Search This Blog

Nov 9, 2017

சென்னை- இன்று

சென்னை- இன்று

வடகிழக்குப் பருவக்காற்று சென்னைக்கு மழையைக் கொண்டு வந்திருக்கிறது.
2015-ல் மழையால் நாம் பட்ட அவதிகளிருந்து மாநகர ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தது பொய்யாகிவிட்டது. 
முதல் இரண்டு மூன்று நாட்களிலேயே  தீவிரமாகப் பெய்த மழை, சென்னையின் உட்கட்டமைப்புகளின் போதாக்குறையை படம் பிடித்துக் காட்டிவிட்டது.
இந்த நிலைமைக்கு யார் காரணம்?
லஞ்ச ஊழல்களிலும், சிவப்பு நாடாக்களிலும் சிக்கியிருக்கும் அரசு இயந்திரம் ஒரு காரணம் என்றாலும், புறநகரில் ஏரிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துப்  போடப்பட்ட  மனைகளை வாங்கி வீடு கட்டியவர்களும் ஒரு காரணம்தான்!

இந்த இரண்டு காரணங்கள் பற்றி   இரு  பாடல்கள்.

அன்புடன் 
ரமேஷ் 


இந்த நிலைமைக்கு மக்களே  காரணம்  !

ஏரிகுளம் நீர்நிலைகள் யாவையுமே தூர்த்துவிட்டு
கூறுபோட்டு  வீடுகளைக்  கட்டியதால் - மாரியதன்
நீர்வடிந்து போகாமல்  வீடுகளே ஏரிகளாய்
மாறிவிட்ட பேரிழிவைக் காண் .
                                                                                                                                                                 (பல விகற்ப இன்னிசை வெண்பா )

XML


இயற்கையை வெல்லுதல்  ஏலாதே*   செல்வ                    *ஏலாதே= இயலாதே 
மயற்கையில் மூழ்கிய மாந்தரே- நேமமே*                         *நேமமே = நியமமே 
மீறியே நீசெயும்  காரியம் யாவையும் 
பேரிடர் ஈட்டிடும் காண்.
                                                                                                                                             (பல விகற்ப இன்னிசை வெண்பா )



XML
அரசின் அக்கறையின்மையும், அதிகாரிகளின் மெத்தனமும்

இரட்டையிலை யாருக்கென இழுபறிப்புச்  சண்டையிலே 
இரவுபகல் பாராமல் நேரத்தைக்  கழிப்பதினால்
வரவிருக்கும் வான்மழையால் பெருஞ்சேதம்  வருமென்று
தெரிந்திருந்தும்  வரிந்துகட்டி வேலைசெய்ய நேரமில்லை!

சாக்கடைகள் அடைபட்டு போக்கிடமே இல்லாமல் 
தேக்கிநிற்கும்  நீர்வாசம்  மூக்கைத்  துளைக்கிறது.
தூறுவார தந்தபணம்   "வேறுவேறு" வழிகளிலே 
தாறுமாறாய்ப் போனதாலே  நாறிப்போச்சு  நம்மவூரு !.

கரைபோட்ட வேட்டியிலே கரைசிறுதும் ஏறாமல் 
குறைகேட்க வருகின்றார் காவலர்கள் குடைபிடிக்க. 
வருமுன்னே காப்பதற்கு வழியேதும் செய்யாமல்  
இருப்பதெல்லாம் போனபின்பு  இழப்பீடு அறிவிப்பு!!.

சிலநாட்கள் பெய்திட்ட சிறுமழைக்கே இந்நிலைமை!
பலமாகப் பலநாட்கள் பெய்திட்டால் என்னாகும்?
அலுவலரும் தலைவர்களும்  ஊழல்கழப்* பொழித்து            
சுறுசுறுப்பாய்  செயல்படவே சேர்ந்தே குரல்கொடுப்போம்.

*கழப்பு - சோம்பல் ; ஊழல்கழப்* பொழித்து-  தலைவர்களின் ஊழலையும், அலுவலர்களின் சோம்பலையும் ஒழித்து 

பின் குறிப்பு;
2015 சென்னை மழை இடரின் போது , அதன் பல பரிமாணங்களை  பற்றி, நான் எழுதிய சில பாடல்களின் இணைப்பு கீழே! படித்துப் பாருங்கள். நன்றி.

http://kanithottam.blogspot.in/2015/12/blog-post_24.html
http://kanithottam.blogspot.in/2015/12/blog-post_20.html
http://kanithottam.blogspot.in/2015/12/blog-post_15.html
http://kanithottam.blogspot.in/2015/12/blog-post_13.html
http://kanithottam.blogspot.in/2015/12/blog-post.html











3 comments:

  1. Replies
    1. Thanks. Wishes for a speedy recovery from surgery.

      Delete
  2. Superb Ramesh.You are an engineer,a teacher and a poet,all rolled in to one

    ReplyDelete