Search This Blog

Oct 14, 2015

காலை நேரக் காற்றிலே பகுதி 2


எனது காலை நேர நடை பழகலைப் பற்றி இதற்கு முன்னாலே ஒரு கவிதையைப் பதிவு செய்திருந்தேன். (17-9-15 )
அந்தப் பதிவு முதல் பகுதி!

வீட்டிலிருந்து சூரியன் உதிக்குமுன்னமே புறப்பட்டு ஒரு அரை மணி நேரம் நடப்பேன். அப்போது காண்பவை பற்றி அந்தக் கவிதையில் கூறியிருந்தேன்.

பிறகு வீட்டுக்குத் திரும்பி வருகையில் சற்று வெயில் கூடிவிடும். நடமாட்டமும் அதிகரித்துவிடும். வெயிலில் நடை சற்றுத் தளர்வதால் அரை மணி நேர நடை ஒரு மணியாய் விரியும்.

அப்போது காணும் காட்சிகளே  இந்த இரண்டாம் பகுதியில் .!

ரமேஷ் .

காலை நேரக் காற்றிலே  பகுதி 2


அரைமணித்துளி ஒருதிசைவழி நடந்துபின்பு திரும்புவேன்
திரும்புகையில் அரைமணியது ஒருமணியாய் விரியுமே.!


அடிவானம் விழித்தெழுந்து ஆதவன் உதித்ததால்
சுடுகின்ற ஒளிக்கதிர்கள் பார்முழுதும் பரவுமே.!


மரக்கிளைகளின் இலைநுழைந்து  மண்விழுமொளிக் கதிர்களோ 
இரவுவானின் தாரகைகள் தரைவிழுந்ததை ஒக்குமே.!


இதுவரையில் இருந்துவந்த அமைதிசற்றுக் குறையுமே.
பாதைநிறையப்  பிறமாந்தர் போக்குவரத்தும் கூடுமே.


இருவரிருவ  ராக வரும் வயதான ஜோடிகள்
பருவவயதில் உருவம் காக்கும் மெதுவோட்ட இளைஞர்கள்


சிறுவயதில் ஒட்டம் பயிலும் சின்னஞ்சிறு சிறுவர்கள்
பெரியவரின்  கைப்பிடித்து நடைபயிலும் மழலைகள்


விதவிதமாய் வசனமிட்ட வண்ணவண்ணச் சட்டைகள்
காதுபொத்திக்  குளிர்விலக்கும் கருப்புவண்ணப் பட்டைகள்.


தொளதொளவென முட்டிமீறும் முக்கால்கால் சட்டைகள்
அளவெடுத்துத் தைக்காமல் அணிந்துவரும் ஆடவர்


நடைப்பயிற்சி செய்ய வரும் நல்லழகுப் பெண்டிரோ
உடுக்கும் உடை சல்வாரே! இதனை நீர் கண்டிரோ!


இப்படிப்பல பேரைநான் சந்தித்துத் திரும்புவேன்
நாளைமீண்டும் நடைபழகப் போவதையெதிர் நோக்குவேன்.!

 

No comments:

Post a Comment