Search This Blog

Aug 12, 2017

சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)


சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)


வரும் திங்கள் கோகுலாஷ்டமி - கண்ணன் அவதரித்த நாள்.

கோகுலத்தில் சிறு குழந்தையாகவும், ஒரு சிறுவனாகவும் கண்ணன் செய்த லீலைகள் பற்றிய கதைகள்  குழந்தைகளை  மிகவும் கவரும்.

நான் முன்பு கூறி இருந்த படி , குழந்தைகளுக்கு புரியும் படி பாடல்களை எழுதி , கற்பித்து , அவர்கள் மனதில் நம் கலாச்சாரத்தைப் பற்றிய கதைகளையும் நல்ல கருத்துக்களையும்  பதிக்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை.

இதன் படி  குழந்தைகளுக்கான முந்தைய இரு  பாடல்களின் தொடர்ச்சியாக கோகுலாஷ்டமி அன்று கண்ணன் பற்றிய ஒரு பாடல் இன்று.

அன்புடன் 

ரமேஷ் 


சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)




யமுனை நதியின்  கரையோரம் 
கோகுலம் என்னும் கிராமத்தில் 
சிமிழிதழ் சிரிப்புடன் சின்னக்கண்ணன் 
அன்னை மடியில் தவழ்கின்றான்.










கட்டி முடித்த கருமுடியில் 
அழகாய்ச் செருகிய மயிலிறகு.
பட்டாடையும் அவன்  இடையினிலே 
பட்சணமும் சிறு கைகளிலே 








துருதுரு துறுவென இங்கங்கும்    

தவழுவதில்  அவன் சிற்றெறும்பு 
சுறுசுறுப்பாக ஓடி அவன் 
செய்வ தெல்லாமோ பெருங்குறும்பு.   








வெண்ணை தயிர்க்குடப்  பானைகளை 

தள்ளி வெண்ணையைத் தின்றுவிட்டு   
கண்ணை இமைக்கும் நேரத்தில் 
அங்கிருந்தே அவன் ஓடிடுவான்  








ஓடி ஒளிந்திடும் கண்ணனையே 

தேடிப்  பிடுத்து அவன் அன்னை 
சாடிக்  கடியும் நேரத்தில் - நான் 
செய்ய வில்லைஎனச் சாதிப்பான். 







சின்னக் கண்ணன் செய்கின்ற 

சில்விஷ மங்களைப்  பொறுக்காமல் 
அன்னை யசோதா அவனையொரு 
உரலில் கட்டி வைத்தாளாம்.






திருமால் விஷ்ணுவின் உருவான 

குட்டிக் கண்ணன் இவனுக்கு 
உரலும் பெரிய கனமல்ல.
உருட்டி  இழுத்துச் சென்றானாம்.





கண்ணன் செய்யும் விளையாட்டுக் 

குறும்பு களுக்கோர் கணக்கில்லை.
எண்ணில் அடங்கா இக்கதைகள்  
ஒவ்வொன்றாய் நாம் படித்திடுவோம்.





அட்டமித் திருநாள் இம்மாதம் 
குட்டிக் கண்ணன் பிறந்ததினம்.
வீட்டு  வாசலில் கோலமிட்டு 
பாட்டுகள் பாடி மகிழ்ந்திடுவோம்.








சின்னச்   சின்னக் கால்வரைந்து 
வண்ணத் தோரணங்கள் கட்டி 
வெண்ணை பட்சணங்கள் படைத்து 
கண்ணனை வாவென வரவேற்போம்.









Aug 10, 2017

கோட்டூர் தோட்டப் பிள்ளையார் பலகை

கோட்டூர் தோட்டப் பிள்ளையார் பலகை 

நான் காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது, பல நாட்கள் கோட்டூர் தோட்டம் நான்காம் தெருவின் வழியாகச் செல்லுவது உண்டு. அப்போதெல்லாம் ஒரு வீதியின் முன்னால், பிள்ளையார் சிலை ஒன்றின் அருகில், சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் கரும்பலகையில் (பிள்ளையார் பலகை) எழுதப்பட்டுள்ள கருத்துப்  பொதிந்த வாசகங்களை நின்று படித்துச் செல்வேன். ஆனாலும், "தினம் ஒரு கருத்து" என்று தவறாமல் எழுதி வரும் இப்பணியைச் செய்து வருபவர் யார் என்று  தெரிந்து கொண்டதில்லை.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால்தான் அவரை சந்திக்கும் வாய்ப்பும், அவரிடமிருந்து இதுவரை அப்பலகையில் இடம் பெற்று இருந்த வாசகங்களின் பதிவைப்  பெரும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த மனிதர்தான் ஒய்வு பெற்ற  முன்னாள் காவல் துறைத் தலைவர் திரு.ராஜ்மோகன்.

