Search This Blog

Apr 8, 2017

கல்யாண சமையல் சாதம்

கல்யாண சமையல் சாதம் 

நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்து ரசித்த ஒரு படம் மாயா பஜார். 
அதில் கடோத்கஜன் ( எஸ்.வீ.ரங்காராவ்) பாடும் ஒரு பிரபலமான பாட்டு " கல்யாண சமையல் சாதம்". பல விதமான உணவு வகைகளை கடோத்கஜன் விழுங்குவதை ரசித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
என் வயதையொத்த பலருக்கும் இந்தப் படமும், அதில் வரும் இந்தப் பாடலும் நினைவில் இருக்கும்.

சில நாட்களுக்கு முன், என் உறவினர் ஒருவரின் கல்யாணத்திற்குச் சென்று மூன்று வேளை வயிறு முட்ட விருந்துண்ட போது , இது மீண்டும் நினைவுக்கு வந்தது. அப்படி என்னதான் இருந்தது அந்த விருந்தில்? 

படித்தும் , கேட்டும் ரசி(ருசி?)யுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 



கல்யாண சமையல் சாதம் 

                      நெருங்கிய உறவொன்றின் இல்லமண நிகழ்ச்சிக்கு
                      வருந்தியவர் அழைத்த தாலும் - கூடவே
                      இருந்தவர்க்கு* வேண்டும்பல விதமான உதவிகளை
                      செய்யஅவர் கேட்ட தாலும்               (*இருந்து அவர்க்கு)
                      மூன்றுவே ளைகளும்  காலைமுதல் மாலைவரை
                      விருந்தங்கு உண்ண லாச்சு.
                      நான்அன்று அங்குண்ட  விருந்துணவு வகைகளை
                      இங்குயிக் கவிதை கூறும்.

காலைச்  சிற்றுண்டி 

வட்டவடி வம்கொண்டு  சுட்டவடை வெண்பொங்கல்
இட்டலி அவைக ளுடனே - பல  
சட்டினி வகைகளும்  அதனுடன் கூடவே 
தொட்டுண்ண சாம்பா ருமே! - பொங்கி 
உப்பிய பூரியுடன் உருளைக் கிழங்குகறி  
இருவகை தோசை குருமா - இவைகளை  
சப்புக் கொட்டியே சாப்பிட்ட பின்னரோ  
கப்*பிலே  கொதிக்கும் காஃபி.                             * cup 

                       மங்கலநாண் கட்டியபின் மலரரிசியைத் தூவி 
                     மொய்ப் பரிசை அளிக்கும்  போது 
                      மறக்காம லேமதிய  உணவுண்ண வேண்டுமென 
                      உறவுகள்  உரைத்த தாலும் - மிகவும் 
                      நீண்ட வரிசையிலே நெடுநேரம் நின்றதால் 
                      உண்டது செரித்த தாலும் - மீண்டும் 
                      கொஞ்சம்பசி தலைதூக்கி தொல்லைப்  படுத்தவே 
                      லஞ்ச்*ஹாலை    நோக்கி நகர்ந்தேன்.       *lunch 

மதிய உணவு 

வாடாத வெண்மல்லிப் பூவின் நிறத்திலே   
சூடான  சாதம் இட்டு  - கூடவே 
உருகின  நெய்விட்டுப்  பிசைந்தோர் குழிசெய்து  
பருப்புசாம் பாரை யூற்று .

இருவகைப் பொரியலுடன்   பொரித்த அப்பளம் 

நொருக்கியத னோடு கலந்து - விரும்பியே 
உண்டபின் னேவரும் மோர்க்குழம்  பும்வாசம் 
கொண்டதக் காளிரச மும்.

பல்வகைப் பச்சடிகள் பன்னீர்ப் பாயசம் 

அல்வா இனிப்பு வகைகள் - சில்லென்ற  
கட்டித் தயிரோடு வத்தல் குழம்பின்னும் 
தொட்டுக்க ஊறுகாய் வகை 

இத்தனையும் சாப்பிட்டு எழுந்துகை கழுவியபின் 
பத்தாது இதுவென் றின்னும் - பத்துவகை 
பாக்குசீ வல்போட்டு மடித்தபான்* சுருளைகள்          *paan 
சாக்லேட்டு ஐஸ்க்ரீ *முடன்.                                                         *choclate icecream 


                        இருவேளை இலைபோட்டு உண்டி படைத்தபின் 

                      இரவுணவு சுயசேவை யாம்.
                      ஒருகையில் முள்கரண்டி மறுகையில் தட்டேந்தி 
                      விரும்பியதை நீயுண்ண லாம்.

