Search This Blog

Dec 20, 2020

மார்கழி விடியல் - ஒரு மீள் பதிவு

 மார்கழி விடியல் - ஒரு மீள் பதிவு 

சென்ற ஆண்டு மார்கழி மாதம் எழுதிப்  பதித்த ஒரு பாடலை மீண்டும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  அடைகிறேன்.

அன்புடன் 

ரமேஷ்


மார்கழி விடியல்





மார்கழித் திங்கள் நிறைபனிக் காலை
தேரில்  ஏறி வான்வழி உலவும்
சூரிய னொளிக்கதிர் தரைதொடும் நேரம்
ஊரெழு முன்தம் உறக்கம் விடுத்த
கூர்விழி  மாதர்தம் குடிலின் வாயிலில்
நீரைத் தெளித்து நிலத்தைக் கழுவி
அரைத்த அரிசி மாவை எடுத்து
விரலால் விரிமாக் கோலம் இட்டு
ஆவின் சாணம் அதனுள் வைத்து
பூசணிக் கொடியின் பூவைச் செருகி
திருப்பா வைகளின் பாசுர மிசைத்து
அறிதுயில் கொள்ளும் அரியை எழுப்ப

விடியும் இனியவோர்  காலைப்  பொழுது


Dec 16, 2020

காடு வரை பிள்ளை?

காடு வரை பிள்ளை?*

இந்தக் கொரானா நாட்களில் ஒருவரும் அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை விட்டு வேறெங்கும் செல்ல முடிவதில்லை.

வெளி நாட்டு விமான சேவைகள் இன்னும் செயல்படத்  தொடங்காத நிலையில், வெளி நாடுகளில் வசிக்கும் எவரும் இங்கு வர முடியாத நிலை.

எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில்  மகன்களும், மகள்களும் வெளிநாடுகளில் இருப்பதால் , வயதான பெற்றோர் தனித்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் கொரானா நோய் தாக்கி இறந்தபோது, பெற்ற  பிள்ளைகள் எவரும் வந்து ஈமச்சடங்களைக்கூட செய்ய முடியாமல் போனது பற்றிய பல துயரச் செய்திகளை நாளேடுகளில் சில மாதங்களுக்கு  முன் படித்தேன்.

அதன் தாக்கத்தின் பயனாக (சில மாதங்களுக்கு முன்) எழுதப்பட்ட ஒரு கவிதை இது.

 அன்புடன் 

ரமேஷ் 

காடு வரை பிள்ளை?*

"காடு வரை பிள்ளை" என்று

---------- கண்ண தாசன் சொன்னான்- ஆனால் 

நாடு விட்டு நகரம் விட்டு 

----------வீடு விட்டு உறவை விட்டு  

தேடி வேலை** சென்ற பேர்கள் 

----------மீண்டு வருதல்  இயலா  நிலையில் 

பாடு பட்டு பாசம் கொட்டி 

----------வளர்த்த  பெற்றோர் இன்னுயிர் இன்று    

கேடு விளைக்கும் கொடுநோய் தாக்கி 

----------கூடு விட்டுப்  பறந்த போதும் 

வீடு திரும்ப வழியொன் றின்றி 

----------வேறு   இடத்தில்  முடங்கிக்  கிடக்க 

காடு வரையில் கடைசிப் பயணம் 

----------கூடச் செல்லல் எங்கன மியலும்?


* என்னுடைய ஒத்த வயதினருக்கு "வீடு வரை உறவு" என்று தொடங்கும் இந்தப் பாடல் நினைவிருக்கலாம். பாதகாணிக்கை திரைப்படத்தில் இடம் பெற்றது.

** "வேலை தேடி" என்று படித்தறிக.

Dec 12, 2020

பாரதியார் பிறந்த நாள்

நேற்று மகாகவி பாரதியின் பிறந்த தினம்.  

அவரை நினைவு கூர்ந்து வணங்கி ஒரு கவிதை.

அன்புடன் 

ரமேஷ் 


பாரதியார் 

பிறந்த  நாள் 11-12-2020

 


முடிந்த முண்டாசு ! முறுக்கிய கூர்மீசை! 

