Search This Blog

Oct 31, 2015

அழகுப் பெட்டகம்

அழகுப் பெட்டகம்

ஒரு தாத்தாவாக  ஆனபின்  பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் அனுபவம் மிக அருமையானது.

சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் உள்ள என் பேத்தி அதிதியுடன் கழித்த சில மாதங்களின் அனுபவமே இந்தக் கவிதை
.
இது ,  எல்லா தாத்தா  - பாட்டிகளும்  அனுபவித்திருக்கும் ஒன்று!


"அதிதி " என்ற என் பேத்தியின் பெயருக்குப் பதிலாக, உங்கள் பேத்தியின் பெயரை உள்ளிருத்தி  , பாடிக் காட்டலாம்!

எல்லா தாத்தா - பாட்டிகளுக்கும்   இது சமர்ப்பணம்.
படித்து மகிழுங்கள்.


அன்புடன்

ரமேஷ்.



அழகுப் பெட்டகம் அதிதி

கலையாத் தூக்கக்  கண்களுடன்
கலையி லெழுந்து வெளிவந்து 
காலை வணக்கம் சொல்லுவது 
சொல்ல முடியாய் பேரழுகு.

கருத்து நீண்ட குழல்கற்றை
முன்னே விழுந்து முகமறைக்க 
சிரித்துச் சிமிட்டும் சிறுகண்கள் 
சொல்லும் கதைகள் பேரழகு 

கண்ணாம் பூச்சி ஆடுகையில் 

கதவின் பின்னே ஒளிந்திருந்து 
கண்டு பிடிக்கப் பட்டவுடன் 
கலகல வெனவரும் சிரிப்பழகு.

பன்முறை ஆடி முடித்தாலும் 

அதனுடன் நிறைவு அடையாமல் 
"இன்னொரு தடவை ஆடணுமே"
என்னும் மழலைச் சொல்லழகு 

கையால் மூடித்  தன்முகத்தை 

மறைத்துக் கொண்டால் மற்றவரும் 
தன்னைக் காண முடியாது 
எனநம்பும் குழந்தையின் கருத்தழகு.

தாத்தா விழுந்து அடிபட்ட 

முட்டிக் காய வலிமறைய 
முத்தம் ஒன்றை மருந்தாக 
கொடுக்கும் குழந்தை மனமழகு.

தமிழில் தாத்தா புனைந்திட்ட 

மழலைப் பாடல் மறக்காமல் 
குமிழ் உதட்டின் வாய்திறந்து 
சிரிப்புடன் பாடும் தமிழழுகு 

கோவில்  போகும் வேளைகளில் 

பட்டுப் பாவா டைஅணிந்து 
நாவால் மந்திரங் களையோதி  
கைகூப் புதலும் நிறையழகு 

அமெரிக் கர்கள் ஆங்கிலத்தை 

நீட்டியும் குறைத்தும் பேசும்விதம் 
இம்மியும் கொஞ்சம் மாறாமல் 
இழுத்துப் பேசும் விதமழகு 

அம்மா சொல்வதைக் கேட்காமல் 

உண்ணும் உணவை முடிக்காமல் 
சும்மா அங்கிங்கும் ஓடி 
அழுது புரள்வதும் அழகேதான் 

மாலை வேளையில் தந்தையுமே 

வேலை முடித்து வருகையிலே  
களிப்புடன் இருகை களையாட்டி 
குதிப்பது கொள்ளை அழகாகும் 

பாட்டி பூஜை செய்கையில் 

பூதி யணிந்து நின்றிறைவன் 
பாட்டை  இசைத்து மணியடிக்கும் 
பாங்கே அழகுக் கழகாகும் 

அதிதி செய்யும் செயல்களிலே 

எதில்தான் அழகில் குறைவில்லை 
பதில் இக் கேள்விக் கெனக்கில்லை 
புதிதாய் ஒன்றும் தோன்றவில்லை 

மாதங்கள் மூன்று போனவிதம் 

ஏதோ யெப்படி யோயறியேன் 
காதங்கள்  பயணம் செய்தபின்னும்  
காதில் ஒலிக்குது அவள்குரலே 

பழகா திருந்தால் பாவமில்லை 

புரிவதில் எந்த சோகமில்லை 
பழகிப் பிரியும் சோகம்தான் 
பிழிந்து மனதை வாட்டிடுடுமே.

