Search This Blog

Dec 5, 2023

இயற்கைச் சூழல்

 

இயற்கைச் சூழல் 

நண்பர் ஒருவர் அனுப்பிய படத்தின் தாக்கத்தால் எழுதிய பாடல் இது.

அன்புடன் 

ரமேஷ் 





உச்சிமலை உயரத்தில் பச்சைநிறப் புல்வெளிகள்!

அச்செடுத்து வார்த்ததுபோல் அடுக்கடுக்காய் விளைநிலத்தில்  

பச்சரிசிப் பயிர்வளர்க்கப் பாடுபடும் உழவர்கள்!

மச்சுவீட்டின் கூரைமேல் வெச்செனவு மின்தகடு *. *solarpanel

நச்சொழித்த நற்காற்றும் நச்சிநம்மைத் தேடிவர,

நச்சுயிர்த்தீ நுண்மிகளும் நமைத்தீண்டா நற்சூழல்.


Nov 9, 2023

சனாதனம்

சனாதனம்

சென்ற செப்டம்பர் மாதத்த்தில் சென்னையில்  "சனாதன ஒழிப்பு மகாநாடு" என்ற பெயரில் நடைபெற்ற ஒரு இந்துமத எதிர்ப்புக்  கூட்டம் , இங்கு மட்டுமன்றி நாடு முழவதும் ஒரு பேசுபொருளானது. தமிழக அரசின் மந்திரிகள் இருவரின் பங்கேற்போடு நடந்த இந்த கூட்டத்தில் சனாதனத்தை  அடியோடு ஒழிப்போம் என்று பிரகடனம் செய்தார் ஒரு அமைச்சர். இதன் விளைவாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புக்குப்  பிறகு  ' நாங்கள் இந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை; சாதிப்  பிரிவுகளை ஒழிப்போம் என்றுதான் கூறினோம் " என்று ஒரு விளக்கம் வேறு! சாதிப்  பிரிவுகளையே  நம்பி அரசியல் செய்யும் கட்சிகளிடமிருந்து வரும் இந்த விளக்கம் ஒரு வேடிக்கை ! இந்து மதத்தினரை  கிள்ளுக்கீரையாக நினைக்கும் இவர்களுக்கு இந்துக்கள் எல்லோரும், சாதிப் பாகுபாடு இன்றி  இணைந்து, வரும் தேர்தல்களில் ஒரு பாடம் புகட்ட வேண்டும். மதச்சார்பின்மையை மதிக்கும் மற்ற மதத்தவர்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும்.

அன்புடன் 

ரமேஷ்       

 


ச(ன்)னா தனம்பற்றித் சற்றும்  புரியாமல் 

கன்னா பின்னாவென்று வன்சொற்கள் விட்டெறிந்த  

புண்ணாக்குப் பதரொத்த புன்நாக்குப்* பேர்களையே  

தன்மான இந்துக்கள் என்றைக்கும்  எப்போதும் 

மன்னிக்க மாட்டார்கள்;  ஒன்றாய்  ஒருங்கிணைந்து  

நன்றாக ஓர்பாடம் நிச்சயமாய்க் கற்பிப்பர் 

பின்னோடு வரும்தேர் தலில்  

 

*புன்நாக்குப் பேர்கள் = இழித்துப் பேசும் நாக்கை உடையவர்கள்  






Oct 31, 2023

முகங்கள்

இந்தப் பாடலுக்கு முன்னுரை தேவை இல்லை!

அன்புடன் 

ரமேஷ் 

முகங்கள் 




உனக்கென்று ஓர் முகம் உறவுக்கு ஓர்முகம் 

ஊராருக் கெனவேறு பலமுகம் 

மனையாளுக் கொருமுகம் மக்கட்கு ஒருமுகம்

தனியாக ஒவ்வொருவர்க் கொருமுகம்   

  

அனல்கக்கி தணல்வீசும் சினமுகம்  

மகிழ்வோடு முறுவலிக்கும்   மலர்முகம் 

தனவானுக் கோர்முகம் தரித்திரர்க் கோர்முகம்

இனங்கண்டு கணப்பொழுதில்  மாறும்.   


கணக்கின்ற பலமுகம் ஊரார் உலகுக்கு 

உருவாக்கி உலவவே விட்டேன் 

எனக்கென்று என்னோடு ஜனித்திருந்த தனிமுகத்தை 

எங்கயோ நான்தொலைத்து விட்டேன் 


வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு முகங்களை 

அணிந்தே உலவுகிற தாலே 

எவ்வா றிருக்கும் என்முகம் என்றே 

என்றோ நான் மறந்து விட்டேன் 


கனக்கின்ற மனதோடு கேட்கிறேன் அம்முகத்தை 

கண்டவர் யாரேனும்  உண்டோ?

அனுதாபம் என்மேல் கொண்டம் முகத்தை 

அடையாளம் காட்டவே வேண்டும்!

 



Oct 23, 2023

நவராத்திரி- ஒன்பதாம் நாள்



நவராத்திரி- ஒன்பதாம் நாள் 



 


சித்திகள் எட்டையும் சிவனுக்கு அருளியபின் 

-----அவனுருவில் பாதி யானாள் 

முத்தேவர் முத்தேவி யர்களை சிருட்டித்த 

------சித்தாத்ரி தேவித் தாயே.