நடுநெற்றிப் பொட்டின் கீழ் நாட்டின் விலங்கறுக்க 

விடுதலை வேட்கையுடன் துடிக்குமிரு கருவிழிகள் !


தடித்தவிரு உதடுகளைத் திறந்தவுடன் தடையின்றி 

தொடுத்ததோர் வில்விட்டு விரைகின்ற  கணைகள்போல் 

அடுக்கடுக் காகவரும் அழகுத்  தமிழ்க்கவிதை !


மிடுக்கோடு மடித்துக் கோத்திட்ட கையிரண்டும் 

முடியரசன் முன்னாலும் கவியரசர் நானென்று 

அடங்க மறுத்திட்டு முன்னிருத்தும் இறுமாப்பு!


மடித்தெடுத்துக்   கட்டிய  கச்ச உடையோடு

எடுத்து முன்வைக்கும் பீடு நடையோடு 

தடைகள்  தூளாக்கி தடம் பதிக்கும் திண்கால்கள் !


உன்னுருவம் நோக்கையிலே பொங்கியெழும் புத்துணர்வு

என்மனதில் எந்நாளும் இனியதமிழ்க் கவியரசே!

   







Dec 5, 2020

குறள் மேல்வைப்பு வெண்பா - 20


குறள் மேல்வைப்பு வெண்பா - 20





நேற்றைய செய்தித் தாளில் படித்த ஒரு செய்தி - "ஷோலாப்பூரை சேர்ந்த ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் உலகின் தலை சிறந்த ஆசிரியராக ஒரு சர்வதேசப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக அவர் ஒரு மில்லியன் டாலர் பரிசையும் பெற்றார்" என்பது.  ஆனால் செய்தி இத்தோடு முடியவில்லை! அவர் பெற்ற அந்தப் பரிசுத்  தொகையில் பாதியை  தன்னோடு இறுதிச் சுற்றில் போட்டியிதத்  தேர்ந்தெடுக்கப்பட்டுத் தோல்வியடைந்த  மற்ற ஒன்பது பேர்களுடன் பகிர்ந்து கொண்டார்! அதற்கு அவர் கூறிய காரணம் " கடைசி வரை போட்டிக்குத் தேர்வு பெற்ற மற்ற அனைவரும் மனம் உடையாமல் அவர்களது சிறப்பான கல்விப்பணியைத் தொடர இது ஊக்கமளிக்கும் " என்பதாகும்!

"ஊருணிநீர் நிறைந் தற்றே உலகவாம் , 
பேரறி வாளன் திரு " 

என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!

இச் செயலைப் பாராட்டி . நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு  குறள் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ்  

பி.கு: குறள்  மேல் வாய்ப்பு வெண்பாவில் முதல் இரண்டு அடிகள் ஒரு செய்தியையோ அல்லது அனைவரும் அறிந்த ஒரு கதையையோ குறிக்கும். மூன்றாம், நான்காம் அடிகளில்  அது குறித்த குறள் இடம் பெறும். நான்கு அடிகளும் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட ஒரு வெண்பாவாக அமையும்.  என்னுடைய முந்தைய குறள் மேல்வைப்பு வெண்பாக்களை , தேடிப்  படிக்க  வசதியாக , ஒரு தொகுப்பாக அமைத்திருக்கிறேன்!



பரிசாகத்   தான்பெற்ற பொற்கிழியில் பாதி     

பிரித்தே   பகிர்ந்திட்டான்    தோற்றோ  ருடன்கூட  

ஊருணிநீர் நிறைந் தற்றே உலகவாம் 

பேரறி வாளன் திரு  


(பல விகற்ப இன்னிசை வெண்பா)


Nov 27, 2020

பிரதோஷப் பாடல் - 36

 பிரதோஷப் பாடல்- 36


வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பாடலைப் பதிவு செய்கிறேன்- இந்தப் பிரதோஷ தினத்தன்று. 

