Search This Blog

Dec 29, 2015

சகிப்புத்தன்மை.

சகிப்புத்தன்மை.

சகிப்புத்தன்மையைப் பற்றி அனல் பறக்கும் விவாதங்கள் தொலைக்காட்சியில் நடந்து முடிந்துவிட்ட இந்த நேரத்தில் எனது நண்பர் எனக்கு அனுப்பிய ஒரு துணுக்கு இதோ!
 
"ஒரு கடையில் மூன்று மதங்களின் கடவுள் படங்கள் பாகுபாடு இன்றி ஒருசேர இருந்தால் அவன் இந்து என்று அறிந்து கொள்ளலாம்."
 
நான் கண்டவரையில் இது முற்றிலும் உண்மை. .
 
நான் சிறுவனாக  இருக்கும்போதே எனக்கு என் பெற்றோர் சொல்லித்தந்த கடவுள் வாழ்த்துகளில் ஒன்று --
 
" ஈச்வர அல்லா தேரே நாம்"என்ற வரியை உட்கொண்ட " ரகுபதி ராகவ " என்று தொடங்கும் பாடல்!
  
மற்ற மதங்களை நம் மதத்தோடு  ஒன்றாக நோக்குவது , அல்லது, குறைந்த பட்சம் அவைகளை இழிவு செய்யாமல் இருப்பது , என்பது இந்துக்களின் பிறவிக் குணம்.
 
ஆனாலும் இந்த சகிப்புத் தன்மைக்கு , பல்வேறு காரணங்களால், இப்போது ஒரு சோதனைக் காலம் வந்திருக்கிறது.
 
எல்லா இந்தியர்களுக்கும் இப்போது இந்த சகிப்புத்தன்மை மிக அவசியம்.
 
இது   பற்றி கொஞ்ச நாட்கள் முன்பு நான் எழுதிய
" அகமது,அமரன் அல்பான்ஸ் " என்ற கவிதை ஒன்று ----
படித்து கருத்தளியுங்கள்.
 
அன்புடன்
ரமேஷ்.


முக்கணன்    மாலவன்     நான்முகன்    என்னும் 
முத்தேவரைத்   தொழும்    இந்துக்கள்    எனினும் 


மெக்கா    செல்லும்    முஸ்லிம்கள்     எனினும் 
மேய்ப்பர்    ஏசுவைத்    தொழுபவர்    எனினும்
 
சிகைதனை    முடிந்த     சீக்கியர்    எனினும் 
அகமது,   அமரன்,    அல்பான்ஸ்    எனினும்
 
அகமது    ஒன்றாய்    அமைதியைக்    காத்து 
நகமும்    சதையும்    இணைந்துள.  வாறே

விகுதிகள்    விடுத்து    வாழும்    நெறியால் 
நிகரில்    நாடெனும்    புகழினைச்    சேர்ப்போம்.    "

Dec 24, 2015

மானுடம் வாழ்க!


மானுடம்    வாழ்க!  

 சென்னை     முழுதும்     மழைநீர்     ஈரம் !

மழையின்    விளைவுகள்    மிகமிகக்    கோரம்.!

கூற்றே    மழையாய்     வந்ததோ     இன்று?

ஆற்றோம்      இயற்கையின்    சீற்றம்    என்று

உடையோர்    இல்லோர்    எனப்பிரி    வின்றி

உடைமைகள்    இழந்து    உயிர் மட்டும்    சுமந்து

இடம்விட்    டோடி    இன்னல்    உற்றோர்

இடர் உடன்    களைய    எழுந்தனர்    பலரும்.

உதவிக்    கரங்கள்    உடனே    நீட்டி

உடையும்,    உணவும்,    இடமும்    அளித்தார்.

பாதிப்    படைந்தோர்    பலரின்    பாரம் 

பாதிப்     பகுதியாய்    குறைந்த    திந்நேரம்

மாநகர்    மாந்தர்    மனதின்    ஓரம்

முடங்கிக்    கிடந்த    உணர்வின்    ஈரம்

பல்கிப்    பெருகி    ஊற்றடுத்    தோட ,

முனைந்தேன்    இங்கு    நான் அதைப்    பாட.

