Search This Blog

Feb 28, 2018

வாழ்க்கைக் கடிகாரம்

வாழ்க்கை ஒரு விடைகாண முடியாத புதிர்!

தொடக்கமும் நம் கையில்  இல்லை.முடிவும் நம் கையில்  இல்லை.

இடைப்பட்ட காலத்தில் செய்யும் செயல்களின் வினைப்பயன்  இப்பிறவிக்குப் பின்னும் தொடர்ந்து வரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

" ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே** செய்க " என்று ஒரு சங்ககாலத் தமிழ் கவிதை பள்ளிப்பருவத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது.

அதனால், நல்லவற்றைச் செய்ய நேரம் பார்ப்பானேன்?

அது பற்றி ஒரு பாடல்.

அன்புடன்
ரமேஷ்

பின் குறிப்பு : இந்த கவிதை  பிடித்திருந்தால், சில மாதங்களுக்கு முன் நான் எழுதிப்  பதித்த " சொல்ல நினைத்ததைத் சொல்லிவிடு " என்ற ஒரு கவிதையையும்  படித்துப்  பாருங்களேன் !

http://kanithottam.blogspot.in/2015/10/blog-post_24.html



வாழ்க்கைக் கடிகாரம்

ஒருமுறையே  விசையேற்கும் *   வாழ்க்கையெனும்  கடிகாரம்.
மறுமுறையதை   விசைத்தலுமே*  என்றென்றும்   முடியாதே
முடுக்கிவிட்ட  சுருள் வில்லின் ^   சக்தி  வடிந்தபின்னே
படுத்துவிடும் கடிகார முள்போன்ற  திவ்வாழ்வே.

இப்போதா அப்போதா எப்போதது நிற்குமென
துப்பறிந்து  துல்லியமாய்ச் செப்புதலும்   இயலாதே
கப்புகின்ற  இருளொத்த  காலனவன்  கைப்பிடியைத்
தப்புபவர்  இப்புவியில்  யாருமில்லை  அதனாலே

நாளைமறு  நாளைஎன  நல்வேளை பார்த்திருந்தே
மாளும்நாள்   வரும்வரையில்  வாளா  விருக்காமல்
நன்றாம் செயல்களையே  இன்றேநாம் செய்திடுவோம்..
இன்றே செய்வதையும் இப்போதே  செய்திடுவோம்.



* விசை= force ; விசையேற்கும்= energised    விசைத்தல் = to cause to move (swiftly).
^ முடுக்கிய சுருள் வில் =  a wound spring
** இன்னே = இப்போதே



Feb 21, 2018

திருவிளையாடல் பாடல் -7- குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

திருவிளையாடல் பாடல் -7 - குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் 




( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது )

விருந்தினர்   எல்லோரும்    விருந்துண்ட    பின்னரும்   பெருமளவு  மிகுந்த   படியால்

வருந்திடும்   மீனாட்சி   யினைநோக்கி   சிரித்துசிவன்   பெருத்ததன்   கணத்தை   அழைத்து

கருத்தகுண்   டோதரனின்   வயிற்றிலே   வடவைத்தீ   ஏற்றிப்பெறும் பசியைத்   தூண்ட 

இருக்கும்   உணவையெலாம்   கொஞ்சமும்   மிஞ்சாமலே    மொத்தமும்  தின்று   தீர்த்தான்
                                                               
                                                                                                    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் பொருள் :


வந்த விருந்தினர் அனைவரும் வயிறார உண்டு சென்றபின்னும், சமைக்கப்பட்ட உணவு வகைகள், பெருமளவில் மிகுந்துவிட்ட படியால்,   தடாதகைப் பிராட்டியார்  வருத்தமுற்றாள். இது கண்ட சிவபெருமான் தன கணங்களில் ஒருவனும், பெருத்த வயிறோடும் ,  கரிய நிறத்தோடும்  காணப்படுவனுமான குண்டோதரன் என்பானை வரவழைத்து , அவனது வயிற்றிலே பசியைப் பெருக்கும் வடவைத்தீயை ஏற்றி, அவனுக்கு உணவு படைக்குமாறு பணித்தார். பெரும் பசியால் பிணிக்கப்பட்ட குண்டோதரனும் அங்கு இருக்கும் எல்லா வகை உணவுகளையும் தின்று தீர்த்தான்.

