Search This Blog

Jan 21, 2024

அயோத்தியில் ராமர் கோயில்

அயோத்தியில் ராமர் கோயில் 


நாளை அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் பால ராமரின் சிலையை நிறுவவிருக்கும் நேரத்திலே,  அந்நிகழ்வையொட்டி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




புதைபட்டு  பூமியிலே ஆண்டுபல ஆயினும்   

வதையுண்டு போகாமல்  பக்தர்கள் மனதிலே 

விதையாக உயிர்வாழ்ந்து  காவியமாய்க்  கதைகளாய்   

சிதையாமல் சிதறாமல் வேரூன்றி  வளர்ந்ததே! 


தவமிருந்து தசரதனும் கோசலையும் வேண்டிட  

அவதரித்த அண்ணலுக்கு அவர்பிறந்த இடத்திலே  

அயோத்திமா  நகரிலே அழகுமிகு  கோவிலில்  

அவருடைய திருச்சிலையை நியாசம்*செய்யும்  நாளிதே .                   

                                                                                                                                    (*நியாசம்=consecration)

வீடெடுக்கும் வினைமுடிந்து கூடிவந்த நாளிலே 

கோடிமக்கள் கூட்டமாக கூடிநின்று களித்திட 

நாடுமுழுதும் வீடுதோறும் தீபமேற்றி  மகிழ்ந்திட 

பாடிப்பாடல் பாலராமன் புகழையெவரும் போற்றுவோம்  


அன்புடன் 

ரமேஷ் 








Jan 15, 2024

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து 







மங்களப் பொங்கல்தைத் திங்களின் முதல்நாள்

செங்கதிர் பரப்பி சுடர்விடும் சூரியன் 
தென்னரைக் கோளம் விட்டே விலகி 
வடதிசை நோக்கி வருமின் நாளில்
செங்கல்கள் அடுக்கி செய்தவோர் அடுப்பில் 
செந்தழல் வந்தெழச் சிறுவிறகெரித்து 
மண்கலப் பானை மேல் மஞ்சளைச் சுற்றி
பெண்கள் கூடிக் குலவை எழுப்ப 
வெல்லம் நெல்லரிசி பாலுடன் சேர்த்து
நல்சுவைப் பொங்கல் பொங்கிடச் செய்வோம்.

உறவுகள் சிறந்து உள்ளங்கள் சிரிக்க
அறம்பல நிறைந்து  அல்லவை அகல
நெறிமுறை தவறா அரசுகள்  அமைய
இறைவனை  இந்நாள் இறைஞ்சிப் பணிவோம்.  

அன்புடன் 

ரமேஷ் 



Jan 7, 2024

சாய் சங்கரா அறக்கட்டளையின் வெள்ள நிவாரணப் பணி

சாய் சங்கரா அறக்கட்டளையின் வெள்ள  நிவாரணப் பணி


சென்ற மாதம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையால் மிகவும் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி. நான் முதலாவதாகப் பத்து வருடங்கள்  பணிபுரிந்த  ஸ்பிக் தொழிற்சாலை அருகிலுள்ள முத்தையாபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்று அறிந்தேன். நானும் என் மனைவியும் இணைந்து நடத்தும் ஸ்ரீ சாயி சங்கரா அறக்கட்டளையின் மூலம் எங்களால் முடிந்த அளவு உதவிசெய்ய எண்ணி, ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்தவரும் முத்தையாபுரம் அம்மன் கோவிலில் தர்மகர்தாவாக இருப்பவரும் ஆன அழகுராஜ் என்ற பொதுநல ஆர்வலரின் உதவியுடன் , அப்பகுதியில்  வசிக்கும் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினோம். அந்நிகழ்ச்சி பற்றி ஒரு பாடலை இயற்றி பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 


இடைவிடா மல்பெய்த அடைமழை யால்மக்கள் 

படாத பாடுற்று படுகின்ற துயரத்தை 

எங்களால் இயன்றைவரை  போக்கிடும் பணியிலே   

சங்கரா சாயி  அமைப்பு 




இல்லங்களில் எல்லாம் மழைநீர் புகுந்தமையால் 

இன்னல்கட் குள்ளான மக்கள் - அன்னார்க்கு

பொன்வைக்கும் இடத்திலே பூவைப்ப தைப்போல 

சின்னதோர் உதவி செய்தோம்.