பாற்கடல்     கடைகையில்    நஞ்சுடன்    கூட

சேர்ந்து    கிடைத்த     அமுதினைப்     போல

ஊழி    யழித்ததால்   உலகமே   அழுகையில்

அழியா    தெழுந்த     மானுடம்     வாழ்க !

.
விழுந்த    மாந்தர்க்    குதவிகள்   புரிந்து

எழுந்தவர்    மீண்டும்    எளிதாய்    நிற்க

தழுவி    அவரைத்    தாய் போல்     அணைத்த 

விழுமிய    பண்பின்    மானுடம்     வாழ்க !

தான் இடர்    பட்டும்     தளர்     வடையாமல் 

தன்னினும்    மெலியொர்    துயர் துடைத்   திடவே

ஊனினை    வருத்தி    உயிர் கொடுத்    துழைத்த 

மானிடர்    வாழ்க!    மானுடம்    வாழ்க!  

Dec 22, 2015

நான் ஒரு பகுத்தறிவாளி!



 இந்தியாவின் பகுத்தறிவாளர்கள்


பகுத்தறிவாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் , கடவுள் என்று ஒருவர் இருப்பதை ஒப்புக்கொள்வதில்லை.
 இது பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அது அவர்களுடைய கருத்து.

 கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக்கொள்ளும் சிலருக்குக் கூட , இந்த ஒரு சந்தேகம் இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனாலும் அவர்கள் அதை வெளியே காட்டிக்கொள்வது இல்லை! " எதற்கும் இருக்கிறார் என்று நினைத்து வழிபடுவோமே, ஒரு insurance ஆக இருக்கட்டுமே என்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பவர்கள்.

ஆனால் கடவுள் இல்லை என்று சொல்பவர்களில் கூட , பெரும்பான்மையோர் இந்து மத எதிர்ப் பாளர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர, அவர்களின் வழிபாடுகளிலும் , பழக்க வழக்கங்களிலும் குறுக்கிட்டுக் குறை சொல்கிறார்களே தவிர, மற்ற மதங்கள் பற்றியோ, அந்தக் கடவுள்களைப் பற்றியோ ஒன்றும் சொல்வதில்லை. வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்பதோடு மட்டும் இல்லாமல் , அவர்களைப் புகழ்ந்து பேசவும் செய்கிறார்கள்.

இது   vote bank politics யையும் தாண்டி, இந்து மதத்தின் மீது அவர்களுக்கு ஒரு காழ்ப்புணர்ச்சி இருப்பதைக் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.

இதற்கு சரித்திர ரீதியாக பல காரணங்களைக் கூறினாலும், இந்த நிலைமை இன்று இருப்பது ஒரு நிதர்சனமான உண்மை.

தமிழ் நாட்டில் ரொம்ப நாட்களாக , இது தலை தூக்கி நிற்பதை நாம் அறிந்தாலும், சமீபத்திய நிகழ்வுகள், இது ஒரு நாடு தழுவிய செயல்பாடாக இருப்பதை காட்டுவதாக நான் நினைக்கிறேன்.

இது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது பற்றிய ஒரு கவிதை .

அன்புடன்
ரமேஷ்

நான் ஒரு     பகுத்தறிவாளி!

இந்துமதக்    கடவுளரை.   இகழ்ந்தே நான்.   பேசுவேன்

வந்திக்கும்.   அனைவரையும்.   நிந்தித்து.   ஏசுவேன்

கல்லைக்.   கடவுளென்று.   சொல்பவரைத்.   தூற்றுவேன்  .

ஆனாலும்.   வேற்றுமதத்.    தனைவரையும்.   போற்றுவேன்

            ஏனென்றால்.   நான் ஒரு     பகுத்தறிவாளி!

கொழுக்கட்டை.    படையலை    கடவுளுக்குப்    படைக்கையில்

கொழுகொழு    என்றிருக்கின்றார் ;    இவர்க்கெதற்கு     உணவென

இழுக்காய் நான்     இகழ்ந்தாலும்,    இப்தார்    விருந்திலே

தலையில் ஒரு    தொப்பியுடன்     தாழ்த்தி     வணங்குவேன்!

              ஏனென்றால்.   நான் ஒரு     பகுத்தறிவாளி!


வேதியரை     சாதிவெறி     கொண்டோரெனத்    தூற்றுவேன்;

பாதிரிகள்     மட்டும்மிக     நல்லோரெனப்     பாடுவேன்!

இமாம்கள்     எதுவேனும்    சொன்னார்கள்    என்றாலே

ஆம்ஆம்      அந்த பாட்வா°°    அவர்  கோட்பாடென்று     கூறுவேன் ..
            

                ஏனென்றால்.   நான் ஒரு     பகுத்தறிவாளி!

மனமாற்றம்    மூலமே     மதமாற்ற    மெனக்கூறி

பணமாற்றம்    நேருகையில்    கண்மூடிக்    கொள்ளுவேன்.

சிறுபான்மை.   இனத்தாரின்   உரிமைஎனப்    பாடுவேன்!

திரும்பி அவர்    வீடு வந்தால் *   தவறிதென்று    சாடுவேன்.


                ஏனென்றால்.   நான் ஒரு     பகுத்தறிவாளி!


சரஸ்வதியை    ஆடையின்றி    எம்.எப்.ஹுசைன்     தீட்டினால்

விரசமில்லை;    கலைக்கண்ணோடு    பாரு என்று    கூறுவேன்.

தஸ்லிமாவைத் ***   தாக்கினாலும்,    ருஷ்டி நூலைத் ***   தடை செயினும் 

இஸ்லாமிய    மதத்தையவர்    இகழ்ந்தாரென்று     தாங்குவேன்.


                ஏனென்றால்.   நான் ஒரு     பகுத்தறிவாளி!

 °° Fatwa    * gar vaapsi        ** Taslima Nasreen   *** Salman Rushdie's Satanic verses.


please take a few  seconds to rate this poem using the multiple choice option section , at  the bottom  of  the blog. This feedback will  be useful to me for improving . The rater's identity is protected . Please do this for the earlier posts also .

              


               v

Dec 21, 2015

என்ன பதில் நான் கூற ?



சென்ற மாதம் சென்னையில் எங்கும் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகையில் வீட்டுக்குள்ளும் , வெளியேயும் தண்ணீர் நிரம்பி வீட்டுக்குள்ளே அடைந்திருந்தவர்களில் நானும் ஒருவன். அதிர்ஷ்டவசமாக என் வீட்டுக்குள் அவ்வளவு தண்ணீர் வரவில்லை. பக்கத்தில் இருக்கும் உறவினர்கள் " எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள் " என்று வற்புறுத்திய போதிலும், அந்தத் தேவை எழவில்லை. ஆனால், என் நண்பன் ஒருவனுடைய அனுபவம் இது! இப்படியும் சிலர்! படியுங்கள்.

அன்புடன்

ரமேஷ் 


என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட  உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப்  பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. (see at the bottom of the page). இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.


please take a few  seconds to rate this poem using the multiple choice option section , at  the bottom  of  the blog. This feedback will  be useful to me for improving . The rater,s identity is protected . Please do this for the earlier posts also .

அடைமழையின்   காரணத்தால்   அடையாறின்.    இரு கரையும்
உடைந்துள்ளே   வெள்ளம்   புகுந்திட்ட    காரணத்தால்
தாழ்வான   பகுதிகளில்   வாழுகின்ற   மக்களெல்லாம்
ஆழி வந்து  சூழுமுன்னே    வீடு விட்டு    ஓடு என

சன்செய்தி ,    பீபீசீ ,    சீஎன்என் ,    வாட்ஸ் ஆப் என
இன்னபிற    இணையங்களில்    பறையறைந்த   தை அறிந்து
பெங்களூரில்,   பம்பாயில் ,    சிங்கப்பூர் ,    நியூயார்க்கில்
எங்கெங்கோ    வசிக்கின்ற    நண்பர்களும்    உறவுகளும்

எங்களால்    செய்வதென்ன    இப்போது    என வருந்தி,
தங்குகின்ற    இடம் விட்டுப்     பெயர்ந்துவிடு    எனப்பதைத்தார்!

