பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?- பகுதி 2
இந்தக் கதையின் முதல் பாகம் பதிப்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. இரண்டாம் பாகம் இதோ!
அன்புடன்
ரமேஷ்
பி.கு :
முதல் பகுதியை இந்த இணைப்பில் பார்க்கலாம்
http://kanithottam.blogspot.in/2017/11/1.html
பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?- பகுதி 2
"முருகனுக்கா? அவன் அண்ணனுக்கா?
-----யாருக் களிப்பது மாம்பழத்தை?
இருவருக்கும் ஒரு போட்டிவைத்து
-----வெல்பவர்க்கே அதை அளித்திடுவோம்"
என்றே பெற்றோர் முடிவெடுத்தார்.
-----பிள்ளைகள் இருவரையும் அழைத்தார்.
"ஒன்றாய் கிளம்பி இருவருமே
-----இவ்வுலகைச் சுற்றி வரவேண்டும்.
முதலில் வருபவர் அடைந்திடுவார்
-----மந்திர மாம்பழக் கனியைத்தான்.
இதுவே எங்கள் முடிவாகும்.
-----புறப்படுக! வெற்றி அடைந்திடுக!"
என்றே பெற்றோர் சொன்னவுடன்
-----இருவரும் போட்டிக்குப் புறப்பட்டார்.
வென்றே வருவோம் என்றெண்ணி
-----வாகன மேற விரைந்திட்டார் .
மயில்மேல் ஏறி முருகனுமே
-----வான வழியாய் பறக்கையிலே
ஒயிலாய் எலியின் மேலேறி
-----பிள்ளை யாரும் புறப்பட்டார்
எலிவா கனம்மேல் ஏறியவர்
-----பெற்றோர் இருவரையும் சுற்றி
எளிதாய் ஒருமுறை வலம் வந்து
-----அன்னை தந்தையரை வணங்கி
"வெற்றி எனக்கே போட்டியிலே
-----தருக மாம்பழம் "எனக்கேட்டார்
"சுற்றவில்லையே நீ உலகத்தை"
-----என்றே பெற்றோர் கேட்டவுடன்
"எங்களுக்குப் பெற்றோரே
-----உலகம் ; வேறே ஏதுமில்லை.
உங்களைச் சுற்றி வந்ததுவே
-----உலகைச் சுற்றியதற் கொப்பாகும்.
அடியேன் உலகைச் சுற்றிவிட்டேன்
-----அரிய பழத்தை அளித்திடுக"
என்றே கூறி அவர்களையே
-----வணங்கி நின்றார் விநாயகரும்.
இதனைக் கேட்டு மனமகிழ்ந்த
-----சிவனும் உமையும் மாம்பழத்தை
முதலில் வந்தவன் எனஓப்பி
-----மூத்த மகனுக்கு கொடுத்தாராம்.
முற்றும் உலகைச் சுற்றிவிட்டு
-----அதன்பின் வந்த முருகனுமே
பெற்ற தந்தை தாய்மேலே
-----பெரிதாய் கோபம் கொண்டானே.
பெற்றோர் கூறும் வார்த்தைகளை
------சற்றும் கூடக் கேட்காமல்
உற்ற உறவை விட்டுவிட்டு
-------பறந்து வெளியே போய்விட்டான் !
தெரியும் பாடங்கள் இரண்டு
தந்தை தாயை மதித்திடுக !
சிந்தித்தே நீ செயல்படுக. !
எங்கே சென்றான் இளமுருகன்?
தங்க அவனுக்கு ஏதுஇடம்?
உங்கள் இந்தக் கேள்விக்கு
கூடிய விரைவில் பதில் சொல்வேன் .