இரவு உணவு 

பிரியாணி பச்சிடி கலந்த சாதங்கள்  
வறுத்தபூக் கோசு*த் துண்டு - பொறித்த                   *cauli - flower 
வருவல் பப்படங்கள்  சப்பாத்தி நான்வகைகள் 
குருமா தயிர்ப் பச்சடி- கூடவே 
சீனத்து நூடுலும்* கோபிமஞ் சூரியன்#              *noodle # gopi manchurian 
பானி-பேல்  பூரி* வகைகள்-இதன்பிறகு            *pani poori , bhel poori 
குல்பி*ஐஸ் கிரீமுடன் வெட்டிய பழத்துண்டு          *kulfi 
குலோப்ஜான் இனிப்பு வகைகள் .

இதன் பிறகு ?

                        நாக்கின் சுவைக்கு நானடிமை ஆகியே 
                      மூக்குப் பிடிக்க வேளை - மூன்றுமே   
                      பாக்கியே வைக்காமல் பந்தாவும்  பாராமல் 
                      சாக்கெதுவும் சொல்லா மலே - உண்டபின்
                      தேக்கியே வைத்துள்ள தேகக் கொழுப்பால் 
                      சீக்குப்பிடிக் காதிருக்கக்  -  காலையில் 
                      வாக்கிங்*  போகின்ற  நேரத்தை நாளைமுதல்      *walking 
                      ஆக்குவேன்  இருமடங் காய். 




Mar 26, 2017

குறள் மேல்வைப்பு வெண்பா -17

குறள் மேல்வைப்பு வெண்பா -17

விருந்தோம்பல் அதிகாரத்தில் வரும் ஒரு குறள் இது :

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சின் மிசைவான் புலம்                                                         (குறள் 85)



இதன் பொருள் : வரும் விருந்தினரை அவர்கள் முகம் மலர உபசரித்து அவர்களுக்கு அளித்தது போக, மிகுதியைத் தான் உண்ணும் தன்மைபடைத்தவருடைய நிலத்திற்கு விதை விதைக்கவும் தேவையில்லை. பயிர்கள் தாமே வளரும் என்பதாகும்.

இது குறித்த ஒரு நிகழ்வு.

இளையான்குடி மாறன் நாயனார் ஒரு சிவபக்தர்; நல்ல செல்வந்தர். சிவனடியார்களை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து மகிழ்விப்பதையே தன வாழ்நாளின் கடமையாக எண்ணினார். அவருக்கு வாய்த்த மனைவியும் அத்தகையாரே ! கொடுத்துக்  கொடுத்து தன்  செல்வம் சிறுத்து வறுமை நிலையை அடைந்தபோதும் இப்பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாறனார்  இல்லத்திற்கு, நல்ல மழை பெய்துகொண்டிருக்கும் ஒரு இரவுப்  பொழுதில்  ஒரு சிவனடியார் வருகை தந்தார்.  அந்த அடியார் வேறு யாருமல்ல- மாறனாரை  சோதிக்க விரும்பிய சிவபிரான்தான்! 

அவரை வரவேற்று அமரச்செய்தனர் மாறனார்  தம்பதியினர். வீட்டிலே ஒரு குன்றுமணி அரிசி கூட இல்லாத நிலைமை ! சிவனடியாருக்கு எங்கனம் உணவு படைப்பது? அன்று காலையில்தான் அவர்களிடம் இருந்த விதை நெல்லை கொல்லை நிலத்தில்  விதைத்திருந்ததை  நினைவு படுத்தினார் மாறனாரின் மனைவி.
மாறனார்  கொட்டும் மழையில் நிலத்திற்கு  விரைந்து , நிலத்தில் விதைத்திருந்த நெல்விதைகளை எடுத்து வந்தார். அவரது மனைவியார் அதை சமைக்க, வந்த சிவனடியாருக்கு உணவு படைக்க விரைந்தனர்  அத்தம்பதியர்.
அவர்கள் செயலால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், தன்  நிஜஉருவில்,  மாறனார் தம்பதியினருக்கு காட்சியளித்து அருள் புரிந்தார்.


விதை நெல்லையே விருந்தினருக்கு அளித்த மாறனார் , மேற்கூறிய   விருந்தோம்பல்     குறளையும்  மிஞ்சிய ஒரு  எடுத்துக்காட்டு!


இந்தக்  கதையை மேல்வைத்த ஒரு குறள் மேல்வைப்பு வெண்பாவை அளிக்கிறேன்.


அன்புடன் 

ரமேஷ் 


வேறொன்றும் இல்லத்தில் இல்லாத போதினிலும்
சோறாக்கி நெல்விதையை வந்தோருக் கேயளித்தான் 
வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சின் மிசைவான் புலம் 


    English version of Rev. Pope
    Who first regales his guests and then himself supplies
    Over all his fields unsown, shall plentious harvests rise
    Meaning 
    Is it necessary to sow the field of the man, who , having feasted his guests, eats what may remain?
    Version by Suththaanandha Bharathi
    Should his field be sown who first
    Feeds the guests and eats the rest?
The story in English:


Maranar was born  at Ilayankudi of tamil nadu. 

He was an ardent devotee of Lord Shivaâ. He took the greatest pleasure in serving them and considered that as Maheswara pooja.
Years rolled by and Nayanar's wealth melted away due to his charity. His wealth had left him, but not his virtue.  Nayanar sold all his property  in order to be able to serve the devotees of the Lord. One day there was a heavy downpour. Nayanar and his wife were starving for the whole day. No one came forward to help them. Finally, he bolted the door and was about to fall asleep. Just then he heard a knock at the door, and, on opening it, found a sage standing in front of the house, fully drenched with rain. Nayanar at once took the guest inside, dried his body and gave him fresh clothes to wear. He requested the sage to have dinner at his home and told his wife of to prepare some food. But both of the couple know that there was nothing to offer the devotee of the Lord. At that time Nayanar's wife suggested that he could go into the backyard and collect the grain-seeds that they had just sown that day.  As soon as he brought the grains, the wife cooked them, and with the help of some greens that grew in their own backyard, cooked a nice dinner for the guest. Nayanar was very happy and thanked the almighty for helping him at this situation..He then went to awaken the guest, but he found that the sage had disappeared. At the same time, Nayanar saw in sky, Lord Siva and Mother Parvathy blessing him and his wife. The Lord said that he was immensely pleased with their devotion to his bhaktas and both of them will very soon reach his Abode and live there for ever.

Mar 22, 2017

மீண்டும் தாத்தா ஆனேன் நான்!


மீண்டும் தாத்தா ஆனேன் நான்!


பங்குனித் திங்களின் எட்டாம் நாள் *
மங்களச் செவ்வாய்க்  கிழமையிலே

காலை மணிவொன்ப தரையளவில்
மூலத் தாரை முடியுமுன்னே

பெற்றோர் சித்தார்த் நேகாவும்
உற்றார் உறவினர் மனமகிழ
 
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
புதிதாய் ஓர் பூ மலர்ந்ததுவே.

அங்கயர்க் கண்ணியின் அருளாலே
தாயும் சேயும் நன்னலமே.   

மூன்றாம் பெயர்த்தி**வருகையினால்
மீண்டும் தாத்தா ஆனேன் நான்!

*மார்ச் 21
** முதல் இருவர் - அதிதி , அனன்யா - என் மூத்த மகன் சந்தீப்- மருமகள் சாந்தியின் குழந்தைகள்.

Mar 18, 2017

சும்மா இருத்தல் சுகம்- பாகம் 2


சும்மா இருத்தல் சுகம்- பாகம் 2

"சும்மா இருத்தல்" என்ற  பாடல் வரிகளின்  மேலெழுந்தவாரியான பொருள் பற்றி சென்ற பதிவில் எழுதினேன்.  ஆனால் இதன் உண்மையான பொருள் என்ன ? நான் படித்தறிந்த இரு கருத்துக்களை கீழே தருகிறேன்.

முதலாவது - 
"சும்முதல்" என்பது ஒலித்தலைக் குறிக்கும்.
"சும்மாது இருத்தல்" என்பது அதன் எதிர்வினையான ஒலியற்று இருத்தலைக் குறிப்பதாயிற்று. இது மருவி "சும்மா இருத்தல்" என்று ஆனது.
எவ்வித ஒலிகளும் எழுப்பாமல் மௌனமாக யோக நிலையில் அமர்ந்து இருப்பதன் மூலம் மனம் அடங்கும். வாயிலிருந்தோ மற்ற உடலுறுப்புக்களில் இருந்தோ எவ்வித ஒலிக்குறிப்பும் அதிர்வும் தோன்றா வண்ணம் இருக்கும் யோக நிலையே சும்மா இருத்தலாகும்.

இரண்டாவதாக 

வள்ளலாரின் ஒரு பாடல்- திருவருட்பா-விலுருந்து 


இதன் பொருள் : 

இறப்பு என்பது இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது அது என்று வருமோ, நான் அறியேன்: என் தலைவனே! காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதையும் தாண்டி உன்னை அடைந்து எந்த கவலையும் இல்லாமல் சும்மா இருக்கும் அந்த நாளே எனக்கு சுகமளிக்கும் நாள்.

இதில்  "பல வெளிகளைத் தாண்டி"ய பின் கிடைக்கும் " சும்மா இருக்கும் சுகம்"  என்று குறிப்பிடப்படுவது பூலோகம்,புவலோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், தவலோகம், ஆகிய அடுக்குகளைத் தாண்டி ப்ரம்மத்துடன் இணைந்த சலனமற்ற நிலையை அடைந்தபின்   (சத்ய லோகம்) வரும் சுகமாகும்.

இந்தக் கருத்துக்களை உள்ளடக்கி வெண்பா வடிவில் நான் எழுதிய பாடல் இதோ !

அன்புடன் 

ரமேஷ் 


--------------------------------------------------------------

சும்மா இருத்தல் சுகம்- பாகம் 2


அங்கிங்கே   பாய்ந்தலையும்  உள்மனதை ஓரிடத்தில்
தங்கவைத்து ஓரிலக்கை த்யானித்து - அங்குள்ளே
எம்மா  திரியான  எண்ணமும்  எண்ணாமல்
சும்மா இருத்தல் சுகம்

பூரகத்தில்* உள்ளிழுத்து கும்பகத்தில்*  உள்ளிருத்தி
ரேசகத்தில்* ப்ராணனையே  விட்டிட்டு#   - நேராக
சம்மண மிட்டமர்ந்து சிந்தை நிலைநிறுத்தி
சும்மா இருத்தல் சுகம்.

கடலின் அலையென  ஓயா ததிரும்
உடல்மன ஆட்டம்  அடக்கி -  விடியலில்
நிம்மதி ஆக இமைகளை  மூடியே
சும்மா இருத்தல் சுகம். 

அம்புலியைத் தன்தலையில்  கட்டிவைத்த   உச்சியின்மேல்^^  
சும்மாடு**   போலணிந்து  கங்கையினைத் தாங்கிநின்ற
பெம்மானை என்றென்றும் சிந்தை தனிலிருத்தி
சும்மா இருத்தல் சுகம்

Puraka is the voluntary prolongation of the inspiratory phase. Kumbhaka is a voluntarily controlled suspension of breath. Rechaka is a voluntarily controlled exhalation as compared to the normal exhalation. These are the three phases of Pranaayaamam.

# வெளியில் விட்டு 

^^ - உச்சி - தலையில் முடிந்த முடி, குடுமி 

** சும்மாடு = a head gear worn to help carry loads . Ypu might have seen this on the village street vendors carrying their wares in a basket on their head.


























Mar 12, 2017

சும்மா இருத்தல் சுகம் - பாகம் 1

" சும்மா இருத்தல் சுகம் - பாகம் 1

எனக்கு மிகவும் பிடித்த ஹாஸ்யத் துணுக்கு இது - ஒரு எஸ்.வீ.சேகர் நாடகத்தில் வந்தது என்று ஞாபகம்.

