Search This Blog

Aug 30, 2017

ஆறு வாரம் , ஆரவாரம்


ஆறு வாரம் , ஆரவாரம்


சென்ற ஆறுவாரங்கள் என்னுடைய மூன்று பேத்திகள் சென்னை வந்திருந்து
எங்களுடன் தங்கியிருந்த நாட்கள் ஒரு அட்டகாச  அனுபவம். அதை உங்களுடன் இந்தப் பாடல் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்



ஆறு வாரம் , ஆரவாரம்

அ(ன்)னன்யா* ஆதீரா* அவர்களோடு   அதிதியும்* 
என்மூன்று பேத்திகளவர்   தந்தை தாயாருடன் 
அன்மோலின்**  தோட்டத்தில் வந்திருந்து தங்கிய 
இன்பமான ஆறுவாரம் அட்டகாச  அனுபவம்  

கத்தல்கே ளிக்கைகும்  மாளம்கொடி யேற்றம் 
முத்தங்கள்  கன்னங்களில்    மாறிப் பரிமாற்றம் 
முகமூடிக  ளணிந்தே விலங்காய்   உருமாற்றம் 
சுகமான  அணைப்புடன்சிறு கதைகளரங் கேற்றம் 

பாடச்சொல்லி மழலைக்குரல் கேட்பதுமே   ஒருசுகம்
ஆடச்சொல்லி அபிநயங்கள் பார்ப்பதுமே  ஓர்சுகம்.
ஓடச்சொல்லி பின்தொடர்ந்து பிடிப்பதுமே  ஓர்சுகம்
தேடச்சொல்லி ஒளிந்துவிளை யாடுவதும்  ஒருசுகம்
கட்டிப்பிடுத்து கையில்தூக்கி மார்பணைத்தல் ஒருசுகம்
குட்டிக்காலால் எட்டிநம்மை உதைப்பதுமே  ஓர்சுகம்.

கரைகின்ற காகம்கானம் பாடுகின்ற குயிலுடன்
விரைகின்ற குதிரைமற்றும் முட்டுகின்ற மாடுகள்
குரைக்கின்ற நாய்கள்மற்றும் மியாய்மியாய் பூனைகள்
உருமிகின்ற சிங்கம்புலி போலக்குரல் எழுப்பியே 
பரிணாம வளர்ச்சியில் பலபடிகள் பின்புபோய்
பரிமாணம் புதிதாகப் பார்த்ததுமே ஓர் சுகம்.

உச்சிமுகர்ந்து உடலணைத்து  கொஞ்சுதலும் ஒருசுகம்  
பச்சரிசிப் பல்வரிசை மிளிரும் புன்னகைசுகம்.
இச்சகத்தில் இச்சுகங்கள் என்றுமீண்டும் கிடைக்குமோ 
அச்சமொன்று மனதிலே விச்வரூப மெடுக்குதே.

ஆறுவார ஆரவாரம் நேற்றுமுடிந்து போனதே!
வேறுவேறு திசைகள்நோக்கி பறவைகள் பறந்ததே!
வெறுமைபரவி  வீடும்மனமும்  வெறிச்சென் றிருக்குதே!
மறுபடியும் இந்தநாளின்  வருகைநோக்கி நிற்கிறேன்.



*- அதிதி, அனன்யா, ஆதிரா - என் பேத்திகள் - வயது வரிசைப்படி.
** அன்மோல் தோட்டம் - என் முகவரி










Aug 25, 2017

விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி

இன்று விநாயக சதுர்த்தி . இந்த நாளில், கிட்டத்தட்ட ஒரு வருஷததுக்கு முன் நான் எழுதி பதிவு செய்த "விநாயகர் பதிகம்" என்ற பதிவை விநாயகரை வணங்கி மறு  பதிவு செய்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்




