Search This Blog

Mar 12, 2017

சும்மா இருத்தல் சுகம் - பாகம் 1

" சும்மா இருத்தல் சுகம் - பாகம் 1

எனக்கு மிகவும் பிடித்த ஹாஸ்யத் துணுக்கு இது - ஒரு எஸ்.வீ.சேகர் நாடகத்தில் வந்தது என்று ஞாபகம்.

நபர் 1 ( பையனிடம்)- படிப்பெல்லாம் முடிச்சாச்சு ! இப்ப என்ன வேலை பண்றே?
பையன் - அப்பாவுக்கு ஹெல்ப் பண்றேன்.
நபர் 1- அப்பா என்ன செய்யறார்?
பையன் - வீட்டிலே சும்மாதான் இருக்கார்.
நபர் 1- ???????

இனி ஒரு சொந்த அனுபவம்.

வேலையிலிருந்து ஒய்வு  பெற்றபின்னர், கடந்த மூன்று வருடங்களில் பலரை சந்தித்து இருக்கிறேன். அவர்களுடன்  பல தடவை  நடந்திருக்கும்  ஒரு வார்த்தைப் பரிமாற்றம் -

அவர் -  " என்ன, சும்மாவா இருக்கிறீங்க?"? 
நான்-  ஆமாம் !
அவர்: ஏதாவது பார்ட் டைம் ?
நான்:  ம்ஹூம் .
அவர்: எதாவது கன்ஸல்டன்சி ?
நான் : நோ, நோ.
அவர் :  சும்மா இருக்கற டைம்ல பண்ணலாமே ? 
நான் :  எதுக்கு வீணா ?
அவர் "இவன் எதற்கும் லாயக்கில்லை போல இருக்கு" என்று ஒரு பரிதாபப் பார்வையுடன் நகர்கிறார்!
(இந்த மாதிரி பல தடவை  ஆனபின்பு, இனிமேல்  "நான் ஒரு மேனேஜ்மென்ட் 
கன்சல்டன்ட் ஆக இருக்கிறேன்  "என்று சொல்வதென்று முடிவு செய்திருக்கிறேன்.) 

அதை விடுங்கள்! விஷயத்துக்கு வருவோம்.

"சும்மா இருக்கும்  சுகம் " என்கிறார் ராமலிங்க அடிகளார்.**

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால்  " ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் அல்லது செய்யாமல் இருப்பது" என்று நினைக்கத்  தோன்றும். 

ஆனால் ராமலிங்க அடிகளார்.  இப்படி இருப்பதை பற்றியா சொன்னார்? நிச்சயமாக இருக்காது  . வேறு ஓர் நுண்ணிய பொருள் இருக்கவேண்டும்.

இப்போதைக்கு '"மேலெழுந்த வாரியான" பொருளை எடுத்துக்கொண்டு,
வேலையிலிருந்து ஒய்வு பெற்ற ஒருவரின் கண்ணோட்டத்தில் இந்த "சும்மா இருக்கும் சுகம் " எப்படி இருக்கும் ?  என்று ஒரு பாடல்.

அடுத்த பகுதியில் ( உங்களை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டேன்! ) சரியான பொருள் பற்றி வேறு ஒரு பாடல் தருவேன்.

அன்புடன்

ரமேஷ்

** பின் குறிப்பு : முதலில் இந்தப் பதிவை எழுதுகையில் தவறாக தாயுமானவர் என்று குறிப்பிட்டிருந்தேன். இதை ராமலிங்க அடிகளார் என்று ஷரீப்படுத்தி உள்ளேன். தவறுக்கு வருந்துகிறேன்.

சும்மா இருத்தல் சுகம் - பாகம் 1- 

வேலையை  விட்டபின்னர் வேறெதுவும் செய்யாமல்
காலையிலும்  மாலையிலும் இவ்விரண்டு  வேளையிலும்
வம்பெதற்கும் போகாமல் கால்மேலே கால்போட்டு
சும்மா இருத்தல் சுகம்.       (1)

தானும்தன் சுற்றமும் சீராக  வாழ்ந்திட
"வேணும் வரையில் உழைச்சாச்சு" என்பதால்
அம்மாடா என்றெண்ணி   கால்நீட்டி உட்கார்ந்து
சும்மா இருத்தல் சுகம்.        (2)

பக்கத்து வீடுகளில்  உள்ளோரைப் பற்றியே
அக்கப்போர் பேசியே  வீண்பழியை வாங்கிவந்து   
சிக்கல் எதிலுமே   சிக்காமல்    வீட்டிலே  
சும்மா இருத்தல் சுகம்.          (3)

மற்றவர் செய்திடும் வேலைகளை ஆராய்ந்து
குற்றம் பலகூறி மூக்கை நுழைக்காமல்
தம்வேலை தானுண்டு என்றேவோர்  ஓரத்தில்
சும்மா இருத்தல் சுகம்.           (4)

அல்லது 

சொத்தையிது  சொள்ளையது  என்றுஎப் போதுமே 
நித்தமும்  குறைகாணும்  நக்கீரர்  போலன்றி 
கம்மென்று வாய்மூடி இப்பழக்கம் நீக்கியே 
சும்மா இருத்தல் சுகம்!              ( 4)

















2 comments:

  1. ”அவரைப் போல இவரைப்போல நீ ஏன் நகைச் சுவையோடு எழுதுவதில்லை அது சரி, அதற்கு நகைச்சுவை இருக்க வேண்டுமே” என்று கேட்பவர் வாயடைக்க நானும் எழுதுகிறேன் என்று ரோசத்துடன் எதையோ எழுதப்போய் ”இதற்கு நீ எழுதாமலேயே இருந்திருக்கலாம்” என்பது போன்ற விமர்சனங்களுக்கு இடங்கொடுக்க விரும்பாமல் “சும்மா யிருப்பதே சுகம் என்றிருந்து விட்டேன்.”
    ஆனால் உங்கள் கவிதைகள் அப்படியல்ல. சும்மா இருக்கும் நேரத்தில் படித்துவிட்டுத் தூக்கிப்போடும் வெறும் வார்த்தைகள் அல்ல. நகைச்சுவையோடு கருத்து நிரம்பிய செவிக்குத்தரும் விருந்து.தொடரட்டும் உங்கள் விருந்து.
    வாழ்த்துக்களுடன் டாக்டர் அலர்மேலு

    ReplyDelete
  2. சும்மா ஒரு அருமையான அடைமொழி எளிதில் எதிலிருந்தும் தப்பித்துக் கொள்ள. "என்ன இவ்வளவ்வு தூரம்" என்று கேட்கும் நண்பர்/உறவினரிடம் "சும்மாதான் பார்த்துட்டு போலாமேன்னு வந்தேன்" என்பதிலிருந்து உண்மையாயிருப்பினும் நம்மால் நம்ப முடியாத செய்தியை ஒருவர் சொல்லும்போது " ஏய் சும்மா சொல்லாதே" சும்மா சொல்லப்படாது ரமேஷ் நன்னாவே எழுத்றான் என்பது வரை சும்மாவின் உபயோகத்துக்கு அள்வேயில்லை. தாயுமானவரின் சும்மாவைப் பற்றி மேலெழுந்தவாரியாக என்று சொல்லி ஆழ் பொருளும் தெரியும் என்று அதைக் கேட்கக் காக்க வைத்து விட்டீர்!

    ReplyDelete