தோள்கொடுப்பார் யாருமுண்டோ?
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத என் இன்றைய நிலை குறித்து ஒரு சுய இரக்கப் பாடல்!
அன்புடன்
ரமேஷ்
மூளையின் மூலைக்கு குருதியைக் கொண்டுசெல்லும்
நாளங்களி லொன்று சற்றே அடைபட்டு
நோளை*யுற் றெந்தனுடல் நலம்கொஞ்சம் குன்றியதால்
நாள்தோறும் நான்விரும்பும் உணவுவகை உண்ணுதற்கு
தாள்போட்டு என்வாய்க்கு தடையினையே செய்திட்டார்.
கேள்வியிதைக் கேட்டெனக்குத் தோள்கொடுப்பார் யாருமுண்டோ?
பொரித்தெடுத்த பொருளெதையும் பார்க்கவும் கூடாதாம்
வறுத்தெடுத்த வையுண்டால் வருத்தம் விளைந்திடுமாம்
முறுமுறுக்கும் நொறுக்குத் தீனிவகை களுடன்கூட
சருக்கரைத்தின் பண்டங்கள் துன்பத்தைத் தந்திடுமாம்.
திருநாள் தீபாவளியும் வருவதையே கருதாமல்
ஒருதலையாய் நிருணயித்தென் நாக்கினையே கட்டிவிட்டார்
இரக்கமற்ற இச்செயலை குரலெடுத்து நானெதிர்த்தால்
உறவுகளில் யாருமில்லை எடுத்துரைக்க என்பக்கம்.
கேள்வியிதைக் கேட்டெனக்குத் தோள்கொடுப்பார் யாருமுண்டோ?
* நோளை = பிணியுண்ட நிலை