பாடல்
குறிப்பு .
வானுறை ஈசரும்  ஏனைய தேவரும் 
கானுறை நற்றவ மாமுனிவரும் ---தீநிறை
வேள்விகள் செய்யுமுன் வேண்டி வணங்குவது 
வேழமுகன் பாதம் தனையே                              
                             (1)
எந்தக் காரியத்தையும், , கடவுளர்கள்,பிற தேவர்கள், முனிவர்கள் ஆகிய எல்லோரும் கூட விநாயகனைத் தொழுத  பின்னரே தொடங்குவார்கள். இல்லையேல் காரியம் வெற்றி ஆகாது! சிவபெருமான் ஒரு சமயம் போருக்குச் செல்லுமுன் இதைச் செய்ய மறந்ததால் , அவரது தேர்ச் சக்கரம் உடைந்தது என்பது புராணம்.
காரியம் எதையும் கருதித் தொடங்குமுன்
பாருறை மாந்தர் தொழுவரே  --- கரிமுகத்
தூயவன் மாயவன் மருகனுறை கோயிற்கு
போயவன்  காலில் விழுந்து .                                        (2)
தெய்வங்களே   இப்படி என்றால், இவ்வுலகு மாந்தர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அவர்களும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பூசித்த பின்னரே காரியம் தொடங்குவர்.
காவியமாம்  பாரதப் பெருங் கதையை பலநூறு
பாயிரமாய்ப்  புனைந்த வியாசரவர் -வாயுரைக்க
தந்தம் உடைத் தந்த வரிகோலால் வரைந்தானை
வந்தனை செய்வோம் வணங்கி .                        (3)
வேதவியாசர் சற்றும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பாரதக் கதையைச் சொல்லவேண்டும் என்றும், அவர் சொல்லச் சொல்ல அவர் சொல்லுவதைப் புரிந்து கொண்டு , சற்றும் நிறுத்தாமல் விநாயகர்  எழுதவேண்டும் என்று ஒப்பந்தம். அவர் வேகமாக எழுதும்போது எழுதுகோல் உடைந்துவிட்டது! என்ன செய்வது? உடனே விநாயகர் ஒரு தந்தத்தை உடைத்து , அதை எழுத்தாணியாக உபயோகித்து பரதக் கதையை எழுதி முடித்தார்!  அதை விளக்கும் பாடல் இது.
கைலையில் குடிகொண்ட பெற்றோர் தமைச்சுற்றி
எலிவா கனமேறி வலம்வந்து -உலகைஎலாம்
சுற்றியதற் கொப்பிதெனச் செப்பிட்டு              மாங்கனியைப்
பெற்றவனின் பாதமதைப்  பற்று.                       (4)
விநாயகர் பற்றிய கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கதை-- அன்னையையும் தந்தையையும்  வலம் வந்து மாங்கனியைப் பெற்ற கதை.  விளக்கம் எதுவும் தேவையில்லை.      (4)
குறுமுனி  அகத்தியன் கைலயம் சென்றவண்
இருந்து கொணர்ந்ததண்  கங்கைநீர் – நிறைஜபக்
கலத்தினைக்  கவிழ்த்துக் காவிரியாகத்  தென்திசை
நிலம்செழிக்க  விட்டவனை  வணங்கு.            (5)
விந்தியமலையின் தெற்குப் பகுதிகளின் தண்ணீர்ப்  பற்றாக்குறையை நீக்க ஒரு ஜீவ நதியை  உருவாக்க அகத்திய முனி கங்கை நீரை  ஒரு மண்டலத்தில் எடுத்து  வந்தார். தென்மேற்கு  மலையில் ஒரு இடத்தில் தன்  கமண்டலத்தை கீழே வைத்து  இளைப்பாறுகையில் , விநாயகர் ஒரு காக்கை வடிவில் வந்து ( ஒரு அந்தணச் சிறுவன் வடிவில் என்றும் சொல்வதுண்டு), அந்தக் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அங்கிருந்து காவிரி உற்பத்தி ஆகியது ; அந்த இடம் தான் தலை காவேரி : -என்பது ஐதீகம்.


