Search This Blog

Dec 10, 2016

எந்தன் மகனே கோவிந்தா - 3- கறுப்புப் பணம் பற்றி

எந்தன் மகனே கோவிந்தா - 3- கறுப்புப் பணம் பற்றி 

கறுப்புப் பணத்தைப் பற்றியும், இப்போது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும், சிறுவன் கோவிந்தனுக்கு சில சந்தேகங்கள்.
எப்போதும் போல் தந்தையிடம் கேட்க, அவரும் தீர்த்து வைக்கிறார்.
தந்தை , மகனிடையே நடந்த இந்தப் பரிவர்த்தனை , ஒரு பாடல் வடிவில்.

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு: இதை நீங்கள் விரும்பினால் , " எந்தன் மகனே கோவிந்தா " - தொடரின்  கடந்த காலப் பதிவுகளையும் படித்து மகிழலாம் !
http://kanithottam.blogspot.in/2016/10/2.html
http://kanithottam.blogspot.in/2016/05/blog-post_15.html



எந்தன் மகனே கோவிந்தா - 3

தந்தை  
எந்தன் மகனே கோவிந்தா,      சிந்தனை ரொம்பப் பலமோடா?
தந்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளத்      தடைகள் ஏதும் உண்டோ சொல்?                                   

கோவிந்தன்  
நோட்டு   மதிப்புக்   குறைப்பைப்பற்றி      கேள்விகள்   பலவும்  எனக்குண்டு                                    
எந்தன்   அருமை   அப்பாவே ,       கேட்பேன்   உன்னிடம்   இப்போவே! 
நாட்டு   மக்கள்   எல்லோரும்      நல்லது   இதுவென்று   நம்புகையில் 
நாட்டை   ஆளும்    மன்றத்தில்      எதிர்க்கட்சி    எதிர்ப்பது    எதனாலே?

தந்தை 
மோடியின்   இந்தத்   திட்டத்தால்      மூடி  அவர்கள் வைத்திருந்த 
கோடிக்  கோடிக்  கறுப்புப்பணம்       வெறும்   காகிதமாச்சு   அதனாலே

கோவிந்தன் 
கறுப்புப்   பணமும்   உற்பத்தி      ஆவது எப்படி சொல்லப்பா 
நிறுத்த  அதையே  வழியுண்டோ?      அரசும் அதையே செய்திடுமோ?
தந்தை 
அரசியல்  வாதியின்  ஊழல்கள்,      அதிகாரி  களின் லஞ்சங்கள்
இருவர்  இவர்களின் செயல்கட்கு       துணை போகின்ற  தொழிலதிபர்
பற்றுச்  சீட்டு  இல்லாமல்      பண்டங்கள்   வாங்கும்   பொதுமக்கள்
சற்றே  லஞ்சம்  கொடுத்துவிட்டு      வரிகள்   ஏய்க்கும்  வியாபாரி
கறுப்புப்  பணத்தின்  கர்ப்பப்பை      சுமப்பது   இவர்கள்  அனைவருமே
அறுத்து  இதையே  சரிசெய்தால்      குறையும்  கறுப்புப்  பணவீக்கம்

கோவிந்தன் 
அரசின்   இந்தச்   செயல்முறையால்       கறுப்புப்   பணத்தை   இழந்தவர்கள் 
பொருத்துச்   சும்மா   இருப்பாரோ?      பொல்லாங்   கேதும்   செய்வாரோ?

தந்தை 
கருப்புப்  பணத்தைக்  கணக்கின்றி      நிரப்பிப் பையில் வைத்தவர்கள்  
திருப்ப  அதனை  மாற்றிடவே       குறுக்கு  வழிகள்  தேடுகிறார்.
கல்லா  வில்அவர்   சேர்த்தபணம்      செல்லா  மல்இன்று  போனதனால் 
கல்லா*  மக்களை  நிற்கவைத்து      வங்கியில் அதையே  மாற்றுகிறார்.   (* கல்லா- படிக்காத) 
உழவுத்  தொழிலின்  வரவிற்கு      வரியே  இல்லை  என்பதனால் 
பழைய  கறுப்புப்  பணத்தினையே      அவர்வங்கியில்*  போட்டு  சலவைசெய்வார்.       (*உழவர்களின்)
இருக்கும்  கறுப்புப்   பணத்தில்சிறு      பகுதியைமட்டும் ஒப்புவித்து 
வருங்கா   லத்தில்    புதிதாகப்        படைக்கவே  பலவழி  வகுக்கின்றார்.
குட்டக்   குட்டக்   குனியாமல்     வெட்டவெட்ட  முளைத்தது  வரும் 
ஹைட்ரா*  மிருகத்  தலைகள்போல்      கறுப்புப் பணமும் உயிர்பிழைக்கும்.

கோவிந்தன் 
நாட்டு  மக்கள்  எல்லோரும்       நல்லவ ராக   மாறிவிட்டால்
நோட்டின்  மதிப்பை  ரத்துசெய்யும்       நிலைமை   இதுபோல்   வருமோசொல்?

தந்தை 
கேட்கவே   நன்றாய்  இருந்தாலும்     லஞ்சக் குட்டையில் ஊறிவிட்ட 
எங்கள்  ஊழியில்  இதுகடினம் ;      வெட்கத்தை விட்டே நான்சொல்வேன்.
உன்னைப்  போன்ற  இளைஞர்கள்       புதியதோர்  பாதை  தனைவகுத்தால் 
நன்றாய்  நாடு  முன்னேறும்!      நலன்கள்  கோடி  கூடிவரும்! 

  
* - ஹைட்ரா ( hydra ) என்பது கிரேக்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பல தலை மிருகம். இதன் தலையை வெட்ட வெட்ட அது மீண்டும் முளைத்து வரும் தன்மை படைத்தது .









No comments:

Post a Comment