வலியுடன் வாழக் கற்றுக்கொள்
சென்ற இரு மாதங்களாய் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து தாக்கி வலியால் அவதிப்படும் ஆற்றாமையில் எழுதிய ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
வலியுடன் வாழக் கற்றுக்கொள்
வயது எழுபதை எட்டிய பின்னர்
-----வலிபல வந்து நமை வாட்டும்
பயணத்தில் இறுதிப் பகுதியில் இருக்கையில்
-----பலவகை நோய்கள் நமைச் சேரும்
வலிகள் இல்லா வாழ்க்கை என்பது
வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -
விதியை நினைத்து வலியைப் பொறுத்து
வலியுடன் வாழக் கற்றுக்கொள்
உடல்திடம் குறைந்து இடர்படும் நிலையும்
-----நிச்சயம் நேர்ந்திடும் முதியவர்க்கு - பல
இடங்களில் உடலினில் கடும்வலி கண்டிடும்
-----ஆண்டுகள் மிகப்பல ஆனவர்க்கு
தலைவலி கால்வலி கைவலி மெய்வலி
-----முதுகு வலியோடு மூட்டுவலி -எனப்
பலவகை வலிகள் ஒன்றன்பின் ஒன்றாய்
-----வரவே வரிசையில் காத்திருக்கும்
வலிகள் இல்லா வாழ்க்கை என்பது
வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -
விதியை நினைத்து வலியைப் பொறுத்து
வலியுடன் வாழக் கற்றுக்கொள்
மருந்து மாத்திரை வேளை தவறாமல்
-----தினம்தினம் நாமே விழுங்கிடினும்
சிறந்த மருத்துவர் சொல்லும் அறிவுரை
-----கேட்டே நாளும் நடந்தபி(ன்)னும்
விரும்பி உ(ண்)ணும்பல உணவு வகைகளை
-----விலக்கி முற்றும் துறந்த பி(ன்)னும்
துரிதமாய் நம் வலிகளுக் கேயோர்
-----தீர்வு என்றும் வருவதில்லை
வலிகள் இல்லா வாழ்க்கை என்பது
வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -
விதியை நினைத்து வலியைப் பொறுத்து
வலியுடன் வாழக் கற்றுக்கொள்