செவ்விய தமிழிலே பாடல்கள் பலபுனைந்த
அவ்வைக் கிழவிக்கு அருள்செய்து- அவர்தம்மை
கவ்வித் தன்வாயால் கைலாயம் சேர்த்தானை
பவ்(வி)யமாய்ப் பணிவோம் தினம்            (6)               
அவ்வையும் அவரது நண்பர்கலான சுந்தரமூர்த்தி நாயனாரும், சேர மன்னனும் கைலாயம் போகத் திட்டமிட்டார்கள். புறப்படும் நாளன்று அவ்வை விநாயகர் பூஜையில் ஆழ்ந்திருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியாமல் போயிற்று. அவர் பூஜையில் ஈடுபட்டிருந்த போதிலே , மற்றவர் இருவரும் கைலாதுக்கு புறப்பட்டு விட்டார்கள்- முன்னவர்   இந்திர லோகத்து  யானை ஐராவதத்தின் மீதும், பின்னவர் அவரது புரவி மேலும் அமர்ந்து. அவ்வையாரின் மனக்கலக்கத்தை அறிந்த விநாயகர் , பூஜை முடிந்ததும் அவரை தன தும்பிக்கையால் தூக்கி கைலாசத்தில்- அவரது நண்பர்கள் அங்கடையும் முன்னே - சேர்த்தார் என்பது வரலாறு.
அருகம்புல் மாலையை அணிவித்து அதனோடு
எருக்கம்பூ சேர்த்தவரைப் * பூசித்து -- உருக்கமுடன்
வேண்டுமடி யார்க்கவர்கள் நாடும்வரம் நல்குவனைத்
தண்டமிட்   டுத்தொழுவம் நாம்.                             (7)
               
* சேர்த்து அவரைப்
                               
இந்தப் பாடலுக்கு விளக்கங்கள் தேவையில்லை. என்றாலும் ஏன் அருகம் புல் விநாயகருக்கு விசேஷம் ? ஒரு கதை உண்டு. ஒரு சமயம் பார்வதியின் கோபத்துக்கு உள்ளாகி சபிக்கப்பட்டார் நந்தி தேவர். சாபம் விலக வழியை அவர் தேவியிடம் வேண்ட, தேவியும் " உனக்குப் பிரியமான ஒன்றை விநாயகருக்கு அர்ப்பணித்துவிட்டால்  சாபம் விலகும்"என்று அருளினார். உடனே நந்தி தேவர் அவருக்குப் பிடித்த உணவான அருகம் புல்லை அர்ப்பணித்ததாகவும் , அதனாலேயே பிள்ளையாருக்கு அருகம்புல் விசேஷம் என்றும் கூறுவர் .
புறஅறிவின் பூரண உருவகமாய் புத்தியினை 
ஒருபுறம் அமர்த்திக் கொண்டு -- மறுபுறம்
மெய்ப்பொருள் தத்துவமாய்  சித்தியை       வைத்திட்ட
அய்ங்கரனி னடிகள் பணிவோம்.                           (8)
பிள்ளையாரை பிரம்மச்சாரியாகவே நாமெல்லாரும் நினத்திருந்தாலும், அவர் பிரஜாபதியின் ( சிலர் பிரமனின் என்பர்) மகளிரான சித்தியையும் புத்தியையும் துணையாக ஏற்றதாகவும் வரலாறு உண்டு.விநாயகர் இருக்கும் இடத்திலே அறிவின் பூரணத்துவத்தைக் காணலாம் என்பதையே சித்தியும், புத்தியும் உணர்த்துகிறார்கள் என்பதின்  உருவகமே இது என்றும் கொள்ளலாம்.
மோதகமும் முக்கனியும் பாலோடு சர்க்கரையும்
சாதித்து சிரம்தாழ்த்தி வணங்கிடின் -- காதலுடன் 
வேதனைகள் நமைச்சேரா! விக்னங்கள் விலகிவிடும்!
தீதகன்று நலம்சேரும் காண்.                                   (9)
" சாதித்து.   சிரம்தாழ்த்தி காதலுடன் வணங்கிடின் "-- என்று படித்துப் பொருள் கொள்க. வேறு விளக்கங்கள் தேவையில்லை
முச்சந்தி தோறும் மரத் தடிகள் மீதும்
எச்சமயமு மர்ந்த்தருள் புரிபவனை   - இச்சையுடன்
மெச் சியே  தொழுவோர்க்கு நலமெலாம் சேருமே
நிச்சயமி தென்றே உணர்.                                      (10)               
பொருள் விளக்கங்கள் தேவையில்லை.
அனைவரும் விநாயகனை வணங்கி நலம் பெறுவோம்!



