Search This Blog

Sep 6, 2015

வாழ்க்கையிலோர் புதிய தாள்.


நான் பணியிலியிருந்து முழு ஒய்வு பெற்றதும் (31-12-2014), எழுதிய முதல் கவிதை .
ஒய்வு பெற்றவுடன் நான் பெற்ற சுதந்திரத்தையும் , அதன் பின்னோடே  வந்து சேர்ந்த சில சந்தேகங்களையும் பகிர்ந்து கொண்ட பாடல் இது.
ஏற்கனவே சில நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டுவிட்டேன்.
இப்போது இது கனித்தோட்டத்தில் - சிறு திருத்தங்களுடன்!
அன்புடன்
ரமேஷ்

 

வாழ்க்கையிலோர் புதிய தாள்.

நேற்று எந்தன் அலுவலக வாழ்க்கையிலே   கடைசி நாள்
எழுதுகிறேன் இன்று முதல் வாழ்க்கையிலோர் புதிய தாள்..

 இது வரை

 காலைக்கடன்  முடிக்க உள்ள நேரம் கூடக்  கொஞ்சமே
நாளிதழ்கள் படிக்கக்கூட காலம் மிகுந்த பஞ்சமே.


 பளபளவென முகமும் மின்ன தினம் பண்ணணும்  ஷவரமே 
அனுதினமும் அலுவலகம் செல்லுதலே  விவரமே.

முழுக்கைச் சட்டை அழுக்கில்லாமல் சலவை செய்து அணியணும்   
பழுதில்லாமல் காலணிக்கும் பாலிஷ் செய்து போடணும்

இட்லிதோசை பொங்கல் செய்து தின்ன நேரம் இல்லையே
ஓட்சும் சோழச் சில்லுகளும் சிற்றுண்டியாய்  ஆனதே

 அரக்கப் பறக்க அள்ளிப்போட்டு தினமும் தயார் ஆகணும்
அடிச்சுப் பிடிச்சு நேரத்தோடு அலுவலகம் சேரணும்.

 கம்ப்யூட்டர்  முன் அமர்ந்து லாபக் கணக்கு  பார்க்கணும்
இம்மி அளவு தவறினாலும்  ஏனிதென் றாராயனும்

பவர் பாயிண்ட் ப்ரசென்டேஷன் பல வகையில் போடணும்
எவர் செய்த தவறென்று துப்பறிந்து துலக்கணும்.
 நேற்றுப் போட்ட திட்டங்கள் போட்ட படி நடக்கலே !
நாளை என்ன நடக்குமின்னு நிச்சயமாய்ப் புரியல்லே !.
 
என்றாலும் பல ஆண்டுகள் முன் நோக்கிப் பார்க்கணும்  
வென்றாலும் தோற்றாலும் விளக்கம் பல  கூறணும் .
வீடு வந்து சேர்ந்தாலும் வேலை விடுவ தில்லையே .
கைபேசி மெயிலில் இடைவிடாத தொல்லையே.

இனிமேல்

காலையிலே கிண்கிணு எனும் கடிகாரத் தொல்லையே
இன்று முதல் என் வாழ்வில் எந்நாளும் இல்லையே !

காலைக் குளிரைப் போர்வையிட்டு கதகதப்பாய் மாற்றலாம்.
தோன்றும் பொது துயிலெழுந்து தூக்க சுகம் காணலாம்.
நாள் முழுதும் நாலைந்து நாளிதழ்கள் படிக்கலாம்.
கேள்வி கேட்க ஆளின்றி கூகிள் வலை வீசலாம்.
காலைமுதல் மாலை வரை புத்தகங்கள்  படிக்கலாம்.
வேலை வெட்டி ஒன்றுமின்றி வெறும் பொழுதைப் போக்கலாம்.

உலகக் கோப்பை பந்தயங்கள்  அத்தனையும் பார்க்கலாம்.
சில சமயம் மனைவியுடன் வீட்டு  வேலை செய்யலாம்.


 சாதம் வடிக்கக் கற்கலாம்; சமையலுமே  செய்யலாம்.
வேதநூல்கள் தினம் படித்து  வாழ்வு நெறி வகுக்கலாம்.

நூலகங்கள் போகலாம் ; நல்ல படங்கள் பார்க்கலாம் ;
காலாரக்  காலை மாலை நடைப்  பயிற்சி செய்யலாம்.


பேரன்பேத்தி மழலைகேட்டு மனம் மகிழ்ந்து போகலாம்.
பாரம்  இன்றி   ஓடிப்  பாடி அவர்களோடு  ஆடலாம்.

செவிகுளிரப் பாடல்கள் சிறிது நேரம் கேட்கலாம்.
கவிதை எழுதிப் பழக லாம் ; கற்பனையில் மிதக்கலாம்.

ஆனால்


முதுமை வந்து சேர்ந்ததே, முதுகு வலியும் நேர்ந்ததே !
எதுவும் செய்ய இருமடங்கு நேரம் இன்று ஆகுதே!

ஏழு எட்டுப் படிகூட  மாடி ஏற முடியலே!
பாழாய்ப் போன முட்டி வலி பாடாய்ப் படுத்துதே !

சீனியர் சிடிசன் ஆனபின் சீனி குறைக்க வேண்டுமோ?
நான் விரும்பும் பண்டம் எல்லாம் நச்சாகப் போகுமோ?

ஒய்வு பெற்ற பின்னரே ஒரு நூறு காரியம்
தொய்வு இன்றிச் செய்யவே பட்டியல் பல  இருப்பினும்

செய்ய உறுதி இருக்குமோ? சோம்பல் வந்து சேருமோ?
பையப் பையப்  பார்க்கலாம், நடப்ப தென்ன நோக்கலாம் !


இப்படிப் பல எண்ணங்கள் என்னை வந்து குழப்பினும்
தப்பி தென்று தள்ளுவேன் ; தளர்வு நீக்கித் துள்ளுவேன் .

கரி முகத்துக் கடவுளும் , அறு  முகத்து  முருகனும்
விரிசடை யுமை பாகனும் , வந்து துணை நிற்கவே!

No comments:

Post a Comment