Search This Blog

Dec 8, 2015

விடைகூற முடியாமல் வாயடைத்து நின்றேனே!!

சென்ற சில நாட்களாக கடும் மழையின் காரணமாக இணையத் தொடர்பு இல்லை. அதனால் எதையும் பதிக்க முடியவில்லை.  

ஆனாலும் இந்த மழையில் பார்த்தும், கேட்டும் , உணர்ந்தும் அனுபவித்த பலவற்றை கவிதைகளாக வடிக்க நேரம் கிடைத்தது

சில நிஜங்களுடன், சற்று அதீதமான கற்பனை மசாலாவைச் சேர்த்து எழுதிய ஒன்று இந்தப் பாடல். இது
முற்றும் உண்மை அல்ல. முழுதும் பொய்யும் இல்லை.
எது உண்மை, எது கற்பனை என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

அன்புடன்

ரமேஷ்.

பின் குறிப்பு  :

என்னுடைய இளைய மகன்/ மருமகள் உதவியுடன் , என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட  உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப்  பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. பெரிதாக ஒன்றும் நீங்கள் எழுதத் தேவை இல்லை. இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.

பி.பி.கு.
யார் என்ன மதிப்பீடு செய்து இருக்கிறீர்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது! தைரியமாக மதிப்பீடு செய்யுங்கள்!
விடைகூற முடியாமல் வாயடைத்து நின்றேனே!!


கருணனும்    குமணனும்             தந்திட்ட                    கொடை  மிஞ்சி

வருணனும்   அடைமழையைக்   கொடையாகத்         தருமிந்த

தருணத்தில்    ஆறெங்கும்              நீர்பொங்கி               நிலம் வழிய

வருத்தமிக        உற்றோரே ,              இக்கதையைக்          கேளீரோ !


அழையாது        வீடு வந்த                  அதிதியைப்              போலவே நீர்

நுழைந்ததவ       ரில்லத்துள்                ஒரிரவு                        நேரத்தில் !

விழித்துப்           பதபதைத்து              வெளிப்பக்கம்         நோக்குகையில்

சுழிவெள்ளம்    போல்தண்ணீர்           சாலையிலே                ஒடுதய்யே !


கிடுகிடு                      என்றோடி     கிடைத்த                   உடமையெல்லாம்

பெட்டிக்குள்            புதைத்து        மேல்மாடியிலே        வைத்தார்.

கஷ்டம்                      மிகப்பட்டு       குளிர்பதனப்            பெட்டியினை

மாடிப்படி                மேலே           மூலையிலே                மூடி வைத்தார்.


சிலநாட்கள்              முன்னேமிக     விலைகொடுத்து     வாங்கிவந்த

தொலைக்காட்சிப்   பெட்டியுடன்    சேர்ந்த உப              கரணங்களும்

தரைமறைத்து          வைத்திருந்த        காஷ்மீரின்              கம்பளங்கள்

விரைந்தவற்றை.       எடுத்துமேல்       கொண்டுசென்று    சேர்த்துவிட்டார்.


அரிசி              பருப்புடனே            இருக்கின்ற   கறிகாய்கள்

எரிவாயு        அடுப்புமதன்           வாயுக்கலன்    உருளை 

சக்கரை          உப்புடன்                  தேநீர்த்தூள்   தேவைகளை

அக்கறை       யுடன் எடுத்து           மேல்மாடி    கொண்டுசென்றார்.


இருக்கின்ற   கையிருப்பை           கணக்கிட்டுப்           பார்த்துப்பின்

நாலைந்து     நாள்வரையில்         நமக்கிதுவே              தாங்குமென்றார்.

இத்தனையும் செய்தபின்னும்      இன்னுமொரு          கவலையென்னை

பைத்தியமாய் அடிக்குதென்றார் ! தூக்கம்வர              மறுக்குதென்றார் !


காரணந்தான்  என்ன இவர்           கவலைப்      படுவதற்கு?

கூறுங்கள்      கொஞ்சமென்று      அவரிடமே   நான்கேட்டேன்.


"வீடுகளை    முழுதும்                    நீரடித்துச்                   சென்றதனால்

வீதியிலே      நின்றிருக்கும்           மக்களைப்                பற்றியதா?

நாட்கூலி       வேலைசெய்து         நடைபாதையில்      வசிக்கும்

ஆட்படைகள் அவர்குடும்பம்     படும்பாட்டைப்     பற்றியதா?


பயிரிட்ட                  வயற்காட்டை         வெள்ளம்      நிரப்பியதால்

துயர்கொண்டு          தவிக்கின்ற              உழவர்களை   நினைத்தா?

எதைஎண்ணித்         தவிக்கின்றீர்            கண்ணுறக்கம்  இல்லாமல்?

இதைச்சொல்வீர்        என்னிடமே "        எனக்கேட்டேன்   அவரிடமே!


பதிலிதையே            அவருரைத்தார்!      கதையல்ல    உண்மையிது!

"கதியின்றித்             தவிக்கின்ற                இவர்படும்   கடுமிடர்கள்

இதையெல்லாம்     களைந்திடுதல்         அரசுடைய    கடன்தானே!

விதியிதுவே              என்றிருந்தால்          நாம் இங்கு   செய்வதென்ன?"


"என்கவலை            இப்போது                 தொலைக்காட்சித் தொடர்களிலே

ஆண்டாள்                 அழக்ரில்                   ஆண்டாளின் நி       லையென்ன?

கல்யாணம்               முதல்காதல்             'ப்ரியாமோள்  '        என்னானாள் ?

சூப்பர்சிங்கர்           சீனியரில்                   முதலொன்ப            தாரெவரோ?


இன்னும்       இரண்டுநாள்            மின்தொடர்பு          எனக்கில்லை

என்பதால்     இவைகண்டு            இன்புறுதல்              இயலாதே!"

வருந்திமனம் அவருரைத்த          கருத்துகளை                நான்கேட்டு

விடைகூற     முடியாமல்               வாயடைத்து             நின்றேனே!!

1 comment:

  1. I tried to give 5 star but I am not sure whether it was registered as 5 star (since I could not confirm the same because I was not comfortable with the method of registering). N.Rammohan

    ReplyDelete