http://kanithottam.blogspot.in/2015/08/1.html
http://kanithottam.blogspot.in/2015/08/blog-post_27.html

Aug 22, 2017

தவிக்கும் தமிழ் நாடு -இன்றைய தலைப்புச் செய்திகள்- சுடச் சுட

இன்றைய தலைப்புச் செய்திகள்- சுடச் சுட 

1. அதிமுக-வின் இரண்டு அணிகள் இணைந்தன.
2. மோடி  அரசின் மிரட்டலுக்கு இரு அணிகளும் பயந்தே இது நடக்கிறது - ஸ்டாலின்
3. 18 -எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு. எங்களை ஒதுக்கிவிட்டு ஆட்சி நடத்த முடியாது- தினகரன்.
4. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜா.க நிரப்பும்.
5. "ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவோம்; அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்"- தி.மு.க
6. தமிழ்நாடு மக்களுக்கு கோமாளிக் குல்லா போடுகிறர்கள்  ஆட்சியாளர்கள்-- கமலஹாசன் ட்விட்டர் பதிவு.
7. சரியான நேரம் பார்த்து அரசியலுக்கு ரஜினி வருவார்-- ரஜினி ஆதரவாளர் தமிழருவி மணியன்.

இச்செய்திகள்  பாடல் வடிவில் கீழே !

அன்புடன்

ரமேஷ்

தவிக்கும் தமிழ் நாடு 

ஓபிஎஸ்சும் ஈபீஎஸ்சும் குடுமிப்பிடி சண்டையை
வாபஸ்வாங்கி கைகுலுக்கி  கட்டிப்பிடித்து நிற்கிறார்.
மோதிமுட்டிக்  கொண்டிருந்த அணியினரிவர்  இருவரும் 
கூடிவரக் காரணமே மோடிஅரசின் மிரட்டலோ ?

ஓரங்கட்டி ஒதுக்கப்பட்ட மன்னார்குடி மாபியா
நேரம்பார்த்து நெத்தியடி அடிப்பேன்னு சொல்லுறார்.
பதினெட்டு பேரோடு பாண்டிச்சேரி போகிறார்,
பதுக்கிஅங்கே அவரைவைத்து சதுரங்கம் ஆடுறார்.

சைடுவாங்கி வேடிக்கை பார்த்திருந்த ஸ்டாலினும்
சைக்கிள்கேப்பு சந்தில்பூந்து ஆட்சிகவுக்கப் பாக்குறார்.
சேரஒரு ஆளுமின்றி சோர்ந்திருந்த பா.ஜா.கா.
நேரமிதே என்றுஎண்ணி  தலையைத்தூக்கப் பாக்குது.

ஆளுகின்ற ஆட்சியினை அன்றாடம் ட்விட்டரில்
ஆளவந்தான் நடிகருமே  அலசிஅலசிக் கழுவுறார்
ஆளநானும் அரசியலில் குதிப்பேன்என்ற  ரஜினியும்
ஆளான பொண்ணுபோல ஒதுங்கியோரம்  நிக்குறார்.

ஆளாளுக் கிவர்கள் போடும்  அக்கப்போரும்  கூச்சலும் 
தாளாமல் தமிழ்நாட்டு மக்களுமே தவிக்கிறார்.
ஆளுநரின் ஆட்சிஉடன்  வந்தால்தான் மட்டுமே 
மீண்டும்நம்ம மாநிலத்துக்கு விடிவுகாலம் கிட்டுமே !