Story in Tamil

திருமணத்திற்கு வந்திருந்த அரசர்கள், முனிவர்கள், அந்தணர்கள் மற்ற விருந்தினர்கள் அனைவரும் வயிறார உண்டு தகுந்த சன்மானங்களைப் பெற்றுக்கொண்டு விடை பெற்றுச் சென்றனர். அதன் பிறகு , தடாகைப் பிராட்டியாரை வந்து வாங்கிய பணியாளர்கள்,                          " அன்னையே,  நாங்கள் சமைத்திருந்த உணவில் ஆயிரத்தில்  ஒருபங்கு கூட செலவழித்த வில்லையே?" என்று வருத்தத்துடன் கூறினர். இது கேட்ட அன்னையும், சிவபெருமானிடம் சென்று, " அய்யனே, தங்கள் கணங்கள் அனைவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் விருந்துண்ண வருவார்கள் என்று நினைத்து சமைக்கப்பட்டிருந்த உணவுகள் அப்படியே மிகுந்து விட்டனவே?" என்று உரைத்தார். சிவபெருமானும் ஒரு புன்னைகையுடன் " வருந்தற்க" என்றுரைத்து , தன கணங்களில் ஒருவனான குண்டோதரன் என்பானை உணவுண்ண வரவழைத்தார். அது மட்டுமின்றி அவனது வயிற்றிலே பெரும் பசியைத் தூண்டும் வடவைத்தீயினை ஏற்றவும் செய்தார்! அதனால் பெரும் பசியடைந்த  குண்டோதரன், சமையலறையில் இருந்த அத்தனை வகை உணவுப் பொருள்களையும் தின்று தீர்த்தான். அதன் பிறகும் பசி அடங்காமல்  "இன்னும் வேண்டும்! இன்னும் வேண்டும்!" என்று  தவித்தான்! 

Story in English :

All the guests including The Kings, the Sages and the brahmins who had come , left after having a sumptuous lunch and after receiving  suitable presents. After their departure, the cooks, who had prepared the feast met Devi Thadaathagai and told her - " O Queen, even after all the guests have been fed, not even one-thousandth of the food prepared by us has been consumed  ! ".  She in turn went to Lord Shiva and told him " My Lord, we were expecting all your entourage including the Devas numbering Thirty Three Crores to come and had prepared the food to cater to all of them! But now all this may go to waste!". The Lord smiled at her and asked her not to worry. He then called  one of his celestial helpers by name Gundotharan,   to come and  directed the cooks to feed him! The cooks led Gundotharan to the kitchen and  he , in whose stomach  the Lord has lit the Fire of Hunger, devoured all the food in the kitchen! Even after all the food has disappeared, he was still hungry and wanted more to eat !




















Feb 19, 2018

இதுவும் NPA தான் !

இதுவும் NPA தான் !

சில  நாட்களுக்கு முன்னால் வெளிவந்த ஒரு தகவல்,  நீரவ் மோடி என்ற வைர வியாபாரியும் அவர் குடும்பத்தினரும் பஞ்சாப் தேசிய வங்கியை 1100 ரூபாய் கோடி அளவிற்கு ஏமாற்றியிருப்பது. ஏற்கனவே பெரிய அளவு NPA வுடன் தவிக்கும் இந்திய வங்கிகளுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும்  இது இன்னும் ஒரு பெரிய இடி.  எல்லாரையும் போல் , நீரவ் மோடியும் இந்தியாவை விட்டு வெளியேறி எதோ ஒரு அயல் நாட்டில் பதுங்கிவிட்டார்.
 எப்போதும் போல், அரசாங்கமும் பெரிய குரல் எழுப்பி " அவரைப் பிடித்துவிடுவோம்" என்று மார்தட்டும். 
பிறகு  வழக்கம் போல் வங்கிகள் இழந்த  பணத்தை நம்முடடைய வரிப்பணத்திலிருந்து எடுத்து தாரை வார்த்துவிடும்.
இது வாடிக்கையாகப் போய்விட்டது.
ஆனால் இந்த கவிதை வேறு ஒரு NPA வைப் பற்றியது.
படித்துப் பாருங்களேன்.

அன்புடன் 

ரமேஷ் 



இதுவும் என்பீஏ (NPA) தான் !

வங்கிகளில் நீயும் நானும் 
-----சேமித்த பணத்தை எல்லாம்
தங்குதடை ஏதும் இன்றி 
-----தகிடுதத்தப் பேர்வழி களுக்கு 
விடுமிகுதொகை* ஏதும் இன்றி 
-----கடனாகத் தாரை வார்த்து
வட்டியும் முதலும் அழிந்து 
-----என்பீஏ என்றே  ஆச்சு!

அன்பையே விதையாய் விதைத்து 
-----ஆசையாய்ப் பயிரை வளர்த்து
பின்னொரு காலம் தன்னில் 
-----அன்பையே அறுவடை செய்ய
எண்ணியே எதிர்பார்த் திருக்கும் 
-----தந்தையைத்  தாயை மறக்கும்
எண்ணற்ற மகன்கள் மகள்கள் 
-----இவர்களுமே என்பீ ஏதான்.

வரிப்பணத்தை வாரி விட்டு 
-----வங்கிகளின் என்பீஏவை
மறுமதிப் பீடுசெய்ய**   
-----மூலதனம் செய்யுது  அரசு.
தன்னுறவால் தள்ளப் பட்டு 
-----தவிக்கின்ற தந்தை தாயின்
என்பீ ஏக்களை மீட்டுத் 
-----தருவதற்கு வழியெதும் உண்டோ?


* - margin money
**- recapitalisation















Feb 14, 2018

வயதானவர்களுக்கும் வேலன்டைன் (அல்லது) தயங்காமல் காதல் செய்வீர்.

வயதானவர்களுக்கும் வேலன்டைன் (அல்லது)  தயங்காமல் காதல் செய்வீர்.

இன்று வேலன்டைன் நாள்.
இந்த நாளுடைய நிஜ தாத்பரியம் என்னவாக இருந்தாலும் , இப்போது அது இளம் வயதினர் தங்களுடைய காதலை வெளிப்படுத்திக்கொள்ளும் அல்லது அதற்கு அஸ்திவாரம் போடும் ஒரு நாளாக ஆகிவிட்டுருக்கிறது.
இந்த லவ்வையும்  ரொமான்சையும் வயதானவர்கள் மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்?

இந்தக் கருத்தை உட்கொண்டு ஒரு பாடல்!

அன்புடன்

ரமேஷ்  


வேலன்டைன்

வேலன்டைன் கொண்டாட்  டங்கள்   
வாலிபர் களுக்குத்  தானா?
வயதானோர்க்  கில்லை யென்ற 
நியதிகள் எதுவும உண்டோ??

காதலை முதலில் செய்து 
சாதிகள் சேரா ததனால் 
பாதியில் அதனை விட்டு 
மீதிக்கு மாறு வோரும்  

டைம்பாஸ் மட்டும் செய்ய  
கேர்ள்பிரெண்  டோடு  தினமும் 
கடற்கரை மணலில் அமர்ந்து  
கடலையைப்  போடு வோரும்  

ஆசையாய்  சிலநாள் மட்டும் 
அன்பைப்  பரிமாறிப் பின்னால் 
பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் மாற்றி 
சிங்கிள்எனச் சொல்லும் சிலரும் 

ஒருவருக்  கொருவர்  இன்று 

வேலன்டைன் கொடுக்கும் போது 

திருமணம் முதலில்  செய்தும்  

காதலைப் பின்பே  செய்தும்  

கருத்துக்கள் முழுதும்  ஒத்துப் 

போகவே இல்லை  எனினும்  
புரிதலுடன் ஒருவர்க்கொருவர்  
விட்டுக் கொடுத்து வாழும் 

நரைமயிர் தம்பதிகளுமே  

வெட்கத்தை விட்டு இன்று 
வருடத்திற் கொருநா ளேனும் 
வேலன்டைன் அளித்துக்  கொள்வீர்*.

வேலன்டைன் கொண்டாட் டங்கள்   
வாலிபர்க்கு மட்டும் இல்லை 
வயதாகிப் போனால்  என்ன? 
தயங்காமல் காதல் செய்வீர்.

Feb 13, 2018

ஆனந்தத் தாண்டவம்- மறுபதிவு

ஆனந்தத்  தாண்டவம்- மறுபதிவு 

இன்று சிவராத்திரி. 

