Search This Blog

May 15, 2016

எந்தன் மகனே கோவிந்தா,

எந்தன்  மகனே கோவிந்தா,

தேர்தலில் ஓட்டுப் போடுவதைப் பற்றிய இந்தப் பதிவைப் படிக்கும் போது நீங்கள் 
அ )  ஓட்டுப் போட் டு இருப்பீர்கள்  (அ )
ஆ)   ஓட்டுப் போடத் தயாராகிக் கொண்டு இருப்பீர்கள்  (அ )
இ )  பல காரணங்களால் , ஓட்டுப் போடாமல் இருப்பீர்கள்.
எதுவாக இருந்தாலும், தந்தைக்கும் , மகனுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடல் கவிதையைப் பற்றி படித்துக்  கொஞ்சம் சிரியுங்கள்! சிந்திக்கவும் செய்யுங்கள் !

அன்புடன் 

ரமேஷ் 


எந்தன்  மகனே கோவிந்தா-----

மகன்
அப்பா இந்தக் காலையிலே
---எங்கே நீயும் போகின்றாய்?
நானும்  கூட வரலாமோ?
--- வீட்டில் பொழுதே போகலையே


தந்தை
எந்தன்  மகனே கோவிந்தா, நான்
---ஓட்டுப் போடப் போகின்றேன்
வந்தால்  நீயும் என்னுடனே 
---இடைஞ்ச  லாக இருந்திடுமே.


மகன்
இடைஞ்சல் எதுவும் செய்யாமல் நான்
---நல்ல பையனாய் இருக்கின்றேன்
முடியா  தென்று சொல்லாதே !
---மீண்டும் கெஞ்சிக் கேட்கின்றேன்.


தந்தை
சரிதான், என்னுடன் நீயும் வா ; 
---நாளை  இந்நாட்டின் தலைவன் நீ .. 
தேர்தல் பற்றி தெரிந்துகொள்ள 
-----பாடம்   உனக்கே சொல்வேன்நான்.


மகன்
தேர்தல் என்றால் என்னப்பா?
----புரியும் படியே சொல்நீயே!


தந்தை
சேரர்,  பாண்டியர்  சோழரென 
---மன்னர் இருந்தது அக்காலம்.
யாரும்  மன்னர்  ஆகிடலாம் 
----இதுதான் குடியர சுக்காலம்.
நாமோர்  பெரிய   குடியரசு;
----நாட்டின் மன்னர் நாம்தானே!.
நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து
---தேர்தலில்   மந்திரி  ஆக்கிடுவோம்.


மகன்
மன்னர்கள் ஆட்சி செய்கையிலே
---கப்பம் கேட்பார் எனக்கேட்டேன் ;
மந்திரி   ஒருவர்   வந்தபின்னே
---அவர்க்கும்  கப்பம் கட்டணுமோ ?


தந்தை
காரியம் நமக்கு  நடக்குமுன்னே,
----கப்பம் நிச்சயம் கட்டணுமே..
இப்போ இதற்கு பெயர்மாற்றி
----லஞ்சம் என்றே வெச்சாச்சு.


மகன்
மன்னர் ஆட்சி மட்டும்தான்  
---தலைமுறை  தோறும்  தொடருமென்பார்
மந்திரி   இவர்கள்  ஆட்சியுமே
---தலைமுறை  ஆகத்  தொடர்வதென்ன?


தந்தை
தந்தை தாத்தா முன்னோர்கள் 
---ஊழல் செய்து குவித்தபணம்
இருக்கும் வரையில் தேர்தலிலே
---இவர்கள் தோற்க வழியில்லை.


மகன்
ஓட்டுப் போடும் இடத்தைநாம்
---சாவடி என்பது எதனாலே?


தந்தை
தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு
---வந்தபின்  அடுத்த தேர்தல்வரை
ஓட்டுப் போட்ட மக்களையே 
---"சாவ   டிக்கிறார்" அதனாலே.


மகன்
எனக்கும் ஓட்டுப் போட்டிடவே  
---ஆசை,  அருமை அப்பாவே .
எப்போ நானும் போட்டிடலாம் ?
----பதிலைச் சொல்நீ இப்போதே

 
தந்தை
அவசரம் வேண்டாம், இதற்குள்ளே !
----அன்பு மகனே கோவிந்தா.
அகவை பதினெட் டெட்டிடுவாய் ,
-------சட்டம் இதுவே  பொறுத்திடுவாய் .


மகன்
பதினெண்  வயது வேண்டுவது 
----நாட்டில்  நிலவும்  சட்டமென்றால்
எதனால் இந்த சட்டதிட்டம்? 

----எனக்கதை நீயே சொல்வாயா?

தந்தை
ஓட்டுப் போடணும் என்றாலே 
-----முழுதாய் முட்டாள் ஆகணுமாம்.
முழுதும் முட்டாள் ஆகிடவே 
-----பதினெட்   டாண்டுகள் பிடித்திடுமே!.


மகன்
ஆகா ! அடுத்த தேர்தலுக்குள் 
-----பதினெண் வயதை எட்டிடிடுவேன்
முழுவதும்  முட்டாள் ஆகிவிட்டு   
-----ஒட்டு உரிமையைப் பெற்றிடுவேன்.



 பின் குறிப்பு "

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னாள் என் மகன்கள் டி.ஏ .வீ . பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளியின் ஆண்டுப் புத்தகத்தில் " எந்தன் மகனே கோவிந்தா" என்ற தலைப்பில் ஒரு கவிதை படித்து ரசித்த நினைவு.

இப்போது அந்தப் பாட்டு முழுதும் மறந்துவிட்டது என்றாலும், அதன் தாக்கத்தில் வந்த பாடல் இது. யாராவது ( பழைய மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் ) அந்தப் பாடலைப் பற்றி தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.Really Hilarious ,



 

No comments:

Post a Comment