நபர் 1 ( பையனிடம்)- படிப்பெல்லாம் முடிச்சாச்சு ! இப்ப என்ன வேலை பண்றே?
பையன் - அப்பாவுக்கு ஹெல்ப் பண்றேன்.
நபர் 1- அப்பா என்ன செய்யறார்?
பையன் - வீட்டிலே சும்மாதான் இருக்கார்.
நபர் 1- ???????

இனி ஒரு சொந்த அனுபவம்.

வேலையிலிருந்து ஒய்வு  பெற்றபின்னர், கடந்த மூன்று வருடங்களில் பலரை சந்தித்து இருக்கிறேன். அவர்களுடன்  பல தடவை  நடந்திருக்கும்  ஒரு வார்த்தைப் பரிமாற்றம் -

அவர் -  " என்ன, சும்மாவா இருக்கிறீங்க?"? 
நான்-  ஆமாம் !
அவர்: ஏதாவது பார்ட் டைம் ?
நான்:  ம்ஹூம் .
அவர்: எதாவது கன்ஸல்டன்சி ?
நான் : நோ, நோ.
அவர் :  சும்மா இருக்கற டைம்ல பண்ணலாமே ? 
நான் :  எதுக்கு வீணா ?
அவர் "இவன் எதற்கும் லாயக்கில்லை போல இருக்கு" என்று ஒரு பரிதாபப் பார்வையுடன் நகர்கிறார்!
(இந்த மாதிரி பல தடவை  ஆனபின்பு, இனிமேல்  "நான் ஒரு மேனேஜ்மென்ட் 
கன்சல்டன்ட் ஆக இருக்கிறேன்  "என்று சொல்வதென்று முடிவு செய்திருக்கிறேன்.) 

அதை விடுங்கள்! விஷயத்துக்கு வருவோம்.

"சும்மா இருக்கும்  சுகம் " என்கிறார் ராமலிங்க அடிகளார்.**

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால்  " ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் அல்லது செய்யாமல் இருப்பது" என்று நினைக்கத்  தோன்றும். 

ஆனால் ராமலிங்க அடிகளார்.  இப்படி இருப்பதை பற்றியா சொன்னார்? நிச்சயமாக இருக்காது  . வேறு ஓர் நுண்ணிய பொருள் இருக்கவேண்டும்.

இப்போதைக்கு '"மேலெழுந்த வாரியான" பொருளை எடுத்துக்கொண்டு,
வேலையிலிருந்து ஒய்வு பெற்ற ஒருவரின் கண்ணோட்டத்தில் இந்த "சும்மா இருக்கும் சுகம் " எப்படி இருக்கும் ?  என்று ஒரு பாடல்.

அடுத்த பகுதியில் ( உங்களை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டேன்! ) சரியான பொருள் பற்றி வேறு ஒரு பாடல் தருவேன்.

அன்புடன்

ரமேஷ்

** பின் குறிப்பு : முதலில் இந்தப் பதிவை எழுதுகையில் தவறாக தாயுமானவர் என்று குறிப்பிட்டிருந்தேன். இதை ராமலிங்க அடிகளார் என்று ஷரீப்படுத்தி உள்ளேன். தவறுக்கு வருந்துகிறேன்.

சும்மா இருத்தல் சுகம் - பாகம் 1- 

வேலையை  விட்டபின்னர் வேறெதுவும் செய்யாமல்
காலையிலும்  மாலையிலும் இவ்விரண்டு  வேளையிலும்
வம்பெதற்கும் போகாமல் கால்மேலே கால்போட்டு
சும்மா இருத்தல் சுகம்.       (1)

தானும்தன் சுற்றமும் சீராக  வாழ்ந்திட
"வேணும் வரையில் உழைச்சாச்சு" என்பதால்
அம்மாடா என்றெண்ணி   கால்நீட்டி உட்கார்ந்து
சும்மா இருத்தல் சுகம்.        (2)

பக்கத்து வீடுகளில்  உள்ளோரைப் பற்றியே
அக்கப்போர் பேசியே  வீண்பழியை வாங்கிவந்து   
சிக்கல் எதிலுமே   சிக்காமல்    வீட்டிலே  
சும்மா இருத்தல் சுகம்.          (3)

