Search This Blog

May 9, 2016

ஜெய ஜெய சங்கர

ஜெய ஜெய சங்கர 


நடக்கும்  மே மாதம் 11 ந் தேதி ஆதி சங்கரருடைய ஜெயந்தி.

இந்து மதம் பல்வேறு எதிர்ப்புகளை கொண்டிருந்த வேளையில் அவதரித்து ,  அதற்கு மறு உயிர் அளித்த பெருமை இவரைச்  சாரும்.

முக்கண்ணன் பரமசிவனின் அவதாரம் என்றே இவரைக் கூறுவர் .

இந்து சமய வேதங்களும் , நூல்களும் அழியாமல் கட்டிக்காத்த பெருமை இவருக்கும், இவர் ஸ்தாபித்த மடங்களுக்குமே உரித்தாகும். 

வேத நெறி பற்றி பாமரரும் பண்டிதரும் அறியும் வண்ணம் , பாடல்கள், தோத்திரங்கள், வேத பாஷ்யங்கள் ஆகியவற்றை இயற்றி அளித்த இவர் பெருமை சொல்லவும் அரிதே!

இந்த ஜெயந்தி நாளில், சங்கர குருவின் அருள் வேண்டி , அவர் திருப்  பாதங்களில் இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 


வரைந்தவர் : ரமேஷ் 



நிறைநீர்   நெற்றியன்    மறைஉரை   பெற்றியன்
பிறைமுடி   தரித்தவனின்   பெயர்பெற்றவன்.
சிறுபரு   வத்திலே உறவுகள் அறுத்துப்பின்
துறவறம்   பூண்டிட்ட   முனிபுங்கவன் .


ஆத்மாக்கள்  பரமனும்   ஜீவனும்   ஒன்றென்ற
அத்வைத   தத்வத்தை   போதித்தவன் .
பௌத்தரையும்   ஜைனரையும்  வாதித்து  வென்றதால்
இந்துமத  மேன்மையை  சாதித்தவன் .


வேதங்கள்   அறிந்ததன்  சாரங்களைப்  பிழிந்து
கீதகோ  விந்தமாய்  கற்பித்தவன் .
காதங்க  ளைக்கடந்து  நாடெங்கி  லும்நடந்து
சங்கர   மடம்நான்கை   நிறுவிட்டவன் .
 
புலையன்   உருவில்வந்த   மலையன்  கண்திறக்க
மாநீஷ   பஞ்சகப்  பாப்புனைந்தவன் .
கைலயங்   கிரிசென்று   ஈசனைப்   பூசித்து
சௌந்தர்ய   லகிரியைப்    பெற்றிட்டவன் .


காஞ்சிபுரி   வந்திருந்து   காமாட்சி   யைத்தொழுது
கோவிலில்   ஸ்ரீசக்ரம்   ஸ்தாபித்தவன் .
சர்வங்க்ய   பீடத்தில்   குருவாக   வந்தமர்ந்து
அடியார்கள்   மனமெங்கும்   வ்யாபித்தவன்.

பாமரர்க்கும்   புரியும்வண்ணம்  பக்தித்   தோத்திரங்கள்
பாவடிவில்   பண்ணுடன்   புனைந்திட்டவன் .
நேமமிகு   பண்டிதரும்   படித்தறிந்து   பண்படவே 
பாஷ்யங்கள்  பலப்பலவும்   தந்திட்டவன் .

தாமரைக்  கண்ணினள்  காமாட்சி அருள்பெற்று 
காமகோடி   மடம்   உருவாக்கினான் . 
நாமெல்லாம்  சேமமுற   நல்வழிகள்   காட்டியபின்  
மோட்சபுரி   காஞ்சியிலே  சித்தியடைந்தான்.

3 comments:

  1. கவிதை பனைவதுதான் கை வந்த கலை என்றெண்ணினேன்
    சத்திரமும் அப்படித்தானோ!

    ReplyDelete
  2. ஆதியிலிருந்து அந்தம் ஆதி சிவன் வழித் தோன்றலான ஆதி சங்கரனின் நாளில் மிக அருமையான படைப்பு. நன்றி.

    ReplyDelete
  3. மிக்க நன்றி. தொடர்ந்து இந்தப் பதிவைப் படித்து கருத்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete