மானுடம் வாழ்க!
மழையின் விளைவுகள் மிகமிகக் கோரம்.!
கூற்றே மழையாய் வந்ததோ இன்று?
ஆற்றோம் இயற்கையின்
சீற்றம் என்று
உடைமைகள் இழந்து உயிர் மட்டும் சுமந்து
இடம்விட் டோடி இன்னல் உற்றோர்
இடர் உடன் களைய எழுந்தனர் பலரும்.
உதவிக் கரங்கள் உடனே நீட்டி
உடையும், உணவும், இடமும் அளித்தார்.
பாதிப் படைந்தோர் பலரின் பாரம்
பாதிப் பகுதியாய்
குறைந்த திந்நேரம்
மாநகர் மாந்தர் மனதின் ஓரம்
முடங்கிக் கிடந்த உணர்வின் ஈரம்
பல்கிப் பெருகி ஊற்றடுத் தோட ,
முனைந்தேன் இங்கு நான் அதைப் பாட.
சேர்ந்து கிடைத்த அமுதினைப் போல
ஊழி யழித்ததால்
உலகமே அழுகையில்
அழியா தெழுந்த
மானுடம் வாழ்க
!
.
விழுந்த மாந்தர்க் குதவிகள்
புரிந்து
எழுந்தவர் மீண்டும் எளிதாய்
நிற்க
தழுவி அவரைத் தாய் போல்
அணைத்த
விழுமிய பண்பின் மானுடம்
வாழ்க !
தான் இடர் பட்டும்
தளர் வடையாமல்
தன்னினும் மெலியொர் துயர் துடைத் திடவே
ஊனினை வருத்தி
உயிர் கொடுத் துழைத்த
மானிடர் வாழ்க! மானுடம் வாழ்க!
No comments:
Post a Comment