Search This Blog

Oct 24, 2022

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

 தீபத்திருநாள் வாழ்த்துக்கள் 



அன்புடன் 

ரமேஷ் 



நரகாசுரனை கிருட்டிணன் கொன்று 

-----உலகோர் மகிழ்ந்தது  இந்நாளோ? 

இரகுகுல ராமன் சீதையை மீட்டு  

-----அயோத்தி மீண்ட நன்னாளோ?

 

என்னா ளாயினும் இல்லந்தோறும்

-----தீபங்கள்  ஏற்றித் துதிக்கின்ற 

இந்நா ளில்லெல் லோர்க்கும் எந்தன் 

-----தீபத்  திருநாள் வாழ்த்துக்கள்  


மாசுபடுத்தா வண்ணம் வெடிக்கும் *             * Green crackers

-----வெடிகளை வாங்கிட வாழ்த்துக்கள்

காசு கொடுத்து வாங்கிய வெடிகள் 

-----காதைப் பிளந்ததிட  வாழ்த்துக்கள் 


 

வீட்டில் பட்சணம் செய்ய முயன்ற 

-----முயற்சிகள் வென்றிட வாழ்த்துக்கள் 

வெளியில் வாங்கி விழுங்கிய பட்சணம் 

-----வயிறோ டுடன்பட வாழ்த்துக்கள் 


பலமணி நேரம் பார்த்து எடுத்த 

-----லேட்டஸ்ட் பேஷன் புடைவைகளை 

பக்கத்து பிலாட்டு பாமா முந்தியே 

-----வாங்கா திருக்க வாழ்த்துக்கள் 


மனதிருள் நீங்கி ஒளிபெற் றுள்ளம்  

-----துலங்கி மிளிர்ந்திட வாழ்த்துக்கள்

கனவுகள் பலித்து  அனுபவம் இனித்து 

-----மனையறம் சிறந்திட வாழ்த்துக்கள் 


  

 


Oct 22, 2022

பிரதோஷப் பாடல் - 47

 பிரதோஷப் பாடல் - 47


இன்றைய பிரதோஷப் பாடல். 

கீழ்க்கண்ட படத்தின் உந்துதலால் எழுந்தது!  

பிரதோஷத்தன்று, நந்தியின் கொம்பினிடைவழியாக இறைவனை  தரிசித்து, நந்தியின் காதில் நமது வேண்டுதல்களை உரைத்தோமாயின், அப்பிரார்தனைகள் நிறைவேறும் என்று கூறுவர். 

இது குறித்த ஒரு சிறு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 







அந்தி வேளை *வந்து கோயில் 
-----ஈசன் சந்தி** முந்தியே 
குந்தி^ யுள்ள நந்திபின்னே 
-----நிந்து# அந்த நந்தியின் 
காதில் நமது விரும்புதலை  
-----ஓதி வேண்டி வணங்கிடின்
ஆதிசிவன் அவன் அருளால் 
-----அவை அனைத்தும் கிட்டிடும்


வந்து கோயில் = கோவில் வந்து 
** சந்தி = சன்னதி  
^ குந்தி = கால் மடித்து அமர்ந்திருத்தல் 
நிந்து= நின்று 



Oct 19, 2022

வீடற்ற நாய்கள் (stray dogs)

வீடற்ற நாய்கள் (stray dogs)

நேற்று மாலை தொலைக்காட்சிகளிலும், இன்று காலை செய்தித் தாள்களிலும் இடம் பெற்று இருக்கும் ஒரு செய்தி  -  ஒரு ஏழு மாதக் குழந்தை ஒரு தெருநாயால் கடிபட்டு உயிர் இழந்தது  -என்பது.  இது நடந்த இடம் ஒரு தெருவில் அல்ல ! புது டெல்லியில் உள்ள ஒரு உயர்ந்த ரகக்  குடியிருப்பில் -  நம் பிரிகேட் லேக் பிரண்ட்  போன்றது! இந்தக் குடியிருப்பில் வாழும் பலரும் இத்தகைய தெரு நாய்களுக்கு பயந்து வாழ்கின்றனர்! இங்கேயும் கதை இதுதான்! வீட்டில் வளர்க்கப் படாமல் சுற்றித் திரியும் தெரு நாய்களின் உரிமை பற்றி பலரும் பேசலாம்! சட்டங்களும் இருக்கலாம்! ஆனால்  ஏதேனும் துரதிஷ்டிரமான சம்பவங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பு ?

இது பற்றி ஒரு சிறு பாடல்.

துயரத்துடனும், ஒரு சிறிது பயத்துடனும் 

ரமேஷ்.