உடுக்க மாற்றுடைகள் ஓர்சிறிது பருப்பரிசி  

படுக்கப் பாய்போர்வை தலையணைகள் - கூடவே  

துடைக்கத் துணித்துண்டும் சேர்த்தவோர் சிறுமூட்டை 

கிடைக்கப் பெற்றார் பலருமே 




முத்துநகர் அருகிலே  முத்தையா புறத்திலே

இத்தகைய நிகழ்வு  ஒன்றை - மெத்தவும் 

அழகாக  அருமையாய் குறையின்றி முறைசெய்த  

அழகுராஜ் அவர்க்கு நன்றி!







Dec 5, 2023

இயற்கைச் சூழல்

 

இயற்கைச் சூழல் 

நண்பர் ஒருவர் அனுப்பிய படத்தின் தாக்கத்தால் எழுதிய பாடல் இது.

அன்புடன் 

ரமேஷ் 





உச்சிமலை உயரத்தில் பச்சைநிறப் புல்வெளிகள்!

அச்செடுத்து வார்த்ததுபோல் அடுக்கடுக்காய் விளைநிலத்தில்  

பச்சரிசிப் பயிர்வளர்க்கப் பாடுபடும் உழவர்கள்!

மச்சுவீட்டின் கூரைமேல் வெச்செனவு மின்தகடு *. *solarpanel

நச்சொழித்த நற்காற்றும் நச்சிநம்மைத் தேடிவர,

நச்சுயிர்த்தீ நுண்மிகளும் நமைத்தீண்டா நற்சூழல்.


Nov 9, 2023

சனாதனம்

சனாதனம்

சென்ற செப்டம்பர் மாதத்த்தில் சென்னையில்  "சனாதன ஒழிப்பு மகாநாடு" என்ற பெயரில் நடைபெற்ற ஒரு இந்துமத எதிர்ப்புக்  கூட்டம் , இங்கு மட்டுமன்றி நாடு முழவதும் ஒரு பேசுபொருளானது. தமிழக அரசின் மந்திரிகள் இருவரின் பங்கேற்போடு நடந்த இந்த கூட்டத்தில் சனாதனத்தை  அடியோடு ஒழிப்போம் என்று பிரகடனம் செய்தார் ஒரு அமைச்சர். இதன் விளைவாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புக்குப்  பிறகு  ' நாங்கள் இந்து மதத்திற்கு எதிரிகள் இல்லை; சாதிப்  பிரிவுகளை ஒழிப்போம் என்றுதான் கூறினோம் " என்று ஒரு விளக்கம் வேறு! சாதிப்  பிரிவுகளையே  நம்பி அரசியல் செய்யும் கட்சிகளிடமிருந்து வரும் இந்த விளக்கம் ஒரு வேடிக்கை ! இந்து மதத்தினரை  கிள்ளுக்கீரையாக நினைக்கும் இவர்களுக்கு இந்துக்கள் எல்லோரும், சாதிப் பாகுபாடு இன்றி  இணைந்து, வரும் தேர்தல்களில் ஒரு பாடம் புகட்ட வேண்டும். மதச்சார்பின்மையை மதிக்கும் மற்ற மதத்தவர்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும்.

அன்புடன் 

ரமேஷ்       

 


ச(ன்)னா தனம்பற்றித் சற்றும்  புரியாமல் 

கன்னா பின்னாவென்று வன்சொற்கள் விட்டெறிந்த  

புண்ணாக்குப் பதரொத்த புன்நாக்குப்* பேர்களையே  

தன்மான இந்துக்கள் என்றைக்கும்  எப்போதும் 

மன்னிக்க மாட்டார்கள்;  ஒன்றாய்  ஒருங்கிணைந்து  

நன்றாக ஓர்பாடம் நிச்சயமாய்க் கற்பிப்பர் 

பின்னோடு வரும்தேர் தலில்  

 

*புன்நாக்குப் பேர்கள் = இழித்துப் பேசும் நாக்கை உடையவர்கள்  






Oct 31, 2023

முகங்கள்

இந்தப் பாடலுக்கு முன்னுரை தேவை இல்லை!