பின் குறிப்பு : (24-8-17 அன்று பதிவு செய்தது )

இந்தப் பாடலைப் படித்த நண்பர் மகேந்திரன், தெரிவித்த கருத்தும், அதற்கு நான் அளித்த பதிலும் இதோ. 

மகேந்திரன் _ 

திருமாவும் , அன்புமணி ராமதாஸும் ஆளுக்கொரு பக்கமாய் அறைகூவல் விடுக்க, நடைபயண நாயகன் கலைஞரை தரிசனம் செய்தது ஏன்? அடையும் கொஞ்சம் சொல்லலாமே! 

என் பதில் :
போயஸ் தோட்ட வீடுகையை விட்டுப்போன நிலையிலே
வாயடைத்து நிற்கின்றார் தீபாவும் தீபக்கும்
டாக்டர் குடும்பத்தார் விடுகின்ற சௌண்டையொரு
பாக்டரா பொதுமக்கள் கேட்டு மதிப்பதில்லை 
பெரும்பாலும் திமுக சொல்வதையே எதிரொலிக்கும்
திருமாவுக் காகவொரு தனிப்பகுதி தேவையில்லை
மைக்கெங்கு கிடைத்தாலும் கையெடுத்து முழங்குகிற
வைக்கோவின் செய்கைகளின் பொருளும் புரிவதில்லை.













Aug 18, 2017

மனதைத் திறந்தால் மாற்றம்வரும்.

மனதைத்  திறந்தால் மாற்றம்வரும்.

"வர வர காலம்  கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறது . அந்த நாளிலே இப்படியா இருந்தது? எல்லாம் தலைகீழாய்ப் போச்சு! இந்த ஜெனெரேஷன் குட்டிச்சுவராகப்  போய்க்கொண்டு இருக்கு! "

வயதானவர்கள் பேசிக்கொள்ளும்போது தவறாமல் சொல்லப்படும் ஒரு கருத்து  இது.

எவ்வளவு தூரம் இது சரி?

நம்முடைய அடுத்த தலைமுறையில் நாம் காணும் மாற்றங்கள்  தரத்தில் தாழ்ந்தவை, ஒவ்வாதவை   என்றால் , நம் தலைமுறை நம் முன்னோரிடமிருந்து மாறுபட்ட நடைமுறைகளையும், சிந்தனைகளையும் கொண்டிருக்கிறதே, அது மட்டும் சரியா?  சரி என்றால் இன்று நடப்பது மட்டும் ஏன் நம்மை உறுத்துகிறது?

மாற்றம் என்றும் மாறாதது என்பதை உணர்ந்து , திறந்த மனதோடு அந்த மாற்றங்களில் நம்மையும் ஈடுபடுத்திக்கொண்டு வாழ்வதே சரி!

அதைப்  பற்றி-----------

அன்புடன் 

ரமேஷ் 

மனதைத்  திறந்தால் மாற்றம்வரும்.

கதவு  திறந்தால்  காற்று வரும்-நெல்
விதைகள் திறந்தால்  நாற்றுவரும்
நிலம்  திறந்தால் ஊற்று வரும்-நம்
மனம்   திறந்தால் மாற்றம்வரும்.

கண்கள் திறந்தால் காட்சி வரும்-வான்
விண்ணும்  திறந்தால் மழையும்வரும்.
எண்ணம் திறந்தால் கவிதை வரும்-நம்
மனதைத்  திறந்தால் மாற்றம்வரும்.

செவ்வாய்  கிரகத்தை சீண்டிப் பார்க்கும்
இன்றய உலகின் நடைமுறைகள் - நமக்
கொவ்வா திவையென   உதறித்  தள்ளல்
ஒருபோதும் முறை ஆகாதே

நாம் பிறந்த நேற்றைய நாட்களின்
நீதிகள்  நியமங்கள் வெவ்வேறு- அதில்
சோம்பி யிருந்து  புதிய உலகினை
வேம்பென வெறுத்தல் தவறாகும்.