அவர் பணியைப் பாராட்டி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




கருக்கல் காலையில் கண்விழித்து 
----------காலைக்  கடன்எல் லாம்முடித்து 
சுருக்கென சூரியக் கிரணங்கள் 
----------சருமம்  துளைக்க எழுமுன்னே 
விருவிரு விருவென நடைபோட்டு 
----------வீதியில் நடக்கும் வேளையிலே 
கருத்துப்  பொதிந்த வாசகங்கள் 
----------கருப்புப் பலகையொன் றில்காண்பேன்.

கோட்டூர் தோட்டக் கோட்டத்தில்  
             நீண்ட நான்காம் வீதியிலே   
வீட்டெண் பதினேழின் முன்னே
              முன்னாள் காவல் துறைத்தலைவர் 
கேட்டும் படித்தும் பட்டறிந்தும் - தான் 
-----------கண்டுகொண்ட உண்மைகளை - இத் 
தோட்டத்தின்   மக்கள் பயனுறவே  
-----------நாளும் பலகையில் எழுதுகிறார்.

வீதியில் நடக்கும் மாந்தர் எல்லாம் 
              பாதியில் நடையை நிறுத்திட்டு- நற் 
சேதிகள் சொல்லும் பலகையிலே 
-----------ராஜ மோகனார் பதித்திட்ட -  
நீதி  உரைகளைப் படித்துவிட்டு - மிக 
---------- நன்று  நன்றென நவிலுகிறார்.
மாதிரி மனிதர் இவர்பணிகள் - பல 
----------- நாட்கள்  தொடர இறையருள்க!

              


Aug 4, 2017

The Female Trinity - ( English Version)

The Female Trinity - ( English Version)

While posting the Tamil version of the Female  trinity, I had mentioned that I will post the English version, which I wrote a year back, for my Grand Daughter. Here it is.

V.Ramesh.




1


Sakthi , the mothergod,, has forms three

Worship her in all forms, to be worry free!

2

As Lakshmi she gives us wealth and  money

Her blessings will fill the land, with milk and honey.


3


As Parvathi she gives us strength and courage

To her enemies , she is  a source of scourge!


4

Saraswathi is the source of wisdom

With wisdom,  you can conquer any kingdom!


5



All of us should thank them and pray, 

Morning and evening,  every day !




The male trinity - english version

THE MALE TRINITY-  (ENGLISH VERSION)

While posting the Tamil version of the Male trinity, I had mentioned that I will post the English version, which I wrote a year back, for my Grand Daughter. Here it is.

V.Ramesh.

1



Three great gods who live in heaven
Are Brahma, Vishnu and Paramasivan.

2


Brahma is one who creates the worlds
The sun and the moon and animals and birds.

3



God Vishnu, who took the nectar
From the sea of milk, is our protector.

4






Paramasiva will fight and kill
All things that are bad 'n evil!

5





All of us must thank them and pray,
Morning and evening, every day!



Jul 28, 2017

முப்பெரும் பெண் தெய்வங்கள்

சென்ற வாரம் பதிப்பித்திருந்த "பிரம்மா, விஷ்ணு, பரமசிவன் பற்றிய குழந்தைகளுக்கான பாடலைப் பற்றி கருத்துத் தெரிவிவித்து இருந்தவர்களுக்கும், படித்துப் பாராட்டியவர்களுக்கும்  நன்றி.
முப்பெரும் ஆண் தெய்வங்கள் பற்றிய பதிப்பைத்  தொடர்ந்து , அவர்களின் துணைவியராகவும், சக்தியின் மூன்று வடிவங்களாகவும் இருக்கும் முப்பெரும் பெண் தெய்வங்களான லட்சுமி, பார்வதி, சரஸ்வதி பற்றிய ஒரு சிறு பாடல் - குழந்தைகளுக்காக.