அன்புடன் 

ரமேஷ் 

முகங்கள் 




உனக்கென்று ஓர் முகம் உறவுக்கு ஓர்முகம் 

ஊராருக் கெனவேறு பலமுகம் 

மனையாளுக் கொருமுகம் மக்கட்கு ஒருமுகம்

தனியாக ஒவ்வொருவர்க் கொருமுகம்   

  

அனல்கக்கி தணல்வீசும் சினமுகம்  

மகிழ்வோடு முறுவலிக்கும்   மலர்முகம் 

தனவானுக் கோர்முகம் தரித்திரர்க் கோர்முகம்

இனங்கண்டு கணப்பொழுதில்  மாறும்.   


கணக்கின்ற பலமுகம் ஊரார் உலகுக்கு 

உருவாக்கி உலவவே விட்டேன் 

எனக்கென்று என்னோடு ஜனித்திருந்த தனிமுகத்தை 

எங்கயோ நான்தொலைத்து விட்டேன் 


வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு முகங்களை 

அணிந்தே உலவுகிற தாலே 

எவ்வா றிருக்கும் என்முகம் என்றே 

என்றோ நான் மறந்து விட்டேன் 


கனக்கின்ற மனதோடு கேட்கிறேன் அம்முகத்தை 

கண்டவர் யாரேனும்  உண்டோ?

அனுதாபம் என்மேல் கொண்டம் முகத்தை 

அடையாளம் காட்டவே வேண்டும்!

 



Oct 23, 2023

நவராத்திரி- ஒன்பதாம் நாள்



நவராத்திரி- ஒன்பதாம் நாள் 



 


சித்திகள் எட்டையும் சிவனுக்கு அருளியபின் 

-----அவனுருவில் பாதி யானாள் 

முத்தேவர் முத்தேவி யர்களை சிருட்டித்த 

------சித்தாத்ரி தேவித் தாயே.


விட்டுணி* வின்துணைவி செல்வப் பொருள்தலைவி 

-----இலக்குமி என்னும் தேவி 

மொட்டவிழ்த்த தாமரை முழுமலர் மேலமர்ந்து 

-----அருள்புரியும் அலைமகள் இவள் 


சித்தன் பித்தன் நீறணிக் கடவுளெனப் 

-----பலபெயர் கொண்ட ஈசற் 

குற்றதோர் மனைவியாய் பனிமலை மேலமர்ந்து

------அருள்புரியும் மலைமகள் இவள் 


நான்முகத்தி னன்கிழத்தி ஞானங்க ளின்இறைவி

----- நன்னூலின்  தலைவி வாணி 

வெண்ணாடை யையுடுத்து வீணையக் கரமேந்தி 

-----அருள்புரியும் கலைமகள் இவள்


அலைமகள் மலைமகள் கலைமகள் என்றுபல 

-----உருவங்கள்  எடுத்த இறைவி

உலகையெலாம் காத்துப்பல நலங்களால் நிறைக்கவே 

-----தலைவணங்கி வேண்டிப் பணிவோம் 

* விட்டுணு=விஷ்ணு 

நிறைவு

 

சைலபுத் திரிபிரம்ம சாரிணி சந்திர 

-----காந்தை குஷ்மாண் டனி

ஸ்கந்த மாதாகார்த்தி யாயினி காலாத்ரி 

-----கௌரிமா சித்தாத் த்திரி 

என்றநவ தேவியரின் சரிதத்தை என்கவிதை

-----மூலமே எடுத்துரைத் தேன் 

இன்னும்பல நற்கவிதை நான்புனைந்து படைத்திடவே 

-----தேவியருள் தரவேண்டு வேன்.