Search This Blog

Aug 17, 2024

பிரதோஷப் பாடல் - 49

 பிரதோஷப் பாடல் - 49






  


வேத நாயகன் நாத போதகன்

-----சோதி வானவன் ஆதி சிவன்

பாதி உடலைப்பார் வதிக்கு அளித்தவன் 

-----நீல கண்டனவன் நடன சிவன்- *இத்                     *இத்தேதி = இந்தப் பிரதோஷநாள் 

தேதி யன்று*வீ பூதியணிந்து (ஸ்)தல                        *வீபூதி = திருநீறு 

-----நேதி* தவறாமல் வணங்குவரை                                  * நேதி = நியதி 

பாது காப்பவன் யாது மானவன் 

-----பாடி அவனையே போற்றிடுவோம்


Aug 8, 2024

குறள் மேல்வைப்பு வெண்பா - 24

 குறள் மேல்வைப்பு வெண்பா - 24

இரண்டு நாட்களுக்கு முன் இந்திய மங்கை வினீத் போகாத், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்  பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் தற்போதைய உலக சாம்பியனை  வென்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தது. தங்கப் பதக்கத்தை அவர் தட்டிச் செல்வார் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். ஆனால் அடுத்த நாளே "அவர் எடை பரிசோதனையில் கேவலம் ஒரு 100 கிராம் அளவு மட்டும் 50 கிலோவை மிஞ்சியதால், போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்" என்ற செய்தி பேரிடியாக வந்தது.

இந்த செய்தி எனக்கு வலியறிதல் அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறளை நினைவு படுத்தியது.

அதன் விளைவாக ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் 



 

மயிரளவே   கூடியதால்    தங்கம்   இழந்து   

துயருற்றாள் தோகையாள்  போகாத் - பயிற்பாடம் 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 

சால மிகுத்துப் பெயின்  

(இருவிகற்ப நேரிசை வெண்பா)

விளக்கம் : மென்மையான மயிலிறகு தான் என்றாலும், ஒரு சிறிய அளவுகூட, தாங்கும் அளவுக்கு மேல் ஏற்றினால், வண்டியின் அச்சு முறியும் . அதுபோலவே இங்கு 50 கிலோவுக்கு மேலே 100 கிராம் மட்டுமே அதிகம் என்றாலும், (0.2 சதவீதம்) போகாத் பதக்கத்தை இழக்க நேர்ந்தது!  

 


Jul 8, 2024

மவுனப் பறவை ஓர் முட்டை இட்டது

 மவுனப் பறவை ஓர் முட்டை இட்டது 


மொழி எவ்வாறு தோன்றியது என்பது பற்றி ஒரு அதீதக் கற்பனை!

அன்புடன் 

ரமேஷ் 



யுகம் யுகமாக சகம்பல  வற்றிலும் 

-----தனித்தே தவித்த மவுனப் பறவையின் 

அகத்தில் விதையாய் விழுந்து அதன்பின் 

-----விருட்சமாய் விரிந்த எண்ணங்கள் எல்லாம் 


ஒலி-மொழி வார்த்தைகள் இல்லா ததனால் 

-----புகலவும் பகிரவும் இயலுதல் இன்றி

வெளியில் வராமல் புதைந்துள படியால் 

-----வலியால் வருந்தி வருடங்கள் சென்றபின் 



மவுனப் பறவை ஓர் முட்டை இட்டது 

கவனம் கவனமாய்க் காத்து வந்தது 

முட்டையின் சட்டைகள் உடைந்ததன் வெளியே 

குட்டிக் குஞ்சுகள் வந்தன ஒலியாய்!

ஒன்றாய்ச்  சேர்ந்த ஒலியின் துகள்கள் 

நன்றாய் இணைந்து பிறந்தன சொற்கள்!

சொற்களும் எண்ணமும் இணைந்தே எழுந்தது  

நற்றமிழ் மொழியும்   கவிதையும் கதையும்!  


 



Jun 20, 2024

பிரதோஷப் பாடல் - 48

பிரதோஷப் பாடல் - 48

நேற்றைய பிரதோஷ நாளன்று பெங்களூர் குந்தனஹல்லியில் இருக்கும் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டவன் தரிசனம்! அங்கு மனதில் எழுந்த ஒரு பாடல்-  

பிரதோஷ நாதன்  திருவடிகளில் சமர்ப்பணம்.

அன்புடன் 

ரமேஷ் 




பிரதோஷப் பாடல் - 48


இமயப் பனிமலை மேலுறையும் இறைவனை

-----துதிக்கின்ற நாமமே ஓம்நமச் சிவாயவே 

அமரரைக் காக்கவே ஆலகா லம்உண்ட  

-----விமலனை வேண்டுவோம் ஓம்நமச் சிவாயவே

சமகருத் திரமெனும்* மந்திரங்கள் ஓதியே                   * சமகம், ருத்திரம்  சிவனைத் துதிக்கும் மந்திரங்கள்   

-----தினமவன் துதிபாடு வோம்நமச் சிவாயவே  

சமயக் குறவர்கள் நால்வரும்* நாள்தொறும்               *அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர்,சம்பந்தர் 

-----நாவுரைத்த மந்திரம் ஓம்நமச் சிவாயவே  

தமருகும் எனும்சிறு முரசினை ஏந்திய

-----நாதனைப் பாடுவோம் ஓம்நமச் சிவாயவே 

உமையவள் நாதனை நான்மறை வேதனை*                * வேதன் = இறைவன்  

-----உருகியே வேண்டுவோம்   ஓம்நமச் சிவாயவே 


Jun 4, 2024

பிரதோஷப் பாடல் 47

பிரதோஷப்  பாடல் 47




அரியும் பிரமனும் அடிமுடி காண 

-----முடியா துயர்ந்த முன்னவனை 

சரிபாதி உடலில் உமையாளை இருத்தி 

-----பிரியா தவளோ டிருப்பவனை 

கரிதோ லுரித்து பிறிதத் தோலை 

-----மருங்கில்* அணிந்த மகேஸ்வரனை                        மருங்கு = இடை 

பிறவிப் பிணிகளை அறுத்திட வேண்டியிப் 

-----பிரதோஷ நாளில் போற்றிடுவோம்.


அன்புடன் 

ரமேஷ் 


  

May 17, 2024

வலிகளை விலக்கும் வழி?

வலிகளை விலக்கும் வழி?

"வலியுடன் வாழக் கற்றுக்கொள்" என்ற என் பாடலைப் பதிவிட்ட பின் பல நண்பர்கள் , வலி நீக்குவதற்கு பல விதமான  வழிகளை எனக்குச் சொன்னார்கள். ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபங்சர், மெடிடேஷன் , ரேக்கி  என்று இத்யாதி இத்யாதி அறிவுரைகள்! "எல்லாமே என் வலி தீர வேண்டும்" என்ற நல்லெண்ணத்துடன் கூறப்பட்டாலும், எதை பின்பற்றுவது என்ற குழப்பத்தில் என் தலை சுற்றியது! 

இது குறித்து ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 









வலிகளை  எளிதாய் விலக்கிடும்  வழிகளை  

பலரும் உரைப்பார்  பரிந்து - நம்நலனை 

விரும்பி   அவர்தரும் யோசனை எல்லாம்

அரிதாம் செயல்முறை யாக்க !