அன்புடன்
ரமேஷ்






முப்பெரும் பெண் தெய்வங்கள்




ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அம்மா
அப்பா பின்னே  இருப்பதுபோல்
சிவன் பிரம்மா திருமால் பின்னே
சக்தி ஒருவள் இருக்கின்றாள்.


 





சக்திக்கு உருவம் மூன்றுண்டு-  அவை
சரஸ்வதி,பார்வதி,லட்சுமியென்பார் .
பக்தியுடன் தினம் இருவேளை - அவள்
பாதம் தொழுது பயனுறுவோம்.                        








கலைமகள் என்று பெயர்கொண்டு- ஆய
கலைகளை அளித்தவள் சரஸ்வதியே!
விலைமதிப் பில்லாப் பொருளான- கல்வி  
அறிவினை  அருள்வது அவள்தானே!








பார்வதி என்பவள் மலைமகளாம்- அவள்
வீரத் திற்கே  உறைவிடமாம்.
யாரெவர் நம்மை எதிர்த்தாலும்- நாம்
அவளருள் இருந்தால் வென்றிடுவோம்









திருமகள் என்னும்  லட்சுமியே   - நற்
செல்வம் நமக்கு அருள்பவளாம் .
பொருளும் பொன்னும் குறைவின்றி - தன்னைத்
தொழுவோர்க் கெல்லாம்  அளித்திடுவாள்.                  







இந்த மூவரையும்  அனுதினமும்-நாம்
வந்தனை செய்து வழிபட்டால்
வந்தடையும்  நம் அனைவரையும்- உயர் 
கல்வியும் செல்வமும் வெற்றிகளும் .






























.

Jul 21, 2017

தலைப்புச் செய்திகள்: வாசிப்பது -------

தலைப்புச் செய்திகள்: வாசிப்பது -------

சென்ற சில நாட்களில் வந்த செய்தித்தாள் தலைப்புச் செய்திகள்: வாசிப்பது -------


1. எம்.எல்.ஏ சம்பளங்கள் இரண்டு மடங்காக உயர்வு.
2. நிதிநிலைமை மோசமானதால் அம்மா உணவகங்கள் குறைப்பு.
3. சசிகலாவுக்கு சிறையில் தனி சமையலறை/சமையலாட்கள் 
4. தமிழ்நாட்டில் பெண்குழந்தை/ஆண்குழந்தை விகிதாச்சாரம் குறைந்து 911: 1000 என்ற நிலைமை.
5.தமிழ் நாட்டில்  கொசுத்தொல்லை; டெங்கு பரவும் அபாயம்.
6. மருத்துவமனையில் லஞ்சத் தொல்லை: இறந்தவரின் சடலங்களை எடுத்துக்கொள்ளக் கூட , உறவினர்களிடம் பணம் பிடுங்கும் அவலம்.
7. சாராயக்  கடைகளை மூடக்கோரி பெண்கள் நடத்தும் போராட்டத்தில் தடியடி.
8. தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு செய்யப்பட முதலீடுகள் அகில இந்திய முதலீடுகளில் 2.1% மட்டுமே!

இவை பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


செய்திகள் - வாசிப்பது --------

எம்எல்ஏ     சம்பளத்தை    இரட்டிப்பு    செய்கிறார்
அவர்செய்யும்    ஊழல்களை     இருட்டடிப்பு    செய்கிறார்.
அம்மா    உணவகங்கள்    நடத்துவதை    நிறுத்துறார்
சின்னம்மா   உணவகங்கள்    சிறையில்கூட    அமைக்கிறார்.

பசுவதையைப்    பற்றியிவர்    பார்லிமென்டில்   பேசுறார்- பெண்
சிசுவதையை    தமிழ்நாட்டில்    தடுப்பதை    விடுக்கிறார்.
கொசுவதையைக்    கூடஇவர்   சரியாய்ச்    செய்யாததால்
விசுவரூப   மாய்டெங்கு    காய்ச்சல்   எடுக்குமோ?

