள் கருத்துகளையும் , திருத்தங்களையும் அறிய ஆவல். பகிர்ந்துகொள்ளவும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்


அன்புடன்
ரமேஷ்









ஆயர்பாடி கோகுலத்தில் யமுனையாற்றின் கரையிலே
மாயக்கண்ணன் நண்பருடன் ஓடிவிளை யாடுறான்.
நதியிலோடும்  நீரிலிறங்கி  நீந்திவிளை யாடுறார்
குதித்துகுதித்து கூத்தடித்து கும்மாளந்தான் போடுறார்.

ஆத்தங்கரை  புல்வெளியில் மாட்டுக்கூட்டம்  மேயுது
மாடுகளின் மடியிலிருந்து பால்சுரந்து வழியுது
பூத்துக்குலுங்கும்  நந்தவனச் செடியின்  பூக்கள்வாசமே
காற்றில்மிதந்து கமகமவென மூக்கினிலே ஏறுது

சின்னக்கண்ணன் குழலெடுத்து கானங்களை இசைக்கிறான்
கண்ணைமூடி அனைவருமே தலையைஆட்டி ரசிக்கிறார்.
வண்ணப்பூக்கள் தொடுத்துமாலை கோபியர்கள் கட்டியே
கண்ணனுக்குப் போட்டுஅவன் அழகினையே ரசிக்கிறார்.

கடலைநோக்கி அமைதியாக யமுனைநதி ஓடுது
திடீரென்று டமாலென்ற பெரியசத்தம் கேட்குது
அடியில்நதியில் படுத்துக்கிடந்த பத்துத்தலை பாம்பொன்று
படமெடுத்து தலையைத்தூக்கி புஸ்புஸ்என்று சீறுது

வாலைச்சுழற்றி  நீரிலடித்து அட்டகாசம் செய்யுது.
அலைகள்போல நீரெழும்பி  கரைபுரண்டு ஓடுது.
நாலுபுறமும் தலையைச்சுற்றி  நீளமான நாக்கையே
நீட்டிக்கொடிய விஷத்தினையே நாற்புறமும் கக்குது.

பதறிப்பயந்து போனமக்கள் கூட்டமங்கு  மிங்குமாய்
சிதறியோடி செய்வதென்ன வென்றுதிகைத்து நிற்கிறார்.
கதறியழுது ஓடிச்சென்று கண்ணன் காலில் விழுகிறார்.
உதவிசெய்வாய் உயிர்காப்பாய் என்றுகூறி அழுகிறார்.

கருணைகொண்ட கண்ணனும் கோகுலத்தைக் காக்கவே
விரைந்துநதியில் இறங்கியே பாம்புடன் போராடினான்
வெருண்டெழுந்து உருண்டகண்ணை திறந்துபார்த்த  நாகமும்
சுருண்டவாலால் கண்ணனை சுற்றிநெருக்கப்  பார்த்ததே

தந்திரமாய் அப்பிடியில்  தப்பிவிட்ட  கண்ணனோ
பந்துபோல்  குதித்துஅந்த பாம்பின் தலைமேல்  ஏறினான்.    .
தன்னிரண்டு கால்களால் ஓங்கிஓங்கி மிதித்தபின்
தந்தனத்தோம் என்றுஅதன்  தலைமேல்நடன மாடினான்.

தலைவலியைத் தாங்காத நாகம் போரில்  தோற்றது
தலைகள்பத்தும் குனிந்துவணங்கி தலைகனத்தை விடுத்தது
தலைவனொருவன்   அனைவருக்கும் கண்ணன்என்று ஏற்றது
வாலைச்சுருட்டி  வைத்துக்கொண்டு வந்தவழி சென்றது.

கரையிலிருந்த  கோகுலத்தார் கைகள்தட்டி மகிழ்ந்தனர்
கரங்கள்கூப்பி சிரங்கள்தாழ்த்தி கண்ணனையே வணங்கினர்
காளிங்கன் மேலேறி நடமாடிய கண்ணனை
ஆலிங்கனம் செய்தணைத்து பெற்றோரும் வாழ்த்தினர் .






