நாய்கட்கு நியாயம் கேட்டு வாய்பேசும் வட்டத் தார்கள்  

சேயொன்று தெருவில் மேயும் நாயொன்றின் வாயில் சிக்கி 

காயங்கள் பட்டுப் பின்னே பலியாகிப் பிணமாய்ப் போனால்  

வாய்விட்டுக் கதறும் அந்த தாய்க்கென்ன பதிலைச் சொல்வீர் ? 

Oct 1, 2022

நவராத்திரி - துர்க்கையின் போர்க்கோலம்

நவராத்திரி - துர்க்கையின் போர்க்கோலம் 

சென்ற பதிப்பில் துர்க்கையின் அவதாரத்தைப் பார்த்தோம். இந்தப் பதிவில் வெவ்வேறு கடவுளர்களும், தேவர்களும் துர்க்கைக்கு பல்வேறு ஆயுதங்களை அளிக்க, அவவற்றைப் பூண்டு மகிஷாசுரனுடன் போர்புரிய  துர்க்கை தயாரான காட்சியைக் காண்போம்- ஒரு பாடல் வடிவில்!

அன்புடன் 

ரமேஷ்  


DURGA’S ARMOURY

 

Now, it was the turn of every God to bestow her with divine gifts and weapons. In the process, Shiva gave away a trident to her while Vishnu gave her a discus similar to the one he possesses. Varun or the Rain God gave her a conch shell, the Fire God gave her power, the Wind God presented her with bow and arrows, Indra offered his thunderbolt and the bell taken off from the mighty Airawat elephant. Yamraj rendered kaldand, Prajapati gifted her Sphatik (snow rock crystal) necklace and Bramha handed out a kamandal. The King of mountains - Himalaya – gave her a Lion which became her vehicl



துர்க்கையின் படைக்கோலம்

திருமாலின் சக்கரம் ஒருகரத்திலே  

திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே 

இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்

தந்ததைக்  கொண்டனள்  ஒருகையிலே

வாயுதே வன்தந்த  வில்லம்புகள்

ஆயுதமாய்  ஏந்தினாள் ஒருகையிலே 

பிரமனின் கமண்டலம் ஒரு கையிலே- விசுவ

கருமனின் கோடாலி ஒரு கையிலே

காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்

சூலியவள்  சூடினாள்  இருகரங்களில்.


உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்

செங்கதிரோன் சீற்றமதைக் கண்களில் ஏற்றினள்

சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைக்கவே

இமயவான் அளித்தஅரி மாமீது ஏறினள்


Sep 29, 2022

நவராத்திரி- துர்க்கை அவதரித்தல்

 

நவராத்திரி- துர்க்கை அவதரித்தல் 

 

ஒன்பது நாட்களும், ,துர்க்கை , சரஸ்வதி, லக்ஷ்மி  வடிவங்களில் தேவியை வழிபடும் நாட்கள்

 

அண்டங்களை எல்லாம் துன்புறுத்தி  வந்த மகிஷாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்ய, மும்மூர்த்திகளும், பிற தேவர்களும் இணைந்து , துர்காதேவியைத் தோற்றுவித்து, அவளுக்கு சகல ஆயுதங்களையும் அளித்ததாக , மகரிஷி மார்க்கண்டேயர் எழுதியுள்ள 'துர்கா சப்தசதிஎன்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவதாரம் எடுத்த துர்க்கை மகிஷாசுரனோடு போர் புரிந்து , அவனை அழித்ததை நவராத்ரியின் போது கொண்டாடுகிறோம்.

இதைப் பற்றி ஒரு கவிதை. சில வருடங்கட்கு முன் பதிவு செய்தது.

 சற்று நீண்ட கவிதை என்பதால், இந்த நவராத்திரியின்போது மூன்று பாகங்களாகப் பதிவு செய்கிறேன்.

 பகுதி 1. துர்க்கை அவதாரம் 

பகுதி 2. துர்கை போர்க்கோலம் 

பகுதி 3. அரக்க வதம் 

பகுதி 1 இந்தப் பதிவில் 

படித்து தேவி அருள் அடையுங்கள்.

 

ரமேஷ்  

 

HOW DURGA WAS CREATED.

 

Mahishasura had snatched the rights of the Sun, Indra, Fire, Wind, Moon, Yama, Varun (rain) and other gods and has made the heavens his new home.

Now, the homeless demi-Gods roamed on earth like ordinary humans as they had nowhere to go. The demi-Gods spoke of how they were now counting on the Holy Trinity to save them from this misery. Listening to the anguish of the demi-Gods, the bearer of discus – Lord Vishnu – emitted a divine light. Similarly, Brahma, Shiva and Indra emanated divine light that combined to form a huge mountain of great energy.