மாற்றங்கள் நிகழ்கையில்  முதலில் மனதின்
வசதி வட்டத்தின்* வெளிஇருக்கும்- அதை    *comfort zone
ஏற்றுக் கொண்டால் ஏற்றங்கள் பலவும்
வாழ்வில் தானே கூடி வரும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
இயற்கையின் நியதி  இதையுணர்வோம்- நம்
மனதைத்  திறந்து மாற்றங்கள் ஏற்று
இன்றைய உலகை அனுபவிப்போம்.









Aug 15, 2017

இந்திய சுதந்திர தினம்


இந்திய சுதந்திர தினம் 

தேசிய கீதம் திரையரங்குகளில் இசைக்கப்பட்ட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொன்னது சரியா?
அப்படி கீதம் இசைக்கப்படும்போது ,எல்லோரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற நியதி சரிதானா, அல்லது அதை அவரவர் விருப்பத்திற்கு விட்டு விட வேண்டுமா ?
" வந்தே மாதரம் " பாடலைப்  பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் சொன்னது சரியா?
"வந்த மாதரம்" ஒரு தேசப்பற்றை தூண்டும் கீதமா அல்லது இது ஒரு "ஹிந்துத்துவ "(?) பாடலா?

இப்படி பல "குழந்தைத்தனமான"  சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருக்கும் இந்த நாளன்று , சர்ச்சைகளை பெரியவர்களுக்குள்ளே மட்டும் வைத்துக்கொண்டு, நம் குழந்தைகளுக்கு  இந்த சுதந்திர  தினத்தன்று நம் நாட்டின் பெருமையைச் சொல்லலாமே!

குழந்தைகளுக்காக  எழுதப்பட்ட ஒரு பாடல்.
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

அன்புடன்

ரமேஷ்





இந்தியா - 

                                        பாரத நாடுநம்  தாய்நாடு
                                        பாரில் சிறந்த பொன்னாடு
                                        வேறெங்கும் இதற் கி(ல்)லையீடு .
                                        வாழ்க பாரதம் எனப்பாடு .






                                                  வட  திசையினிலே இமயமலை
                                                  தென்திசையி லிந்து சமுத்திரமே
                                                   இடவலம்  இரண்டு பக்கங்களில்
                                                   வங்க அரபிக் கடல்களுண்டு.

                                                    கங்கை யமுனை பிரம்மபுத்ரா
                                                    கோதா வரியுடன் காவேரி
                                                    பொங்கி ஓடுமிம் மாநதிகள்
                                                    பாரத நாட்டை  செழிப்பாக்கும்

பரதன் இந்நாட்டை ஆண்டதனால் 
பாரதம் என்ற பெயரிதற்கு
சிந்து சமவெளியில்  தொடங்கியதால் 
இந்தியா என்பதும் இதன்பேராம் .


இந்து புத்த ஜைனமதம்
உலகுக் களித்தது நம்நாடே
விஞ்ஞா னத்தை மிஞ்சுகின்ற
மெய்ஞ்ஞா னத்தின் உறைவிடமாம்.





                                                இருபத் தொன்பது  மாநிலங்கள்
                                                இருபத்   திரண்டு தாய்மொழிகள்
                                                இருக்குது இந்திய நாட்டினிலே .
                                                இருந்தும் இணைந்தே இருக்கின்றோம்.








                                                         காந்தி நேரு நேதாஜி
                                                         கங்கா தரதிலக் வ.வூ.சி
                                                         பாரதி குமரன் ராஜாஜி
                                                         போன்ற தேசியத் தலைவர்கள்

                                                          சேர்ந்து பலநாள் போரிட்டு
                                                          வெளிநாட் டினரை  விரட்டியதால்
                                                          இன்று நம்நாடோர் குடியரசு.
                                                          நாமெல் லோரும்  அதன்மன்னர்.




                                                வீரம் உண்மை செழுமைஎனும் 
                                                மூன்று கொள்கைகளைக்   குறிக்கின்ற-
                                                மூவர்ணக் கொடி  ஏற்றிடுவோம்.
                                                தேசிய கீதம் பாடிடுவோம்.