மறுபடி அவளை நேரினிலே 

பார்க்கும் வேளை  வரும்வரையில் 
பாட்டிதன் வழி பார்த்திருப்பேன் 
மனதின் சோகம்  மறந்திருப்பேன் 


































Oct 25, 2015

சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடு


 பல சமயங்களில் நாம் செய்யவேண்டும் என்று நினைப்பதை உடனே செய்வதில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது, முக்கியமாக, சில நல்ல காரியங்களை செய்யவேண்டும் என்று நினைத்தாலோ ,   ஒருவரைப் புகழ  வேண்டும் என்று நினைத்தாலோ  உடனடியாக நாம் செய்வதில்லை.

இதை நான் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த விதிக்கு நானும்  விலக்கல்ல!

ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்து, அதை உடனே செய்யாமல் தள்ளி வைத்து, சமயம் கடந்தபின்னே, , "அய்யய்யோ, அப்பவே  செய்யலாமுன்னு நெனச்சேன், எதோ தள்ளிப் போச்சு, அடுத்த தடவை பாத்துக்கலாம்" என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொள்வதில் நாம் மன்னர்கள்!

அதே போல் ,ஒன்றை / ஒருவரைப் புகழ்வதிலும் ரொம்ப சிக்கனம் காட்டுவோம்!  

இந்த குணங்கள்  மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எத்தனை உள்ளங்கள் மலர்ந்திருக்கும்? எத்தனை புன்னகைகள் பூத்திருக்கும்?

இது பற்றிய ஒரு கவிதை.

அன்புடன்

ரமேஷ்.

சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடு

கற்றவை, கேட்டவை, படித்தவை பிடிக்கையில்
பற்பல  சமயம்நாம் பார்த்தவை பிடிக்கையில் ,
அற்புதம்,அற்புதம் எனமனம் வியக்கையில் ,
பாராட் டிடவே உன்மனம் நினைக்கையில்

மெல்லச் சொல்வோம் என்றில் லாமல்
சொல்ல நினைத்ததைச் சொல்லி விடு           (1)


நண்பர் , உறவினர் , உற்றார்  செய்த
நன்செயல் பிடித்தால் , மனமதில் நெகிழ்ந்தால்
தன்முனைப் போடு ^^  தயக்கமும் சேர்ந்து
நன்றிதென் றுரைப்பதைத்  தடுத்தி டாமல்
 
மெல்லச் சொல்வோம் என்றில் லாமல்
சொல்ல நினைத்ததைச் சொல்லி விடு    (2)

அகத்தில் நுழைந்துநல்  லனுபவம்  அளித்து
மகிழ்ச்சியைத் தந்து மனம்தொட்ட எதையும
சுகித்திட்ட சூடு தணிந்திடும் முன்னே
பகிர்ந்திட வேண்டும் பாராட்  டுகளை

          மெல்லச் சொல்வோம் என்றில் லாமல்
           சொல்ல நினைத்ததைச் சொல்லி விடு               (3)

உதவியை நாடும் உடல் நலம் நலிந்தோர்
முதியோர் , வறியோர்,  கைவிடப் பட்ட
கதியில் மாந்தர் நிலையினை நோக்கையில்
'உதவிடு ' என்று உள்மனம் சொன்னால்

          உடுக்கை இழந்தவன் கைபோல் உடனே

          கொடுக்க நினைத்ததைக் கொடுத்து விடு.          (4)


நேற்றைய பொழுது நன்றாய்க் கழிந்தது
காற்றை இழுத்து சுவாசம் செய்தாய் 
சோற்றை உண்டு சுகமாய் இருந்தாய் 
கூற்றுவன் இன்றே வரலாம் அதனால்


பையச் செய்வோம் என்றில் லாமல்
செய்ய நினைத்ததைச் செய்து விடு                      (5)
 
^^ தன்முனைப் போடு   WITH EGO















Oct 22, 2015

முழுமையின் வடிவம்


If all the Upanishads and all the other scriptures happened all of a sudden to be reduced to ashes, and if the first verse of in the Ishopanishad were left in the memory of the Hindus, Hinduism will live for ever."
Mahathma Gandhi.
மகாத்மா காந்தியால் இவ்விதம் புகழப்பட்ட ஈசா உபநிஷத்- தின் அந்த முதல் செய்யுள் இதுதான்--