எட்டுத் தெரு    தள்ளி நீர்    எட்டாத    உயரத்தில்
எட்டு மாடிக்    கட்டடத்தில்   வசிக்கின்ற    உறவுகளோ
தொட்டால்    சுடும் என்று    தீயைத் தவிர்ப்பது    போல்
எட்டி நின்றார்;    எங்களுடன்    எந்த ஒரு     தொடர்புமின்றி.

வெள்ளமெல்லாம்    நன்றாக    வடிந்தபின்னே     எனை அழைத்து
"உள்ளமிகத்    துயருற்றோம்;    உம்துன்ப    நிலைபற்றி
இப்போதேதான்    அறிந்தோம்!    உம்குடும்பத்தினர்    எல்லாம்
அப்போதே    என்னில்லம்    வருவதற்கேன்    வெட்கமுற்றீர் ?

நான் வேறு,    நீ வேறோ?    ஏனிந்தத்    தயக்கமென்று
தேனொழுகக்    கேட்டாரே!    என்ன பதில்    நான் கூற ?

Dec 16, 2015

மழையின் மறுபக்கம்

"கொட்டோ கொட்டென்று " பெய்த மழையைத் " திட்டோ திட்டென்று " திட்டித் தீர்தாகி விட்டது!
மழை தந்த துயரங்கள் ஏராளம் ; எனினும், அதற்குள்ளும் ஒரு மிகச் சிறிய ஆதாயம்- a silver lining in the dark clouds !


இந்த நூற்றாண்டின்  இயந்திரச் சாதனங்கள் எதுவும் இல்லாமல், அமைதியான ஒரு வாழ்க்கை முறையை -அது நம் மீது திணிக்கப் பட்டதி என்றாலும்- நான் ரசித்தேன். நீங்களும் ரசித்திருப்பீர்கள்!

அந்த மழையின் மறுபக்கம்  பற்றி ஒரு கவிதை!

அன்புடன்

ரமேஷ்



என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட  உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப்  பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. (see at the bottom of the page). இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.
யார் என்ன மதிப்பீடு செய்து இருக்கிறீர்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது!

please take a few  seconds to rate this poem using the multiple choice option section , at  the bottom  of  the blog. This feedback will  be useful to me for improving . The rater,s identity is protected . Please do this for the earlier posts also .



மழையின்  சீற்றம்  தணிந்த   பின்னரும்   ,
தேங்கிய   தண்ணீர்   வடிந்த   போதிலும்
மின்சாரம்   இன்னும்   வரவே    யில்லை;
அதனா    லென்ன   பரவா  யில்லை!


தொலைபே   சிகளின்   தொடர்பே   இல்லை!
இது ஒரு   பெரிய   இடரே   இல்லை!
தொலைக்காட்.  சிகளும்  தெரிவது   இல்லை!
போனால்   போகட்டும்   விட்டது   தொல்லை!


இரண்டா   யிரத்துப்   பதினைந்தை   விடுத்து,
பற்பல   ஆண்டுகள்   பின்னே   சென்றேன்!
இதுவரை   இருந்த   இரைச்சல்   விலகி ,
இதமாய்   ஒலிக்கும்   அமைதியைக்   கேட்டேன்!


அடைமழைக்   கஞ்சி    அடங்கிய    பறைவைகள்,
கூடுவிட்  தெழுந்து .  கூவும்   குரல்கள் ,
தூறல்   மழையின்   சாரல்   தாளம் ,
பறவைகள் .  குரலுக்   கியற்கையின்   மேளம்!


இலைவிட்   டிறங்கும்     மழைநீர்த்   துளிகள்,
தரைவிழுந்   தெழுப்பிடும்.   "டக்-டக்"    ஒலிகள்,
சலசலத்    திடும்    இலைகளின்    சிலும்பல்,
தவளைக்    கூட்டத்தின்.   கவலைப்.   புலம்பல் ,


எங்கும்.   நிறைந்தவிவ்    வியற்கை   ஒலிகள்,
கேட்கையில்   மறைந்ததென்     மனதின்    வலிகள் !
எங்கனம்    உரைப்பேன்    என்மன    நிலையை?
இதுபோல்    இதுவரை.   நிறைந்தது.   இல்லை!


முகில்கள்.   வானை.   மூடிவிட்.   டதால்,
பகலெது ,  இரவெது , புரியவே    இல்லை!
மின்விளக்.  குகளும்   எரியா   ததனால்,
நேரமும்    கொஞ்சமும்.   நகரவே.  யில்லை .


பூஜை    அறையில்    எரியும்    திரியில்,
மெழுகு   வத்தியின்    கடைத்துளி    உயிரில்
சற்றே    பரவும்    ஒளியின்    பார்வை;
அதனைத்    தாண்டினால் , .   இருளின்    போர்வை.


சுருங்கும்    ஒளி கொஞ்சம்     இருக்கும்    போதே,
இருக்கும்    சோற்றைப்.   பகிர்ந்து    கொண்டோம்.
நெருங்கி    அமர்ந்து    உறவுடன்    உண்டோம்!
வருத்தமொன்   றின்றி.   சிரித்து.    மகிழ்ந்தோம்!


இன்னலும்,    இடரும்.   இம்மழை.    கொணர்ந்தது ,
எனினும்    கண்டோம்  .   மற்றொரு    பக்கம்,
முன்னொரு    கவிஞன்    மொழிந்தது    போல ,
மாமழை    போற்றுதும்!    மாமழை.   போற்றுதும்!



Dec 13, 2015

தீவுகளில் வசிக்கும் மனிதர்கள் !


தீவுகளில் வசிக்கும் மனிதர்கள்!

"மனிதன் ஒருவனும் தனித் தனித் தீவு  அல்ல " -- (No Man Is An Island ) என்ற ஆங்கிலப் பாடலைப் படித்து இருக்கிறோம். ஆனால் இன்றோ, தனிமனித் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக துண்டுபட்டுப் போய் வருகின்றன. காரணங்கள் பல! விஞ்ஞான முன்னேற்றம், அதன் மூலம்  கிடைக்கும் சுலபமான வழிமுறைகள், பொழுதுபோக்குச் சாதனங்கள் என்று நிறைய உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு இயந்திர வாழ்க்கையை  நோக்கி, " நாம் உண்டு, நம் வேலை உண்டு " என்று ஒரே குடும்பத்துக்குள்ளேயும் ஆகி வருவது சற்று    கவலையை அளிக்கிறது .

 சில வீடுகளில் கூடவே வசிக்கும்  மகனும், மகளும் கூட , எப்போது வருகிறார்கள், எப்போது போகிறார்கள் என்று தெரிவதில்லை. வீட்டுக்குள் இருக்கும் போதும், அவரவர்க்கு அவரவர் வேலை, பொழுது போக்கு

முன்பு தொலைக்காட்சி பார்க்கும்  போதாவது ஒன்றாக அமர்ந்து பார்ப்பார்கள் ! இப்போது அது கூட இல்லைஅவரகளது கனினினியிலோ , கைபேசியிலோ , எல்லாவற்றையும்  பார்த்து விட முடிகிறது

இந்த நிலை பற்றி ஒரு கவிதை!

அன்புடன் 

ரமேஷ்        

       


சென்னைப்  புறநகரில் கொஞ்சம் நிலம் வாங்கி


தனியாக     வீட்டொன்றைக் கட்டினேன் , பாங்கி !

காலையில் விழித்தெழுந்து   வெளியிலே பார்த்தால்

சாலையில் வெள்ளநீர் ஓடுதே ஓங்கி !


மாலையில்   இருந்த நிலை   முற்றுமாய்  மாறி.

சுற்றிலும்    சூழ்ந்ததே   நீர் நிறைந்த  ஏரி.

இன்றெந்தன்   வீடு   தனித்திருக்கும்   தீவு,

தொடர்பற்றுப்       போனதால்   மனம் முழுதும் நோவு.


இத்தீவில்   தனித்தமர்ந்து   தத்தளிக்கும்   போது

புத்தியில்    உதித்தெழுந்த   சத்தியமும்    இதுவே!

அனைவரும்   கூடிவாழ்  வீடுகளின் உள்ளும்

தனித்தனித்   தீவுகளாய்              உள்ளதவர் உள்ளம்.


பக்கத்து   வீடுகள்   ஒவ்வொன்றும்   தீவு அவர்

எக்கேடு  கெட்டாலும்   எனக்கென்ன   ஆச்சு?

திக்கெட்டில்   உள்ளோரும்   என்னுறவு  என்று

கொக்கரித்த   காலம்   மலையேறிப்   போச்சு.


வீட்டுக்கு   உள்ளேயும்   வெவ்வேறு        தீவு - தன் 

பாட்டுக்கு அவரதிலே   குடியேறி   ஆச்சு.

முகநூலில்    முழுகியே   விடமறந்தார்   மூச்சு 

சகமனிதர்   எவரோடும்   இனி ஏது   பேச்சு?


தொலைகாட்சி  சீரியலில்   ஒருசாரார்       சரணம்.

அது நின்று   போனால்   அவரடைவார்     மரணம்.

மிட்டாயை  நொறுக்குகின்ற ^        ஆட்டத்தைப்  பழகி

கிடக்கிறார் எப்போதும்   அதற்குள்ளே  முழுகி!

                                                ^ candy crush

வெள்ளமும்  முழுதாக   வடிந்திடும்.  நாளை

தீவுகள்   நிலத்தோடு   சேர்ந்திடும்   அவ்வேளை,

தன்னுள்ளே   தானமைத்த   தீவுகளை  விட்டு

தனிமனிதர்  வெளிவரவே,   இறைவா,  வழி காட்டு !

Dec 8, 2015

விடைகூற முடியாமல் வாயடைத்து நின்றேனே!!

சென்ற சில நாட்களாக கடும் மழையின் காரணமாக இணையத் தொடர்பு இல்லை. அதனால் எதையும் பதிக்க முடியவில்லை.  

ஆனாலும் இந்த மழையில் பார்த்தும், கேட்டும் , உணர்ந்தும் அனுபவித்த பலவற்றை கவிதைகளாக வடிக்க நேரம் கிடைத்தது

சில நிஜங்களுடன், சற்று அதீதமான கற்பனை மசாலாவைச் சேர்த்து எழுதிய ஒன்று இந்தப் பாடல். இது
முற்றும் உண்மை அல்ல. முழுதும் பொய்யும் இல்லை.
எது உண்மை, எது கற்பனை என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

அன்புடன்

ரமேஷ்.

பின் குறிப்பு  :

என்னுடைய இளைய மகன்/ மருமகள் உதவியுடன் , என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட  உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப்  பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. பெரிதாக ஒன்றும் நீங்கள் எழுதத் தேவை இல்லை. இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.

பி.பி.கு.
யார் என்ன மதிப்பீடு செய்து இருக்கிறீர்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது! தைரியமாக மதிப்பீடு செய்யுங்கள்!
விடைகூற முடியாமல் வாயடைத்து நின்றேனே!!


கருணனும்    குமணனும்             தந்திட்ட                    கொடை  மிஞ்சி

வருணனும்   அடைமழையைக்   கொடையாகத்         தருமிந்த

தருணத்தில்    ஆறெங்கும்              நீர்பொங்கி               நிலம் வழிய

வருத்தமிக        உற்றோரே ,              இக்கதையைக்          கேளீரோ !


அழையாது        வீடு வந்த                  அதிதியைப்              போலவே நீர்

நுழைந்ததவ       ரில்லத்துள்                ஒரிரவு                        நேரத்தில் !