மேலை நாட்டு மருத்துவங் கள்எதுவும்  

வேலைக்கு ஆகாது என்பார் -காலையும்  

மாலையும் ஆயுர் வேதத்தின் எண்ணெயை 

தோலின்மேல் தேய்த்தூறச் சொல்வார் 


ஹோமியோ பதிதான் ஒரேவழி  இதற்கென்று

சாமிமேல் சத்தியம் செய்வார்- பூமியில்

நிகரிதர்க் கில்லை நிச்சயம் இதுவெனப் 

பகருவார் பலருமிங் குண்டு                                                                   பகருவார்= சொல்லுவார்


வயதான பின்னே வலிகள் வருவது 

இயற்கையே பொறுத்திடெனக்  கூறித் - தயங்காமல் 

நானெழுதிய பாட்டை# எனக்கே மேற்காட்டி 

தேனொழுக ஆறுதல் சொல்வார்


*நுண்துளைக் குத்தூசி **தொடுகைப் பரிகாரம் 

^ உள்மன தறிதுயில்  சிகிச்சை - வேறு 

எண்ண அலைநிறுத்தி ^^ ஆழ்நிலைத் தியானம்

என்றுபல பரிகாரம் உரைப்பார்                                                       


வலிநீக்க  பற்பல  மருத்துவ வகைகளை 

பலருமே பரிந்தெனக் குரைக்க  - எந்த

வகையைநான்  பின்பற்று வேனென்று எண்ணியே  

திகைத்தே தலைசுற்றி நின் றேன். 


# - வலியுடன் வாழப் பழகிவிடு  என்ற எனது கவிதை. இதை 

https://kanithottam.blogspot.com/2024/05/blog-post.html என்ற இணைப்பில் காணலாம்.

* நுண்துளைக் குத்தூசி = accupuncture 

**தொடுகைப் பரிகாரம் = Reiki 

^ உள்மன தறிதுயில்  சிகிச்சை = Hypnosis 

^^ ஆழ்நிலைத் தியானம் = meditation 










  

May 13, 2024

வலியுடன் வாழக் கற்றுக்கொள்

  வலியுடன் வாழக் கற்றுக்கொள் 

சென்ற இரு மாதங்களாய் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து தாக்கி வலியால் அவதிப்படும் ஆற்றாமையில் எழுதிய ஒரு பாடல். 

அன்புடன் 

ரமேஷ் 





வலியுடன் வாழக் கற்றுக்கொள் 


வயது எழுபதை எட்டிய பின்னர் 

-----வலிபல  வந்து நமை வாட்டும் 

பயணத்தில் இறுதிப் பகுதியில் இருக்கையில் 

-----பலவகை நோய்கள்  நமைச் சேரும் 

            வலிகள் இல்லா  வாழ்க்கை என்பது  

            வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -  

            விதியை நினைத்து வலியைப் பொறுத்து 

            வலியுடன் வாழக் கற்றுக்கொள் 


உடல்திடம் குறைந்து இடர்படும் நிலையும்

-----நிச்சயம் நேர்ந்திடும் முதியவர்க்கு - பல 

இடங்களில்  உடலினில் கடும்வலி கண்டிடும் 

-----ஆண்டுகள் மிகப்பல ஆனவர்க்கு 

தலைவலி கால்வலி கைவலி மெய்வலி 

-----முதுகு வலியோடு மூட்டுவலி -எனப் 

பலவகை வலிகள் ஒன்றன்பின் ஒன்றாய் 

-----வரவே வரிசையில் காத்திருக்கும்  

            வலிகள் இல்லா  வாழ்க்கை என்பது  

            வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -  

            விதியை நினைத்து வலியைப் பொறுத்து

            வலியுடன் வாழக் கற்றுக்கொள் 


மருந்து மாத்திரை வேளை  தவறாமல் 

-----தினம்தினம் நாமே விழுங்கிடினும் 

சிறந்த மருத்துவர் சொல்லும் அறிவுரை 

-----கேட்டே நாளும் நடந்தபி(ன்)னும் 

விரும்பி உ(ண்)ணும்பல உணவு வகைகளை 

-----விலக்கி முற்றும் துறந்த பி(ன்)னும் 

துரிதமாய் நம் வலிகளுக்  கேயோர் 

-----தீர்வு என்றும் வருவதில்லை  

            வலிகள் இல்லா  வாழ்க்கை என்பது  

            வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -  

            விதியை நினைத்து வலியைப் பொறுத்து            

            வலியுடன் வாழக் கற்றுக்கொள்