இந்தப் பாடல் சரபேஸ்வரரைப் பற்றியது. அதிகமாக யாரும் கேட்டிராத ஒரு கதை!

நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதைத்த  பின்னும் விஷ்ணுவின் கோபம் தணியவில்லை ! அவரது சீற்றத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல்  மூவுலகோரும் வாடினார்கள்.  அவருடைய  சினத்தைத் தணிக்குமாறு சிவபெருமானை வேண்டினர். அவர்களுடைய வேண்டுதலுக்கு இணங்கிய சிவபிரானும், சிங்கமுகம், ஆயிரம் கைகள், எட்டு கால்கள்,பருந்தொன்றின் இறக்கைகள் இவை கொண்ட ஒரு உருவம் எடுத்து நரசிம்மரோடு போரிட்டு அவரை வென்று அடக்கினார். சினம் தணிந்த நரசிம்மரும் தனது சுயவுருவை அடைந்தார் என்று கூறுகிறது சிவபுராணம்.

இந்தப் பிரதோஷத்தன்று இவ்வரலாறைக் குறிக்கும் இப்பாடலை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு: படத்தில் ஆயிரம் கைகள் காட்டப்படவில்லை!




பிரதோஷப் பாடல் 


பிரகலாதன் குரல்கேட்டு நரசிம்ம உருவெடுத்து இரணியனைக்  கொன்றபின்னும் 

திருமாலின் தணியாத சீற்றத்தின் தணல்தாக்கி  மூவுலகும் வருந்தி வாட 

அரிமாவின் சிரத்தோடும்  ஆயிரம் கரத்தோடும் பருந்தொன்றின் இறக்கையோடும் 

சரபமெனும் உருவெடுத்து மாலுடன் பொருதியவர் சீற்றம் தணித்த சிவனே!





Aug 22, 2020

விநாயக சதுர்த்தி 2020

விநாயக சதுர்த்தி

இன்று விநாயக சதுர்த்தி . இந்த நாளில், முன்பு நான் எழுதி பதிவு செய்த "விநாயகர் பதிகம்" என்ற பதிவை விநாயகரை வணங்கி மறு  பதிவு செய்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்




