Search This Blog

May 29, 2016

இந்தக்கவிதை இது சந்தக் கவிதை

எனக்குள் கவிதை எப்படி எழுகிறது?

அன்புடன்

ரமேஷ்

இந்தக்கவிதை இது சந்தக் கவிதை

இந்தக்கவிதை இது சந்தக் கவிதை
எதுகைமோனை பார்த்திடாமல்  வந்தக் கவிதை
வந்திக்கும் கலைமகளருள் தந்தக் கவிதை
அதனாலே நான்எழுதும் சொந்தக் கவிதை.

கண்மூடி களைப்புடன்நான் உறங்கும் போது 
உள்மனதின் கனவினில் மிதந்த கவிதை
பழம்நழுவிப் பாலில் விழுந்ததைப் போல
எண்ணங்கள்   எழுத்துள்ளே  விழுந்த கவிதை 

மனம்புதைத்த நினைவுகளை நெம்பி எடுத்து
வார்த்தைகளாய் வடித்தும கிழ்ந்த கவிதை.
தினம்தினம் நான் காணுகின்ற காட்சிகளையெலாம்
தின்றுஅசை போட்டுயெ ழுந்த கவிதை.  

சீர்தளை அடி செப்பலோசை தவறினாலும்
செந்தமிழின் சிறப்புடனே சிந்திய கவிதை.

நீர்சுமக்கும் மேகங்கள் மலை முகட்டிலே
பார்நனைக்கும் மாரிதன்னைப் பொழிவது போலே
நான்சுமக்கும் எண்ணங்கள் மனதிற் குள்ளே
தேன்சுமக்கும் மொழியாய்ப்பொ ழிந்த கவிதை




 

May 22, 2016

காந்தி சொல்லைத் தட்டாதே!


காந்தி சொல்லைத் தட்டாதே!

நான்கு மாநிலங்களிலும் , புதுச்சேரியிலும் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

இது பற்றிய சில பத்திரிகை / ஊடகச் செய்திகள் வருமாறு :

செய்தி 1-- பாண்டிச்சேரி தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.
செய்தி 2-  பாண்டிச்சேரியைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.
செய்தி 3 - தேர்தல் தோல்விகளுக்கு காங்கிரஸ் தலைமை காரணமல்ல.
செய்தி 4 - ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப் படவேண்டும் -- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பேட்டியின் போது.

இவைகளைப் படிக்கும் போது எழுந்த  எண்ணங்களின் விளைவு இந்தச் சிறு பாடல்.

அன்புடன்

ரமேஷ்

சுதந்திரம் கிடைத்த உடனே
     காங்கிரஸ் கட்சி  யினையே
          கலைத்திட வேண்டு  மென்று
               அன்றொரு  காந்தி*  சொன்னார்.   * மகாத்மா

பதவியும் பவிசும் வேண்டி
      பிறர் அதைக் கேட்கவில்லை.
          காந்தியின் சொல்லை மறுத்து
               கட்சியை ஆட்சியில் வைத்தார்.

விதவித  மாகப்  மிகப்பல 
     தவறுகள், ஊழல்கள் செய்து
          அறுபது ஆண்டுகள் ஆண்டு
               ஆண்டியாய் நாட்டைச் செய்தார்.

"இதுவரை  இழைத்த கொடுமை
     போதுமே"  என்று எண்ணி
          கட்சியை இன்றழிக்க 
               இன்னொரு  காந்தி**   வந்தார்.    ** ராகுல்

May 20, 2016

கனவுகள் விதை , இழப்பது எதை?

Dream Big !

வெற்றிக்கு வழி இதுதானோ? 

அன்புடன்

ரமேஷ்



கனவுகள் விதை ,  இழப்பது எதை?

மனதைத் திற ,  வானில் பற 
பேதங்கள்  மற  , இதயத்தைத்  திற   
சீற்றம் குறை , சாந்தம் நிறை 
இன்சொல் இடு ,  சுடுசொல் விடு  
தீயவை துற, நேர் வழி நட
பொய்களை ஒழி , மெய்யதை மொழி
புன்னகை புரி ,  புன்செயல் எரி 
நன்றே நினை ,  தெய்வம் துணை  

தயக்கம் களை ,  தைரியம் விளை        
தளைகளை  உடை ,  பயமே விலை.
அச்சம் விடு ,  உச்சியைத் தொடு.
துணிவே துணை ,  அதற்கில்லை இணை.
சிறகை விரி ,  சாதனை புரி
லட்சியம் அடை ,  அதற்கில்லை தடை
கனவுகள் விதை ,  இழப்பது எதை? 
நன்றே நினை ,  தெய்வம் துணை   


May 15, 2016

எந்தன் மகனே கோவிந்தா,

எந்தன்  மகனே கோவிந்தா,

தேர்தலில் ஓட்டுப் போடுவதைப் பற்றிய இந்தப் பதிவைப் படிக்கும் போது நீங்கள் 
அ )  ஓட்டுப் போட் டு இருப்பீர்கள்  (அ )
ஆ)   ஓட்டுப் போடத் தயாராகிக் கொண்டு இருப்பீர்கள்  (அ )
இ )  பல காரணங்களால் , ஓட்டுப் போடாமல் இருப்பீர்கள்.
எதுவாக இருந்தாலும், தந்தைக்கும் , மகனுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடல் கவிதையைப் பற்றி படித்துக்  கொஞ்சம் சிரியுங்கள்! சிந்திக்கவும் செய்யுங்கள் !

அன்புடன் 

ரமேஷ் 


எந்தன்  மகனே கோவிந்தா-----

மகன்
அப்பா இந்தக் காலையிலே
---எங்கே நீயும் போகின்றாய்?
நானும்  கூட வரலாமோ?
--- வீட்டில் பொழுதே போகலையே


தந்தை
எந்தன்  மகனே கோவிந்தா, நான்
---ஓட்டுப் போடப் போகின்றேன்
வந்தால்  நீயும் என்னுடனே 
---இடைஞ்ச  லாக இருந்திடுமே.


மகன்
இடைஞ்சல் எதுவும் செய்யாமல் நான்
---நல்ல பையனாய் இருக்கின்றேன்
முடியா  தென்று சொல்லாதே !
---மீண்டும் கெஞ்சிக் கேட்கின்றேன்.


தந்தை
சரிதான், என்னுடன் நீயும் வா ; 
---நாளை  இந்நாட்டின் தலைவன் நீ .. 
தேர்தல் பற்றி தெரிந்துகொள்ள 
-----பாடம்   உனக்கே சொல்வேன்நான்.


மகன்
தேர்தல் என்றால் என்னப்பா?
----புரியும் படியே சொல்நீயே!


தந்தை
சேரர்,  பாண்டியர்  சோழரென 
---மன்னர் இருந்தது அக்காலம்.
யாரும்  மன்னர்  ஆகிடலாம் 
----இதுதான் குடியர சுக்காலம்.
நாமோர்  பெரிய   குடியரசு;
----நாட்டின் மன்னர் நாம்தானே!.
நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து
---தேர்தலில்   மந்திரி  ஆக்கிடுவோம்.


மகன்
மன்னர்கள் ஆட்சி செய்கையிலே
---கப்பம் கேட்பார் எனக்கேட்டேன் ;
மந்திரி   ஒருவர்   வந்தபின்னே
---அவர்க்கும்  கப்பம் கட்டணுமோ ?


தந்தை
காரியம் நமக்கு  நடக்குமுன்னே,
----கப்பம் நிச்சயம் கட்டணுமே..
இப்போ இதற்கு பெயர்மாற்றி
----லஞ்சம் என்றே வெச்சாச்சு.


மகன்
மன்னர் ஆட்சி மட்டும்தான்  
---தலைமுறை  தோறும்  தொடருமென்பார்
மந்திரி   இவர்கள்  ஆட்சியுமே
---தலைமுறை  ஆகத்  தொடர்வதென்ன?


தந்தை
தந்தை தாத்தா முன்னோர்கள் 
---ஊழல் செய்து குவித்தபணம்
இருக்கும் வரையில் தேர்தலிலே
---இவர்கள் தோற்க வழியில்லை.


மகன்
ஓட்டுப் போடும் இடத்தைநாம்
---சாவடி என்பது எதனாலே?


தந்தை
தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு
---வந்தபின்  அடுத்த தேர்தல்வரை
ஓட்டுப் போட்ட மக்களையே 
---"சாவ   டிக்கிறார்" அதனாலே.


மகன்
எனக்கும் ஓட்டுப் போட்டிடவே  
---ஆசை,  அருமை அப்பாவே .
எப்போ நானும் போட்டிடலாம் ?
----பதிலைச் சொல்நீ இப்போதே

 
தந்தை
அவசரம் வேண்டாம், இதற்குள்ளே !
----அன்பு மகனே கோவிந்தா.
அகவை பதினெட் டெட்டிடுவாய் ,
-------சட்டம் இதுவே  பொறுத்திடுவாய் .


மகன்
பதினெண்  வயது வேண்டுவது 
----நாட்டில்  நிலவும்  சட்டமென்றால்
எதனால் இந்த சட்டதிட்டம்? 

----எனக்கதை நீயே சொல்வாயா?

தந்தை
ஓட்டுப் போடணும் என்றாலே 
-----முழுதாய் முட்டாள் ஆகணுமாம்.
முழுதும் முட்டாள் ஆகிடவே 
-----பதினெட்   டாண்டுகள் பிடித்திடுமே!.


மகன்
ஆகா ! அடுத்த தேர்தலுக்குள் 
-----பதினெண் வயதை எட்டிடிடுவேன்
முழுவதும்  முட்டாள் ஆகிவிட்டு   
-----ஒட்டு உரிமையைப் பெற்றிடுவேன்.



 பின் குறிப்பு "

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னாள் என் மகன்கள் டி.ஏ .வீ . பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளியின் ஆண்டுப் புத்தகத்தில் " எந்தன் மகனே கோவிந்தா" என்ற தலைப்பில் ஒரு கவிதை படித்து ரசித்த நினைவு.

இப்போது அந்தப் பாட்டு முழுதும் மறந்துவிட்டது என்றாலும், அதன் தாக்கத்தில் வந்த பாடல் இது. யாராவது ( பழைய மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் ) அந்தப் பாடலைப் பற்றி தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.Really Hilarious ,



 

May 14, 2016

தொடரு மென் காலைத் தூக்கம்.

காலையில் கிணுகினுக்கும் கடிகாரத்தின் தலயில் தட்டி அதை நிறுத்திவிட்டு, மீண்டும் போர்வைக்குள்ளே புகுந்து தூங்கும் தூக்கம் 2.0 , எல்லோரும் அனுபவித்த ஒன்று.

அதைப் பற்றி ஒரு சிறிய பாடல் !

அன்புடன் 

ரமேஷ் 



அரைகுறை விழிப்பில் பாதி
---- அதிகாலை   கனவில் மீதி 
திரிசங்கு உலகில் மிதந்து
----தூக்கமும் கலையும்  நேரம் 


செல்போனின்  உள்ளே உள்ள
----விழிப்  பெழுப்பும் கருவி

செல்லமாய்ச் சிணுங்கி எந்தன்
----துயில் கலைக்க முயலும்  போது


ஒரு பக்கம் ஒருக்களித்து
----ஓரமாய்ப் படுத்ததாலே

மரத்துப் போன கையை
----மெல்லவே வெளியே  நீட்டி


இருட்டிலே தட்டித் தடவி
----கைபேசி அலறியை அணைத்து

" ஒருநாள் இன்று  மட்டும்
----உறங்கிப்  பின் விழித்தால்  என்ன


இன்று செய்ய இருந்த வேலை
----மொத்தமாய் முற்றும் சேர்த்து

நன்று நான்  நாளை செய்வேன்   
----நிச்சய  மாயென்  றெண்ணி


காற்றினைப்  பதப் படுத்தும் 
----கருவியின் திறனைக் கூட்டி

குளிர் காற்று உடலைத் தழுவ
----கண்களை மீண்டும் மூடி


முகம் உடல் முற்றும் மறைத்து
----போர்வை யினுள்ளே  புகுந்து 

சுகமான கனவை வேண்டி
-----தொடரு மென் காலைத் தூக்கம்.

May 9, 2016

ஜெய ஜெய சங்கர

ஜெய ஜெய சங்கர 


நடக்கும்  மே மாதம் 11 ந் தேதி ஆதி சங்கரருடைய ஜெயந்தி.

இந்து மதம் பல்வேறு எதிர்ப்புகளை கொண்டிருந்த வேளையில் அவதரித்து ,  அதற்கு மறு உயிர் அளித்த பெருமை இவரைச்  சாரும்.

முக்கண்ணன் பரமசிவனின் அவதாரம் என்றே இவரைக் கூறுவர் .

இந்து சமய வேதங்களும் , நூல்களும் அழியாமல் கட்டிக்காத்த பெருமை இவருக்கும், இவர் ஸ்தாபித்த மடங்களுக்குமே உரித்தாகும். 

வேத நெறி பற்றி பாமரரும் பண்டிதரும் அறியும் வண்ணம் , பாடல்கள், தோத்திரங்கள், வேத பாஷ்யங்கள் ஆகியவற்றை இயற்றி அளித்த இவர் பெருமை சொல்லவும் அரிதே!

இந்த ஜெயந்தி நாளில், சங்கர குருவின் அருள் வேண்டி , அவர் திருப்  பாதங்களில் இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 


வரைந்தவர் : ரமேஷ் 



நிறைநீர்   நெற்றியன்    மறைஉரை   பெற்றியன்
பிறைமுடி   தரித்தவனின்   பெயர்பெற்றவன்.
சிறுபரு   வத்திலே உறவுகள் அறுத்துப்பின்
துறவறம்   பூண்டிட்ட   முனிபுங்கவன் .


ஆத்மாக்கள்  பரமனும்   ஜீவனும்   ஒன்றென்ற
அத்வைத   தத்வத்தை   போதித்தவன் .
பௌத்தரையும்   ஜைனரையும்  வாதித்து  வென்றதால்
இந்துமத  மேன்மையை  சாதித்தவன் .


வேதங்கள்   அறிந்ததன்  சாரங்களைப்  பிழிந்து
கீதகோ  விந்தமாய்  கற்பித்தவன் .
காதங்க  ளைக்கடந்து  நாடெங்கி  லும்நடந்து
சங்கர   மடம்நான்கை   நிறுவிட்டவன் .
 
புலையன்   உருவில்வந்த   மலையன்  கண்திறக்க
மாநீஷ   பஞ்சகப்  பாப்புனைந்தவன் .
கைலயங்   கிரிசென்று   ஈசனைப்   பூசித்து
சௌந்தர்ய   லகிரியைப்    பெற்றிட்டவன் .


காஞ்சிபுரி   வந்திருந்து   காமாட்சி   யைத்தொழுது
கோவிலில்   ஸ்ரீசக்ரம்   ஸ்தாபித்தவன் .
சர்வங்க்ய   பீடத்தில்   குருவாக   வந்தமர்ந்து
அடியார்கள்   மனமெங்கும்   வ்யாபித்தவன்.

பாமரர்க்கும்   புரியும்வண்ணம்  பக்தித்   தோத்திரங்கள்
பாவடிவில்   பண்ணுடன்   புனைந்திட்டவன் .
நேமமிகு   பண்டிதரும்   படித்தறிந்து   பண்படவே 
பாஷ்யங்கள்  பலப்பலவும்   தந்திட்டவன் .

தாமரைக்  கண்ணினள்  காமாட்சி அருள்பெற்று 
காமகோடி   மடம்   உருவாக்கினான் . 
நாமெல்லாம்  சேமமுற   நல்வழிகள்   காட்டியபின்  
மோட்சபுரி   காஞ்சியிலே  சித்தியடைந்தான்.

May 6, 2016

நேயர் விருப்பம் 2- காதல் பற்றிய ஒரு கவிதை.

நேயர் விருப்பம் 2-  காதல் பற்றிய ஒரு கவிதை.

எனக்கு வந்த இரண்டாவது நேயர் விருப்பம், காதல் பற்றிய ஒரு கசல் கவிதை  எழுதுவது பற்றி.  

இந்த விருப்பம் தெரிவித்தவர் நண்பர் S .V . ராமன் .

முந்திய விருப்பத்தைப்  போல் அல்லாமல், இது எனக்கு கொஞ்சம் தலைவலியைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது----காதல், கசல் எழுதுவது--- ஆகிய இரண்டிலும்  முன் அனுபவம் இல்லாததால் ! 

.
இருந்தாலும், என் கற்பனைக்குதிரையை சற்று தட்டிவிட் டதில் எழுந்த  இந்த கவிதையை ,  இது பற்றி நன்றாகத் தெரிந்த S .V . ராமனுக்கு அனுப்பி அவரது  அங்கீகாரம்  பெற்றுவிட்டேன்.         (  தப்பாக நினைக்காதீர்கள்;.நிறைய கசல்களை,  அர்த்தம் புரிந்து கேட்டதால் அவருக்கு வந்த அனுபவம் அது!)
படித்து மகிழுங்கள் !

அன்புடன்

ரமேஷ்


சித்திரப்  பெண்ணே !

சித்திரப்  பெண்ணே உன்  நினைப்பால்
-----நித்திரை நிதமும் நான் தொலைத்தேன்
கத்திரி வெய்யில் எரிப்பது போல்
-----உன் நினைவுகள் என்னை எரிக்குதடி

பத்தரை மாற்றுத் தங்கத்தைப்  போல்
-----பிரமன் உன்னை படைத்துவிட்டான் 
இத்தரை முழுவதும் தேடிவிட்டேன்
-----உன் அழகுக் கோரிணை இல்லையடி.

மு(க)த்திரை போட்ட மதிமுகத்தை
-----முழுதாய்க் காட்ட மறுத்து விட்டாய். 
எத்தனை முறை நான் கேட்டிடினும் உன்
-----இதயம் இன்னும் இளகவில்லை.

முத்தம் ஒன்று உன்னிதழில்
-----முத்திரை என்று நான் பதிப்பேன்?
நித்தம் உந்தன் நினைவாலே
-----சித்தம் கலங்கிப் பித்தானேன்.

மைவிழி திறந்தென்னைப் பார்த்திடுமோ
-----கைநுணி  நகமென்னைத் தீண்டிடுமோ?
கோர்த்திரு   கைகளு   மொன்றோ   டென்று 
-----சேர்த்தெனை அணைத்திடும் நாள் வருமோ?

May 3, 2016

நேயர் விருப்பம் -1

நேயர் விருப்பம் -1

என்னுடைய  பாடல்களைப்  படித்து என்னை ஊக்குவிக்கும் இரு நண்பர்கள் , சென்ற வாரம் அவர்கள் விருப்பங்களைத் தெரிவித்தார்கள் .

ஒருவர்- R.V.ரமணி-.அடுத்தவர்- S .V . ராமன். -

இருவரும் எனது சன்மார் ( sanmar ) குழும நண்பர்கள்.

ரமணி அவருக்கு மிகவும் பிடித்த  ஒரு பாடலின் ( கீழ்க்கண்ட)  லிங்க்-ஐ அனுப்பி, " இந்த ராகத்திற்குப் பொருத்தமாக பாடல் இயற்ற முடியுமா ? " என்று கேட்டிருந்தார்.
https://youtu.be/MFQvEfKgaLk

இது தொண்டரடிப் பொடியாருடைய  பாசுரங்கள் கொண்ட ஒரு திரைப்படப் பாடல்.

ராமன், தமிழில் " கசல் (ghazal ) போன்ற, காதலர் பிரிவுத்  துயரம், காதல் தோல்வி, ஆற்றாமை ஆகிய உணர்வுகளை தெரிவிக்கும் பாடல்கள் எழுத முடியுமா ?" எண்டு வினவி இருந்தார்.

இருவரது விருப்பங்களையும் பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்பி அவர்கள் பாராட்டையும் பெற்றேன் 

ஒன்றன் பின் ஒன்றாக இவற்றை பதிவு  செய்ய இருக்கிறேன்.

முதலில் பாசுரங்களைப் பின்பற்றிய பாடல் பதிவு.
திரைப்படப் பாடல் ராகத்திலேயே பாடிப் பார்த்து கருத்தளியுங்கள்.

அன்புடன்
ரமேஷ்

இச்சைகள் இன்பங்கள் மறந்து
     பாசபந் தங்கள் துறந்து
பிச்சை நீ   போட்டயிப் பிறவிப் 
     பயனை யான் பெறுவதற்கே
மிச்சமுள வாழ்நாள் முழுதும்
     உன்புகழ் பாடிக் கழிக்க
உச்சியில் வேங்கட மலைமேல்
     உறைதிரு மாலே அருள்வாய். 



ஆயிரம்  நாவுடை   அரவில் 
     அறிதுயில் கொள்ளும் ஆண்டே!
நாயினும் கடையேன் ஆன 
     நானுந்தன் பாதம் பற்றி 
பாயிரம் பலவும் பாடி 
     பாவங்கள் கழுவ விழைந்தேன்.
சேயென்னை ஏற்றே அருள்வாய் 
         சீரங்கத் துறையும்  திருவே!