The demi-gods were amazed at the flames of that energy being discharged in all the four directions. That mass of energy was unmatchable in the three worlds and in no time it got converted into a woman. Her face was formed as a result of Shiva’s divine light. Yamraj’s (God of death) divine energy gave her long, lustrous hair. Vishnu’s almighty energy formed her powerful arms. Her breasts were formed as a result of the Moon God’s power. Varun’s might made her thighs and calf muscles while the Earth formed her buttocks. Her feet were shaped when Bramha blessed her with his divinity and the Sun’s ability transformed into the fingers of her feet. The Vasus shaped the fingers of her hands and Kuber’s prowess patterned her nasal passage. Agni or the Fire God’s vigour translated in the three eyes of the devi, while Prajapati’s efficiency took the shape of her teeth. Thus, the great Goddess Durga came into being.

 

 

 

துர்க்கை அவதரித்தல்

முக்கண்ணன் முகமளித்தான்;  காலனும் குழல்தந்தான்.
அக்கினியும்  அவள்மூன்று கண்ணா யினான்  
நீள்நாசி  திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும் 
அஷ்டவசு தேவர்கை   விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும்  வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும்  அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள்
!

 *-திருவுக்கு அரசன்= குபேரன்
** - 
மண்ணரசி = பூமாதேவி 

Sep 27, 2022

தெரு நாய்கள்

இன்று காலை "பிரிகேட் லேக் பிரண்ட் " வளாகத்தில் நண்பர் மதுசூதனுடன் பேசிக்கொண்டே நடக்கும்போது சில தெருநாய்களைக் கண்டு ஒதுங்கினேன்.அப்போது நண்பர் கூறினார் - " பயப்படத்  தேவையில்லை! இவைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது" என்று. அதற்கு அடையாளமாக கழுத்திலே ஒரு பட்டை காணப்பட்டது. காது நுனியும் வெட்டப்பட்டு இருந்தது. 

அப்போது எனக்குத் தோன்றியது  - "சரி, இந்த அடையாளங்களோடு நாய்களைப் பார்த்தால் பயப்படத்  தேவையில்லை. மனிதர்களையும்  "இவர்  எத்தகையவர்" என்று பார்த்தவுடனே கண்டுகொள்ள, இம்மாதிரியான அடையாளங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?" 

இக்கருத்து ஒரு கவிதை வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 

 



தெரு நாய்கள்



தடுப்பூசி போடப் பட்டு
------தெருவிலே திரியும் நாயால்
நடப்போர்க்கு ஆபத் தொன்றும்
------நேர்ந்துவிட  நியாயம் இல்லை

காதுநுனி வெட்டி இருந்து
------கழுத்திலே பட்டை இருந்தால்
ஏதுமந்த நாய்க ளாலே
------எவர்க்கும்கே  டில்லை யென்றே .
பார்த்ததும் அறிந்து கொள்வோம்
------பயப்படத்  தேவை இல்லை

அதுவேபோல்   மனிதர் களையும்
------ பார்த்ததும்  பகுத்து அறிந்து
இடரிவர் இழைப்பார்  என்றால்   
----- தொடர்பினை விலக்க வழிகள்   
எதுவேனும்  உண்டோ அறியேன்  
-------மதிஞானம் உடையோர் உரைப்பீர் !




Sep 25, 2022

மஹாலய ( மாளய) அமாவாசை

பல்வேறு காரணங்களால் சிலமாதங்களாகத் தடைப்பட்டிருந்த என் கவிதைப் பயணத்தை,
நண்பர் ஒருவரின் உந்துதலால் மீண்டும் தொடங்குகிறேன், இந்த மாளய அமாவாசை தினத்தன்று!

அன்புடன் 
ரமேஷ் 

மஹாலய ( மாளய) அமாவாசை

விண் செல்லும் பாதையிலே

வீற்றிருக்கும் முன்னோரை* 

மண்வாழும் மாந்தரெலாம்
எண்ணத்திலே இருத்தி

எண்ணீரை** அவர்க்குணவாய்
அளித்தின்று தொழுவாரேல் 

எண்ணற்ற பலன் பெறுவர்  
என்றுமவர் ஆசியினால் ! 

* உயிர் பிரிந்தபின் விண்ணுலகம் ( சொர்க்கம் ) அடையுமுன், மூன்று தலைமுறை பித்ருக்கள்
பித்ருலோகத்தில் இருப்பர் என்பது ஐதீகம்.

** எள் + நீர் = எண்ணீர்