Search This Blog

Feb 20, 2020

பிரதோஷப் பாடல் - 32

பிரதோஷப் பாடல் - 32

இன்றைய பாடல் முல்லைவனநாதர் எழுந்தருளியுள்ள தலத்தின்  வரலாறு.
சரும நோய் பீடித்து வாடிய சோழ  அரசன் கிள்ளிவளவன் , முல்லை வனத்தினூடே சென்று கொண்டிருக்கையில் கொடிகள் சிக்கி அவன் கால் பிணைக்கப்பட்டது. அக்கொடிகளை தன்  வாளால் வெட்டும்போது , முல்லைப்  புதரில் மறைந்திருந்த புற்று மணலால் ஆன லிங்க உருவொன்றின் மீது வாள்முனை பட்டு, அதிலிருந்து உதிரம் பெருக்கெடுத்து  ஓடியது. மனம் பதைத்த மன்னனுக்கு எழுந்தருளிய பெருமான் பணித்தவாறே அங்கு ஒரு கோவிலை மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு.

இன்றும் மூலவரின் உருவில் , முல்லைக்கொடிகள் சுற்றியிருந்த  தழும்பும், வாள்முனை பட்ட வடுவும் காணப்படுகிறது என்று கூறுவார்.

இது பற்றிய பாடல் இது.
பிரதோஷத்தன்று சிவபிரான் அருள் வேண்டி பதிப்பிக்கிறேன்.

அன்புடன்

ரமேஷ்

பி.கு: தளம் பற்றிய மற்ற தகவல்களை  இந்த இணைப்பில் காணலாம்.
https://temple.dinamalar.com/en/new_en.php?id=507

முல்லைவனநாதர்   




கிள்ளி வளவன்தன்   கால்களைக் கட்டிய முல்லைக் கொடியின் முடிச்சை 
கிள்ளி எறியவே வீசிய வாளதன் கூர்முனை தாக்கிய தால் 
உள்ளே மறைந்திருந்த இலிங்க உருவத்தில் உதிரம் பெருகி வழிய 
உள்ளம் பதறித்தான் உற்ற பழிதீர்க்க அமைத்த கோவில் இதுவே  !

முல்லைக் கொடிகள்பல காலமாய்ப் படர்ந்து  பதிந்த மேனித் தழும்பும் 

வல்லிய வாளால்  தாக்கிய காயம்  காய்ந்து விளைத்த வடுவும் 
கல்லால் அன்றி புற்றின் மணலால் முளைத்த இலிங்கச் சிலைமேல் 
உள்ளன இன்றும் என்றே உரைப்பர் இத்தல மகிமை இதாம்!





                                                                                   (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

2 comments: