Search This Blog

Jul 7, 2021

பிரதோஷப் பாடல் - 40

 பிரதோஷப் பாடல் - 40

இன்றைய பிரதோஷப் பாடலுடன் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் தலத்தைப் பற்றிய வரலாறையும் கொடுத்திருக்கிறேன்.

அன்புடன் 

இரமேஷ் 



ஏமகூட* மேருமலையை வில்லாய் வளைத்தவன் 

வாமபாக தேகமீதில் தேவியைத் தரித்தவன் 

காமநாசன் ஆமிரேசன்** பேரைப்பாடி வணங்கிடும் 

பாமரற்கும் சேமகாலம் ஆமளவும்*** அளிப்பனே 

 

* ஏமகூடம்= மேருமலை 

** ஆமிரேசன்= மாமரத்தினடியில் அமர்ந்துள்ள ஈசன் 

*** ஆமளவும் = எப்பொதும் , கூடிய விரைவில் 

"eka" means one and "amaram" means mangoe tree. Legend has it that Parvathi was sitting under the mangoe tree in the temple and was performing penance. Wanting to test her, Lord shiva, directed fire at her. Parvathi took the help of Vishnu, who colled the fire using the rays of the moon. Then Shiva sent the river Ganga but Parvathi convinced her that both of them were sisters and that she should not disturb her penance. After completing her penance, Parvathi was united with Shiva. 

Jul 5, 2021

தங்க மங்கை


தங்க மங்கை 

SPIC நிறுவனத்தில் என்னுடன் பணிபுரிந்த திரு. அமானுல்லா பதித்த ஒரு காணொளிப் பதிவிலுருந்து எடுக்கப்பட்ட படம் இது!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் எடுக்கப்பட்டது.

இதைப் பற்றி ஒரு கவிதை - அவர்  கேட்டுக்கொண்டபடி !

அன்புடன் 

ரமேஷ் 




தங்கச் சுரங்கம் ஒன்றைத் 
-----தேடியே  வெட்டி எடுத்து 
துங்கம்* செய்த தங்கத்தில்                              
-----அங்கியொன்றை அழகாய்ச் செய்து 
தொங்கலுடன்** தலையில் தொப்பி             
-----முன்கைக்கோர் காப்புறை என்று 
அங்கங்கே அங்கங்கள் மேலே 
----ஆபரண மணிந்தாள் மங்கை!

அங்கங்கள் முழுதும் அவளே 
-----தங்கத்தால் மறைத்திருந் தாலும் 
தங்கத்தை மிஞ்சும் அவளின் 
-----முழுமுகச் சிரிப்பே ஒளிரும்!
மங்கிடும் தங்கத்  தொளியும்  
-----மெருகேற்ற வில்லை என்றால்! 
மங்காது இவள்முகத் தொளியே! 
-----இங்கிதற் கிணையும் இலையே !! 

*துங்கம்=பரிசுத்தம்
** தொங்கல் = காதில் அணியும் அணி 

Jun 29, 2021

இதழ் விரிக்கும் மலர் மொட்டு


இதழ் விரிக்கும் மலர் மொட்டு

என்னுடைய கல்லூரி நண்பர் வரதராஜன் அனுப்பிய ஒரு ஆங்கிலக் கவிதையை  மொழி பெயர்த்து நான் எழுதியது இந்தக் கவிதை. 

மூலம் - சுபி கவிஞர் ஜலாலுதீன் ருமி.

படம்:  Getty Images யிலுருந்து , நன்றியுடன் 

அன்புடன் 

ரமேஷ் 


இதழ் விரிக்கும் மலர் மொட்டு 






கடவுள் படைத்த ரோஜா மொட்டை  

எடுத்துக் கையில் அன்புடன் அணைத்து 

தடவிக் கொடுத்து இதழைப் பிரிக்க 

முயன்றேன் ஆனால் முடிய வில்லையே!


மெதுவாய்ப் பதமாய் தொட்ட போதிலும் 

இதழ்கள்  கீழே உதிர்ந்து விழுந்தன!

மொட்டின் மலரிதழ் விரியச் செய்யும் 

மருமம் அறிந்தவன் இறைவன் ஒருவனே!


மொட்டின் இதழை விரிக்கும் செயலே 

என்னால் இங்கு இயலா திருக்கையில் , 

முன்னால் விரியுமென்  வாழ்க்கையின்  மருமம் 

ஆராய்ந் தறிதல் எங்கனம் இயலும்?


ஒட்டி இருந்த மொட்டின் இதழ்களின்  

கட்டை அவிழ்த்து மலரச் செய்தவன் 

வருகிற வாழ்க்கைத் தருண மனைத்தையும்  

பிரித்துப் பின்னே  மலரச் செய்வான் 


கண்முன் தெரியும் வாழ்க்கைப் பாதையின் 

மருமம் அனைத்தும் அறிந்தவன் அவனே!

நண்பனாய் அவனை நம்பி நடந்தால் 

நலனே என்றும் நடக்கும் என்றறிவோம்.






Jun 26, 2021

வெள்ளம்

There was a time when rivers were flowing under the bridges.
Now a days only the traffic flows over the bridge - the rivers under the bridges have dried!

 வெள்ளம்


அன்று                         

                                                     
ஆற்றில் வெள்ளம் பெருகிய நாளில் 
மறுகரை செல்ல பாலம் அமைத்தோம். 
 
இன்று                                                                                   


பாலத்தின் மேலே  மக்கள் வெள்ளம் 
கீழே பார்த்தால் ஆற்றைக் காணோம்!!


