Search This Blog

Nov 30, 2021

திருமெய்யம்

திருமெய்யம் 

என் நண்பர்கள் அரவிந்த் மற்றும் இராம.கிருட்டிணன் அவர்கள் இருவரும்  வாட்சப்பில்  அப்பில் பகிர்ந்து கொண்ட ஒர் புகைப்படம் கீழே!.

திருமெய்யம்  என்னும் ஊரில் அமைந்த ஒரு கோட்டையில் உள்ள கோவில் இது.

கோவிலில் பள்ளிகொண்ட கோலத்தில் உள்ள மெய்யப்பரோடு அவர் பின்னாலே காணப்படும் பிரம்மா , மற்ற தேவர்கள், முனிவர்கள் ஆகியோரின் வடிவங்கள் கொண்ட கர்பகிருகம்  முழுதும் மலையிலே செதுக்கப்பட்ட ஒரு சிற்பக்கலை  அதிசயம்!

கோவில் சிலைகள் எல்லாம் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வரும் இன்றைய நாட்களில், இப்படிப்பட்ட சிற்பங்களை திருடி விற்கவே முடியாது! 

ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மூதாதையர் சிலைத்திருட்டைத் தவிர்க்க மிகுந்த முற்போக்கு நோக்கோடு இப்படிச் செய்தார்களோ?

இந்த சிற்பக்கலை அதிசயத்தைப் பற்றி ஒரு  பாடல். 

அன்புடன் 

ரமேஷ் 


சிற்பக்கலை விற்பன்னர் கற்பனையிலே உதித்து
கற்சுவரில் உயிர்பெற்ற தெய்வத்திரு உருவங்கள்!
கர்பக் கிரஹ மானாலும் கடவுளரின் கற்சிலையை
அற்பர்சிலர் களவாடி கடல்தாண்டி வெளிநாட்டில்
விற்பதையே தடைசெய்யவழிதேடி அந்நாளே
கற்சுவரில் செதுக்கினரோ முற்போக்குப் பார்வையுடன்?




Nov 26, 2021

பாட்டொலி நிற்குமுன் ------


பாட்டொலி நிற்குமுன் ------

சில வருடங்களுக்கு முன் நான் "வாட்சப் "பில்  ஒரு  ஆங்கிலக் கவிதையைப் படித்தேன். அந்தப் பதிவு மீண்டும் என் நண்பர் சுதந்திரகுமார் அவர்களால் சென்ற வாரம் பதிக்கப் பட்டது. அந்தக் கவிதையின் தூண்டுதலால் நான் எழுதிய கவிதை இது. இன்றைய உலகில் அனைவருக்கும் தேவையான ஒரு பாடம் இது!

அன்புடன் 

ரமேஷ் 










பாட்டொலி நிற்குமுன் ---

ராட்டின மேறி சுற்றும் குழந்தையைப் 

-----பார்த்து மகிழ்ந்தது உண்டா? 

பட்டாம் பூச்சி மேலும் கீழும் 
-
----பறப்பதை ரசித்தது  உண்டா?

கொட்டும்  மழைதரை எட்டும் போதெழும் 

-----ஓசையைக் கேட்டது உண்டா?

மடியும் இரவின் மடியினின் றெழும் 
-
----கதிரைக் கண்டது உண்டா?

                    ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை  நாளும் ஓட்டிடும் மனிதா !

                    பாட்டொலி ஒருநாள் நின்றிடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!

நடக்கும் போது கடக்கும் நண்பரைக்

 -----குசலம் கேட்டவர் கூறும் 

விடையைக் கேட்குமுன் விரைந்தே ஓடி

 -----நடையைக் கட்டுதல் உண்டா?

படுத்த பின்னாலும் உறக்கம் தொலைத்து 

     நாளையச் செயல்களைச் செய்யும் 

திட்டம் மனதின் திரையில் நிழலாய் 

     ஓடுவ தென்றும் உண்டா? 

                    ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை நாளும் ஓட்டிடும் மனிதா !

                    பாட்டொலி ஒருநாள் நின்ரோடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!

உற்ற நட்புடன் உறவுரை யாடிட 

     சிற்சில மணித்துளி நேரம் 

சற்றும் ஒதுக்காது நட்பின் இழைகள் 

     நையச்  செய்வது உண்டா?

உன்மகள் உன்னுடன் ஆடிடச் சற்றே 

     நேரம் கேட்கும் போது 

இன்றிலை நாளை என்றுரைத் தேயவள் 

     புன்னகை தொலைத்தது உண்டா?

                  ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை நாளும் ஓட்டிடும் மனிதா !

                    பாட்டொலி ஒருநாள் நின்றிடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!

ஓடியோடி உன் இலக்கை அடைந்தபின் 

     மேலிடும் களைப்பே மிஞ்சும்!

நாடிடும் இலக்கை நீ அடைந்தாலும் 

     மனதில் மகிழ்ச்சிதான் கொஞ்சம்!

ஒவ்வொரு நாளும் சுவைத்து வாழ 

     இறைவன் அளித்த பரிசு!

அவ்விதம் வாழா வாழ்க்கை முழுதும் 

    பாழாய்ப் போகும் தரிசு!

                  ஓட்டம் ஓட்டம் எனவுன் வாழ்வை நாளும் ஓட்டிடும் மனிதா!