ओं पुर्णमदः पूर्णमिदं पूर्णात्त् पुर्णमुदच्यथे I
पूर्णस्य पूर्णमादाय पुर्णमेवावशिष्यते II

ஓம் பூர்ணமதம் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே I
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே II
 
அதன் ஆங்கில, தமிழ் பொருளாக்கம் வருமாறு-----

ஆங்கிலம்

All this is full . All that is full.
From fullness, fullness comes.
When fulness is taken from fullness,
Fullness still remains.
(translation by Eknath Easwaran in his book UPANISHADS)
 
தமிழ்
இறைவன் முழுமையானவர் !
இந்த உலகம் முழுமையானது !
முழுமையான இறைவனிலிருந்து முழுமையான இந்த உலகம் தோன்றியது !
முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்னும்
முழுமையே எஞ்சியுள்ளது!
(( ஈசாவாஸ்ய உபநிஷதம் - ஸ்ரீ ராமகிருஷ்ண மேடம் வெளியீடு  - விளக்கியவர்- சுவாமி ஆசுதோஷானந்தர் )

இந்தத் தமிழாக்கம் என் கவிதை வடிவில்--

முழுமையின்      வடிவம்      இறையவனே !
இறைவன்      படைத்தது      இவ்வுலகே!
முழுமையி     லிருந்து      முளைத்தத    னால்- இவ் 
வுலகும்      முழுமைத்      தன்மையதே !
முழுமையி       லிருந்து       முழுமைதனை
முழுதாய்      எடுத்து      முடித்தாலும்
பழுதில்     லாமல்      மிஞ்சுவதும்
முழுமை      என்றே      உணர்வாயே !














































 
 

Oct 21, 2015

இப்போது நவராத்திரி.

இப்போது நவராத்திரி.
ஒன்பது நாட்களும், ,துர்க்கை , சரஸ்வதி, லக்ஷ்மி  வடிவங்களில் தேவியை வழிபடும் நாட்கள். 
அண்டங்களை எல்லாம் துன்புறுத்தி  வந்த மகிஷாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்ய, மும்மூர்த்திகளும், பிற தேவர்களும் இணைந்து , துர்காதேவியைத் தோற்றுவித்து, அவளுக்கு சகல ஆயுதங்களையும் அளித்ததாக , மகரிஷி மார்க்கண்டேயர் எழுதியுள்ள 'துர்கா சப்தசதி ' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. (Details in English are appended at the end)
இவ்வாறு அவதாரம் எடுத்த துர்க்கை மகிஷாசுரனோடு போர் புரிந்து , அவனை அழித்ததை நவராத்ரியின் போது கொண்டாடுகிறோம்.
இதைப் பற்றி ஒரு கவிதை.
படித்து தேவி அருள் அடையுங்கள்.
ரமேஷ்  
துர்க்கை அவதரித்தல்
முக்கண்ணன் முகமளித்தான்;  காலனும் குழல்தந்தான்.
அக்கினியும்  அவள்மூன்று கண்ணா யினான்  
நீள்நாசி  திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும் 
அஷ்டவசு தேவர்கை   விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும்  வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும்  அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள் !
 *-திருவுக்கு அரசன்= குபேரன்
** - மண்ணரசி = பூமாதேவி 
துர்க்கையின் படைக்கோலம்
திருமாலின் சக்கரம் ஒருகரத்திலே
திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே
இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்
தந்ததைக்  கொண்டனள்  ஒருகையிலே
வாயுதே வன்தந்த  வில்ம்புகள்
ஆயுதமாய்  ஏந்தினாள் ஒருகையிலே 
காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்
சூலியவள்  சூடினாள்  இருகரங்களில்.
மகிஷாசுர வதம்

உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்
செந்தழலோன் சீற்றமதைக்  கண்களில்  ஏற்றினள்
இமயவான் அளித்தஅரி  மாமீது ஏறினள்
சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைத்தனள்
துதி
எருதுருக் கொண்டமகி ஷாசுரன்  செருக்கறுத்து 
பொருதவன் சிரம்கொய்த துர்கா தேவியை  
கருத்திலே   நிறுத்திநவ நாட்கள்  நோன்பிருந்து 
கரம்கூப்பி  வணங்கித் தொழுவோம்.