விட்டுணி* வின்துணைவி செல்வப் பொருள்தலைவி 

-----இலக்குமி என்னும் தேவி 

மொட்டவிழ்த்த தாமரை முழுமலர் மேலமர்ந்து 

-----அருள்புரியும் அலைமகள் இவள் 


சித்தன் பித்தன் நீறணிக் கடவுளெனப் 

-----பலபெயர் கொண்ட ஈசற் 

குற்றதோர் மனைவியாய் பனிமலை மேலமர்ந்து

------அருள்புரியும் மலைமகள் இவள் 


நான்முகத்தி னன்கிழத்தி ஞானங்க ளின்இறைவி

----- நன்னூலின்  தலைவி வாணி 

வெண்ணாடை யையுடுத்து வீணையக் கரமேந்தி 

-----அருள்புரியும் கலைமகள் இவள்


அலைமகள் மலைமகள் கலைமகள் என்றுபல 

-----உருவங்கள்  எடுத்த இறைவி

உலகையெலாம் காத்துப்பல நலங்களால் நிறைக்கவே 

-----தலைவணங்கி வேண்டிப் பணிவோம் 

* விட்டுணு=விஷ்ணு 

நிறைவு

 

சைலபுத் திரிபிரம்ம சாரிணி சந்திர 

-----காந்தை குஷ்மாண் டனி

ஸ்கந்த மாதாகார்த்தி யாயினி காலாத்ரி 

-----கௌரிமா சித்தாத் த்திரி 

என்றநவ தேவியரின் சரிதத்தை என்கவிதை

-----மூலமே எடுத்துரைத் தேன் 

இன்னும்பல நற்கவிதை நான்புனைந்து படைத்திடவே 

-----தேவியருள் தரவேண்டு வேன். 

   

 



     


Oct 22, 2023

நவராத்திரி- எட்டாம் நாள்

நவராத்திரி- எட்டாம் நாள்



 

வெண்சங்கம், வெண்ணிலவைப் பழிக்கின்ற நிறமுடையாள்

வெண்மைநிற எருதின்மேல் அமர்ந்தருள்வாள்  கௌரித்தாய். 

பண்புநெறி, நல்லொழுக்கம், அருள், கருணைக் கரசியிவள் 

இன்றிவளைத்  தொழுதே நாம் ஆன்மஞானம் அடைந்திடுவோம்.   




Oct 21, 2023

நவராத்திரி - ஏழாம் நாள்

 நவராத்திரி - ஏழாம் நாள் 


கருத்த உடலும் விரித்த தலையும் 

-----சினத்தை சிந்தும் சிவந்த விழியும் 

இரத்த பீஜனின்* இரத்தத் துளிகள் 

-----சிறிதும்  தரையில் சிந்தா வண்ணம்

உறிஞ்சி உதிரம் குடித்த இதழ்களும் 

-----மின்னலை மாலையாய் அணிந்த கழுத்தும் 

கருத்தபம்** மீது அமர்ந்து சமர்செ(ய்)ய

-----கூன்வாள்*** வச்சிரம்*** ஏந்திய கரங்களும்

கொண்டே இன்றைய ஏழாம் நாளில் 

-----எழுந்து அருளும் கொற்றவைத் தாயை 

வேண்டி வணங்கி அவளருள் பெறுவோம்;

-----கேட்கும் வரங்கள் கொடுப்பாள் அவளே!  

* இரத்தபீஜன் என்னும் அரக்கன் அவன் தரையில் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும்  மீண்டும் ஓர் அரக்கனாக உருவெடுக்கும் என்ற வரத்தைப் பெற்றவன். அதனால் காளி அவனை வாதம் செய்த பிறகு  ரத்தத்துளிகள் கீழே விழாமல் தன்  இதழால் உறிஞ்சி உண்டாள் என்பது ஐதீகம்.

** கர்த்தபம் = கழுதை

*** கூன்வாள் = scimitar, cleaver  வச்சிரம் = வஜ்ராயுதம் 




Oct 20, 2023

நவராத்திரி - ஆறாம் நாள்

நவராத்திரி - ஆறாம் நாள்


இந்த ஆறாம் நாளன்று தேவியை காத்யாயனி , மகிஷாசுரமர்த்தினி , துர்க்கை  என்னும் பெயர்களில் வழிபடுவோம். 

துர்கையின் அவதாரம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதி பதித்த ஒரு பாடலை இங்கே கொடுத்திருக்கிறேன்.

இதனோடு பாடலின் ஒலிவடிவத்தையும் கொடுத்திருக்கிறேன்.

படித்தும், கேட்டும் தேவியின் அருள் பெறுவீர்களாக!

அன்புடன் 

ரமேஷ் 


 




துர்க்கை அவதரித்தல்
முக்கண்ணன் முகமளித்தான்;  காலனும் குழல்தந்தான்.
அக்கினியும்  அவள்மூன்று கண்ணா யினான்  
நீள்நாசி  திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும் 
அஷ்டவசு தேவர்கை   விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும்  வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும்  அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள் !
 *-திருவுக்கு அரசன்= குபேரன்
** - மண்ணரசி = பூமாதேவி 
துர்க்கையின் படைக்கோலம்
திருமாலின் சக்கரம் ஒருகரத்திலே
திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே
இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்
தந்ததைக்  கொண்டனள்  ஒருகையிலே
வாயுதே வன்தந்த  வில்ம்புகள்
ஆயுதமாய்  ஏந்தினாள் ஒருகையிலே 
காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்
சூலியவள்  சூடினாள்  இருகரங்களில்.
மகிஷாசுர வதம்
உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்
செந்தழலோன் சீற்றமதைக்  கண்களில்  ஏற்றினள்
இமயவான் அளித்தஅரி  மாமீது ஏறினள்
சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைத்தனள்
துதி
எருதுருக் கொண்டமகி ஷாசுரன்  செருக்கறுத்து 
பொருதவன் சிரம்கொய்த துர்கா தேவியை  
கருத்திலே   நிறுத்திநவ நாட்கள்  நோன்பிருந்து 
கரம்கூப்பி  வணங்கித் தொழுவோம்.