கொரானா கவிதை - 9
தினக்கூலி, வீட்டுவேலைத் தொழிலாளர்கள் குரல்
இப்போதைய தனிப்படுத்தலால் எல்லோருக்கும் துயரம் என்றாலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வீட்டுவேலை செய்வோர் , தினக்கூலித் தொழிலாளர் ஆகியோரே!
கொரானா இங்கு நுழைந்ததிற்கு இவர்கள் எந்த வகையிலும் காரணமல்ல!
இவர்களுடைய கேள்வி - இதற்கு காரணமான மற்றோரை நோக்கி!
இது பற்றி எனது கல்லூரித் தோழர் வரதராஜனது மகள் எழுதி, அவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட ஆங்கிலக் கவிதையை மூலமாக வைத்து, நான் எழுதிய பாடல் .
அன்புடன்
ரமேஷ்
மூச்சுக்கு ஒருமுறை எனையழைக்கும் உந்தன்
பேச்சுக்கு மறுபேச்சு இன்றிநான் உழைத்தேன்
இரைதேடி அதிகாலை வெளிச்சென்ற பறவை
இரவிலே இசைபாடி பின்திரும்பும் வரையில்
உன்னோடு நிழலாக உன்பின் இருந்து
சொன்னதைச் செய்து துரும்பாய்நான் தேய்ந்தபின்
----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய்
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய்
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!
திரைகடல் கடந்தாய் திரவியம் சேர்த்தாய்
விரும்பிய வழியெலாம் வீண்செலவு செய்தாய்!
வரைமுறை ஏதின்றி வாழ்க்கையைக் கழித்தாய்
திரும்பநீ வருகையில் கிருமிகள் கொணர்ந்தாய்!
மருத்துவ மனைசென்று சோதனைகள் செய்தே
திருத்தங்கள் செய்துவுன் வேதனை விடுத்தபின்
----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய்
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் !
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!
சிறியதோர் குடிலிலே எங்கள் குடும்பம்
வறுமையின் பிடியிலே வாடுகிறோம் நிதமும்
என்னுடைய மக்கள் என்றுமெனைச் சுற்றி ,
என்னுடைய தாய்தந்தை என்கையைப் பற்றி.
நாள்தோறும் எங்களது வாழ்வேயோர் வேள்வி.
நாளையென் செய்வோம் என்பதே கேள்வி.
----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய்
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய்
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!
மாகாணம் விட்டு மாகாணம் வந்து
நீகாப்பாய் நன்றாய் என்றுன்னை நம்பி
உனக்காக உழைக்கின்ற தினக்கூலி மக்கள்
சோகாத்து இந்நாள் வாடுதல் சரியோ?
ஏகாந்த மாகநீ உள்ளொளிந் திருக்க
தேகாந்த நிலையவர்கள் அடைவதும் முறையோ?
----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய்
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய்
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!