Search This Blog

Dec 7, 2016

செல்வி ஜெயலலிதா - RIP

செல்வி ஜெயலலிதா - RIP

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி 

அன்புடன் 
ரமேஷ் 


செல்வி ஜெயலலிதா - RIP

செந்தமிழ் நாட்டை ஆண்ட
மந்திரி சபையின் முதல்வர்
இந்திய நாடே போற்றும்
இரும்பு இதய மங்கை
வந்தபல சோதனை களினால்
தளர்ந்தென்றும் துவண்டி டாமல்
சொந்தக் காலிலே நின்று
வென்று சாதனைகள் புரிந்த
-------------சந்(தி)யாவின்  செல்ல மகளோ
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.


வெண்ணிற ஆடையில் தொடங்கி 
வெள்ளித்திரை யுலகில் நுழைந்து 
பொன்னொத்த நிலவாய் மிளிர்ந்து 
பின்னரர சியலில் நுழைந்து
பன்முறை முதல்வர் பதவி
பாங்குடன் வகித்த தாலே 
தன்னிகர் இவளுக் கில்லை
எனப்பெரும் புகழைப் பெற்ற 
-------------சந்(தி)யாவின் மகளோ இன்று
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.

பல்துறை அறிவில் சிறப்பு
பன்மொழிகள் பேசும் புலமை
வில்விட்ட அம்பைப் போல
இலக்கென்றும் மாறா உறுதி
நல்லநிரு வாகத் திறமை
இவைகளைப் பெற்றதாலே
இல்லாத மக்கட் கெல்லாம்
இயைந்தபல திட்டங்கள் அளித்த
-------------சந்(தி)யாவின் செல்ல மகளோ
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.

சேற்றுள்ளே மலரு கின்ற
செந்தா  மரையைப் போல
திராவிடக் கட்சியின் தலைவி
எனினுமவர் நாத்திகர் இல்லை
ஆரூடம் ஜாதகம் பார்க்கும்
"பகுத்தறிவு வாதி" இவரே!
யாராலும்  புரிந்து கொள்ள
முடியாத புதிராய் வாழ்ந்த
-------------சந்(தி)யாவின்  மகளோ இன்று
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.

இவள் ஒன்றும் துறவியில்லை
தவறே செய்யாதிருக்க.
புத்தனோ காந்தியோ இல்லை
மறுகன்னம் காட்டி நிற்க !
தவறுகள் தனக்கு எதிராய்
செய்தவர்க் கெல்லாம் அன்று
அவர்சென்ற வழியே சென்று
அவர்களை வீழ்த்தி வென்ற
-------------சந்(தி)யாவின்  செல்ல மகளோ
-------------சந்தனப் பெட்டியில் உறக்கம்.

மின்சாரத் தடையை முற்றும்
போக்கியதோர் சாதனை எனினும்
அரசுத் துறைகளில் ஊழல்
தலை விரித் தாடுதல்   குறையே !
தானாகச்  செயல்படாமல்
தலைவியின் ஆணைக்காக
வீணாக நேரம் கழிக்கும்
மந்திரிகள் மற்றோர் குறையே.

ஆத்திக மக்கள் உணர்வை
சில நேரம் மதித்திடாமல்
அக்கினிக் கோட்டைத் தாண்டி
செய்த சில செயல்கள் குறையே.
குறைகள் சில இருந்த போதும்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
நிறைகளே நிறைய என்று
தராசுதன்  தலையை ஆட்டும்.

பொன்னியின் செல்வன் தமக்கை
குந்தவி என்பாள் போல
அந்நிய வெள்ளையர் கூட்டம்
எதிர்த்த வேலு நாச்சியார்  போல
திண்ணிய மனத்தாள் இவளே
திறமையின் வடிவம் இவளே !
இன்னொரு தலைவர் இவள் போல்
வருவரோ விரைவில்? அறியேன்!

ரமேஷ்

6 comments:

  1. சந்தன பெட்டகத்தில் உறக்கமா அல்லது அடக்கமா ?
    இதே மாதிரி சோவின் மரணத்தை பற்றி சோகமா ஒரு நாலடி!

    ReplyDelete
    Replies
    1. நாம் அடக்கம் செய்தோம்! அவள் உறங்குகிறாள் - மீளா உறக்கம் !
      சோ பற்றி எழுத முற்சி செய்கிறேன்!

      Delete
  2. Enjoyed very much . Beautiful and poignant.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      Delete
  3. நான் சென்னையில் வசித்து காலங்கள் பல கடந்துவிட்டன.எனவே அன்னையின் ஆட்சியின் குறை நிறைகளை அனுபவித்து அறியேன்.ஆனால் உன் கவிதை மூலம் என்னால் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் நிறை குறைகளை அறிய முடிந்தது. உன்னிடம் இருந்து வந்ததால், நண்பா அதன் உண்மையை உணர்கிறேன்

    ReplyDelete
  4. இரமேஷ்,

    நிறை குறைகளை எடுத்துரைத்து நன்கு புனைந்த கவிதை. வாழ் நாள் முழுவதும் அன்புக்கு ஏங்கியே இருந்தாலும் நிமிர்ந்து நின்ற பெண்மணி.2016 வெற்றியின்போது நறுக்குத் தெறித்தாற்போல் தமிழுலும் ஆங்கிலத்திலும் ஒரே மாதிரி மாறாப் புன்னகையுடன் மமதை ஏதுமின்றி பேசியது அருமை.குறையொன்று சொல்வதுண்டு காலில் விழும் கலாசரத்தைப் பற்றி! அப்படியில்லாவிடில் காலை இழுத்து விட்டிருப்பரே என்பது இப்போதுதான் தெரிகிறது

    ReplyDelete