Search This Blog

Dec 17, 2016

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 3

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 3
இந்தப் பதிவிலிருந்து , ஸ்லோகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் ( ஏக்நாத் ஈஸ்வரனின்  " The Upanishaths " என்ற ஆங்கிலப் புத்தகத்திலிருந்து) சேர்த்திருக்கிறேன். புரிதலுக்கு இது மேலும் உதவும் என்று நம்புகிறேன்.
சென்ற பதிவிலும் இந்த மாறுதலைச் செய்திருக்கிறேன். சென்று பார்க்கவும்.
அன்புடன் 
ரமேஷ் 




மொழிபெயர்ப்பு :*
அசுரர்களின் உலகங்கள் காரிருளினால் மூடப்பட்டுள்ளன. ஆன்மாவை அழிப்பவர்கள் மரணத்திற்குப் பிறகு அந்த உலகங்களை அடைகிறார்கள்.

Translation : **
Those who deny the Self are born again
Blind to the Self, enveloped in darkness
Utterly devoid of love for the Lord


பாடல் :

புத்தி , பிராணன், மனம், உடல், ஆன்மா
----------ஐந்தின் தொகுப்பே நம் பிறப்பு
ஆத்(ன்)மா விலக்கி அறநெறி ஒதுக்கி
----------ஐம்புலன் சொல்வழி செல்வோமால்
காரிருள் கவ்விடும் அரக்கர்தம் உலகை^ 
----------அடைந்து  மாளாத்  துயருறுவோம்.
பிறப்பிறப் பென்னும்  முடியாச்  சுழலில்
----------மீண்டும் மீண்டும் சிக்கிடுவோம்


^ - தொடர்ந்து பிறவிக்கு உள்ளாவதை,  "இருண்ட  அரக்கர் உலகம்" என்று கூறப்பட்டது. --"enveloped in darkness".

பொருள் விளக்கம்  :*
உடம்பு+பிராணன்+ மனம்+புத்தி+ஆன்மா = மனிதன் 
பிராணன்+ மனம்+புத்தி = உயிர்.
ஆன்மாவை அழிப்பவர்கள்=ஆன்மாவை நினைக்காமல், உடம்பே   ( ஐம்புலன்களே )  எல்லாம் என்று வாழ்பவர்கள் 
அத்தகையவர்கள் மரணத்திற்குப் பிறகு , தொடர்ந்து பிறவிகளுக்கு உள்ளாகிறார்கள்.

* - Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books





Dec 14, 2016

குறள் மேல்வைப்பு வெண்பா -14

குறள் மேல்வைப்பு வெண்பா -14

சங்க கால தமிழ்க் கவிஞர்கள் இடையே ஒரு தனியிடம் பெற்றவர் ஒளவையார் .
வேளிர்குல மன்னனும் , கடையேழு வள்ளல்களில் ஒருவனுமான  அதியமான் நெடுமான் அஞ்சியின் அவைப் புலவராக இருந்த ஒளவையார் அதியமானின் கொடையைப் பற்றியும் , அவனது வீரத்தைப் பற்றியும் பல பாடல்கள் எழுதி இருக்கிறார்.
அதியமான் , அவ்வையிடம் கொண்டிருந்த அன்பு அளவிடற்கரியது.
ஒரு சமயம் , அதியமானுக்கு ஒருவர் மிகச் சக்தி வாய்ந்த, நரை, திரை , மூப்பு ஆகியவற்றை நீக்கி, உண்பவரின் ஆயுளை அதிகரிக்கக் கூடிய, ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தார். அதியமான் , அந்த நெல்லிக்கனியை அடைவதற்கு தன்னைவிடத் தகுதியானவர் ஒளவையாரே  என்று கூறி , அதைத் தான் உண்ணாமல் ஓளவைக்கு  அளித்து மகிழ்ந்ததாக  வரலாறு.

"ஒருவனுக்கு வந்தடையும் செல்வம், தகுதி உடைய மற்றோருக்கு அளிப்பதற்கே"  என்ற பொருளுள்ள குறளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ( அதிகாரம் - ஒப்புரவறிதல் ;  குறள் எண் - 212 ).

இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய வரலாறை உள்ளிறுத்திய ஒரு குறள் மேல்வைப்பு வெண்பாவை  இந்தப் பதிவில் அளிக்கிறேன். எப்போதும் போல், வெண்பாவின் மூன்றாம், நான்காம் அடிகளில் வள்ளுவரின் குறள். 

அன்புடன்

ரமேஷ்


தான்பெற்ற  நெல்லிக் கனியினையே அவ்வைக்கு         
தானமாய்த் தந்தான் அதியமான்   அன்புடனே 
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு

குறிப்பு :
இதை பதிப்பித்த பின்னாலே , " தானமாய்த் தந்தான் " என்று இயற்றி இருப்பது , சற்றுத் தவறோ  என்று தோன்றியது. அதனால் , அதே கருத்துள்ள வேறு ஒரு பாடலைப் பதிவு செய்து , இப்பதிவைப் புதுப்பித்து இருக்கிறேன். 

உயிர்காக்கும் நெல்லிக் கனியைத் தயங்காமல்   
அவ்வைக்கு    ஈந்தான்  அதியன்  இசைவுடனே 
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு

The English version of  Suththananda Barathiyar

All the wealth that toils give 
Is meant to serve those who deserve.

The Meaning :

All the wealth acquired painstakingly by one , is for the exercise of benevelonce to the deserving  and not for his own benefit .  

PS : The translation by Rev.Pope differs from most of the other versions. 
It goes like this :
All the wealth acquired with perseverance BY THE WORTHY, is for the exercise of benevolence. 
Most of other translations, both in Tamil and English , say it is for the benevolence TO THE WORTHY ( தக்கார்க்கு ) , which seems to the correct interpretation.

Dec 10, 2016

எந்தன் மகனே கோவிந்தா - 3- கறுப்புப் பணம் பற்றி

எந்தன் மகனே கோவிந்தா - 3- கறுப்புப் பணம் பற்றி 

கறுப்புப் பணத்தைப் பற்றியும், இப்போது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும், சிறுவன் கோவிந்தனுக்கு சில சந்தேகங்கள்.
எப்போதும் போல் தந்தையிடம் கேட்க, அவரும் தீர்த்து வைக்கிறார்.
தந்தை , மகனிடையே நடந்த இந்தப் பரிவர்த்தனை , ஒரு பாடல் வடிவில்.

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு: இதை நீங்கள் விரும்பினால் , " எந்தன் மகனே கோவிந்தா " - தொடரின்  கடந்த காலப் பதிவுகளையும் படித்து மகிழலாம் !
http://kanithottam.blogspot.in/2016/10/2.html
http://kanithottam.blogspot.in/2016/05/blog-post_15.html



எந்தன் மகனே கோவிந்தா - 3

தந்தை  
எந்தன் மகனே கோவிந்தா,      சிந்தனை ரொம்பப் பலமோடா?
தந்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளத்      தடைகள் ஏதும் உண்டோ சொல்?                                   

கோவிந்தன்  
நோட்டு   மதிப்புக்   குறைப்பைப்பற்றி      கேள்விகள்   பலவும்  எனக்குண்டு                                    
எந்தன்   அருமை   அப்பாவே ,       கேட்பேன்   உன்னிடம்   இப்போவே! 
நாட்டு   மக்கள்   எல்லோரும்      நல்லது   இதுவென்று   நம்புகையில் 
நாட்டை   ஆளும்    மன்றத்தில்      எதிர்க்கட்சி    எதிர்ப்பது    எதனாலே?