                    பாட்டொலி ஒருநாள் நின்றிடு மதன்முன் ஆட்டம் குறைத்திடு நண்பா!





                   

Nov 17, 2021

தாயுமானவன்

தாயுமானவன் 

இந்தப் பாடலுக்கு முன்னுரை தேவையில்லை!

அன்புடன்

ரமேஷ்



படம் : இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து , நன்றியுடன் 


காரோடும் வீதிகளில் மிதிவண்டித் தேரோட்டிப்  

போராடும் போதினிலும் தன்மகவைத்  தான்சுமந்து 

மாரோடு  சேர்த்தணைத்துத் தூளியிலே தூங்கவிட்டு  

ஆராட்டு*ப் பாடுகிறான் தாயுமான தந்தையிவன்!

* ஆராட்டு = தாலாட்டு 

Nov 15, 2021

பள்ளிக்குப் பயணம்

பள்ளிக்குப் பயணம் 

சென்னையின் வீதிகள் தண்ணீரில் முழுகுவது நகரவாசிகளுக்குப் வருடந்தோரும் பார்துப் பழகிப்போன ஒரு காட்சி! இந்த வெள்ளத்திலும் தோளில் சுமந்து தன் மகனைப் பள்ளிக்குக் கொண்டு செல்லும் ஒரு தாயைப் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ்






படம் : இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து, நன்றியுடன்


இடுப்பளவு பெருக்கெடுத்து ஓடும்வெள் ளத்தில்தன் 

உடுப்பு நனைந்தாலும் தான்பெற்ற பிள்ளையவன் 

படிப்பு உடையாமல் பள்ளிக்குப்  போய்ச்சேர  

எடுத்துத்தன் தோள்மேலே தூக்கி நடக்கும்தாய்!


அன்புடன் 

ரமேஷ்

Nov 5, 2021

தோள்கொடுப்பார் யாருமுண்டோ?

 தோள்கொடுப்பார் யாருமுண்டோ?

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத என் இன்றைய நிலை குறித்து ஒரு சுய இரக்கப் பாடல்!

அன்புடன்

ரமேஷ்




மூளையின் மூலைக்கு  குருதியைக் கொண்டுசெல்லும் 

நாளங்களி லொன்று சற்றே அடைபட்டு  

நோளை*யுற் றெந்தனுடல் நலம்கொஞ்சம்  குன்றியதால் 

நாள்தோறும் நான்விரும்பும் உணவுவகை  உண்ணுதற்கு 

தாள்போட்டு என்வாய்க்கு தடையினையே செய்திட்டார்.

கேள்வியிதைக் கேட்டெனக்குத் தோள்கொடுப்பார் யாருமுண்டோ?


பொரித்தெடுத்த பொருளெதையும் பார்க்கவும் கூடாதாம் 

வறுத்தெடுத்த வையுண்டால் வருத்தம் விளைந்திடுமாம்

முறுமுறுக்கும் நொறுக்குத் தீனிவகை களுடன்கூட 

சருக்கரைத்தின் பண்டங்கள்   துன்பத்தைத் தந்திடுமாம். 

திருநாள் தீபாவளியும் வருவதையே கருதாமல்

ஒருதலையாய் நிருணயித்தென்  நாக்கினையே கட்டிவிட்டார்

இரக்கமற்ற இச்செயலை குரலெடுத்து நானெதிர்த்தால்  

உறவுகளில் யாருமில்லை எடுத்துரைக்க என்பக்கம். 


கேள்வியிதைக் கேட்டெனக்குத் தோள்கொடுப்பார் யாருமுண்டோ?


 * நோளை = பிணியுண்ட நிலை




Nov 3, 2021

குளியல்

 குளியல் 

இதற்கு முன்னுரை தேவையில்லை!

அன்புடன் 

ரமேஷ் 





பாத்திரத்தில் இருந்து பச்சைத் தண்ணீரை 

ஆத்தா அவள்கையால் அள்ளித்ததன்  மகன்தலையில் 

ஊத்துகையில் குளிராலே அவனுடலும் சிலிர்ப்பதையே 

பா(ர்)த்து அவள்முகத்தில் பூத்ததொரு புன்னகையே!



Nov 1, 2021

பிரதோஷப்பாடல்- 42

நாளை பிரதோஷதினம்.

இத்தினத்தன்று, பிரதோஷத்தின் சந்திவேளையில், சிவபெருமானின் முன் வீற்றிருக்கும் நந்திதேவனின் பின் நின்று, அவருடைய இரு கொம்புகளின் இடைவெளி வழியே ஈசனை தரிசனம் செய்தல் சிறந்தது என்பது ஐதீகம்!

இதை விளக்கும் ஒரு பாடலை இன்று மகிழ்ச்சியுடன் பதிக்கிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 
 







 

இந்தி ரன்முதல் தேவர் அனைவரும் வந்து வணங்குமிச் சந்தியிலே*

நந்தி தேவனின் பிந்தி நின்றவன் கொம்பின் இடைவெளிச் சந்தினிலே

சிந்தும் தண்ணொளிச் சந்திர னைத்தன் சென்னியில்** சூடிய சுந்தரனை

எந்தை ஈசனை வந்து தரிசனம் செய்து தொழுதுநாம்  உய்திடுவோம்


* சந்தியிலே-- சந்திகால வேளையிலே  

** சென்னியில் - சிரத்தில், தலை மீது