Search This Blog

Feb 27, 2020

எது கவிதை?

எது கவிதை?

எதுகையும் மோனையும் ,  பிற இலக்கண லட்சணங்களும் இருப்பதுதான் கவிதையா?
இது பற்றி நான் எழுதி என் கல்லூரி நண்பர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட ஒரு பாடல்.

அன்புடன் 
ரமேஷ் 
 


எது கவிதை? யார் கவிஞர்?

பதுங்கிப் பலநாள் மனதின் உள்ளே புதைந்த கருத்துக்கள்
மிதந்து வெளியே வார்த்தை வடிவில் வருவது கவியாகும்.

எதுகைமோனை தளை கள் இவைகள் இருக்கும் சிலவற்றில்.
அதுஇல்லாமல் தளைகளை உடைத்து எழுவதும் கவிதைதான்.

படிப்போருக்கு படைப்பவன் கருத்து போயடையும் வரையில்
துடிக்கும் சொற்கள் கருத்துகளுக்கு உயிரூட்டும் வகையில் 

வடிக்கும் எல்லாப் படைப்பு களுமே கவிதை வடிவம்தான்.
அடித்துச் சொல்வேன் அப்படி எழுதும் அனைவரும் கவிஞர்களே.

அன்புடன் 

ரமேஷ் 

Feb 20, 2020

பிரதோஷப் பாடல் - 32

பிரதோஷப் பாடல் - 32

இன்றைய பாடல் முல்லைவனநாதர் எழுந்தருளியுள்ள தலத்தின்  வரலாறு.
சரும நோய் பீடித்து வாடிய சோழ  அரசன் கிள்ளிவளவன் , முல்லை வனத்தினூடே சென்று கொண்டிருக்கையில் கொடிகள் சிக்கி அவன் கால் பிணைக்கப்பட்டது. அக்கொடிகளை தன்  வாளால் வெட்டும்போது , முல்லைப்  புதரில் மறைந்திருந்த புற்று மணலால் ஆன லிங்க உருவொன்றின் மீது வாள்முனை பட்டு, அதிலிருந்து உதிரம் பெருக்கெடுத்து  ஓடியது. மனம் பதைத்த மன்னனுக்கு எழுந்தருளிய பெருமான் பணித்தவாறே அங்கு ஒரு கோவிலை மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு.

இன்றும் மூலவரின் உருவில் , முல்லைக்கொடிகள் சுற்றியிருந்த  தழும்பும், வாள்முனை பட்ட வடுவும் காணப்படுகிறது என்று கூறுவார்.

இது பற்றிய பாடல் இது.
பிரதோஷத்தன்று சிவபிரான் அருள் வேண்டி பதிப்பிக்கிறேன்.

அன்புடன்

ரமேஷ்

பி.கு: தளம் பற்றிய மற்ற தகவல்களை  இந்த இணைப்பில் காணலாம்.
https://temple.dinamalar.com/en/new_en.php?id=507

முல்லைவனநாதர்   




கிள்ளி வளவன்தன்   கால்களைக் கட்டிய முல்லைக் கொடியின் முடிச்சை 
கிள்ளி எறியவே வீசிய வாளதன் கூர்முனை தாக்கிய தால் 
உள்ளே மறைந்திருந்த இலிங்க உருவத்தில் உதிரம் பெருகி வழிய 
உள்ளம் பதறித்தான் உற்ற பழிதீர்க்க அமைத்த கோவில் இதுவே  !

முல்லைக் கொடிகள்பல காலமாய்ப் படர்ந்து  பதிந்த மேனித் தழும்பும் 

வல்லிய வாளால்  தாக்கிய காயம்  காய்ந்து விளைத்த வடுவும் 
கல்லால் அன்றி புற்றின் மணலால் முளைத்த இலிங்கச் சிலைமேல் 
உள்ளன இன்றும் என்றே உரைப்பர் இத்தல மகிமை இதாம்!





                                                                                   (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

சித்திரம் பேசுதடி

பேசும் ரங்கோலிச் சித்திரம்  

நண்பர் பில்ஹணன் கல்லூரி வாட்ஸ்-அப் தளத்தில் பகிர்ந்த இந்த ரங்கோலிச் சித்திரத்தைப்  பார்த்ததும்  எழுந்த ஒரு  பாடல்  இதோ!

அன்புடன் 

ரமேஷ் 
(கனித்தோட்டம்)




உள்ளத்தை கொள்ளை கொள்ளு மழகு - விழிப் 
பள்ளத்தில் விழுந்தாற்பின் மீள்வதரிதே !

மின்னுகின்ற கண்ணோரம் வழிகின் றதே -  அப் 
புன்னகையின் மிச்சமித ழோரத்திலே!

மாசுமரு இல்லாத முகம் நடுவிலே - ஒளிர் 
நாசியும் நறுமணத்தை வீசுகிறதே!

மோனோ லிசாவுடைய புன்னகை யையே  - இவள் 
தானோ அவளுக்கு தந்துதவினாள் ?