தந்தை 
மோடியின்   இந்தத்   திட்டத்தால்      மூடி  அவர்கள் வைத்திருந்த 
கோடிக்  கோடிக்  கறுப்புப்பணம்       வெறும்   காகிதமாச்சு   அதனாலே

கோவிந்தன் 
கறுப்புப்   பணமும்   உற்பத்தி      ஆவது எப்படி சொல்லப்பா 
நிறுத்த  அதையே  வழியுண்டோ?      அரசும் அதையே செய்திடுமோ?
தந்தை 
அரசியல்  வாதியின்  ஊழல்கள்,      அதிகாரி  களின் லஞ்சங்கள்
இருவர்  இவர்களின் செயல்கட்கு       துணை போகின்ற  தொழிலதிபர்
பற்றுச்  சீட்டு  இல்லாமல்      பண்டங்கள்   வாங்கும்   பொதுமக்கள்
சற்றே  லஞ்சம்  கொடுத்துவிட்டு      வரிகள்   ஏய்க்கும்  வியாபாரி
கறுப்புப்  பணத்தின்  கர்ப்பப்பை      சுமப்பது   இவர்கள்  அனைவருமே
அறுத்து  இதையே  சரிசெய்தால்      குறையும்  கறுப்புப்  பணவீக்கம்

கோவிந்தன் 
அரசின்   இந்தச்   செயல்முறையால்       கறுப்புப்   பணத்தை   இழந்தவர்கள் 
பொருத்துச்   சும்மா   இருப்பாரோ?      பொல்லாங்   கேதும்   செய்வாரோ?

தந்தை 
கருப்புப்  பணத்தைக்  கணக்கின்றி      நிரப்பிப் பையில் வைத்தவர்கள்  
திருப்ப  அதனை  மாற்றிடவே       குறுக்கு  வழிகள்  தேடுகிறார்.
கல்லா  வில்அவர்   சேர்த்தபணம்      செல்லா  மல்இன்று  போனதனால் 
கல்லா*  மக்களை  நிற்கவைத்து      வங்கியில் அதையே  மாற்றுகிறார்.   (* கல்லா- படிக்காத) 
உழவுத்  தொழிலின்  வரவிற்கு      வரியே  இல்லை  என்பதனால் 
பழைய  கறுப்புப்  பணத்தினையே      அவர்வங்கியில்*  போட்டு  சலவைசெய்வார்.       (*உழவர்களின்)
இருக்கும்  கறுப்புப்   பணத்தில்சிறு      பகுதியைமட்டும் ஒப்புவித்து 
வருங்கா   லத்தில்    புதிதாகப்        படைக்கவே  பலவழி  வகுக்கின்றார்.
குட்டக்   குட்டக்   குனியாமல்     வெட்டவெட்ட  முளைத்தது  வரும் 
ஹைட்ரா*  மிருகத்  தலைகள்போல்      கறுப்புப் பணமும் உயிர்பிழைக்கும்.

கோவிந்தன் 
நாட்டு  மக்கள்  எல்லோரும்       நல்லவ ராக   மாறிவிட்டால்
நோட்டின்  மதிப்பை  ரத்துசெய்யும்       நிலைமை   இதுபோல்   வருமோசொல்?

தந்தை 
கேட்கவே   நன்றாய்  இருந்தாலும்     லஞ்சக் குட்டையில் ஊறிவிட்ட 
எங்கள்  ஊழியில்  இதுகடினம் ;      வெட்கத்தை விட்டே நான்சொல்வேன்.
உன்னைப்  போன்ற  இளைஞர்கள்       புதியதோர்  பாதை  தனைவகுத்தால் 
நன்றாய்  நாடு  முன்னேறும்!      நலன்கள்  கோடி  கூடிவரும்! 

  
* - ஹைட்ரா ( hydra ) என்பது கிரேக்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பல தலை மிருகம். இதன் தலையை வெட்ட வெட்ட அது மீண்டும் முளைத்து வரும் தன்மை படைத்தது .









Dec 8, 2016

Cho

சோ ராமசாமி 

"சோ" என்று பெய்து கொண்டிருந்த  மழை நின்று விட்டது .

இந்த மழை --
வாரம் தோறும் நம்மை நனைத்து வந்த
கருத்து மழை !
மேடையிலும், வெள்ளித் திரையிலும் பொழிந்து வந்த
சிரிப்பு மழை.
நம் மனக் குளங்களை நிரப்பி வழிந்து வந்த
மகிழ்ச்சி மழை.
குடையின்றி, தடையின்றி வேண்டியே நாம்
நனைந்த மழை.

மழை நின்றால் வானம் வெளுக்கும்!
ஆனால்
இந்த மழை நின்றதால் , மனம் இருண்டதே!

அரசு கட்டிலில் யார் அமர்ந்த போதும் -
ஏமரா மன்னர்களை இடித்துரைத்து , அவ்வுரையை
பாமர மக்களையும் படிக்க வைத்து - அவர்கள்
ஏமாறா  திருக்கச் செய்த
எழுத்தாளன் .

அங்கதத்தில் அரசன் !
அதையும்
இங்கிதமாய்ச் சொல்லி
எவரையும் ரசிக்க வைத்த
நடிகன் .

மறைந்த முதல்வரின் அரசியல் ஆலோசகன் -
அவரைப் பின்தொடர்ந்து
அங்கும் ஆலோசனை சொல்லச் சென்றானோ?

அச்சமின்றி நினைத்ததை எழுதியவன் -, உயிர்
துச்சமென்று ஈழத்து தீவிர வாதத்தை எதிர்த்தவன் - துக்ளக்
அச்சகத்திலே இறுதி நாட்களைக் கழித்தவன் - இன்று
"அச்சச்சோ" என்று ரசிகர்கள் புலம்பிடவே
இச்சகத்தை விடுத்து மேலுலகம் சென்றானே!--

IS GOD DEAD - என்ற  கேள்வி எழுந்தாலும்
இந்த "சரஸ்வதியின் செல்வன் "
மீண்டுமிவ் யுகத்தில்  சம்பவித்து வருவானென
நம்பிடுவோம் , நாம் இன்று --

WHY NOT?
பொறுத்திருந்து பார்ப்போம் !
Let us WAIT AND SEE !

அதுவரை 

அன்னாரின் ஆன்மா சாந்தியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறோம்


ரமேஷ்
கனித்தோட்டம்
www .kanithottam .blogspot .in


















Dec 7, 2016

செல்வி ஜெயலலிதா - RIP

செல்வி ஜெயலலிதா - RIP

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி 

அன்புடன் 
ரமேஷ் 


செல்வி ஜெயலலிதா - RIP

செந்தமிழ் நாட்டை ஆண்ட
மந்திரி சபையின் முதல்வர்
இந்திய நாடே போற்றும்
இரும்பு இதய மங்கை
வந்தபல சோதனை களினால்
தளர்ந்தென்றும் துவண்டி டாமல்
சொந்தக் காலிலே நின்று
வென்று சாதனைகள் புரிந்த
-------------சந்(தி)யாவின்  செல்ல மகளோ
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.


வெண்ணிற ஆடையில் தொடங்கி 
வெள்ளித்திரை யுலகில் நுழைந்து 
பொன்னொத்த நிலவாய் மிளிர்ந்து 
பின்னரர சியலில் நுழைந்து
பன்முறை முதல்வர் பதவி
பாங்குடன் வகித்த தாலே 
தன்னிகர் இவளுக் கில்லை
எனப்பெரும் புகழைப் பெற்ற 
-------------சந்(தி)யாவின் மகளோ இன்று
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.

பல்துறை அறிவில் சிறப்பு
பன்மொழிகள் பேசும் புலமை
வில்விட்ட அம்பைப் போல
இலக்கென்றும் மாறா உறுதி
நல்லநிரு வாகத் திறமை
இவைகளைப் பெற்றதாலே
இல்லாத மக்கட் கெல்லாம்
இயைந்தபல திட்டங்கள் அளித்த
-------------சந்(தி)யாவின் செல்ல மகளோ
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.

சேற்றுள்ளே மலரு கின்ற
செந்தா  மரையைப் போல
திராவிடக் கட்சியின் தலைவி
எனினுமவர் நாத்திகர் இல்லை
ஆரூடம் ஜாதகம் பார்க்கும்
"பகுத்தறிவு வாதி" இவரே!
யாராலும்  புரிந்து கொள்ள
முடியாத புதிராய் வாழ்ந்த
-------------சந்(தி)யாவின்  மகளோ இன்று
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.

இவள் ஒன்றும் துறவியில்லை
தவறே செய்யாதிருக்க.
புத்தனோ காந்தியோ இல்லை
மறுகன்னம் காட்டி நிற்க !
தவறுகள் தனக்கு எதிராய்
செய்தவர்க் கெல்லாம் அன்று
அவர்சென்ற வழியே சென்று
அவர்களை வீழ்த்தி வென்ற
-------------சந்(தி)யாவின்  செல்ல மகளோ
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.

