கோவிலுக்குச் செல்லுபவர் எல்லோருக்கும் வெளியில் விட்டுச் செல்லும் அவர்களது செருப்பைத் தொலைத்த அனுபவமோ , அல்லது செருப்பு மாறிப்போன அனுபவமோ , ஒருதடவையாவது வாழ்கையில் நடந்திருக்கும். அப்படி இருக்கையில், அவர்கள் அடுத்த முறையிலிருந்து , அது நடக்காமலிருக்க பலவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் வியப்பில்லை.
இது பற்றி, நான் பட்டறிந்ததையும், பார்த்தறிந்ததையும் வைத்து ஒரு கவிதை!
படித்துவிட்டு உங்கள் கருத்துகளையும் , அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!
அடுத்த கவிதைக்கு அது வித்தாக அமையட்டுமே!
அன்புடன்
ரமேஷ்.
பாதுகைக்குப் பாதுகாப்பு
கோவிலுக்கு புதுச்செருப்பை
அணிந்துவரும் பக்தர்கள்
வாயிலிலே அச்செருப்பை விட்டுவிட்டுச் சென்றிடுவார்.
விட்டுவிட்டுச்
செல்பவரில். விதம்பலவும். இங்குண்டு
பிட்டுப் பிட்டு. அதையிங்கே. சற்றேநாம். ஆராய்வோம்.
உலகனைத்தும் காத்திருக்கும். இறைவன்நம் காலணியை
நலமாகக் காத்திடுவான்
எனமுழுதும். நம்பி அதை
நினைவினிலே கணமேனும்
நிறுத்தாமல். இறைவனைத்தன்
மனதிருத்தி மிகத்தொழுவோர்
ஒருரகமென் ரறிவீரே.
பரமனிடம் பாரத்தைப்
போட்டுவிட்டுச் சென்றபின்னும்
அரைமனது அந்நினைப்பை விட்டின்னும் விலகாமல்
பாதமலர் பூசைகளைப்
பார்த்துமனம் மகிழாமல்
பாதத்து அணிகலனை
நினைத்திருப்போர். ரகம்ஒன்று.
இல்லாத நலன்களெலாம்
இறைவனிடம் கேட்டாலும்
உள்ளதைக் காத்திடுதல்
அவனிடம் விடுவானேன்
என்றெண்ணி சங்கிலிவ. டம்கொண்டு காலணியை
நன்றாகப் பிணைத்திட்டு
உள்செல்வோர் ரகமொன்று.
வலக்காலின் பாதுகையை
வடப்பக்கம் வைத்திட்டு
விலக்கிச்சிறு தொலைவினிலே வேறொன்றைக் கிடத்திவிட்டு
பாதுகைக்குப் பாதுகாப்பு
தந்தபின்னே உட்சென்று
தோதாக வழிபடுமடி
யார்களரின் . ரகம்ஒன்று
வெளியிலே செல்லுகையில்
நைகீயும் ரீபோக்கும்
களிப்புடனே அணிபவர்கள் கோவிலுக்குச் செல்கையிலே
பழையதொரு ஜோடியையே
தேடியதைச் சூடுவதால்
இழந்தாலும் மறந்தாலும் இவர்க்கில்லை ஒருகவலை.
அடுத்தமுறை கோவிலுக்கு
நடையாகச் செல்லுமுன்னே்
விடையிந்தக் கேள்விக்குத் தவறாமல் சொல்லுங்கள்.
இந்த ரகங்களிலே
எந்தரகம் உங்கள்ரகம் ?
சிந்தித்து பதிலுரைப்பீர் ;உம் காலணியை இறைகாக்கும்.,