தேனூறும் உதட்டகழைப்  போற்றி மட்டும் - பாடல் 
நானூறு நற்புலவர் தீட்டுவாரே!

இனித்திடும் இவள்முகம் கனவு களிலே  வந்து 
இனித்தினமும் உறக்கத்தைப்  போக்கிவிடுமோ  !









Feb 18, 2020

துலாபாரம்

திருக்கருகாவூர் கருக்காத்த அம்மன் ( கர்பரக்ஷாம்பிகை ) கோவிலில் துலாபாரம் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றிய நிகழ்வின்போது எழுதிய பாடல், அங்கு எடுத்த படத்துடன்!

இந்தத் தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முல்லைவன நாதர்  மற்றும் கருக்காத்த அம்மன் பற்றிய தலவரலாறு பற்றிய பாடல் அடுத்த பதிவுகளில் தொடரும்.

அன்புடன்

ரமேஷ்

துலாபாரம்




முல்லை வனத்தில் தானாய் முளைத்தெழுந்த* மூலவர்மேல் 
அல்லல்கள் அகன்றிடவே அர்ச்சனைகள் செய்திட்டு,
பிள்ளை வரம் கேட்போர் விருப்பத்தை நிறைவேற்றி
உள்வளரும் ஒளிச் சுடராம் கருப்பத்தை காப்பாற்றி,
அழகியதோர் குழவியினை அளித்திட்ட அம்பிகையை
தொழுதவளின்^   திருமேனிக் கபிஷேகம் செய்திட்டு
மகன்மகளின்# நிகரெடையாய்** பழக்குவியல் படைத்திட்டு
மகிழ்வுடனே பிரார்த்தனைகள் செய்து முடித்தோமே !


*தானாய் முளைத்தெழுந்த = ஸ்வயம்பூ
^ தொழுதவளின்=தொழுது அவளின் 
#  மகன்மகளின் =  மகனுடைய மகள்; பெயர்த்தி 
** நிகரெடை= equal weight 

Feb 17, 2020

தன்வந்திரி ஆலயம்

தன்வந்திரி ஆலயம் 

சென்ற வாரம் கோவைக்குச் சென்றிருந்தபோது, நண்பர் மஹாதேவனிடம் அங்கு பார்க்க  இடங்களை பற்றி வினவினேன்.
அவர் பரிந்துரைத்த இடங்களில் ஒன்று " தன்வந்திரி ஆலயம்"
அங்கு சென்று வழிபட்டவர்கள் நோய்கள் முற்றும் குணமடையும் என்று கூறிய அவர், மேலும் "அங்கு சென்று வழிபட்டு அதைப்  பற்றிய பாடல் ஒன்றையும் எழுதலாமே " என்று கூறினார்!
அவர் வேடிக்கைக்குக் கூறியிருந்தாலும் , கோவில் சென்று தொழுகையில், ஒரு பாடல் உதித்தது.
அப்பாடல் , ஒரு வெண்பா வடிவில் !

அன்புடன்

ரமேஷ்

பின் குறிப்பு :

தன்வந்திரி இந்து மதத்தில் , மருத்துவத்திற்குக்  கடவுளாகவும், ஆயுர்வேதத்தின் தந்தையாகவும்  கருதப்படுகிறார்.

தன்வந்திரி ஆலயம் 

முன்வந்த நோய்த்துயரம்  முற்றிலும் நீங்கிடவும் 

பின்வந்து நோய்பலவும்  பீடித்தல் நீக்கிடவும் 

தன்வந்த்ரி கோயிலின் சன்னதியின் முன்னமே

நின்றுமன மொன்றி வணங்கு

                                                                                     ( ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

Feb 9, 2020

GCT 70 - பொன்விழாப் பாடல்

GCT 70 - பொன்விழாப்  பாடல் 


சென்ற வாரம், என்னுடைய பொறியியல் கல்லூரியை விட்டு  , 1970 ம் ஆண்டு வெளிவந்த குழுவின் 50 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. மிகச் சிறப்பாக நடந்த அந்த நிகழ்ச்சியில் நான் எழுதி படித்த பொன்விழாய் பாடலைப் பகிர்ந்து கொள்கிறேன்

அன்புடன்
ரமேஷ்

GCT 70 - பொன்விழாப்  பாடல் 

அரைநூறு ஆண்டுகள் முன்னமிக் கல்லூரி
-----வளாகத்தின் வட்டம் விட்டு
திரையொன்றின் பின்நின்று தலைமட்டும் வெளிவிட்டு
-----வியந்திருந்த காலம் விலக்கி
கரைபுரண்டு விரைகின்ற காட்டாற்றின் நுரைபோல
-----களிப்புணர்வு பொங்கிப் பெருக
தரைமீது பாவாது துள்ளல்கால்  நடைபோட்டு
-----வெளியுலகம் காண வந்தோம்

பொறியியற் பாடங்கள் பலபடித்து தேர்வுற்று
-----பட்டங்கள் பெறுவ தொன்றே
குறியாக ஐந்தாண்டு குறைவின்றி உழைத்தபின்
-----பெற்றிட்ட பட்டம் கையில் !
பெரிதாக சாதனைகள் புரியவே வேண்டிடும்
----கனவுகள் கோடி மனதில்!
புரியாத புதுஉலகில்  இவ்விரண்டின் துணையோடு
-----உறுதியுடன்  கால் பதித்தோம்!

