Search This Blog

Sep 8, 2015

கூவத்தின் கூவல்

சென்ற மாதம் சென்னையின் பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னை என்றால் உடனே நினைவுக்கு வரும் பலவற்றில் கூவமும் ஒன்று. அவ்வப்போது " கூவத்தை சுத்தம் செய்வோம் /செய்து கொண்டிருக்கிறோம் / செய்து விட்டோம் " என்றெல்லாம் செய்திகள் வருவது உண்டு. இந்த ஆண்டும் அதற்கு விதி விலக்கல்ல! ஆனால் கூவம் என்னவோ அப்படியேதான் ( அல்லது முன்னை விட மோசமாகத்தான் ) இருக்கிறது.
தன் நிலையைப் பற்றி கோவமே கூவும் பரிதாபக் கூவலாக  இந்தப் பாடலை அமைத்திருக்கிறேன்.
இந்தப்பாடலை eluthu.com இணையதளத்திலும் பதிவு செய்திருக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்


கூவத்தின் கூவல்

என்பேரு   கூவம்.  நான்ரொம்பப்    பாவம்
என்கதையைக்    கூறுகிறேன்    அதுரொம்ப    சோகம்
என்பேரைச்    சொல்லி
பலர்   அடைந்தார்கள்    லாபம்-ஆனால்
என் நிலைமை    மாறவில்லை,    அதுஎந்தன்   சாபம்.


சென்னைக்கு     மேற்கில்வெகு     தூரத்தில்.   பிறந்தேன்
கடல்நோக்கி   ஓடுகையில்    சென்னைக்குள்      நுழைந்தேன்
பளிங்குபோல    தெளிந்தவுடல்    அன்றுஇருந்    தாலும் 
களிம்புபோல     கருங்குழம்பாய்     இன்றுஆன   தென்ன?


மலஜலமும்   மூத்திரமும்      கழிவுநீரும்    நித்தம்
என்னுடலில்     கலந்திடுவார்    செய்வதில்லை   சுத்தம்-என் 
உடல்சேரும்     மழைக்கால்வாய்     என்னுயிரின்    நாளம்-அதை
அடைத்திட்டு   வீடங்கு     கட்டுதலா     நியாயம்?


வரும்நீரின்     வளம்வற்றி   வெறும்குட்டை   ஆனேன்பின்
துருனாற்றம்    துளைப்பதிலே   வியப்பெதுவும்    உண்டோ?.
கீழ்ப்பாக்கம்    என்றாலே    பைத்தியமென்    பதுபோல் 
கூவமெனின்    நாற்றமென்று    பொருள்கொள்ளல்    ஆச்சு.


இத்தனையும் சென்னை நகர் மக்களின் வில்  லங்கம்
அதனாலே வருகுதென்  பெயருக்குக்  களங்கம்.
சுத்தம் செய்யும் செயல்களில்  மெத்தனங்கள்  காட்ட
அத்தனையும் என்னுடலில் விஷமாகிப் போச்சே!


பலதடவை    எனைத்தூய்மை   செயத்திட்டம்    இட்டார்
உலகப்புகழ்   தேம்ஸ்ஸின்நிகர்     ஆவெனெனச்     சொன்னார்.
செலவுகள்பல    கோடிஅவர்     செய்ததுதான்.   மிச்சம்-என்
நிலைமட்டும்   மாறவில்லை   எனக்கில்லை   மச்சம்.


எனையீன்ற   கடல்அன்னை    யுடன்சங்கம     மாக   
சென்னைவழி     செல்வதன்றி     மாற்றுவழியு   மறியேன். 
வழித்தனியாய்ச்   செல்பவளை   வன்புணரும்     செயல்போல்என்
எழில்குலைத்தே    அழித்திடுமிச்    செயலென்று    நிற்கும்?


எனைநெருங்கையில்    இருகரத்தால்    மூக்கடைப்பதை   விட்டு
என்உடல்சேரும்   உம்கழிவின்   சாக்கடைகளை   யடைப்பீர்-என்
இருகரையிலும்   முளைத்திருக்கும்    இருப்புகளை    யகற்றி
மறுஇடமொன்று   தந்தங்கே   புல்வெளிகளை   யமைப்பீர் .


செல்வச்சீர்    செழுமையுறு    சென்னையுறை    மக்காள்!
குலைந்திட்ட    எனதெழிலை    மீட்டுதல்உம்    கடனே!
இதுவரையில்    செய்துவரும்     இழிசெயல்களை    விடுத்து
புதுவழியைப்    பதிவுசெய்வீர்    இன்றுமுதல்   உடனே!

 

No comments:

Post a Comment