மற்றவர் செய்திடும் வேலைகளை ஆராய்ந்து
குற்றம் பலகூறி மூக்கை நுழைக்காமல்
தம்வேலை தானுண்டு என்றேவோர்  ஓரத்தில்
சும்மா இருத்தல் சுகம்.           (4)

அல்லது 

சொத்தையிது  சொள்ளையது  என்றுஎப் போதுமே 
நித்தமும்  குறைகாணும்  நக்கீரர்  போலன்றி 
கம்மென்று வாய்மூடி இப்பழக்கம் நீக்கியே 
சும்மா இருத்தல் சுகம்!              ( 4)

















Mar 10, 2017

ப்ரதோஷப் பாடல்

இன்றைய பிரதோஷத்தன்று ஈசன்  அடி  வணங்கி ஒரு பாடல்.

அன்புடன் 
ரமேஷ் 

ப்ரதோஷப்  பாடல் 

ஓர்பாதி ஆணாக  ஓர்பாதி பெண்ணாக  
ஈருருவம்  பூண்டு இமயத் துறைபவன்   
இப்பிறவித்  தோஷங்கள் போக்கிட   வல்லவன்  
அப்ரதோஷ ஈசனடி சேர் 

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

Mar 3, 2017

போட்டு உடை ! ஞானம் விதை!

போட்டு உடை ! ஞானம் விதை!

எதையும் போட்டு உடைத்தால் பொருள்கள் சேதப்படும்.
இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு !

இலக்கணத்தை "உடைத்தால்" பிறக்கும் புதுக்கவிதையைப் போல --
நாம்  நம்முடன் ஒட்டியிருக்கும் சில குணங்களை   "உடைத்தால் "

நல்லவை நடக்கும்!
ஞானம் பிறக்கும் !

அன்புடன்
ரமேஷ்



போட்டு உடை ! ஞானம் விதை!



எள்ளை  உடைத்தால் எண்ணெய் வரும் - நாட்டின் 
எல்லை உடைந்தால்  தொல்லை வரும்
உள்ளம் உடைந்தால் தோல்வி வரும்- மனக்  
கள்ளம் உடைத்தால்  நேர்மை  எழும் .

வானம் உடைந்தால் மின்னல் வரும்
நாணம் உடைந்தால் மானம் கெடும்.
தானெனும் தருக்கினைப் போட் டுடைத்தால்
வாழ்க்கையின் வருத்தங்கள் விலகி  விடும்.

மேகம் உடைந்தால் மழையும் வரும்- பண 
மோகம் உடைந்தால்  சோகம் விடும்.
பொய்கள்  உடைந்தால்  உண்மை வரும் - செய் 
தீமை உடைத்தால் நன்மை வரும்

கரைகள் உடைந்தால் வெள்ளம் வரும்- உ(ள்)ளக் 
குறைகள்  உடைந்தால் நிறைவு  வரும்
சிரிப்பு உடைந்தால் அழுகை வரும்- மனச்
செருக்கு  உடைத்தால் பணிவு  வரும் .


முட்டை உடைந்தால்  குஞ்சு வரும் -சிறு 
விதைகள் வெடித்தால் பிஞ்சு வரும்
பருத்தி வெடித்தால் பஞ்சு வரும்- சுய   
கருவம் உடைத்தால் இஞ்சை*  விடும்.                                 இஞ்சை=* துன்பம்

தென்னங்  காயைப் போட்டுடைத்தால் 
இனிய இளநீர் பருக வரும் 
தன்னகங் காரம்  தனை  உடைத்தால் 
தன்முனைப்* பொழிந்து  தெளிவு  வரும்.           * தன்முனைப்பு=ego 

இலக்கியம் தருவது  பழங் கவிதை - அதன் 
இலக்கணம் உடைத்தால்  புதுக்  கவிதை-  நீ 
பலகலை பயின்ற பண்டிதன் எனினுமுன்*         *எனினும் உன்    
தலைக்கனம் உடைத்தே  ஞானம் விதை!


------------------------------------------------------------------------------------