பாடல்
குறிப்பு .
வானுறை ஈசரும்  ஏனைய தேவரும் 
கானுறை நற்றவ மாமுனிவரும் ---தீநிறை
வேள்விகள் செய்யுமுன் வேண்டி வணங்குவது 
வேழமுகன் பாதம் தனையே                              
                             (1)
எந்தக் காரியத்தையும், , கடவுளர்கள்,பிற தேவர்கள், முனிவர்கள் ஆகிய எல்லோரும் கூட விநாயகனைத் தொழுத  பின்னரே தொடங்குவார்கள். இல்லையேல் காரியம் வெற்றி ஆகாது! சிவபெருமான் ஒரு சமயம் போருக்குச் செல்லுமுன் இதைச் செய்ய மறந்ததால் , அவரது தேர்ச் சக்கரம் உடைந்தது என்பது புராணம்.
காரியம் எதையும் கருதித் தொடங்குமுன்
பாருறை மாந்தர் தொழுவரே  --- கரிமுகத்
தூயவன் மாயவன் மருகனுறை கோயிற்கு
போயவன்  காலில் விழுந்து .                                        (2)
தெய்வங்களே   இப்படி என்றால், இவ்வுலகு மாந்தர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அவர்களும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பூசித்த பின்னரே காரியம் தொடங்குவர்.
காவியமாம்  பாரதப் பெருங் கதையை பலநூறு
பாயிரமாய்ப்  புனைந்த வியாசரவர் -வாயுரைக்க
தந்தம் உடைத் தந்த வரிகோலால் வரைந்தானை
வந்தனை செய்வோம் வணங்கி .                        (3)
வேதவியாசர் சற்றும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பாரதக் கதையைச் சொல்லவேண்டும் என்றும், அவர் சொல்லச் சொல்ல அவர் சொல்லுவதைப் புரிந்து கொண்டு , சற்றும் நிறுத்தாமல் விநாயகர்  எழுதவேண்டும் என்று ஒப்பந்தம். அவர் வேகமாக எழுதும்போது எழுதுகோல் உடைந்துவிட்டது! என்ன செய்வது? உடனே விநாயகர் ஒரு தந்தத்தை உடைத்து , அதை எழுத்தாணியாக உபயோகித்து பரதக் கதையை எழுதி முடித்தார்!  அதை விளக்கும் பாடல் இது.
கைலையில் குடிகொண்ட பெற்றோர் தமைச்சுற்றி
எலிவா கனமேறி வலம்வந்து -உலகைஎலாம்
சுற்றியதற் கொப்பிதெனச் செப்பிட்டு  மாங்கனியைப்
பெற்றவனின் பாதமதைப்  பற்று.                       (4)
விநாயகர் பற்றிய கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கதை-- அன்னையையும் தந்தையையும்  வலம் வந்து மாங்கனியைப் பெற்ற கதை.  விளக்கம் எதுவும் தேவையில்லை.      (4)
குறுமுனி  அகத்தியன் கைலயம் சென்றங்
கிருந்து கொணர்ந்ததண்  கங்கைநீர் – நிறைஜபக்
கலத்தினைக்  கவிழ்த்துக் காவிரியாகத்  தென்திசை
நிலம்செழிக்க  விட்டவனை  வணங்கு.            (5)
விந்தியமலையின் தெற்குப் பகுதிகளின் தண்ணீர்ப்  பற்றாக்குறையை நீக்க ஒரு ஜீவ நதியை  உருவாக்க அகத்திய முனி கங்கை நீரை  ஒரு மண்டலத்தில் எடுத்து  வந்தார். தென்மேற்கு  மலையில் ஒரு இடத்தில் தன்  கமண்டலத்தை கீழே வைத்து  இளைப்பாறுகையில் , விநாயகர் ஒரு காக்கை வடிவில் வந்து ( ஒரு அந்தணச் சிறுவன் வடிவில் என்றும் சொல்வதுண்டு), அந்தக் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அங்கிருந்து காவிரி உற்பத்தி ஆகியது ; அந்த இடம் தான் தலை காவேரி : -என்பது ஐதீகம்.

செவ்விய தமிழிலே பாடல்கள் பலபுனைந்த
அவ்வைக் கிழவிக்கு அருள்செய்து- அவர்தம்மை
கவ்வித் தன்வாயால் கைலாயம் சேர்த்தானை
பவ்(வி)யமாய்ப் பணிவோம் தினம்            (6)               
அவ்வையும் அவரது நண்பர்கலான சுந்தரமூர்த்தி நாயனாரும், சேர மன்னனும் கைலாயம் போகத் திட்டமிட்டார்கள். புறப்படும் நாளன்று அவ்வை விநாயகர் பூஜையில் ஆழ்ந்திருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியாமல் போயிற்று. அவர் பூஜையில் ஈடுபட்டிருந்த போதிலே , மற்றவர் இருவரும் கைலாதுக்கு புறப்பட்டு விட்டார்கள்- முன்னவர்   இந்திர லோகத்து  யானை ஐராவதத்தின் மீதும், பின்னவர் அவரது புரவி மேலும் அமர்ந்து. அவ்வையாரின் மனக்கலக்கத்தை அறிந்த விநாயகர் , பூஜை முடிந்ததும் அவரை தன தும்பிக்கையால் தூக்கி கைலாசத்தில்- அவரது நண்பர்கள் அங்கடையும் முன்னே - சேர்த்தார் என்பது வரலாறு.
அருகம்புல் மாலையை அணிவித்து அதனோடு
எருக்கம்பூ சேர்த்தவரைப் * பூசித்து -- உருக்கமுடன்
வேண்டுமடி யார்க்கவர்கள் நாடும்வரம் நல்குவனைத்
தண்டமிட்   டுத்தொழுவம் நாம்.                             (7)
               
