Search This Blog

Nov 1, 2021

பிரதோஷப்பாடல்- 42

நாளை பிரதோஷதினம்.

இத்தினத்தன்று, பிரதோஷத்தின் சந்திவேளையில், சிவபெருமானின் முன் வீற்றிருக்கும் நந்திதேவனின் பின் நின்று, அவருடைய இரு கொம்புகளின் இடைவெளி வழியே ஈசனை தரிசனம் செய்தல் சிறந்தது என்பது ஐதீகம்!

இதை விளக்கும் ஒரு பாடலை இன்று மகிழ்ச்சியுடன் பதிக்கிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 
 







 

இந்தி ரன்முதல் தேவர் அனைவரும் வந்து வணங்குமிச் சந்தியிலே*

நந்தி தேவனின் பிந்தி நின்றவன் கொம்பின் இடைவெளிச் சந்தினிலே

சிந்தும் தண்ணொளிச் சந்திர னைத்தன் சென்னியில்** சூடிய சுந்தரனை

எந்தை ஈசனை வந்து தரிசனம் செய்து தொழுதுநாம்  உய்திடுவோம்


* சந்தியிலே-- சந்திகால வேளையிலே  

** சென்னியில் - சிரத்தில், தலை மீது 

Oct 27, 2021

யாணர் கூடல் பாட்டுக்கள் - பகுதி 2

 யாணர் கூடல் பாட்டுக்கள் - பகுதி  2


யாணர் என்னும் இணையதளத்தில் அவ்வப்போது என்னுடைய பாடல்களைப் பதிவு செய்கிறேன். சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய கூடலில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஆறு வரிக்கு மேலாகாமல் கவிதைகளை எழுதிப் படிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை  ஏற்று , கொடுக்கப்பட்ட தலைப்புகளை ஈற்றடியாக அமைத்து நான் ஐந்து வெண்பாக்களையம் ஓர் விருத்தத்தையும் எழுதினேன். 

அப் பாடல்களை மூன்று தொகுப்புகளாக - ஒரு தொகுப்பில் இரண்டு கவிதைகள் -   கனித்தோட்டத்தில் பதிவிடுகிறேன். 

இரண்டாம்  தொகுப்பு, இதோ!

அன்புடன் 

ரமேஷ் 


தலைப்பு - கடைக்கு வராத சரக்கு

நாட்குறிப் பேட்டிலே   தீட்டிப் புதைத்தவென் 
பாட்டுகள் பற்பல  ஆகுமே  -  வெட்கம்  
தடைசெய்த தாலவை இன்னாள் வரையில்      
கடைக்கு வராத சரக்கு.
(பல விகற்ப இன்னிசை வெண்பா)

X
தலைப்பு - கணக்குக்கு  வராத பணம்

அஞ்சரைப் பெட்டி அடியில்  ஒளித்துவைத்த 
அஞ்சாரு ஐநூறு   ரூபாய்க ளெல்லாம்  
பணமதிப்பு  போனவுடன்  பாட்டியின் வங்கிக்   
கணக்கில் வராத  பணம் 
{பல விகற்ப இன்னிசை வெண்பா)

Oct 21, 2021

உதிக்கின்ற கதிரவனா ? சாய்கின்ற சூரியனா?

உதிக்கின்ற கதிரவனா ? சாய்கின்ற சூரியனா?


முகநூலில் நான் இப்படத்தைப் பார்த்தும் எழுந்த கேள்வி,  "இந்தப் படத்தில் இருப்பது   "உதிக்கின்ற கதிரவனா , அல்லது சாய்கின்ற சூரியனா?" என்பதுதான்.

பலரிடம் காட்டிக் கேட்டபோது சிலர் அதிகாலையில் எடுத்தது என்றும் சிலர் மாலையில் சாயும் நேரத்தில் எடுத்தது என்றும் கருத்துத் தெரிவித்தனர். 

பார்ப்பவரின் எண்ணப்படி எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்! 

இதுபோலவே பல சமயங்களில் ஒரே நிகழ்வை கண்ட  அல்லது அதைப்  பற்றிக் கேட்டவர்களும் நம்முடைய கருத்திலிருந்து மாறுபட்ட  முடிவுக்கு வரலாம்!

