சும்மா இருத்தல் சுகம்- பாகம் 2
"சும்மா இருத்தல்" என்ற பாடல் வரிகளின் மேலெழுந்தவாரியான பொருள் பற்றி சென்ற பதிவில் எழுதினேன். ஆனால் இதன் உண்மையான பொருள் என்ன ? நான் படித்தறிந்த இரு கருத்துக்களை கீழே தருகிறேன்.
முதலாவது -
- சும்மா என்ற சொல்லின் மூலத்தையும், அதன் பொருளையும் திருத்தம் பொன். சரவணனன் என்பவரின் பதிவில் நான் படித்த கருத்து இது.
- "சும்மா" என்பதின் அகராதிப் பொருள் ' ஓசை" என்பது.
"சும்முதல்" என்பது ஒலித்தலைக் குறிக்கும்.
"சும்மாது இருத்தல்" என்பது அதன் எதிர்வினையான ஒலியற்று இருத்தலைக் குறிப்பதாயிற்று. இது மருவி "சும்மா இருத்தல்" என்று ஆனது.
எவ்வித ஒலிகளும் எழுப்பாமல் மௌனமாக யோக நிலையில் அமர்ந்து இருப்பதன் மூலம் மனம் அடங்கும். வாயிலிருந்தோ மற்ற உடலுறுப்புக்களில் இருந்தோ எவ்வித ஒலிக்குறிப்பும் அதிர்வும் தோன்றா வண்ணம் இருக்கும் யோக நிலையே சும்மா இருத்தலாகும்.
இரண்டாவதாக
வள்ளலாரின் ஒரு பாடல்- திருவருட்பா-விலுருந்து
- இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
- றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
- வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
- சும்மா இருக்கும் சுகம்.
இதன் பொருள் :
இறப்பு என்பது இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது அது என்று வருமோ, நான் அறியேன்: என் தலைவனே! காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதையும் தாண்டி உன்னை அடைந்து எந்த கவலையும் இல்லாமல் சும்மா இருக்கும் அந்த நாளே எனக்கு சுகமளிக்கும் நாள்.
இதில் "பல வெளிகளைத் தாண்டி"ய பின் கிடைக்கும் " சும்மா இருக்கும் சுகம்" என்று குறிப்பிடப்படுவது பூலோகம்,புவலோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், தவலோகம், ஆகிய அடுக்குகளைத் தாண்டி ப்ரம்மத்துடன் இணைந்த சலனமற்ற நிலையை அடைந்தபின் (சத்ய லோகம்) வரும் சுகமாகும்.
இதில் "பல வெளிகளைத் தாண்டி"ய பின் கிடைக்கும் " சும்மா இருக்கும் சுகம்" என்று குறிப்பிடப்படுவது பூலோகம்,புவலோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், தவலோகம், ஆகிய அடுக்குகளைத் தாண்டி ப்ரம்மத்துடன் இணைந்த சலனமற்ற நிலையை அடைந்தபின் (சத்ய லோகம்) வரும் சுகமாகும்.
இந்தக் கருத்துக்களை உள்ளடக்கி வெண்பா வடிவில் நான் எழுதிய பாடல் இதோ !
அன்புடன்
ரமேஷ்
--------------------------------------------------------------
சும்மா இருத்தல் சுகம்- பாகம் 2
அங்கிங்கே பாய்ந்தலையும் உள்மனதை ஓரிடத்தில்
தங்கவைத்து ஓரிலக்கை த்யானித்து - அங்குள்ளே
எம்மா திரியான எண்ணமும் எண்ணாமல்
சும்மா இருத்தல் சுகம்
பூரகத்தில்* உள்ளிழுத்து கும்பகத்தில்* உள்ளிருத்தி
ரேசகத்தில்* ப்ராணனையே விட்டிட்டு# - நேராக
சம்மண மிட்டமர்ந்து சிந்தை நிலைநிறுத்தி
சும்மா இருத்தல் சுகம்.
கடலின் அலையென ஓயா ததிரும்
உடல்மன ஆட்டம் அடக்கி - விடியலில்
நிம்மதி ஆக இமைகளை மூடியே
சும்மா இருத்தல் சுகம்.
அம்புலியைத் தன்தலையில் கட்டிவைத்த உச்சியின்மேல்^^
சும்மாடு** போலணிந்து கங்கையினைத் தாங்கிநின்ற
பெம்மானை என்றென்றும் சிந்தை தனிலிருத்தி
சும்மா இருத்தல் சுகம்
* Puraka is the voluntary prolongation of the inspiratory phase. Kumbhaka is a voluntarily controlled suspension of breath. Rechaka is a voluntarily controlled exhalation as compared to the normal exhalation. These are the three phases of Pranaayaamam.
# வெளியில் விட்டு
^^ - உச்சி - தலையில் முடிந்த முடி, குடுமி
** சும்மாடு = a head gear worn to help carry loads . Ypu might have seen this on the village street vendors carrying their wares in a basket on their head.
மிக அருமை ரமேஷ் . சும்மா இருத்தல் என்பதன் பொருள் புதிய கோணத்தில் அறிந்தது அறிவுபூர்வமாக இருந்தது . கவிதையில் பல புதிய சொற்கள் அறிய முடிந்தது. நன்றிகள் பல
ReplyDelete