இந்தியா    முழுதுமான     முதலீட்டுக்    கணக்கிலே
வந்தபணம்    இரண்டே    இரண்டுவிழுக்   காடுதான்.
நான்எனக்கு   என்பதையே    தலைவர்கள்   நினைப்பதால் 
டீஎன்னுக்கு*    இவ்வளவே     கிடைத்ததிலோர்     வியப்புண்டோ? (*TN- Tamil Nadu) 

ஆசுபத்திரி    சேவைக்கும்    காசுபணம்   கறக்குறார். 
டாசுமாக்கில்     சாராயம்   ஊத்திஊத்திக்   கொடுக்கிறார்.
பேசுபுக்கில்    பலருமிவரை     ஊத்திஊத்திக்   கழுவுறார்*.
பாசுமார்க்    கூடஆட்சிப்    பரிட்சையிலே   வாங்கலே !



*- "ஊத்திக் கழுவுதல்" என்ற இந்த வார்த்தைப் பிரயோகம் எனக்கும் புதியதே. எந்த ஒரு அகராதியிலும் இதற்குப் பொருள் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் இவைகளிருந்து நான் கற்றுக்கொண்டது இது.
"ஒருவருக்குள்ளிருக்கும் குறைகளை  அலசி வெளியே எல்லோருக்கும் தெரியும்படி செய்வது" என்பது என் புரிதல். இந்தப் பொருளில்தான் இதை பயன்படுத்தி  இருக்கிறேன்.



Jul 17, 2017

பிரம்மா விஷ்ணு சிவன்

பிரம்மா விஷ்ணு சிவன் 

என்னுடைய பேரக்  குழந்தைகள்  மூன்று பேர் சென்னை வந்து  இன்று முதல்  எங்களுடன் சென்னையில் சில வாரங்கள்  தங்கப் போகிறார்கள்.  அதைக் கொண்டாடும் வகையில் குழந்தைகளுக்கான ஒரு பாட்டு.

பெரியவளுக்கு ஐந்து வயது. சாதாரணமாக இந்த வயதுக் குழந்தைகளுக்கு நாம் கற்பிப்பது  அர்த்தம் புரியாத சமஸ்க்ருத ஸ்லோகங்கள் அல்லது அர்த்தம் இல்லாத ஆங்கில nursery rhymes .

குழந்தைகளுக்கு புரியும் படி பாடல்களை எழுதி , கற்பித்து , அவர்கள் மனதில் நம் கலாச்சாரத்தைப் பற்றிய கதைகளையும் நல்ல கருத்துக்களையும்  பதிக்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை.

அந்த ஆசையில் விளைந்த ஒரு பாடல் இது.

இது குழந்தைகளுக்குப் புரியுமா, அல்லது இன்னும் எளிதான நடையில் இருக்க வேண்டுமா ? 

உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! ஏதாவது திருத்தங்கள் தோன்றினாலும் சொல்லுங்கள்!

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு. : இதையே ஆங்கிலத்திலும் எழுதி இருக்கிறேன். அதை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

பி.பி.கு : இந்தப் பாடலைப் பதித்த பிறகு, நண்பர் ராம. கிருஷ்ணன் கூறிய திருத்தங்களை ஏற்று மாறுதல்களை செய்திருக்கிறேன்.





மூன்று தெய்வங்கள்



பிரம்மா விஷ்ணு சிவன்என்று  
          பெரிய தெய்வங்கள் மூன்றுண்டு.                       
கரங்கள் கூப்பி அம்மூவரையும்
          காலையும் மாலையும் வணங்கிடுவோம்.






நான்கு முகமுடை பிரம்மனோ 
          நான்கு வேதங்கள் தந்தவராம்.  
அண்ட சரங்கள்  அத்தனையும்          
          ஆக்கிப் படைப்பது அவர்தொழிலாம்.






பாலாங் கடலில்   பாம்பின் மேல்                                    
          படுத்துப்  பள்ளி கொண்டிருக்கும்
மாலெனும்   பெயர்கொண்ட விஷ்ணுவுமே 
            மகிழ்ந்து நம்மைக் காத்திடு வார்.






சிவனுக்கு மூன்று கண்ணென்பார்                               
           சிவந்து பரந்த நெடுந்தோற்றம் 
தவறுகள் செய்யும் துட்டர்களை 
            நெற்றிக்  கண்ணால்   எரித்திடுவார்.





படைத்தல், காத்தல், அழித்தலையே   
            பாரில் மக்கள் உய்யுறவே    
இடை விடாமல் செய்பவரை
            என்றும் வணங்கி நலமடைவோம்.