 அப்போது சற்று நிதானித்து மற்றவரின் கருத்துக்கும் சற்று இடம் கொடுக்கலாமே? 

அன்புடன் 

ரமேஷ் 

( இது  உதயசூரியனா  அல்லது மறையும் சூரியனா  என்ற கேள்வியின் விடை கிடைக்க   பின் குறிப்பைப் பார்க்கவும்! - முதலில் கவிதையைப் படித்து அதன் பின்னே!  )




காலையிலே மேலெழும்பும் கதிரவனோ இல்லையிவன்  

மாலையிலே மேற்றிசையில் மறைகின்ற சூரியனோ? 


அழகுமிகு காட்சியிதைக்  கண்டு களிப்பவரில்

எழுகின்ற இரவியிவனே  என்று   ரசிப்பர்சிலர்!   

விழுகின்ற வெய்யோனே என்றே வியப்பர்சிலர்!

பழுதில்லை இருசாரார் பார்வையிலும் புரிதலிலும். 


அரையளவே நிரம்பியதோர் கோப்பையினைக்  காண்போரில்    

குறையரையாக் காண்பர்சிலர்  நிறையரையே என்பர்சிலர். 


கண்காணும்  காட்சிகளே ஒன்றெனினும் அவையெழுப்பும் 

எண்ணங்கள் மாறுபடும் வெவ்வேறு பேர்மனதில்.

தன்பார்வை தான்மட்டும் உண்மையென எண்ணாமல் 

பின்னொருவர் பார்வையையும் மனந்திறந்து மதித்திடுவோம்.


பின் குறிப்பு:

இது நான் முகநூலில் பார்த்த படம்.  படத்தில் இது சூரிய உதயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது! அழகான இந்தக் காட்சியை படம் பிடித்துப் பதித்த நண்பருக்கு நன்றி!






 

     







Oct 19, 2021

பிரதோஷப் பாடல் - 41

 பிரதோஷப் பாடல் - 

நேற்று திங்கட்கிழமை சோமவாரப் பிரதோஷம்.

சனிக்கிழமைகளில் வரும் சனிப்பிரதோஷத்தைப்போல் இதுவும் விசேஷமான ஒன்று.

இந்த நாளில் இறைவனைத் துதித்து நேற்று எழுதத் துவங்கி இன்று முடித்த பாடல் இது.

அன்புடன் 

ரமேஷ் 




சாமத்திரு வேதம்உரை வேதியர்க்கு அடியோன் 

ஈமத்திடு காட்டினிலே சாமநடம் புரிவோன் 

வாமத்தொரு பாகத்தினில் பார்வதியை வைத்தோன் 

சோமத்திரு வாரப்பிர தோஷத்திந்  நாளில் 

பூமண்டலத் துயிர்வாழும் பிறவிகள்  எல்லாமும் 

சேமமுற வாழஅவன் அடிபணிந்து தொழுவோம்.

Sep 29, 2021

யாணர் கூடல் கவிதைகள் - பதிவு 1

யாணர் கூடல் கவிதைகள்  - பதிவு 1

யாணர் என்னும் இணையதளத்தில் அவ்வப்போது என்னுடைய பாடல்களைப் பதிவு செய்கிறேன். சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய கூடலில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஆறு வரிக்கு மேலாகாமல் கவிதைகளை எழுதிப் படிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை  ஏற்று , கொடுக்கப்பட்ட தலைப்புகளை ஈற்றடியாக அமைத்து நான் ஐந்து வெண்பாக்களையும் ஓர் விருத்தத்தையும் எழுதினேன். 

அப் பாடல்களை மூன்று தொகுப்புகளாக - ஒரு தொகுப்பில் இரண்டு கவிதைகள் -   கனித்தோட்டத்தில் பதிவிடுகிறேன். 

முதல் தொகுப்பு, இதோ!

