தலைப்பு =கண்ணுக்கு வராத கனவு
தலைப்பு- கவிதைக்கு வராத வார்த்தை
வார்த்தை விவரிக்க ஏலாக் கவிதையுனை
சேர்கின்ற நாளென்று நேருமோ- காத்துத்
தவிக்குமென் தாகம் தணியும் வரைநான்
கவிதையில் சேராத சொல்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
குழந்தைத் தொழிலாளி
காண்போர் மனதை நெகிழச்செய்யும் இப்புகைப்படம் இலக்கியச்சோலை என்னும் தமழிதழில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு பொருந்தும் வகையில் ஒரு நான்கு வரிக் கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன். அதன்பிறகும் இப்படத்தின் தாக்கம் என் மனதை விட்டு அகலவில்லை.
"என்ன காரணத்தால் இந்தப் பெண் இந்த வயதிலியே இக்கொடுமைக்கு ஆளானாள்?" என்று யோசித்து இன்னும் சில வரிகளைச் சேர்த்து இக்கவிதையை நிறைவு செய்ய முயன்றதன் விளைவாக விளைந்த பாடல் இது!
அன்புடன்
ரமேஷ்
செங்கதிரோன் சுடர்க்கதிரால் சுட்டெரிக்கும் வெய்யிலிலே
அங்கையி லேபிடித்த கருங்கற் குழவிகொண்டு
செங்கொல்லன் வடித்த தங்கச் சிலையொத்த
சின்னஞ்சிறு பெண்ணிவளே செங்கல்லைச் சிதைக்கின்றாள்!
கொடுநோய் கொரானாவின் பிடியால் அடிபட்டு
அடைபட்ட பள்ளிகளில் ஒருவேளை சத்துணவும்
கிடைக்காமல் தடைபட்டுப் போனதனால் பசிப்பிணிக்கு
விடைகாண வேண்டியிவள் கல்லுடைக்க வந்தாளோ
பாடுபாட் டுழைத்துத்தன் குடும்பத்தைக் காக்காமல்
குடியென்னும் கொடுமரக்கன் கையுள்ளே கட்டுண்டு
அடிமையாய் அதற்காகி தன்கடமை தனைத்துறந்து
வீடுவிட்டு ஓடிவிட்ட தந்தையினால் இந்நிலையோ
தங்கையொன்றைப் பெற்றடுத்த தாய்க்குப் பதிலிவள்தன்
பங்குக்கு தொழில்செய்து பொருளீட்ட வந்தாளோ?
தாய்தந்தை இருவரையும் நோய்க்குப் பறிகொடுத்து
வாய்க்கரிசி போட்டபின்னே வாழும்வழி தேடினளோ?
செங்கதிரோன் சுடர்க்கதிரால் சுட்டெரிக்கும் வெய்யிலிலே
அங்கையி லேபிடித்த கருங்கற் குழவிகொண்டு
செங்கல்லைச் சிதைக்கின்றாள் சின்னஞ்சிறு பெண்ணிவளே!
இங்கிவளின் துயர்துடைக்க விடையென்று கிடைத்திடுமோ?
சென்ற மாதம் சென்னை மரீனா கடற்கரையில் நான் பிடித்த புகைப்படம் இது!
இதை நான் நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொண்டபோது, ஒரு நண்பர் " இப்படத்துடன் அது பற்றிய ஒரு பாடலையும் எழுதிப் பதித்திருக்கலாமே!" என்ற ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
அந்த உந்துதலில் விளைந்த பாடல் இது!
அன்புடன்
ரமேஷ்
பி.கு: இந்தப் படத்தில் இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இரு மகன்கள்!
கடற்கரைக் காட்சி
மெல்லக் கிழக்கினிலே மேலுழும்பும் சூரியன்தன்
என் கல்லூரி நண்பர் வரதராஜன் எனக்கு அனுப்பிய ஒரு ஆங்கிலக் கவிதையின் மொழி பெயர்ப்பு இந்தக் கவிதை.
இந்தக் கவிதை பஞ்சாபிக் கவிஞர் அம்ரிதா ப்ரீதம் அவர்களால் இயற்றப்பட்டது என்று கூறப்பட்டாலும், அது வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்று கூறுவோரும் உண்டு.