மின்சாரத் தடையை முற்றும்
போக்கியதோர் சாதனை எனினும்
அரசுத் துறைகளில் ஊழல்
தலை விரித் தாடுதல்   குறையே !
தானாகச்  செயல்படாமல்
தலைவியின் ஆணைக்காக
வீணாக நேரம் கழிக்கும்
மந்திரிகள் மற்றோர் குறையே.

ஆத்திக மக்கள் உணர்வை
சில நேரம் மதித்திடாமல்
அக்கினிக் கோட்டைத் தாண்டி
செய்த சில செயல்கள் குறையே.
குறைகள் சில இருந்த போதும்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
நிறைகளே நிறைய என்று
தராசுதன்  தலையை ஆட்டும்.

பொன்னியின் செல்வன் தமக்கை
குந்தவி என்பாள் போல
அந்நிய வெள்ளையர் கூட்டம்
எதிர்த்த வேலு நாச்சியார்  போல
திண்ணிய மனத்தாள் இவளே
திறமையின் வடிவம் இவளே !
இன்னொரு தலைவர் இவள் போல்
வருவரோ விரைவில்? அறியேன்!

ரமேஷ்

Dec 3, 2016

ஈசாவாஸ்ய உபநிஷத் - 1 & 2


ஈசாவாஸ்ய உபநிஷத் - ஸ்லோகங்கள் 1 & 2

இந்தப் பதிவில் ஈசாவாஸ்ய உபநிஷத் தின் முதல் இரண்டு ஸ்லோகங்களையும்  , அவற்றின் பொருளையும் ( ராமகிருஷ்ணா மடத்தின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது )  காணலாம். 
அதைத் தொடர்ந்து , அந்தக் கருத்தை ஒரு பாடலாக -- என்னால் கூடிய மட்டும் மேற்குறிப்பிட்ட மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்துகள் சிதையாமல்-- வடித்திருக்கிறேன்.  
அன்புடன் 
ரமேஷ் 
updated with English translation on 5/12/2016






பொருள் *

மாறுகின்ற தன்மையுள்ள இந்த உலகத்தில் உள்ள அத்தனையும் இறைவனால் வ்யாபிக்கப்பட்டுள்ளது. அதனால், தியாக சிந்தனையுடன் , உலகை அனுபவி. யாருடைய பொருளையும் அபகரிக்க இச்சை கொள்ளாதே!

English Translation **
The Lord is enshrined in the hearts of all.
The Lord is the Supreme reality.
Rejoice in him through renunciation.
Covet nothing. All belongs to the Lord.

* - Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books


பாடல் 

மாறுமிவ்  வுலகில் காணுமெப் பொருளும்
----------இறைவனின் மறு உருவே- அதனால்
பாரிடை வாழ்க்கையில் பார்த்திடு மனைத்திலும்
----------பரமனைப்  பார்த்து விடு
சீரும் சிறப்பும் செல்வமும் இவைபிற
----------அனைத்தும் நிலை யிலவே - இம்
மாறா உண்மையை மனதினில் இருத்தி
----------வாழ்க்கையை வழி நடத்து.





பொருள் *

இவ்வுலகில் கடமைகளைச் செய்து கொண்டுதான் நூறு ஆண்டுகள் வாழ விரும்பவேண்டும். இப்படி , உலகை அனுபவித்து வாழ விரும்பும் மனிதனாகிய உனக்கு, கடமைகளை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. இவ்வாறு வாழ்வதால் , கடமைகளின் விளைவுகள் உன்னைப் பற்றுவதில்லை.

English translation :**
Thus working , you may live a hundred years.
Thus alone will you work in real freedom

பாடல் 

மானிடப் பிறவி எடுத்தவர்க் கெல்லாம்
----------கடமைகள் சேர்ந் திடுமே
நான் எனதென்ற நினைவினை அகற்றி
----------கடமையை ஆற்றி விடு
ஆண்டவன் செயலே அனைத்து மென்றுணர்ந்து
----------பற்றறப் பணி  செய்து
ஆண்டுகள் நூறு வாழ்ந்திடின் செய்கையின்
----------விளை வுனைச் சேராதே .


* - Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books

Dec 2, 2016

ஊதா கலரு ரிப்பன், யாரு உங்க அப்பன் ?

ஊதா கலரு ரிப்பன், யாரு உங்க அப்பன் ?

ஊதா கலரு ரிப்பன், யாரு உங்க அப்பன் ?
சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்.

ரோஜா கலரு பொம்மி, யார் உங்க மம்மி?
சொல்லடி அவளுக்கு நான் சபாஷ் சொல்லணும் 
 
மேலுள்ள  வரிகளுடன் கூடிய திரைப்பாடல் , சில நாட்களுக்குமுன் மிகப் பிரபலமாக இருந்தது. கிடைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய எண்ணம் - " சே, என்ன ஒரு ரௌடித்தனமாக இருக்கிறது? திரைப் படைப்பு பாடல்களின் தரம் இப்படிக்கு குறைந்து போய்விட்டதே ! " என்பதுதான். (இதைவிட மோசமான பாடல்களும் இருக்கின்றன என்பதும் உண்மைதான்).
 
இதைக் கேட்ட சில நாட்களுக்குப் பின் சென்னை அண்ணா நூற்றாண்டு புத்தக நிலையத்தில் அமர்ந்து புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கும் போது ,சங்க கால இலக்கியமான நற்றிணை -யைப் படிக்க நேர்ந்தது.
 
என்ன ஆச்சரியம்.! நற்றிணையில் ஒரு பாடல் , ஊதா கலர் ரிப்பன் பாட்டுக்கு முன்னோடியாக இருக்கக் கண்டேன். பழந் தமிழ்ப் பாடல்களின் கருத்து , வரிகள் இவைகளை பின்பற்றி பல திரைப்படப் பாடல்கள் இதற்க்கு முன்னே வந்திருந்தாலும் , இது எனக்கு பெருத்த  வியப்பையே அளித்தது. 
 
என்ன சொல்ல? அந்த காலத்திலேயே நம்ப பசங்க தேறிட்டாங்க என்றா? 
 
ஆனாலும் ஒன்றை ஒத்துக்கொள்ளவேண்டும். கருத்து அதேதான் என்றாலும் , சொல்லப்பட்டிருந்த  விதமும், நயமும் வியக்கத்தான் வைக்கிறது!
 
அந்தப் பாடல் இதோ! படித்து மகிழுங்கள்!
 
அன்புடன்

ரமேஷ்
 
அழகுபட குழந்தை அரிமதர் மழைக்கண்
பல்பூம் பகைத்தழை நுடங்கும் அல்குல்
திருமணி புரையும் மேனி மடவோன்
யார் மகள் கொல் ? இவள் தந்தை வாழியர் !
துயரம் உறீஇனள் எம்மே: அகல் வயல்
 
செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்களையும், பல்வகைப் பூக்களால் தொடுக்கப்பட்ட தழையுடையை அணிந்தவளும், நீல மணியொத்த மேனியளு மான இவ்விளம்பெண், அசையாத உள்ளம் உள்ள என்னையே அவளை எண்ணித் துயருரைச் செய்தாளே !
இவளைப்  பெற்று எனக்கு உதவிய இவள் தந்தை நெடுங்காலம் வாழ்க !

அரிவளர் அரிந்தும் , தருவளர்ப் பெற்றும்
தன்சேறு தாஅய் மதனுடை நோன்தாள்
கண்போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண்தேர்ப் பொறையன் தொண்டி
தன்திறம் பெறுக இவள் ஈன்ற தாயே!


இவளை ஈன்ற தாயும் திண்ணிய தேரையுடைய பொறையனது தொண்டிநகர் போன்ற சிறப்பைப் பெறுவாளாக!

("அறிவளர்" என்று தொடங்கி, "பூக்கும்" என்று முதல் மூன்று வரிகளின் மொழிபெயர்ப்பு இங்கு தரப்படவில்லை.)