Oct 14, 2017

கடவுளைத் தேடுதல்

அதிகாலை எழுந்து த்யானம் செய்வது கடவுளை உணரும்  வழி!

அன்புடன்




கடவுளைத் தேடுதல்

பாவுகின்ற பரிதியொளி புவிநிறைக்கு முன்னமே 
ஏவலின்றி  எழுந்தமர்ந்து இங்குமங்கும் மந்திபோல் 
தாவுகின்ற மனதடக்கி ஜீவனோடு ஒன்றிடின் 
கோவில்சென்று கடவுளைநாம் தேடிடவும் வேண்டுமோ?

பாவுகின்ற = பரவுகின்ற
ஏவலின்றி  = தூண்டுதலின்றி, தானாகவே
ஜீவன் = நம் உள்ளிருக்கும் பரமாத்மா 

Oct 9, 2017

ஒன்று முதல் ஒன்பது வரை

ஒன்று முதல் ஒன்பது வரை 

எண்ணிலும் , எழுத்திலும் , எண்ணத்திலும் அடங்காத இறைவனைப்  பற்றி , ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களை  அடக்கிய ஒரு பாடல்.

அன்புடன்

ரமேஷ்


("தானதான தானதான தானதான தானனா " என்ற மெட்டு )

மூன்றெழுத்து சேர்ந்துவந்த ஓரெழுத்து ஒமுடன் 
அஞ்சுஆறு ஏழெழுத்து மந்திரங்கள் சேர்த்திட்டு 
நாலுவேளை ஓதினால் நாலுஅய்ந்து  கோளையும்   
ஆளுபவன் அருளினால் ஈரெட்டும் கிட்டுமே! 


மூன்றெழுத்து சேர்ந்துவந்த ஓரெழுத்து--    அ ,உ ,ம என்ற மூன்று எழுத்துக்கள்                                                                                           சேர்ந்து பிறந்த ஓம் என்னும்                                                                                                         ஓரெழுத்து
அஞ்சுஆறு ஏழெழுத்து மந்திரங்கள்       --     நமசிவாய , சரவணபவ ,
                                                                                         நமோ நாராயணாய என்னும்                                                                                                     மந்திரங்கள்
நாலுவேளை                                                       --     காலை, மதியம், மாலை, இரவு
நாலுஅய்ந்து  கோளையும்                      -----      ஒன்பது கிரஹங்களையும்  ( 4+5=9)
ஈரெட்டும் கிட்டுமே                                     ----      பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு                                                                                           வாழ்க என்ற வாழ்த்தில் அடங்கிய
                                                                                          பதினாறு வகை நலன்களும்
                                                                                          கிடைக்கும்.  ஈரெட்டு=பதினாறு

ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ, ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரங்களை தினமும் நான்கு வேளைகள் ஜபிப்பவருக்கு நலன் அனைத்தும் கிடைக்கும்.                                                                                                                       


Oct 7, 2017

சங்கட ஹர சதுர்த்தி

சங்கட ஹர சதுர்த்தி 

பௌர்ணமிக்குப் பின், தேய்பிறையில் வரும் சதுர்த்தியே விநாயகப் பெருமானுக்கு உகந்த  சங்கட ஹர சதுர்த்தி.
இதை பற்றிய பல புராணக் கதைகள் உண்டு.
இந்திரன், பகவான் கிருஷ்ணன் , அனுமன், அகலிகை போன்ற பலரும் இந்த சதுர்த்தி பூஜையால் பலனடைந்ததாக ஐதீகம்.
இந்த சதுர்த்தி நாள் அன்று, இதுபற்றி ஒரு வெண்பா..
விநாயகர் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக!
அன்புடன்
ரமேஷ்


சங்கட ஹர சதுர்த்தி 

பொங்கிவரும்  பால்நிலவுப் பௌர்ணமியின் நான்காம்நாள்
மங்கிவரும் தேய்பிறையின் திங்களையே நோக்கிப்பின் 
துங்கக் கரிமுகத்துத்  தூயவன்றன்   தாள்பணிவோர் 
சங்கடங்கள்   நீங்கிவிடும் காண்