விழித்துப்           பதபதைத்து              வெளிப்பக்கம்         நோக்குகையில்

சுழிவெள்ளம்    போல்தண்ணீர்           சாலையிலே                ஒடுதய்யே !


கிடுகிடு                      என்றோடி     கிடைத்த                   உடமையெல்லாம்

பெட்டிக்குள்            புதைத்து        மேல்மாடியிலே        வைத்தார்.

கஷ்டம்                      மிகப்பட்டு       குளிர்பதனப்            பெட்டியினை

மாடிப்படி                மேலே           மூலையிலே                மூடி வைத்தார்.


சிலநாட்கள்              முன்னேமிக     விலைகொடுத்து     வாங்கிவந்த

தொலைக்காட்சிப்   பெட்டியுடன்    சேர்ந்த உப              கரணங்களும்

தரைமறைத்து          வைத்திருந்த        காஷ்மீரின்              கம்பளங்கள்

விரைந்தவற்றை.       எடுத்துமேல்       கொண்டுசென்று    சேர்த்துவிட்டார்.


அரிசி              பருப்புடனே            இருக்கின்ற   கறிகாய்கள்

எரிவாயு        அடுப்புமதன்           வாயுக்கலன்    உருளை 

சக்கரை          உப்புடன்                  தேநீர்த்தூள்   தேவைகளை

அக்கறை       யுடன் எடுத்து           மேல்மாடி    கொண்டுசென்றார்.


இருக்கின்ற   கையிருப்பை           கணக்கிட்டுப்           பார்த்துப்பின்

நாலைந்து     நாள்வரையில்         நமக்கிதுவே              தாங்குமென்றார்.

இத்தனையும் செய்தபின்னும்      இன்னுமொரு          கவலையென்னை

பைத்தியமாய் அடிக்குதென்றார் ! தூக்கம்வர              மறுக்குதென்றார் !


காரணந்தான்  என்ன இவர்           கவலைப்      படுவதற்கு?

கூறுங்கள்      கொஞ்சமென்று      அவரிடமே   நான்கேட்டேன்.


"வீடுகளை    முழுதும்                    நீரடித்துச்                   சென்றதனால்

வீதியிலே      நின்றிருக்கும்           மக்களைப்                பற்றியதா?

நாட்கூலி       வேலைசெய்து         நடைபாதையில்      வசிக்கும்

ஆட்படைகள் அவர்குடும்பம்     படும்பாட்டைப்     பற்றியதா?


பயிரிட்ட                  வயற்காட்டை         வெள்ளம்      நிரப்பியதால்

துயர்கொண்டு          தவிக்கின்ற              உழவர்களை   நினைத்தா?

எதைஎண்ணித்         தவிக்கின்றீர்            கண்ணுறக்கம்  இல்லாமல்?

இதைச்சொல்வீர்        என்னிடமே "        எனக்கேட்டேன்   அவரிடமே!


பதிலிதையே            அவருரைத்தார்!      கதையல்ல    உண்மையிது!

"கதியின்றித்             தவிக்கின்ற                இவர்படும்   கடுமிடர்கள்

இதையெல்லாம்     களைந்திடுதல்         அரசுடைய    கடன்தானே!

விதியிதுவே              என்றிருந்தால்          நாம் இங்கு   செய்வதென்ன?"


"என்கவலை            இப்போது                 தொலைக்காட்சித் தொடர்களிலே

ஆண்டாள்                 அழக்ரில்                   ஆண்டாளின் நி       லையென்ன?

கல்யாணம்               முதல்காதல்             'ப்ரியாமோள்  '        என்னானாள் ?

சூப்பர்சிங்கர்           சீனியரில்                   முதலொன்ப            தாரெவரோ?


இன்னும்       இரண்டுநாள்            மின்தொடர்பு          எனக்கில்லை

என்பதால்     இவைகண்டு            இன்புறுதல்              இயலாதே!"

வருந்திமனம் அவருரைத்த          கருத்துகளை                நான்கேட்டு

விடைகூற     முடியாமல்               வாயடைத்து             நின்றேனே!!