Search This Blog

Feb 13, 2018

ஆனந்தத் தாண்டவம்- மறுபதிவு

ஆனந்தத்  தாண்டவம்- மறுபதிவு 

இன்று சிவராத்திரி. 

போன சிவராத்திரி அன்று  ஆனந்தத்  தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை வணங்கிப் பதிவு  செய்த ஒரு பாடலை ,இன்று மீண்டும் நினைவு கூறுகிறேன்.


அன்புடன் 
ரமேஷ் 







விரித்த சடை; உடல் தரித்த நீறு ;     
சிரித்த செவ்விதழ் ;சீறும் செந்தீ
தெறித்து திரிபுரம் எரித்த நுதற்கண்;
உரித்த மதகஜத்  தோல் மேலாடை.

கடலைக் கடைந்த கயிறில் விளைந்த *   
விடத்தை உண்டு கருத்த கண்டம்;
கொடுவரித்** தோலை கட்டிய சிற்றிடை;   
விரிந்த தோள்கள்; பரந்த மார்பு.

அடிக்கும் உடுக்கை ஏந்திய ஒருகை;
சுடுமொளி  ஜோதியை ஏந்திய ஒருகை;
விடமுடை படவர# வணிந்த ஒருகை;             
அடிவிழு எனவர வணைக்கும் ஒருகை.

படுத்துக் கிடக்கும் அரக்கன் மேலே
எடுத்து வைத்து அமிழ்த்தும் வலக்கால்;
மடித்து உயர்த்தி மேலே தூக்கி
நடனம் புரியும் இன்னொரு இடக்கால்.

ஆக்கல் காத்தல் அதன்பின் அழித்துப்
போக்கல் மீண்டும் ஆக்கல் என்று
உலகை ஆட்டும் அலகில் நடனம்
தில்லையில் ஆடும் தேசனைப் பணிவோம்.


* மத்தாக இருந்த மந்தார மலையைக் கடையும் கயிறாக இருந்த வாசுகி என்னும் பாம்பு
**கொடுவரி - கொடும்புலி
# விடமுடை படவரவு= படமெடுக்கும் விஷநாகம்

1 comment: