தீவுகளில் வசிக்கும் மனிதர்கள்!
"மனிதன் ஒருவனும் தனித் தனித் தீவு அல்ல " -- (No Man Is An Island ) என்ற ஆங்கிலப் பாடலைப் படித்து இருக்கிறோம். ஆனால் இன்றோ, தனிமனித் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக துண்டுபட்டுப் போய் வருகின்றன. காரணங்கள் பல! விஞ்ஞான முன்னேற்றம், அதன் மூலம் கிடைக்கும் சுலபமான வழிமுறைகள், பொழுதுபோக்குச் சாதனங்கள் என்று நிறைய உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு இயந்திர வாழ்க்கையை நோக்கி, " நாம் உண்டு, நம் வேலை உண்டு " என்று ஒரே குடும்பத்துக்குள்ளேயும் ஆகி வருவது சற்று கவலையை அளிக்கிறது .
சில வீடுகளில் கூடவே வசிக்கும் மகனும், மகளும் கூட , எப்போது வருகிறார்கள், எப்போது போகிறார்கள் என்று தெரிவதில்லை. வீட்டுக்குள் இருக்கும் போதும், அவரவர்க்கு அவரவர் வேலை, பொழுது போக்கு.
முன்பு தொலைக்காட்சி பார்க்கும் போதாவது ஒன்றாக அமர்ந்து பார்ப்பார்கள் ! இப்போது அது கூட இல்லை ! அவரகளது கனினினியிலோ , கைபேசியிலோ , எல்லாவற்றையும் பார்த்து விட முடிகிறது.
இந்த நிலை பற்றி ஒரு கவிதை!
அன்புடன்
ரமேஷ்
சென்னைப்  புறநகரில்  கொஞ்சம் நிலம்  வாங்கி 
தனியாக     வீட்டொன்றைக்  கட்டினேன் , பாங்கி !
காலையில்  விழித்தெழுந்து   வெளியிலே பார்த்தால் 
சாலையில்  வெள்ளநீர்  ஓடுதே ஓங்கி !
மாலையில்   இருந்த நிலை  
முற்றுமாய்   மாறி. 
சுற்றிலும்    சூழ்ந்ததே   நீர் நிறைந்த 
ஏரி.
இன்றெந்தன்   வீடு   தனித்திருக்கும்  
தீவு,
தொடர்பற்றுப்       போனதால்  
மனம் முழுதும்  நோவு.
இத்தீவில்   தனித்தமர்ந்து   தத்தளிக்கும்   போது 
புத்தியில்    உதித்தெழுந்த   சத்தியமும்    இதுவே!
அனைவரும்  
கூடிவாழ்  வீடுகளின்  உள்ளும் 
தனித்தனித்   தீவுகளாய்              உள்ளதவர்
 உள்ளம்.
பக்கத்து   வீடுகள்   ஒவ்வொன்றும்    தீவு அவர் 
எக்கேடு  கெட்டாலும்   எனக்கென்ன   ஆச்சு?
திக்கெட்டில்   உள்ளோரும்   என்னுறவு  என்று 
கொக்கரித்த   காலம்   மலையேறிப்   போச்சு.
வீட்டுக்கு   உள்ளேயும்   வெவ்வேறு        தீவு - தன் 
பாட்டுக்கு  அவரதிலே   குடியேறி   ஆச்சு.
முகநூலில்    முழுகியே   விடமறந்தார்  
மூச்சு  
சகமனிதர்   எவரோடும்   இனி ஏது    பேச்சு?
தொலைகாட்சி 
சீரியலில்   ஒருசாரார்       சரணம்.
அது நின்று    போனால்    அவரடைவார்     மரணம்.
மிட்டாயை  நொறுக்குகின்ற ^        ஆட்டத்தைப்  பழகி 
கிடக்கிறார் எப்போதும்   அதற்குள்ளே  முழுகி!
                                                ^ candy crush
வெள்ளமும்  முழுதாக   வடிந்திடும்.  நாளை 
தீவுகள்   நிலத்தோடு   சேர்ந்திடும்   அவ்வேளை,
தன்னுள்ளே   தானமைத்த   தீவுகளை  விட்டு
தனிமனிதர்  வெளிவரவே,   இறைவா, 
வழி காட்டு !
 
No comments:
Post a Comment