An English extract of the Durga Sapthasathi is given below:

Mahishasura had snatched the rights of the Sun, Indra, Fire, Wind, Moon, Yama, Varun (rain) and other gods and has made the heavens his new home.


Now, the homeless demi-Gods roamed on earth like ordinary humans as they had nowhere to go. The demi-Gods spoke of how they were now counting on the Holy Trinity to save them from this misery. Listening to the anguish of the demi-Gods, the bearer of discus – Lord Vishnu – emitted a divine light. Similarly, Brahma, Shiva and Indra emanated divine light that combined to form a huge mountain of great energy.


The demi-gods were amazed at the flames of that energy being discharged in all the four directions. That mass of energy was unmatchable in the three worlds and in no time it got converted into a woman. Her face was formed as a result of Shiva’s divine light. Yamraj’s (God of death) divine energy gave her long, lustrous hair. Vishnu’s almighty energy formed her powerful arms. Her breasts were formed as a result of the Moon God’s power. Varun’s might made her thighs and calf muscles while the Earth formed her buttocks. Her feet were shaped when Bramha blessed her with his divinity and the Sun’s ability transformed into the fingers of her feet. The Vasus shaped the fingers of her hands and Kuber’s prowess patterned her nasal passage. Agni or the Fire God’s vigour translated in the three eyes of the devi, while Prajapati’s efficiency took the shape of her teeth. Thus, the great Goddess Durga came into being.


Now was the turn of every God to bestow her with divine gifts and weapons. In the process, Shiva gave away a trident to her while Vishnu gave her a discus similar to the one he possesses. Varun or the Rain God gave her a conch shell, the Fire God gave her power, the Wind God presented her with bow and arrows, Indra offered his thunderbolt and the bell taken off from the mighty Airawat elephant. Yamraj rendered kaldand, Varun gave a Pash (noose), Prajapati gifted her Sphatik (snow rock crystal) necklace and Bramha handed out a kamandalu (oblong water pot made of a dry gourd (pumpkin) or coconut shell, metal, wood of the Kamandalataru tree, or from clay, usually with a handle and sometimes with a spout.) The Sun God filled the pores of her skin with his life-giving rays and Kaal (time) gifted her shining sword and armour. The Ocean of Milk gifted her beautiful necklace of pearls, lovely finger rings, bangles, earrings, hair accessories and clothes that would remain resplendent.
Vishwakarma gave a Farsa, various other weapons and a garland made of forever fresh Lotus flowers. Jaldhi presented her with a beautiful Lotus flower. The King of mountains - Himalaya – gave her a Lion which became her vehicle, and also bestowed on her a number of rare gemstones. Kuber – the God of Wealth – offered the Great Goddess - a pot full of honey. And last but not the least, the Serpent King - Sheshnaag – gifted her naaghaar (serpent necklace) studded with precious gemstones. Such are the endowments of Durga. 
Sent from Windows Mail

Oct 18, 2015

என்ன ஆச்சு ?(what's up?) குழந்தை அழுதது !


என்ன ஆச்சு ?(what's up?) குழந்தை அழுதது !


 பத்து மாதம் சுமந்து

பெற்றெடுத்த பெண் மகவைப்

பக்கத்திலே படுக்கவைத்து

தாய் அவளும் உறங்குகிறாள் .

பசியெடுத்த மழலையுமே

பால் கேட்டுக் குரல் எழுப்ப

பாவம்,அவள் காதில்

விழுந்து அவள் விழிக்கவில்லை.

 
அப்போது

 
தலைமாட்டில் வைத்திருக்கும்

அலைபேசி குரல் எழுப்பி

'என்ன ஆச்சு' செய்தியொன்று

வந்ததையே அறிவிக்க

வாரிச் சுருட்டிக் கொண்டு

விழித்ததனைப் படிக்கின்றாள்!

Oct 14, 2015

காலை நேரக் காற்றிலே பகுதி 2


எனது காலை நேர நடை பழகலைப் பற்றி இதற்கு முன்னாலே ஒரு கவிதையைப் பதிவு செய்திருந்தேன். (17-9-15 )
அந்தப் பதிவு முதல் பகுதி!

