விநாயக சதுர்த்தி
இன்று விநாயக சதுர்த்தி . இந்த நாளில், முன்பு நான் எழுதி பதிவு செய்த "விநாயகர் பதிகம்" என்ற பதிவை விநாயகரை வணங்கி மறு பதிவு செய்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
இன்று விநாயக சதுர்த்தி . இந்த நாளில், முன்பு நான் எழுதி பதிவு செய்த "விநாயகர் பதிகம்" என்ற பதிவை விநாயகரை வணங்கி மறு பதிவு செய்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
பாடல்
|
குறிப்பு .
|
வானுறை ஈசரும் ஏனைய தேவரும்
கானுறை நற்றவ மாமுனிவரும் ---தீநிறை
வேள்விகள் செய்யுமுன் வேண்டி வணங்குவது
வேழமுகன் பாதம் தனையே
|
எந்தக் காரியத்தையும், , கடவுளர்கள்,பிற தேவர்கள், முனிவர்கள் ஆகிய எல்லோரும் கூட விநாயகனைத் தொழுத பின்னரே தொடங்குவார்கள். இல்லையேல் காரியம் வெற்றி ஆகாது! சிவபெருமான் ஒரு சமயம் போருக்குச் செல்லுமுன் இதைச் செய்ய மறந்ததால் , அவரது தேர்ச் சக்கரம் உடைந்தது என்பது புராணம்.
|
காரியம் எதையும் கருதித் தொடங்குமுன்
பாருறை மாந்தர் தொழுவரே --- கரிமுகத்
தூயவன் மாயவன் மருகனுறை கோயிற்கு
போயவன் காலில் விழுந்து . (2)
|
தெய்வங்களே இப்படி என்றால், இவ்வுலகு மாந்தர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அவர்களும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பூசித்த பின்னரே காரியம் தொடங்குவர்.
|
காவியமாம் பாரதப் பெருங் கதையை பலநூறு
பாயிரமாய்ப் புனைந்த வியாசரவர் -வாயுரைக்க
தந்தம் உடைத் தந்த வரிகோலால் வரைந்தானை
வந்தனை செய்வோம் வணங்கி . (3)
|
வேதவியாசர் சற்றும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பாரதக் கதையைச் சொல்லவேண்டும் என்றும், அவர் சொல்லச் சொல்ல அவர் சொல்லுவதைப் புரிந்து கொண்டு , சற்றும் நிறுத்தாமல் விநாயகர் எழுதவேண்டும் என்று ஒப்பந்தம். அவர் வேகமாக எழுதும்போது எழுதுகோல் உடைந்துவிட்டது! என்ன செய்வது? உடனே விநாயகர் ஒரு தந்தத்தை உடைத்து , அதை எழுத்தாணியாக உபயோகித்து பரதக் கதையை எழுதி முடித்தார்! அதை விளக்கும் பாடல் இது.
|
கைலையில் குடிகொண்ட பெற்றோர் தமைச்சுற்றி
எலிவா கனமேறி வலம்வந்து -உலகைஎலாம்
சுற்றியதற் கொப்பிதெனச் செப்பிட்டு மாங்கனியைப்
பெற்றவனின் பாதமதைப் பற்று. (4)
|
விநாயகர் பற்றிய கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கதை-- அன்னையையும் தந்தையையும் வலம் வந்து மாங்கனியைப் பெற்ற கதை. விளக்கம் எதுவும் தேவையில்லை. (4)
|
குறுமுனி அகத்தியன் கைலயம் சென்றங்
கிருந்து கொணர்ந்ததண் கங்கைநீர் – நிறைஜபக்
கலத்தினைக் கவிழ்த்துக் காவிரியாகத் தென்திசை
நிலம்செழிக்க விட்டவனை வணங்கு. (5)
|
விந்தியமலையின் தெற்குப் பகுதிகளின் தண்ணீர்ப் பற்றாக்குறையை நீக்க ஒரு ஜீவ நதியை உருவாக்க அகத்திய முனி கங்கை நீரை ஒரு மண்டலத்தில் எடுத்து வந்தார். தென்மேற்கு மலையில் ஒரு இடத்தில் தன் கமண்டலத்தை கீழே வைத்து இளைப்பாறுகையில் , விநாயகர் ஒரு காக்கை வடிவில் வந்து ( ஒரு அந்தணச் சிறுவன் வடிவில் என்றும் சொல்வதுண்டு), அந்தக் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அங்கிருந்து காவிரி உற்பத்தி ஆகியது ; அந்த இடம் தான் தலை காவேரி : -என்பது ஐதீகம்.
|
செவ்விய தமிழிலே பாடல்கள் பலபுனைந்த
அவ்வைக் கிழவிக்கு அருள்செய்து- அவர்தம்மை
கவ்வித் தன்வாயால் கைலாயம் சேர்த்தானை
பவ்(வி)யமாய்ப் பணிவோம் தினம் (6)
|
அவ்வையும் அவரது நண்பர்கலான சுந்தரமூர்த்தி நாயனாரும், சேர மன்னனும் கைலாயம் போகத் திட்டமிட்டார்கள். புறப்படும் நாளன்று அவ்வை விநாயகர் பூஜையில் ஆழ்ந்திருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியாமல் போயிற்று. அவர் பூஜையில் ஈடுபட்டிருந்த போதிலே , மற்றவர் இருவரும் கைலாதுக்கு புறப்பட்டு விட்டார்கள்- முன்னவர் இந்திர லோகத்து யானை ஐராவதத்தின் மீதும், பின்னவர் அவரது புரவி மேலும் அமர்ந்து. அவ்வையாரின் மனக்கலக்கத்தை அறிந்த விநாயகர் , பூஜை முடிந்ததும் அவரை தன தும்பிக்கையால் தூக்கி கைலாசத்தில்- அவரது நண்பர்கள் அங்கடையும் முன்னே - சேர்த்தார் என்பது வரலாறு.
|
அருகம்புல் மாலையை அணிவித்து அதனோடு
எருக்கம்பூ சேர்த்தவரைப் * பூசித்து -- உருக்கமுடன்
வேண்டுமடி யார்க்கவர்கள் நாடும்வரம் நல்குவனைத்
தண்டமிட் டுத்தொழுவம் நாம். (7)
* சேர்த்து அவரைப்
|
இந்தப் பாடலுக்கு விளக்கங்கள் தேவையில்லை. என்றாலும் ஏன் அருகம் புல் விநாயகருக்கு விசேஷம் ? ஒரு கதை உண்டு. ஒரு சமயம் பார்வதியின் கோபத்துக்கு உள்ளாகி சபிக்கப்பட்டார் நந்தி தேவர். சாபம் விலக வழியை அவர் தேவியிடம் வேண்ட, தேவியும் " உனக்குப் பிரியமான ஒன்றை விநாயகருக்கு அர்ப்பணித்துவிட்டால் சாபம் விலகும்"என்று அருளினார். உடனே நந்தி தேவர் அவருக்குப் பிடித்த உணவான அருகம் புல்லை அர்ப்பணித்ததாகவும் , அதனாலேயே பிள்ளையாருக்கு அருகம்புல் விசேஷம் என்றும் கூறுவர் .
|
புறஅறிவின் பூரண உருவகமாய் புத்தியினை
ஒருபுறம் அமர்த்திக் கொண்டு -- மறுபுறம்
மெய்ப்பொருள் தத்துவமாய் சித்தியை வைத்திட்ட
அய்ங்கரனி னடிகள் பணிவோம். (8)
|
பிள்ளையாரை பிரம்மச்சாரியாகவே நாமெல்லாரும் நினத்திருந்தாலும், அவர் பிரஜாபதியின் ( சிலர் பிரமனின் என்பர்) மகளிரான சித்தியையும் புத்தியையும் துணையாக ஏற்றதாகவும் வரலாறு உண்டு.விநாயகர் இருக்கும் இடத்திலே அறிவின் பூரணத்துவத்தைக் காணலாம் என்பதையே சித்தியும், புத்தியும் உணர்த்துகிறார்கள் என்பதின் உருவகமே இது என்றும் கொள்ளலாம்.
|
மோதகமும் முக்கனியும் பாலோடு சர்க்கரையும்
சாதித்து சிரம்தாழ்த்தி வணங்கிடின் -- காதலுடன்
வேதனைகள் நமைச்சேரா! விக்னங்கள் விலகிவிடும்!
தீதகன்று நலம்சேரும் காண். (9)
|
" சாதித்து. சிரம்தாழ்த்தி காதலுடன் வணங்கிடின் "-- என்று படித்துப் பொருள் கொள்க. வேறு விளக்கங்கள் தேவையில்லை
|
முச்சந்தி தோறும் மரத் தடிகள் மீதும்
எச்சமயமு மர்ந்த்தருள் புரிபவனை - இச்சையுடன்
மெச் சியே தொழுவோர்க்கு நலமெலாம் சேருமே
நிச்சயமி தென்றே உணர். (10)
|
பொருள் விளக்கங்கள் தேவையில்லை.
அனைவரும் விநாயகனை வணங்கி நலம் பெறுவோம்!
|
Super sir
ReplyDeleteExcellent. I couldn't differentiate between original by ஔவை பாட்டி and yours.
ReplyDeleteYou have taken us on a complete tour of Lord Ganesha’s heroics and antics in a nutshell. Super....
ReplyDeleteDivine.
ReplyDelete