பட்டப் படிப்பிதுவே போதாது என்றெண்ணி
-----மேலும் படித்தார் சிலர்!
விட்டதினி வருடாந்ர பரிட்சைத் தொல்லையென
-----வேலைக்குச் சென்றோர் பலர்!
நாட்டினைக் காத்திடும் நற்பணிகள் செய்யவே
-----பட்டாளம் போனார் சிலர்!
காட்டுவோம் பிற்கால இளைஞர்க்கோர் வழியென்று
-----சுயதொழில் செய்தார் சிலர்!

துளியைப்* பிளந்ததை ஆராய்ச்சி செய்திடும்    (*துளி=அணு)
-----நிலையத்தில் சேர்ந்தார் சிலர்- வான்
வெளியைப் பிளந்திந்த  அண்டத்தின் அதிசயத்தை
-----ஆராய்ச்சி செய்தார் சிலர்!
நாடென்னும் எல்லைகள் நமக்கில்லை எனச்சொல்லி
-----கடலைக் கடந்தார் சிலர்!
வீடென்றும் உறவென்றும் பலதளைகள் பிணைத்ததால்
-----இங்கே இருந்தார் பலர்!

எப்பாதை எடுத்தாலும் எவ்வழியில் சென்றாலும்
-----அவ்வழியின்  நெறிமுறை யிலே
தப்பாது ஒருசிறிதும் தவறேதும் புரியாது
-----கடமைகள் ஆற்றி முடித்தோம்!
தகவுள்ள மகன்மகளை பெற்றெடுத்து அவரீன்ற
-----பெயரன் பெயர்த்தி களுடன்
அகங்குளிர  மிகநேரம் மீண்டும்சிறு பிள்ளைபோல்
-----ஆடியே மகிழுகின் றோம்!

ஆண்டுகள் ஐம்பது ஓடியே முடிந்துநாம்
-----கூடுமின் நன்னா ளினில்
மீண்டும்நம் காளைப் பருவ நிகழ்வுகளை
-----பகிர்ந்து பேசி நெகிழ்வோம்!
இப்போது இன்னேரம்  நிறைந்தநல்  மனதோடு
-----நண்பரொடு  கூடுகின் றோம் !
எப்போதும் இந்நினைவு நமைவிட்டு  அகலாமல்
-----மனக்கூட்டில் பூட்டி வைப்போம்!



அன்புடன்

ரமேஷ் ( கனித்தோட்டம்)

Feb 6, 2020

பிரதோஷப் பாடல் -31

பிரதோஷப் பாடல் -31

பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வசிப்பத்தில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் சரிதானா என்று மதுரை வாசிகள் சொல்லவேண்டும்.
சிவபெருமானை வணங்கி வந்த ஒரு நாரை , பிற உயிர்களைக் கொன்ற பாவம் தன்னைத் தீண்டாதிருக்கும் பொருட்டு பொற்றாமரைக் குளத்தில் உள்ள மீன்களை உண்ணுவதை முற்றும் தவிர்த்துவிட்டது. நாரையின் செயலைக் கண்டு மனமகிழ்ந்த பெருமான் நாரைக்கு வேண்டும் வரம் கொடுக்க விழைந்தார். நாரை வேண்டிய வரம் இதுவே :

" பெருமானே, எண்ணெய் போன்ற பறவை இனங்கள் இக்குளத்தில் வசிக்கும் மீன்களை உண்ணுவதால் பாவம் அடைகின்றன. அதை அவை தவிர்க்குமாறு, இக்குளத்தில் மீன்கழும், பிற உயிர்களும் வசிக்காமலிருக்கும் வரமருள வேண்டும் ."

இவ்வரத்தை சிவபெருமான் அளித்து நாரைக்கும் முக்தி அளித்தார். அது முதல்  , பொற்றாமரைக் குளத்தில் மீன் முதலிய உயிர்கள் வாழுவதில்லை என்பது  ஐதீகம்.

இன்றைய பாடற் பொருளும் இதுவே!

அன்புடன் 

ரமேஷ் 


நாரைக்கு முக்தி கொடுத்த படலம்




தவமுனிவர் நீராடும் தடாக மீனைத் 
-----தானுண்ணல் தவறென்று தவிர்த்த நாரை
சிவனுறையும் திருக்கோவில் தல மடைந்து 
-----தவறாமல் தினம்மூழ்கி குளிக்கும் நேரம்
இவணுறையும் மீனைப்புள் ளினங்க ளுண்டால் 
-----உண்டாகும் பாவவினை தவிர்க்க வேண்ட
சிவனும்பொற்  றாமரைக் குளத்தி லென்றும் 
-----உயிரினங்க ளுறையாத வரமளித் தான்