                                             
                                                 இந்த  சுதந்திரத்  திருநாளை
                                                 ஒன்று கூடிக்கொண் டாடிடுவோம்
                                                 வந்தே மாதரம் என்றிடுவோம்
                                                 பாரதத்  தாயை பணிந்திடுவோம்
























Aug 12, 2017

சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)


சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)


வரும் திங்கள் கோகுலாஷ்டமி - கண்ணன் அவதரித்த நாள்.

கோகுலத்தில் சிறு குழந்தையாகவும், ஒரு சிறுவனாகவும் கண்ணன் செய்த லீலைகள் பற்றிய கதைகள்  குழந்தைகளை  மிகவும் கவரும்.

நான் முன்பு கூறி இருந்த படி , குழந்தைகளுக்கு புரியும் படி பாடல்களை எழுதி , கற்பித்து , அவர்கள் மனதில் நம் கலாச்சாரத்தைப் பற்றிய கதைகளையும் நல்ல கருத்துக்களையும்  பதிக்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை.

இதன் படி  குழந்தைகளுக்கான முந்தைய இரு  பாடல்களின் தொடர்ச்சியாக கோகுலாஷ்டமி அன்று கண்ணன் பற்றிய ஒரு பாடல் இன்று.

அன்புடன் 

ரமேஷ் 


சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)




யமுனை நதியின்  கரையோரம் 
கோகுலம் என்னும் கிராமத்தில் 
சிமிழிதழ் சிரிப்புடன் சின்னக்கண்ணன் 
அன்னை மடியில் தவழ்கின்றான்.










கட்டி முடித்த கருமுடியில் 
அழகாய்ச் செருகிய மயிலிறகு.
பட்டாடையும் அவன்  இடையினிலே 
பட்சணமும் சிறு கைகளிலே 








துருதுரு துறுவென இங்கங்கும்    

தவழுவதில்  அவன் சிற்றெறும்பு 
சுறுசுறுப்பாக ஓடி அவன் 
செய்வ தெல்லாமோ பெருங்குறும்பு.   








வெண்ணை தயிர்க்குடப்  பானைகளை 

தள்ளி வெண்ணையைத் தின்றுவிட்டு   
கண்ணை இமைக்கும் நேரத்தில் 
அங்கிருந்தே அவன் ஓடிடுவான்  








ஓடி ஒளிந்திடும் கண்ணனையே 

தேடிப்  பிடுத்து அவன் அன்னை 
சாடிக்  கடியும் நேரத்தில் - நான் 
செய்ய வில்லைஎனச் சாதிப்பான். 







சின்னக் கண்ணன் செய்கின்ற 

சில்விஷ மங்களைப்  பொறுக்காமல் 
அன்னை யசோதா அவனையொரு 
உரலில் கட்டி வைத்தாளாம்.






திருமால் விஷ்ணுவின் உருவான 

குட்டிக் கண்ணன் இவனுக்கு 
உரலும் பெரிய கனமல்ல.
உருட்டி  இழுத்துச் சென்றானாம்.





கண்ணன் செய்யும் விளையாட்டுக் 

குறும்பு களுக்கோர் கணக்கில்லை.
எண்ணில் அடங்கா இக்கதைகள்  
ஒவ்வொன்றாய் நாம் படித்திடுவோம்.





அட்டமித் திருநாள் இம்மாதம் 
குட்டிக் கண்ணன் பிறந்ததினம்.
வீட்டு  வாசலில் கோலமிட்டு 
பாட்டுகள் பாடி மகிழ்ந்திடுவோம்.








சின்னச்   சின்னக் கால்வரைந்து 
வண்ணத் தோரணங்கள் கட்டி 
வெண்ணை பட்சணங்கள் படைத்து 
கண்ணனை வாவென வரவேற்போம்.