அன்புடன் 

ரமேஷ் 


தலைப்பு  =கண்ணுக்கு வராத கனவு 

கருக்கல் இருட்டு அரைத்தூக்க நேரம் 
உறக்கம் கலையாத வேளை - பிறக்கின்ற  
எண்ணத் திழைகள்  விழித்தால்   மறையுமிது 
கண்ணுக்கு வாராக்  கனவு .
(பல விகற்ப இன்னிசை வெண்பா )

தலைப்பு- கவிதைக்கு வராத வார்த்தை

வார்த்தை விவரிக்க   ஏலாக்    கவிதையுனை 
சேர்கின்ற  நாளென்று நேருமோ- காத்துத்   
தவிக்குமென் தாகம்  தணியும்  வரைநான் 
கவிதையில்  சேராத சொல்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
X






Sep 27, 2021

குழந்தைத் தொழிலாளி

 குழந்தைத் தொழிலாளி

காண்போர் மனதை நெகிழச்செய்யும் இப்புகைப்படம் இலக்கியச்சோலை என்னும் தமழிதழில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு பொருந்தும் வகையில் ஒரு நான்கு வரிக் கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன். அதன்பிறகும் இப்படத்தின் தாக்கம் என் மனதை விட்டு அகலவில்லை. 

"என்ன காரணத்தால் இந்தப் பெண் இந்த வயதிலியே இக்கொடுமைக்கு ஆளானாள்?" என்று யோசித்து இன்னும் சில வரிகளைச் சேர்த்து இக்கவிதையை நிறைவு செய்ய முயன்றதன் விளைவாக விளைந்த பாடல் இது!

அன்புடன்

ரமேஷ்  




செங்கதிரோன் சுடர்க்கதிரால் சுட்டெரிக்கும் வெய்யிலிலே    

அங்கையி லேபிடித்த  கருங்கற் குழவிகொண்டு 

செங்கொல்லன் வடித்த தங்கச் சிலையொத்த 

சின்னஞ்சிறு பெண்ணிவளே செங்கல்லைச் சிதைக்கின்றாள்!


கொடுநோய் கொரானாவின் பிடியால் அடிபட்டு   

அடைபட்ட  பள்ளிகளில்   ஒருவேளை சத்துணவும் 

கிடைக்காமல் தடைபட்டுப் போனதனால் பசிப்பிணிக்கு 

விடைகாண வேண்டியிவள் கல்லுடைக்க வந்தாளோ 


பாடுபாட் டுழைத்துத்தன் குடும்பத்தைக் காக்காமல் 

குடியென்னும் கொடுமரக்கன் கையுள்ளே  கட்டுண்டு

அடிமையாய் அதற்காகி தன்கடமை தனைத்துறந்து

வீடுவிட்டு ஓடிவிட்ட   தந்தையினால்  இந்நிலையோ


தங்கையொன்றைப் பெற்றடுத்த தாய்க்குப் பதிலிவள்தன் 

பங்குக்கு தொழில்செய்து பொருளீட்ட வந்தாளோ?

தாய்தந்தை இருவரையும் நோய்க்குப் பறிகொடுத்து

வாய்க்கரிசி போட்டபின்னே வாழும்வழி தேடினளோ?


செங்கதிரோன் சுடர்க்கதிரால் சுட்டெரிக்கும் வெய்யிலிலே    

அங்கையி லேபிடித்த  கருங்கற் குழவிகொண்டு  

செங்கல்லைச் சிதைக்கின்றாள் சின்னஞ்சிறு பெண்ணிவளே!

இங்கிவளின்  துயர்துடைக்க  விடையென்று கிடைத்திடுமோ?


 







Sep 14, 2021

கடற்கரைக் காட்சி

சென்ற மாதம் சென்னை மரீனா கடற்கரையில் நான் பிடித்த புகைப்படம் இது!

இதை நான் நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொண்டபோது, ஒரு நண்பர்              " இப்படத்துடன் அது பற்றிய ஒரு பாடலையும் எழுதிப்  பதித்திருக்கலாமே!" என்ற ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

அந்த உந்துதலில் விளைந்த  பாடல் இது!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு: இந்தப் படத்தில் இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இரு மகன்கள்!



கடற்கரைக் காட்சி 


மெல்லக் கிழக்கினிலே மேலுழும்பும் சூரியன்தன்

 வெள்ளைக் கதிர்க்கொற்றை அள்ளித் தெளிக்கையிலே 

வெள்ளித் தகடென்று மின்னும்  கடலெந்தன்  

உள்ளத்தை கொள்ளைகொள் ளும்