Jun 24, 2021

செய்திப் பரிமாற்றங்கள்

செய்திப் பரிமாற்றங்கள்

ஊரடைப்புத் தடைகளால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலையில் இடைவிடாமல் அவர்கள் செய்துகொள்ளும் குறுஞ்செய்திப்  பரிமாற்றம் ஒன் உதவுகிறது. என்றாலும் நேருக்கு நேராக அவள் விழியால் செய்யும் செய்திப் பரிமாற்றத்திற்கு அவை இணையாகுமா?





மின்காந்த அலைமூலம் தொலைபேசிச் செய்திகளை

அன்பார்ந்த காதலியே,  அன்றாடம் அனுப்புகிறாய் .

என்றாலும் அவையெல்லாம் நேர்நோக்கும் உன்காந்தக்

கண்பார்வைக் கில்லை இணை!

பின் குறிப்பு :

என்னுடைய நண்பர்கள் இருவர் - இராம. கி , என்.கிருஷ்ணமூர்த்தி - ஆகியோர் சொன்ன கருத்துக்களை ஏற்று சில மாறுதல்களைச் செய்திருக்கிறேன். ஆராய்ந்து கருத்துத் தெரிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!


மின்காந்த வானலையில் உன்காதல் செய்திகளை

அன்பார்ந்த காதலியே, நாள்தோரும்  நீபகிர்வாய்

என்றாலும் நேர்நோக்கும் உன்காந்தக் கண்பார்வைக்

 குண்டோ யிணையிங்கே சொல்!

                                                                                        (பல விகற்ப இன்னிசை வெண்பா)

Jun 21, 2021

பறக்கும் சீக்கியன் - மில்கா சிங்

பறக்கும் சீக்கியன் மில்கா சிங்

1947 ம் ஆண்டு பாரதம் இரண்டாகப் பிளவுபட்டபோது நடந்த மதப் படுகொலைகளில் தன்  பெற்றோர்களையும், கூடப் பிறந்தோரையும் பலிகொடுத்தவர் மில்கா சிங். 

" நீயாவது ஒடித்த தப்பிவிடு, மில்கா" என்று கதறிய தந்தையின் குரலுக்கு கட்டுப்பட்டு, இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து தப்பி ஓடி  ஒரு  அகதியாக டெல்லி வந்தடைந்தார். பல தோல்விகளுக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அவரது ஒட்டப்பந்தயத் திறமையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றார். 

ஆசிய மற்றும் (பிரிட்டிஷ்) குடியரசு நாடுகளுக்கான போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்த அவர் , ரோம் நகரில் நடந்த 400 மீட்டர் பந்தயத்தில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார்.  

சென்ற வாரம் , ஜூன் 18ம் நாள்,கோவிட கொடுநோயின் தாக்கத்தால் உயிரிழந்தார் மில்கா சிங்க்.

இந்தியத்  தடகளத் தடத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவரது வாழ்க்கை "ஒடு மில்கா ஓடு" (Bhaag, Milkaa, Bhaag) என்ற ஒரு திரைப்படமாக வடிக்கப்பட்டது. அனைவரும் பார்த்து பெருமிதம் அடைய வேண்டிய ஒரு படம். 

அவரை  வணங்கி எழுதிய ஒரு சிறு பாடல், இதோ!

அன்புடன் 

ரமேஷ் 
 






பறக்கும் சீக்கியன் மில்கா சிங் 

பாடுபட்டு தனைவளர்த்த பெற்றோரைப் பறிகொடுத்து 

கூடப் பிறந்தபல சோதரரைப் பலிகொடுத்து 

"ஓடு மில்கா ஓடு " வென்ற  தந்தைகுரல் செவிமெடுத்து

நாடுவிட்டு ஓடிவந்து நிலம்விட்டுப் புலம்பெயர்ந்து 

தடைபலவைத் தகர்த்தெறிந்து  பலதடகளப் போட்டிகளில் 

ஓடுவதே உயிர்மூச்சாய்க் கொண்டவனே! கொண்டையனே!


பஞ்சாப்பின் சிங்கமகன், பறக்கின்ற சீக்கியனே!

நெஞ்சை  நிமிர்த்தி  நம்நாட்டோர் நடக்குமுகம்  

பஞ்சாய்ப் பறந்தோடி பதக்கம்பல பெற்றவனே!

விஞ்சஉன்னை யாரும்இல்லை தடகளத்தின் தலைமகன் நீ! 

மஞ்சம்ஒன்று தேடிஅதில்  நீண்டநேரம்  நிம்மதியாய்

துஞ்ச இன்று சென்றாயோ , ஓடிக்களைத்த பின்னே ? 


ஓடிக் களைத்த பின்னே உறங்கச் சென்றாலும்

நீடித்து நிலைத்திருப்பாய் எம்மனதில் நீயென்றும்!



Jun 20, 2021

அப்பாக்கள் தினம்

அப்பாக்கள் தினம்

இன்று அப்பாக்கள் தினம் கொண்டாடப் படுகிறது. 

சமூக வலைத்தளங்களில் உதவியால் இன்று இது சற்றுப் பிரலபம் அடைந்திருந்தாலும்,  அம்மாக்கள் தினத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இதற்கு அளிக்கப்படுவதில்லை என்பதே பல அப்பாக்களின் குறை!

"ஒப்புக்குச் சப்பாணி, ஊறுகாய்க்கு மாங்கொட்டை" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது!

இது குறித்து ஒரு நான்கு வரிப் பாடல்!

அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்!

அன்புடன்

ரமேஷ்


தப்பாமல் தாயார் தினத்தை நினைப்போரும்

அப்பாவி அப்பாக்கள் நாளை  மறந்திடுவார்

முப்பொழுதும் மக்கட் கவர்செய்யும் தொண்டிற்கு 

எப்போ  கிடைக்கும்  ஒப்பு!