* சேர்த்து அவரைப்
                               
இந்தப் பாடலுக்கு விளக்கங்கள் தேவையில்லை. என்றாலும் ஏன் அருகம் புல் விநாயகருக்கு விசேஷம் ? ஒரு கதை உண்டு. ஒரு சமயம் பார்வதியின் கோபத்துக்கு உள்ளாகி சபிக்கப்பட்டார் நந்தி தேவர். சாபம் விலக வழியை அவர் தேவியிடம் வேண்ட, தேவியும் " உனக்குப் பிரியமான ஒன்றை விநாயகருக்கு அர்ப்பணித்துவிட்டால்  சாபம் விலகும்"என்று அருளினார். உடனே நந்தி தேவர் அவருக்குப் பிடித்த உணவான அருகம் புல்லை அர்ப்பணித்ததாகவும் , அதனாலேயே பிள்ளையாருக்கு அருகம்புல் விசேஷம் என்றும் கூறுவர் .
புறஅறிவின் பூரண உருவகமாய் புத்தியினை 
ஒருபுறம் அமர்த்திக் கொண்டு -- மறுபுறம்
மெய்ப்பொருள் தத்துவமாய்  சித்தியை       வைத்திட்ட
அய்ங்கரனி னடிகள் பணிவோம்.                           (8)
பிள்ளையாரை பிரம்மச்சாரியாகவே நாமெல்லாரும் நினத்திருந்தாலும், அவர் பிரஜாபதியின் ( சிலர் பிரமனின் என்பர்) மகளிரான சித்தியையும் புத்தியையும் துணையாக ஏற்றதாகவும் வரலாறு உண்டு.விநாயகர் இருக்கும் இடத்திலே அறிவின் பூரணத்துவத்தைக் காணலாம் என்பதையே சித்தியும், புத்தியும் உணர்த்துகிறார்கள் என்பதின்  உருவகமே இது என்றும் கொள்ளலாம்.
மோதகமும் முக்கனியும் பாலோடு சர்க்கரையும்
சாதித்து சிரம்தாழ்த்தி வணங்கிடின் -- காதலுடன் 
வேதனைகள் நமைச்சேரா! விக்னங்கள் விலகிவிடும்!
தீதகன்று நலம்சேரும் காண்.                                   (9)
" சாதித்து.   சிரம்தாழ்த்தி காதலுடன் வணங்கிடின் "-- என்று படித்துப் பொருள் கொள்க. வேறு விளக்கங்கள் தேவையில்லை
முச்சந்தி தோறும் மரத் தடிகள் மீதும்
எச்சமயமு மர்ந்த்தருள் புரிபவனை   - இச்சையுடன்
மெச் சியே  தொழுவோர்க்கு நலமெலாம் சேருமே
நிச்சயமி தென்றே உணர்.                                      (10)               
பொருள் விளக்கங்கள் தேவையில்லை.
அனைவரும் விநாயகனை வணங்கி நலம் பெறுவோம்!



Aug 11, 2020

கிருஷ்ணாவதாரம் 
கண்ணன் அவதரித்த இன்றைய தினத்தில் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி  ஒரு சிறு பாடல் .
அன்புடன்
ரமேஷ்
பி.கு :
முந்தைய கோகுலாஷ்டமி தினத்தன்று எழுதி பதித்த பாடல்களை கீழ்கண்ட இணைப்புகளில் காணலாம்.
https://kanithottam.blogspot.com/2017/08/blog-post_12.html
http://kanithottam.blogspot.com/2016/08/blog-post_26.html


கிருஷ்ணாவதாரம் 



*இருதாயைப் பெற்று  **இருதாரம் ஏற்று
திரௌபதியைக் காக்க துகிலளித்து - அர்ச்சுனனின்
தேர்ஒட்டி  போர்முடித்து கீதையெனும் நீதியை
பாருக் களித்தகண் ணன்.  

(பல விகற்ப இன்னிசை வெண்பா )


*இருதாய் - பெற்ற  தாய் தேவகி; வளர்த்த தாய் யசோதை. இருவரையும் கண்ணனே தேர்ந்தெடுத்ததால் "இருதாயைப் பெற்று " என்று கூறியுள்ளேன்.

** இருதாரம் - பாமா, ருக்மணி