Search This Blog

Oct 31, 2015

அழகுப் பெட்டகம்

அழகுப் பெட்டகம்

ஒரு தாத்தாவாக  ஆனபின்  பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் அனுபவம் மிக அருமையானது.

சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் உள்ள என் பேத்தி அதிதியுடன் கழித்த சில மாதங்களின் அனுபவமே இந்தக் கவிதை
.
இது ,  எல்லா தாத்தா  - பாட்டிகளும்  அனுபவித்திருக்கும் ஒன்று!


"அதிதி " என்ற என் பேத்தியின் பெயருக்குப் பதிலாக, உங்கள் பேத்தியின் பெயரை உள்ளிருத்தி  , பாடிக் காட்டலாம்!

எல்லா தாத்தா - பாட்டிகளுக்கும்   இது சமர்ப்பணம்.
படித்து மகிழுங்கள்.


அன்புடன்

ரமேஷ்.



அழகுப் பெட்டகம் அதிதி

கலையாத் தூக்கக்  கண்களுடன்
கலையி லெழுந்து வெளிவந்து 
காலை வணக்கம் சொல்லுவது 
சொல்ல முடியாய் பேரழுகு.

கருத்து நீண்ட குழல்கற்றை
முன்னே விழுந்து முகமறைக்க 
சிரித்துச் சிமிட்டும் சிறுகண்கள் 
சொல்லும் கதைகள் பேரழகு 

கண்ணாம் பூச்சி ஆடுகையில் 

கதவின் பின்னே ஒளிந்திருந்து 
கண்டு பிடிக்கப் பட்டவுடன் 
கலகல வெனவரும் சிரிப்பழகு.

பன்முறை ஆடி முடித்தாலும் 

அதனுடன் நிறைவு அடையாமல் 
"இன்னொரு தடவை ஆடணுமே"
என்னும் மழலைச் சொல்லழகு 

கையால் மூடித்  தன்முகத்தை 

மறைத்துக் கொண்டால் மற்றவரும் 
தன்னைக் காண முடியாது 
எனநம்பும் குழந்தையின் கருத்தழகு.

தாத்தா விழுந்து அடிபட்ட 

முட்டிக் காய வலிமறைய 
முத்தம் ஒன்றை மருந்தாக 
கொடுக்கும் குழந்தை மனமழகு.

தமிழில் தாத்தா புனைந்திட்ட 

மழலைப் பாடல் மறக்காமல் 
குமிழ் உதட்டின் வாய்திறந்து 
சிரிப்புடன் பாடும் தமிழழுகு 

கோவில்  போகும் வேளைகளில் 

பட்டுப் பாவா டைஅணிந்து 
நாவால் மந்திரங் களையோதி  
கைகூப் புதலும் நிறையழகு 

அமெரிக் கர்கள் ஆங்கிலத்தை 

நீட்டியும் குறைத்தும் பேசும்விதம் 
இம்மியும் கொஞ்சம் மாறாமல் 
இழுத்துப் பேசும் விதமழகு 

அம்மா சொல்வதைக் கேட்காமல் 

உண்ணும் உணவை முடிக்காமல் 
சும்மா அங்கிங்கும் ஓடி 
அழுது புரள்வதும் அழகேதான் 

மாலை வேளையில் தந்தையுமே 

வேலை முடித்து வருகையிலே  
களிப்புடன் இருகை களையாட்டி 
குதிப்பது கொள்ளை அழகாகும் 

பாட்டி பூஜை செய்கையில் 

பூதி யணிந்து நின்றிறைவன் 
பாட்டை  இசைத்து மணியடிக்கும் 
பாங்கே அழகுக் கழகாகும் 

அதிதி செய்யும் செயல்களிலே 

எதில்தான் அழகில் குறைவில்லை 
பதில் இக் கேள்விக் கெனக்கில்லை 
புதிதாய் ஒன்றும் தோன்றவில்லை 

மாதங்கள் மூன்று போனவிதம் 

ஏதோ யெப்படி யோயறியேன் 
காதங்கள்  பயணம் செய்தபின்னும்  
காதில் ஒலிக்குது அவள்குரலே 

பழகா திருந்தால் பாவமில்லை 

புரிவதில் எந்த சோகமில்லை 
பழகிப் பிரியும் சோகம்தான் 
பிழிந்து மனதை வாட்டிடுடுமே.

மறுபடி அவளை நேரினிலே 

பார்க்கும் வேளை  வரும்வரையில் 
பாட்டிதன் வழி பார்த்திருப்பேன் 
மனதின் சோகம்  மறந்திருப்பேன் 


































2 comments:

  1. Sharing something I read on the eve of Deepavali

    தீபாவளி செலவுகளை பார்க்கும் போது கிருஷ்ணன் கருணையுள்ளத்தோடு நரகாசூரனை மன்னித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது...!!!

    ReplyDelete