Aug 10, 2017

கோட்டூர் தோட்டப் பிள்ளையார் பலகை

கோட்டூர் தோட்டப் பிள்ளையார் பலகை 

நான் காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது, பல நாட்கள் கோட்டூர் தோட்டம் நான்காம் தெருவின் வழியாகச் செல்லுவது உண்டு. அப்போதெல்லாம் ஒரு வீதியின் முன்னால், பிள்ளையார் சிலை ஒன்றின் அருகில், சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் கரும்பலகையில் (பிள்ளையார் பலகை) எழுதப்பட்டுள்ள கருத்துப்  பொதிந்த வாசகங்களை நின்று படித்துச் செல்வேன். ஆனாலும், "தினம் ஒரு கருத்து" என்று தவறாமல் எழுதி வரும் இப்பணியைச் செய்து வருபவர் யார் என்று  தெரிந்து கொண்டதில்லை.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால்தான் அவரை சந்திக்கும் வாய்ப்பும், அவரிடமிருந்து இதுவரை அப்பலகையில் இடம் பெற்று இருந்த வாசகங்களின் பதிவைப்  பெரும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த மனிதர்தான் ஒய்வு பெற்ற  முன்னாள் காவல் துறைத் தலைவர் திரு.ராஜ்மோகன்.

அவர் பணியைப் பாராட்டி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




கருக்கல் காலையில் கண்விழித்து 
----------காலைக்  கடன்எல் லாம்முடித்து 
சுருக்கென சூரியக் கிரணங்கள் 
----------சருமம்  துளைக்க எழுமுன்னே 
விருவிரு விருவென நடைபோட்டு 
----------வீதியில் நடக்கும் வேளையிலே 
கருத்துப்  பொதிந்த வாசகங்கள் 
----------கருப்புப் பலகையொன் றில்காண்பேன்.

கோட்டூர் தோட்டக் கோட்டத்தில்  
             நீண்ட நான்காம் வீதியிலே   
வீட்டெண் பதினேழின் முன்னே
              முன்னாள் காவல் துறைத்தலைவர் 
கேட்டும் படித்தும் பட்டறிந்தும் - தான் 
-----------கண்டுகொண்ட உண்மைகளை - இத் 
தோட்டத்தின்   மக்கள் பயனுறவே  
-----------நாளும் பலகையில் எழுதுகிறார்.

வீதியில் நடக்கும் மாந்தர் எல்லாம் 
              பாதியில் நடையை நிறுத்திட்டு- நற் 
சேதிகள் சொல்லும் பலகையிலே 
-----------ராஜ மோகனார் பதித்திட்ட -  
நீதி  உரைகளைப் படித்துவிட்டு - மிக 
---------- நன்று  நன்றென நவிலுகிறார்.
மாதிரி மனிதர் இவர்பணிகள் - பல 
----------- நாட்கள்  தொடர இறையருள்க!

              


Aug 4, 2017

The Female Trinity - ( English Version)

The Female Trinity - ( English Version)

While posting the Tamil version of the Female  trinity, I had mentioned that I will post the English version, which I wrote a year back, for my Grand Daughter. Here it is.

V.Ramesh.




1


Sakthi , the mothergod,, has forms three

Worship her in all forms, to be worry free!

2

As Lakshmi she gives us wealth and  money

Her blessings will fill the land, with milk and honey.


3


As Parvathi she gives us strength and courage

To her enemies , she is  a source of scourge!


4

Saraswathi is the source of wisdom

With wisdom,  you can conquer any kingdom!


5



All of us should thank them and pray, 

Morning and evening,  every day !




The male trinity - english version

THE MALE TRINITY-  (ENGLISH VERSION)

While posting the Tamil version of the Male trinity, I had mentioned that I will post the English version, which I wrote a year back, for my Grand Daughter. Here it is.

V.Ramesh.

1



Three great gods who live in heaven
Are Brahma, Vishnu and Paramasivan.

2


Brahma is one who creates the worlds
The sun and the moon and animals and birds.

3



God Vishnu, who took the nectar
From the sea of milk, is our protector.

4






Paramasiva will fight and kill
All things that are bad 'n evil!

5





All of us must thank them and pray,
Morning and evening, every day!