எது எப்படியானாலும் என் மனதை வெகுவாகத் தொட்ட கவிதை இது,
நீங்களும் அவ்வாறே உணருவீர்கள் என்ற நினைப்புடன்
அன்புடன்
ரமேஷ்
பி.கு : ஆங்கிலக் கவிதையும் இணைக்கப்பட்டிருக்கிறது
P>S : This is a translation of a poem by Amritha Pritam, the famous Punjabi poet. The poem struck a chord in my heart. Hope it does the same thing for you too! The English version also is given.
என் உயில் - (அம்ரிதா ப்ரீதம்)
நிறையுடல் நலமும் குறையிலா மனமும்
கொண்டின்று நானே வரையும் எந்தன்
இறுதிச் சாசனம் இதுவே யாகும்!
சிறைவிட் டென்னுயிர் பறந்த பின்னாலே
விரைந்து வந்தென் வீட்டின் அறைகளில்
திறந்த கதவின்பின் இறைந்து கிடக்கும்
பொருள்கள் அனைத்தையும் தேடி எடுங்கள்!
அடுக் களையிலும் படுக்கை அறையிலும்
முடங்கிக் கிடக்கும்நம் பெண்ணினத் தோரின்
உடைந்த கனவை மீட்டி எடுக்க
எந்தன் கனவை எடுத்துக் கொடுங்கள்!
வெளிநா டுகட்கே பிள்ளையை இழந்த
முதியோர் இல்லப் பெற்றோர் எல்லாம்
துளி மணித் துளிகள் களிப்புடன் இருக்கவென்
சிரிப்பின் சிதறலைத் தேடித் தெளிப்பீர்.
என்
மேசையின் மேலே கிடக்கும் வண்ணக்
குழம்புக் கலவையைக் கொஞ்சம் எடுத்து
தேசம் காக்கத் தன்னுயிர் ஈந்த
பாசக் கணவனின் உடலில் ஓடிய
செந்நிறக் குருதிக் கறை யைத் தனது
புடைவையின் கரையாய் அணிந்தவள் அவளின்
வெண்ணிறப் புடவையின் மீதே பூசி
வாழ்க்கையின் நிறத்தை மாற்றி விடுங்கள்!
என்
கண்ணில் வடியும் கண்ணீர்த் துளிகளை
ஒவ்வொன் றாக எண்ணி எடுத்து
பண்கள் பாடும் புலவர்க் களிப்பீர் ,
கவிதைப் பூவாய் அவையே மலரும்!
தன்
கற்பை விற்றும் தன் மகளுக்கு
கற்பித்திடுவாள் கல்வியை அவளே!
போற்றி யேஅவள் செயலை நானும்
பெற்றவென் பெருமை புகழ்க ளனைத்தையும்
மொத்த மாகவே அவளுக் களித்தேன்!
இனிவரும் நாட்களில் தனியொரு புரட்சியை
எடுத்து நடத்தும் திறனைப் பெறவென்
உணர்வில் ஊறிய சினங்களை எடுத்து
இளைஞர்தம் மனங்களில் ஏற்றுக இன்றே!
என்னுள் திளைக்கும் பெரும்பர வசத்தை
உலக சுகங்களை உதறித் தள்ளி
அனைத்தையும் துறந்து இறைவனைத் தேடி
அலையுமத் துறவிக் கெடுத்தளித் திடுக!
இவைகளை அனைத்தும் அவரவ ரிடத்தில்
அளித்தபின் மிச்சம் மீதி இருக்கும்
கவைக்கு உதவா கோபம் குரோதம்
பெரும் பேராசை சுயநலம் சூழ்ச்சி
பொய்கள் இவற்றை என்னுட லத்துடன்
சிதையில் ஏற்றி எரித்தழித் திடுக!
The English Version
மூன்றாம் அலை???
யூகானிலே பிறந்து உலகெங்கிலும் பறந்து
-----பரவிய கிருமி இதுவே! - இது
சாகா வரம் ஒன்று சாமியிடம் பெற்று
-----சோகாப்பில் எமை ஆழ்த்துதோ?
"ஆகா இதைநாங்கள் அழிக்க மருந்தொன்றை
-----அடைந்து விட்டோம்" என்கையில்- அழிந்து
போகாமல் இன்னுமிது ஒன்றிரெண்டு மூன்றென்று
-----அலைகளாய்ப் பாய்ந்து வருதே!
இரண்டாவ தாமலையின் தாக்கத் தினால் சிறிதும்
----மிரண்டு போகா மலே- கூடித்
திரண்டு தோளோடு தோளிடித் தேயடுத்த
-----அலையினை வரவேற் கிறார்.
ஆல்பாவிலே தொடங்கி பீட்டா காமா பின்பு
-----டெல்டாவென் றின்றா கியே- தனது
தோல்மாற்றி நாள்தோறும் பால்மாறி நம்மையே
-----ஏமாற்றி தினம் வாட்டுதே!
தாளிட்ட கதவின்பின் நாள்முழுது மேயடைந்து
-----மனம்நொந்து போகும் நிலையை - விட்டு
மீளவோர் வழிகாட்ட மும்மதக் கடவுளரை
-----வேண்டியே வணங்கு கின்றோம்!
அன்புடன்
ரமேஷ்
ஈட்டி எரியும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பாராட்டி ஒரு சிறு பாடல்!
அன்புடன்
ரமேஷ்
ஈட்டி எரிதலில் ஈட்டிய பதக்கம்
ஈட்டி எரியும் களத்தில் - எவரும்
-----ஈடில் லாத வகையில்
போட்டி போட்டு வென்று - ஒளிரும்
-----தங்கப் பதக்க மொன்றை
ஈட்டி எமக்குத் தந்தாய் - எங்கள்
-----நெஞ்சை நிமிர வைத்தாய்
நாட்டு மக்கள் சேர்ந்து - உனக்கு
----- நன்றி கோடி சொல்வோம்!
நூறு ஆண்டுக் காலம்- பாரத
----நாட்டைச் சேர்ந்த மக்கள்
யாரும் செய்ய இயலா - தொரு
-----செயலைச் செய்து வென்றாய்
பார தத் தாயின் -புகழை
-----பாரில் பரவச் செய்த
நீரஜ் சோப் ராவே - நீயும்
-----நூறு ஆண்டு வாழ்க!
விடிந்தும் விடியாத , உறக்கம் முற்றும் கலையாத, இளங்காலைப் பொழுது ஒரு கவிஞனுக்கு மிகவும் ஆக்கவளம் மிக்க நேரம். ஆனாலும் சில சமயங்களில் மனதின் எழும் கற்பனைகளுக்கு முழுதாக சொல்வடிவம் கொடுக்கும் முன்னாலேயே பொழுது விடிந்து விடிகிறது. பாடல் நிறைவு பெறுவதில்லை!
அத்தகைய ஒரு நிகழ்வு பற்றிய பாடல் இது!
அன்புடன்
ரமேஷ்
எழுதாத முதல் வரிகள்
-----விடியல்வே ளைக்கும் இடையே
விழிமூடிப் படுக்கையில் இருக்கையில் மனதிலே
-----மிதந்து வந்த வரிகள்!
எழுதாத என்பாடல் ஒன்றிலே அவைகள்
-----இரண்டாம் மூன்றாம் வரிகளாம்
விழிக்குமுன் பாடலின் முதல்வரியும் உதிக்குமென
-----கண்மூடிக் காத்திருந் தேன்!
பொழுதோடு வாராமல் முதலாம் வரியதுவோ
-----வழுக்கியே ஓடுகிற தே!
எழுந்த பின்னாலும் எவ்வேலை செய்தாலும்
------அவ்வேலை யில்லென் மனம்
முழுதாகச் செல்லாமல் முதலாம் வரியதைத்
-----தேடியே அலைகின்றதே!
வழிபடும் அறையிலே இறைவனின் முன்னாலே
-----அமர்ந்திருக் கும்போதி லும்
கழிவறை சென்றாலும் குளிக்கவே போனாலும்
-----உறுத்தலால் மனம் உழலுதே!
அழகான வரியொன்று இதுகாறும் வாராமல்
-----இழுபறியாய் இருக்கின்றதே!
பொழுதோடு இன்றுநான் உறங்கச் செல்லுவேன்,
-----கண்விழித்துப் பின் எழுகையில்
சுழியோடி கடல்மூழ்கி எழும்போது அவன்கையில்
-----ஒளிரும்நன் முத்தினைப் போல்
பிழையொன்றும் இல்லாத அழகான முதல்வரியும்
------என் பாட்டில் வந்து விழுமோ ?
பழுதொன்றும் இல்லாது என்பாட லும்நிறைந்து
----- முழுதாகி அழகு பெறுமோ?