வீட்டிலிருந்து சூரியன் உதிக்குமுன்னமே புறப்பட்டு ஒரு அரை மணி நேரம் நடப்பேன். அப்போது காண்பவை பற்றி அந்தக் கவிதையில் கூறியிருந்தேன்.

பிறகு வீட்டுக்குத் திரும்பி வருகையில் சற்று வெயில் கூடிவிடும். நடமாட்டமும் அதிகரித்துவிடும். வெயிலில் நடை சற்றுத் தளர்வதால் அரை மணி நேர நடை ஒரு மணியாய் விரியும்.

அப்போது காணும் காட்சிகளே  இந்த இரண்டாம் பகுதியில் .!

ரமேஷ் .

காலை நேரக் காற்றிலே  பகுதி 2


அரைமணித்துளி ஒருதிசைவழி நடந்துபின்பு திரும்புவேன்
திரும்புகையில் அரைமணியது ஒருமணியாய் விரியுமே.!


அடிவானம் விழித்தெழுந்து ஆதவன் உதித்ததால்
சுடுகின்ற ஒளிக்கதிர்கள் பார்முழுதும் பரவுமே.!


மரக்கிளைகளின் இலைநுழைந்து  மண்விழுமொளிக் கதிர்களோ 
இரவுவானின் தாரகைகள் தரைவிழுந்ததை ஒக்குமே.!


இதுவரையில் இருந்துவந்த அமைதிசற்றுக் குறையுமே.
பாதைநிறையப்  பிறமாந்தர் போக்குவரத்தும் கூடுமே.


இருவரிருவ  ராக வரும் வயதான ஜோடிகள்
பருவவயதில் உருவம் காக்கும் மெதுவோட்ட இளைஞர்கள்


சிறுவயதில் ஒட்டம் பயிலும் சின்னஞ்சிறு சிறுவர்கள்
பெரியவரின்  கைப்பிடித்து நடைபயிலும் மழலைகள்


விதவிதமாய் வசனமிட்ட வண்ணவண்ணச் சட்டைகள்
காதுபொத்திக்  குளிர்விலக்கும் கருப்புவண்ணப் பட்டைகள்.


தொளதொளவென முட்டிமீறும் முக்கால்கால் சட்டைகள்
அளவெடுத்துத் தைக்காமல் அணிந்துவரும் ஆடவர்


நடைப்பயிற்சி செய்ய வரும் நல்லழகுப் பெண்டிரோ
உடுக்கும் உடை சல்வாரே! இதனை நீர் கண்டிரோ!


இப்படிப்பல பேரைநான் சந்தித்துத் திரும்புவேன்
நாளைமீண்டும் நடைபழகப் போவதையெதிர் நோக்குவேன்.!

 

Oct 9, 2015

சிகப்பு விளக்கில் ..........


சிகப்பு விளக்கில் ..........


அதிகாலையில் ,
சற்று தாமதமாகப்  புறப்பட்டதால் ,
புகைவண்டியைப் பிடிக்க ஆட்டோவில் தலை தெறிக்க  விரைகையில் ,

காலியான சாலையில் ,
போக்குவரத்து விளக்கின் சிகப்பில்

"ரெட் லைட்டில் நிறுத்திப் பார்த்துப் போப்பா"

என்று  கூறினேன் -

மெதுவாக ,
எனக்கு மட்டும் கேட்கும் குரலில்.

ரமேஷ் 

இதை eluthu.com தளத்திலும் பதிவு செய்திருக்கிறேன்.

Oct 4, 2015

புது நாளும் உதயம்

காலையில் நடைப்பயிற்சி  செய்ய சிறப்பான இடம் அடையாற்றின் கரையில் அமைந்த நிழல்கள் மரப் பூங்கா.
காலைக் குளிர் விலகுமுன்னே , அங்கு சென்று, அந்த அழகையும்,அமைதியையும்அனுபவித்தபோது எழுந்த பாடல் இது!
ஒரு புதிய நாளின் பிரசவத்தைப் பகிர்ந்து கொள்வோம்,  வாருங்கள்!


ரமேஷ்


புது நாளும்   உதயம்


அதிகாலை    நேரம்    அடையாறி    னோரம்
நடைபழகும்    நிழற்பூங்கா   வில்நின்   றிருந்தேன்


இதுகாறு   முணராதோ   ருள்ளத்து   அமைதி
இதயம்    முழுதும்    நிறம்பிடப்     பெற்றேன்.


வானத்தைக்     கிழித்தெழும்    பரிதியின்   சுடர் - இரவின்
மோனத்தை    கிழித்தெழும்     புள்ளினத்தின்   ஒலிகள் 

 
ஆற்றைக்    கிழித்தோடும்      நீள்படகின்     வரிசை- செஞ்
சேற்றைக்    கிழித்தெழுந்து     சிறுவிதைகள்      பிரசவம்.


நிட்(ஷ்)டை     கலைந்தெழுந்து       இலையாட்டும்     மரங்கள்- சிறு
மொட்டைக்     கிழித்துத்தன்     இதழ் விரிக்கும்    பூக்கள்.


சோர்வைக்    கிழித்துவிடும்    சுகமான    காற்று - மன
ஏட்டைக்    கிழித்து எழும்     நற்கவிதை    ஊற்று..

நேற்றைக்    கிழித் தின்றோர்     புது நாளும்   உதயம் - நற்
பேற்றைப்   பெற்றுப்பின்     பொலியுமென்   இதயம்.





 

Oct 1, 2015

ஆட்டோ வாகனங்கள்

சென்னை மாநகரில் எங்கெங்கெனாது  எங்கும் நிறைந்திருப்பவை இரண்டு-
ஒன்று - கொசுக்கள்.
இரண்டு- ஆட்டோ வாகனங்கள் 
கொசுக்களைப் பற்றி சென்ற பதிவில் எழுதியாகிவிட்டது. ஆட்டோக்களை மட்டும் விட்டு வைப்பானேன் ? இதோ, அவைகளைப் பற்றிய ஒரு பாட்டு- வசன கவிதை வடிவில்!

படித்துவிட்டு கருத்துக்களைப் பகிருங்கள்!

ரமேஷ் 

பி.கு-                        'பாதுகைக்குப் பாதுகாப்பு   படித்துவிட்டு தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ராம்மோகனுக்கு நன்றி.  பாதுகைகளுக்கு ' கை கழுவிட்டு " கோவிலில் "கால் கழுவி "வருகிறார்!                                                '

ஆட்டோ வாகனங்கள்

சென்னை நகரத்தின்
சின்னஞ் சிறு தெருக்களுள்ளே
சீறிப் பாய்ந்து செல்லும்
மஞ்சள் நிறத் தோல் போர்த்த
மூன்று கால் மிருகங்கள்!


முதுமொழிகள் சிலவற்றையும்
புது மொழிகள் பலவற்றையும்
முதுகிலே சுமந்து செல்லும்
 நடமாடும் புத்தகங்கள்!


சின்னச் சின்ன இடைவெளியிலும்
மூக்கை நுழைத்து முன்னேறும்
மூக்கணாங் கயிறில்லா
மஞ்சு விரட்டுக் காளைகள்.!


பிரசவத்திர்க் கிலவசமென
பரைசாற்றி இருந்தாலும்
குலுங்கும் குலுக்கலாலே
பிரசவத்தையே  இலவசமாக்கும்
மருத்துவ மனைகள்!


கால் தரையில் பாவாது
காற்றாய்ப் பறந்து செல்லும்
இறக்கை முளைக்காத
இயந்திரப் பறவைகள்


கட்டணம் காட்டி என்னும்
கெட்ட வார்த்தை ஒன்றை
பட்டணத்து அகராதியில்
வெட்டிவிட்ட வாகனங்கள்.


ஆடி மாதம் ஆனதுமே
அருகில் உள்ள அம்மனையே
தாயாகத் தத்தெடுத்து
திருவிழாக் கொண்டாடிப்
பார்க்கும் சாரதிகளின்
முச்சக்கர ரதங்கள்!


சட்டங்கள் இருந்தாலும்
சிவப்பு விளக்கு எரிந்தாலும்
சட்டையே செய்யாத
சுதந்திரப் பறவைகள்.


குழந்தைகளை
தவறாமல் தினம் வந்து
பள்ளிக் கழைத்துச் சென்று
மாலையில் திரும்பக் கொணரும்
அன்பான ஆயாக்கள்!


என்னதான் திட்டினாலும்
எரிச்சல்கள் பட்டாலும்
இவையின்றி நகர் வாழ்க்கை
இம்மியும் நகராதே !