நேற்று மகாகவி பாரதியின் பிறந்த தினம்.
அவரை நினைவு கூர்ந்து வணங்கி ஒரு கவிதை.
அன்புடன்
ரமேஷ்
பாரதியார்
பிறந்த நாள் 11-12-2020
முடிந்த முண்டாசு ! முறுக்கிய கூர்மீசை!
நடுநெற்றிப் பொட்டின் கீழ் நாட்டின் விலங்கறுக்க
விடுதலை வேட்கையுடன் துடிக்குமிரு கருவிழிகள் !
தடித்தவிரு உதடுகளைத் திறந்தவுடன் தடையின்றி
தொடுத்ததோர் வில்விட்டு விரைகின்ற கணைகள்போல்
அடுக்கடுக் காகவரும் அழகுத் தமிழ்க்கவிதை !
மிடுக்கோடு மடித்துக் கோத்திட்ட கையிரண்டும்
முடியரசன் முன்னாலும் கவியரசர் நானென்று
அடங்க மறுத்திட்டு முன்னிருத்தும் இறுமாப்பு!
மடித்தெடுத்துக் கட்டிய கச்ச உடையோடு
எடுத்து முன்வைக்கும் பீடு நடையோடு
தடைகள் தூளாக்கி தடம் பதிக்கும் திண்கால்கள் !
உன்னுருவம் நோக்கையிலே பொங்கியெழும் புத்துணர்வு
என்மனதில் எந்நாளும் இனியதமிழ்க் கவியரசே!