போன சிவராத்திரி அன்று  ஆனந்தத்  தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை வணங்கிப் பதிவு  செய்த ஒரு பாடலை ,இன்று மீண்டும் நினைவு கூறுகிறேன்.


அன்புடன் 
ரமேஷ் 







விரித்த சடை; உடல் தரித்த நீறு ;     
சிரித்த செவ்விதழ் ;சீறும் செந்தீ
தெறித்து திரிபுரம் எரித்த நுதற்கண்;
உரித்த மதகஜத்  தோல் மேலாடை.

கடலைக் கடைந்த கயிறில் விளைந்த *   
விடத்தை உண்டு கருத்த கண்டம்;
கொடுவரித்** தோலை கட்டிய சிற்றிடை;   
விரிந்த தோள்கள்; பரந்த மார்பு.

அடிக்கும் உடுக்கை ஏந்திய ஒருகை;
சுடுமொளி  ஜோதியை ஏந்திய ஒருகை;
விடமுடை படவர# வணிந்த ஒருகை;             
அடிவிழு எனவர வணைக்கும் ஒருகை.

படுத்துக் கிடக்கும் அரக்கன் மேலே
எடுத்து வைத்து அமிழ்த்தும் வலக்கால்;
மடித்து உயர்த்தி மேலே தூக்கி
நடனம் புரியும் இன்னொரு இடக்கால்.

ஆக்கல் காத்தல் அதன்பின் அழித்துப்
போக்கல் மீண்டும் ஆக்கல் என்று
உலகை ஆட்டும் அலகில் நடனம்
தில்லையில் ஆடும் தேசனைப் பணிவோம்.


* மத்தாக இருந்த மந்தார மலையைக் கடையும் கயிறாக இருந்த வாசுகி என்னும் பாம்பு
**கொடுவரி - கொடும்புலி
# விடமுடை படவரவு= படமெடுக்கும் விஷநாகம்

Feb 10, 2018

திருவிளையாடல் பாடல் -6-வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

திருவிளையாடல் பாடல் -6


ஒரு சிறிய இடைவெளிக்குப் பின், திருவிளையாடல் புராணக் கதைப்  பாடல்களைத் தொடர்கின்றேன்.
இந்த ஆறாவது  பாடல் , மீனாட்சியை மனம் புரிந்த பிறகு, சிவபெருமான் அங்கு வெள்ளி அம்பலத்தில் திருக்  கூத்தாடிய திருவிளையாடலைப் பற்றியது.

அன்புடன் 

ரமேஷ் 

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 




( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)



முனிவரும் தேவர்களும்  அன்னை  மணக்கோலம்   கண்டு  களித்தபின்னர்   
இனிதாய் விருந்துண்ணும்  முன்னமே  கண்குளிர நாதனின்  நடம்காணவே    
விரும்பி வேண்டிடவே  வெள்ளியம் பலமீதில்     நந்திமத் தளமடிக்க 
திருமால் இடக்கையிட தேவரும்  பூச்சொரிய  பரமனும்  நடமாடினான்.


இடக்கை = இடது கையால் அடிக்கப்படும் ஒரு சிறிய தோல் கருவி 

பாடற்பொருள் :


மீனாட்சி சிவபெருமானை மணந்த திருக்கோலத்தை கண்டு மகிழ்ந்த முனிவர்களும்  , தேவர்களும் , மணவிருந்துண்ணச் செல்லுமுன்பாக , சிவபெருமானின் நடனத்தைக் காண விழைந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் , நந்தி தேவர் மத்தளம் இசைக்க , விஷ்ணு இடுகையை ஒலிக்க  வெள்ளியம்பலத்தில் திருநடனம் ஆடினார் . அச்சமயம் தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

Story in Tamil

மீனாட்சி திருக்கல்யாணத்தைக் கண்டு மகிழ்ந்த  முனிவர்கழும் மற்றோரும் , அதன் பின்பு, பொற்றாமரைக்  குளத்தில் நீராடி பூசைகளை முடித்துக்கொண்டு வந்தனர். அவர்களை விருந்துண்ண அழைக்கும்போது , பதஞ்சலி முனிவரும் , வ்யாக்ரபாதரும் இறைவனிடம் , தில்லையம்பலத்தில் அவர் ஆடிய திருக்கூத்தை , கூடியுள்ள அனைவரும் கண்டு கழிக்கும் வண்ணம் மீண்டும் மதுரையம்பதியில் ஆடிக்காட்டவேண்டுமென்றும், அதன்பின்னரே முனிவர்கள் உணவு உண்ணல்  தகும் என்றும்  கூறினார். அதற்கிசைந்த சிவனும், அங்கு ஒரு வெள்ளியாலான  ஒரு அம்பலத்தை அமைத்து , சிவகணங்கள் வாத்தியங்களை முழக்க, நாரதர் இசை பாட , நந்தி மத்தளம் இசைக்க, திருமால் இடக்கை அடிக்க, தேவ்ராகள் பூச்சொரிய, மீனாட்சியை நோக்கி முறுவல் புரிந்தவண்ணம் , வலது காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி திருநடனம் ஆடினார். அது கண்டு மகிழ்ந்த முனிவர்கள் " இத்திரு நடனத்தைக் காணும் பேறுபெற்ற அனைவரும், மீண்டும் பிறவாது சிவபதவியை  அடையவேண்டும் " என்று வேண்ட , சிவனும் அவ்வாறே அருளினார் .

Story in  English 

The sages and others , after witnessing the Grand marriage ceremony of Meenakshi with Sundareswarar,  took a holy dip in the Golden Lotus pond in the temple, finished their prayers and returned. They were invited to partake the feast. At that time, Sage Pathanjali and Vyaagrabathar , prayed to the Lord ,   to perform the Cosmic Dance which he had performed  at the Golden Hall at Chidambaram and  only after witnessing that, they would be able to enjoy the feast. The Lord consented and and materialised  a Silver Hall at he place. The Lord danced, to the accompaniment  of various  instruments played by the SivaGanas , Narada's song, Nandhis drum and Vishnu's uddukkai , planting his right foot down and lifting his left feet,  glancing at his consort and sporting a smile. The Devas , who were witnessing this dance, showered flowers on him. The sages , who were fortunate enough to witness the Lord's dance, requested Him that all those who witnessed His dance at the Silver Hall should be blessed with a boon which would enable them to reach His abode at the end of this birth, without suffering any more births. The Lord granted them the boon. 

ஒப்புகை  :  இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள படம் , shaivam.org தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 





Feb 6, 2018

திருவிளையாடல் பாடல்கள் - 5- மீனாட்சி கல்யாணப் படலம்

திருவிளையாடல் பாடல்கள் - 
5  மீனாட்சி கல்யாணப் படலம்




5 - மீனாட்சி கல்யாணப் படலம்

மலையத் துவசன்மகள் மீனாட்சி யுமவன்பின் அரியணையில் ஏறி யமர்ந்து 
நிலைநாட்ட தன்னரசை  புவியாளும் பிறவரசை சமர்செய்து வென்ற பின்னர் 
கைலையத் தையும்வெல்ல விரைகையில்  ஈசனின் கண்பட்டு மார்பின் மூன்றாம் 
முலைமறைய மாகேசன் மீனாட்சி கரம்பிடுத்து மதுரையில் மணம்  புரிந் தான்   






பாடற்பொருள் :

மன்னன் மலையத்வஜனுக்குப் பின்பு , தடாதகை அரியணையில் அமர்ந்து   அனைத்து  மன்னர்களையும் போரில் வென்றாள் . ,பின்பு கைலையத்தையும் வெல்ல எண்ணிப்  படையுடன் சென்றாள் . அப்போது  , சிவபெருமான் வெளியில் வந்து புன்னகையுடன் அவளை நோக்கிய நேரத்தில், அவளது மூன்றாம் முலை மறைந்தது. அவரே தன மணாளன் என்று அறிந்து நாணத்தால் தலை குனிந்த தடாதகை என்னும் மீனாட்சியை, சிவபெருமான் மதுரையில் மணந்தார். 

The story in English.

Thadaathagai succeeded her father Malayatthuvasan and ascended the throne after his demise.  Immediately after that, she gathered an invincible army . Sitting on a horse driven chariot , she led her army which proceeded to conquer all the countries in this earth. Having accomplished this, she proceeded to conquer the Indralokam . This was achieved easily as  on seeing her approach with her army, Indra ran away leaving his kingdom at the mercy of Thadaathagai.  Her next target was Kailasam! When the army led by her reached the outskirts of Kailasam, the news was conveyed to Lord Siva. At his bidding, Nandi sent  the assistants of the Lord to the battlefield but they were no match for the army of Thadaathagai and were defeated. Hearing the news a smiling Sivaperuman himself came to the battlefield. On seeing him, Thadaathagai was overcome with shyness and her third breast disappeared. Everone realised that she has found her match. Soon they were married in a grand ceremony at Madurai. The weeding was attended by all the Gods,celestial beings, the Kings and the saints.  

The story in Tamil :

மன்னன் மலையத்துவசன்  மறைந்த பிறகு தடாதகைப் பிராட்டியார் அரியணையில் அமர்ந்தார்.  பெரும் படை ஒன்றைத்ட் திரட்டி, அதன் தலமைப் பொறுப்பேற்று, பூலோகத்தில் உள்ள அனைத்து ராஜ்ஜியங்களையும் வெற்றி கண்டார். அதன் பின் இந்திரலோகத்தின் மீது படையெடுத்துச் செல்கையில், இந்திரன் போரிடாமலே  ஓடி ஒளிந்தான்.  அடுத்து கைலாசனத்தின்  மீது படையெடுத்துச் சென்றால். அவரது சேனை கைலாய எல்லையை அடைந்ததும், நந்தி தேவர் அதை சிவபெருமானுக்குத் தெரிவித்தார். அவர் ஆணையின்படி, சிவகணங்கள் அடங்கிய படை போர்க்களம் புகுந்த்தது. ஆனால் தேவியின் படையை வெல்ல முடியாமல் தோல்வியுற்றது. இதன் பின் சிவபெருமானே போர்க்களத்திற்கு வருகையில், அவரது திருமுகத்தைக் கண்ட உடனேயே தடாகைப் பிராட்டியார் நாணத்தால் தலை குனிந்தார். அவரது மூன்றாம் முலை மறைந்தது!  இது கண்டு, அனைவரும் தடாதகைப் பிராட்டியாருக்கு தகுந்த மணவாளன் சிவபெருமானே என்று அனைவரும் அறிந்தனர்! இருவருக்கும் திருமணம் மதுரை மாநகரில், கடவுளர்கள், தேவர்க, தவமுனிவர்கள், ஏனைய நாடு மன்னர்கள் இவர்கள் வருகையுடன் விமரிசையாக நடைபெற்றது.





Feb 5, 2018

வெறுமை



வெறுமை 

என் பெங்களூர்ப் பேத்தி , 
இரண்டு வார இருப்புக்குப்பின்
நேற்று மீண்டும் பெங்களுர் திரும்பினாள்.

கீழே இறைந்து கிடந்த விளையாட்டுப் பொருள்கள்
பெட்டியில் அடைக்கப்பட்டு
மீண்டும் பரணை ஏறின.

அவளை  
அமர்த்தி உணவூட்டும் குழந்தை நாற்காலியும்*      *high chair
அவள் படுத்திருந்த எடுப்புக் கட்டிலும்* ,                     *portable pram
மீண்டும் மடிக்கப்பட்டு 
பெட்டிக்குள் பதுங்கின.

மாடிப்படிகளுக்குப்  போடப்பட்டிடுந்த
தடுப்புக் கதவு எடுக்கப்பட்டுவிட்டது.

அவள்  சென்னைக்கு விஜயம் செய்யுமுன்
அவசர  அவசரமாகக்  காலி செய்யப்பட்ட

அலமாரிகளின் அடித்தட்டுகளும் ,

வரவேற்பறையில் நிறைந்திருந்து,
பின் மறைக்கப்பட்ட  விந்தைப் பொருள்களும்*,       *curios

கைக்கெட்டும் தூரத்தில்  இருந்து  எடுத்து
மேலே வைக்கப்பட்ட மின்ணனுக் கருவிகளும்*         *electronic goods 

மீண்டும் அவையவைகளின் இடத்தில்வைக்கப்பட்டு 

வீடு நிறைந்துவிட்டது.
ஆனால் 
மனம் மட்டும் 
வெறுமையாகிவிட்டது.