Search This Blog

May 10, 2017

மவுண்ட் ரோடு மெட்ரோ ரயில் நிலையம்

மவுண்ட் ரோடு மெட்ரோ ரயில் நிலையம் 

 NEWS ITEM -1 ; செய்தி -1

UNDERGROUND METRO  RAIL SERVICE TO BE COMMISSIONED
சென்னையில் பாதாள  மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் !

NEWS ITEM - 2 ;  செய்தி -2

MOUNT ROAD CAVED IN ABOVE THE UNDERGROUND METRO RAIL LINE TRAPPING  A BUS AND A CAR IN THE CRATER FORMED!

சென்னை மவுண்ட் ரோட்டில் பாதாள மெட்ரோ ரயில் பாதைக்கு  மேலே தெரு பிளந்து வண்டிகள் கீழே இறங்கின!

இவை பற்றி -----

அன்புடன் 

ரமேஷ் 




"அண்டர் கிரௌண்ட் மெட்ரோ"க்கு 
----------அவசரமாய்ப் போவதற்கு  
"என்ட்ரி பாயின்ட்" மவுண்ட் ரோட்டில் 
-----------இப்படியே கொடுத்துவிட்டார் !
கவிழ்ந்த வண்டிகளின் 
-----------கதவைத் திறந்து கொஞ்சம்  
தவழ்ந்து கீழ்சென்றால் 
------------ரயில்நிலையம் மிக அருகில்!


May 5, 2017

கெம்பிளாஸ்ட் பொன்விழா


நேற்று (4-5-2017) கெம்பிலாஸ்டின் பொன்விழாக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கூடப் பணிசெய்த பலரையும் சந்தித்து   அளவளாவவும் , நிறுவனர்களைச் சந்த்தித்து வாழ்த்துக்கூறவும் முடிந்தது. அந்த நிகழ்வின்  முடிவில் எனது கவிதைப்  பதிவைப்  படித்து ரசிக்கும் நண்பர்கள் ராம்குமார் சங்கரும், கிருஷ்ணமூர்த்தியும் , இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று கேட்டதின் விளைவே இந்தப் பதிவு. 

நிகழ்சியைப் பற்றியல்லாமல் , "நிகழ்ச்சியின் நாயகன் " கெம்பிளாஸ்ட் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


கெம்பிளாஸ்ட் பொன்விழா 

பூவிரித்த மலர்ச்சோலை மகரந்த  மணம்பரப்பும்
காவிரிக் கரை ஓரத்தில்
பீவிசி பிசின்செய்யும் தொழிற்சாலை நம்நாட்டின்
தேவைஎனக்   கண்டறிந்து
மேவி*யதை மேட்டூரில் அயிம்பத்து ஆண்டுகளாய்
பாவித்து வரும் மாட்சியை
நாவிரித்து நவிலவே முடியுமட்டும்  முனைகின்றேன்
பாவொன்றை நான் புனைந்து.

நாராயணர் அன்று வித்திட்டு வேர்கொண்ட
ஆறா யிரம்கொள்  ளளவு
நூறுபல  நூறாகப்  பல்கிப் பெரியதோர்
விருட்சமாய் வளர்ந்த தின்று .

பசைவகைப் பீவிசி** பிசின்செய் திறத்திலே
இசைஎவரும் இல்லை இவர்க்கு.
புகைமணல்மம்@, எரிகாரம்@ , க்லோரோ மீதேனென்று
வகைவகை வேதியல் களை 
தகவோடு  செய்வதில் நிகரில்லை இவர்க்கென்று  
மிகையில்லை  என்றுரைத்தால்.#

திருமறைக் காட்டினில் , உப்பனார் ஓரத்தில் 
பிரவிடையான் ஆற்றின் கரையில்
திரைகடல் கடந்தோடி  நைல்நதியின் நிலப்பரப்பில் 
துறைமுகம் சைடின்*** அருகில் 

வெவ்வேறு   இடங்களில் நுண்தொழில் நுட்பமிகு
செய்கூடம் பலவும் நிறுவி 
சங்கரரும் அவர்குழுவும் சாதித்த தையெந்த 
கிங்கரனும்  மிஞ்சல் அரிதாம்!

பொன்னைவிட , அளவிலே பெரிதென்னும் புகழைவிட 
நன்மதிப்பும் நற்பெயருமே 
என்றுமே பெரிதென்று ஏறு நடைபோட்டு 
பொன்விழா இன்று காணும் 
நிறுவனம் கெம்பிளாஸ்ட் வைரவிழாக் காண 
இறையவன் அருள் தருகவே!

*     மேவி = இருக்கச் செய்து, நிறுவி 
**   பசைவகைப் பீவிசி= paste resin .
@ புகை மணல்மம்=fumed silica , எரிகாரம்=caustic soda 
*** துறைமுகம் சைட் = port 
#      "என்றுரைத்தால் மிகையில்லை" என்று படித்தறிக












Apr 30, 2017

தமிழா! விழித்தெழு!


சில நாட்களுக்கு முன்பு  நிதி ஆயோக் ( Niti Aayog ) அமைப்பு மேற்கொண்ட  ஒரு கணக்கெடுப்பின்படி, தமிழ் நாடு மூன்றாம் இடத்திற்கு தள்ளப் பட்டு இருக்கிறது. கருநாடக மாநிலம் முதல் இடத்தையும், ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இது எல்லாத் தமிழர்களுக்கும் கவலையை வரவழைக்கும் ஒரு செய்தி.
இது பற்றி ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை.

அன்புடன் 
ரமேஷ் 

முக்கியமான பி.கு: 
நிதி ஆயோக் ( Niti Aayog ) அமைப்பின்  கணக்கெடுப்பு பற்றிய குறிப்பை கட்டுரையின் முடிவில் காண்க.

தமிழா! விழித்தெழு!

தமிழா! விழித்தெழு!
தூங்கிவிட்டாயா?
கல்தோன்றி மண்தோன்றாக்  காலத்தே முன்தோன்றி மூத்தவன் நீ!
விந்தியத்தின் தென்திசைத்  திராவிடத்திருநாட்டின் தலைமகன் நீ!
மற்ற திராவிட இனங்களுக்கு முன்னோடி நீ!

இப்படி இருக்கையில்

அண்டைத்   திராவிட நாடுகளான கர்நாடகமும் ஆந்திரமும்  உன்னை மிஞ்சிவிட்டனவே!
கர்நாடகம் காவிரித் தண்ணீரைத் தர மறுக்கலாம்!
நாமும் அதை மறந்துவிடலாம்!
ஆந்திரம் கிருஷ்ணா நதி நீரைத் தராமல் இருக்கலாம்!
அதையும் நாம் மன்னித்துவிடலாம்!

ஆனால்-

இன்று இந்த  இரண்டு மாநிலங்களும்  நம் தமிழ் நாட்டை மிஞ்சி விட்டனவே!
இது பெரும் இழுக்கன்றோ?
இந்த நிலைமை உடனே மாற
விழித்திடுவோம்!  கொதித்தெழுவோம் !

"கே"வும் "ஜே "வும், பதவியில் இருக்கையில்  
கனியும், சசியும் உதவிகள் செய்கையில்  
மாறன்,ராஜா, மற்ற "மாண்பு"களும்   
விழுக்காடு பெற்றே பழுதில்லாமல் வேலையை   முடிக்கும்   அலுவலர் பலரும் 

இவர்கள் எல்லாம் இருக்கும் வரையில்
லஞ்ச லாவண்யப்  போட்டியில் நம்மை மிஞ்சிட  ஒருவரும் இல்லை என்று 
இறுமாந்திருந்த நிலைமை மாறி  
மூன்றாம் இடமே இன்று பெற்றோமே !
இந்த நிலை இன்னும் நீடிக்கலாமோ?

வீறு கொண்டுநீ விழித்தெழு தமிழா ! 
வெற்றி விரைவில் வந்து உன்னை  அடையும்!

Context :

Survey Report by Niti Aayog 
Karnataka, Andhra Pradesh & Tamil Nadu Most Corrupt:
Of  20 states surveyed , people in Karnataka (77%) faced corruption the most in accessing public services. This is followed by Andhra Pradesh (74%) and Tamil Nadu (68%),











Apr 22, 2017

உடனே மூட உத்தரவு

உடனே மூட  உத்தரவு 

கோவில்கள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள் ஆகியவைகளுக்கு அருகே டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது   -- இது அரசு உத்தரவு . இதை மீறி பல கடைகள் இருப்பதை பார்க்கிறோம். அது போன்ற  ஒரு கடையைப் பற்றி ஒரு கற்பனைக் கவிதை.

அன்புடன் 
ரமேஷ் 


உடனே மூட  உத்தரவு 


எங்கள் சொந்தக் கிராமத்தில் 
பள்ளி இருக்கும் தெரு முனையில்   , 

ஆளும் கட்சியின் ஆள் ஒருவர்  
திறந்தார் ஓர்டாஸ் மாக் கடையை.

பள்ளியும் கள்ளுக்  கடைகளுமே  
தள்ளி இருத்தல் வேண்டுமன்றோ?

கொதித்து எழுந்தார்  ஊர்மக்கள் 
இதுமுறை அல்ல வெனச்சொல்லி. 

பஞ்சா யத்தும் கூடியது 
அஞ்சுமணி  நேரம் அலசியது.

நிச்சய மாக மூடிடவே 
அச்சம் இன்றி  முடிவெடுத்தார்.

மறுநாள் உடனே மூடிவிட்டார் 
---------
---------
சிறுவர் பள்ளிக் கூடத்தை!-

படித்துக் கிழிப்பவ ரைவிடவும் 
குடித்துக் களிப்பவர் அதிகமன்றோ !




Apr 17, 2017

ஒரு மைல்கல் - என் நூற்றி ஐம்பதாவது பாடல்.

ஒரு மைல்கல் - என் நூற்றி ஐம்பதாவது பாடல்.


இது என்னுடைய  159 வது பதிவு. 
இதுவரை பதித்த பதிவுகளில் ஆங்கிலம்,உரைநடை,புதுக்கவிதை போன்றவை சார்ந்த  ஒன்பது பதிவுகளை விட்டுவிட்டால் , இது என்னுடைய 150 வது  தமிழ்க் கவிதைப் பதிவு !
இவைகளைப் படித்து , அவ்வப்போது கருத்தும் தெரிவித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி.
ஏதோ விளையாட்டாக எழுதத் தொடங்கி, ஒரு உந்துதலால் இதுவரை நீண்ட  இப்பயணம் இன்னும் தொடருமா?

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு : கருத்துத் தெரிவிப்பவர்கள் பலரும் என் மின்னஞ்சலுக்கே (email) கருத்தை அனுப்புகிறார்கள். இந்தப் பதிவிலேயே கருத்துத் தெரிவிக்க ஒரு பகுதி   இருக்கிறதே! அதில் தெரிவித்தால், மற்றவர்களும் அதைத் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமே!
ஒரு மைல்கல் - 150 பாடல்கள் 

சென்றசில மாதங்கள்
-----நான்புனைந்த கீதங்கள்
எண்ணிக்கை ஒருநூறு
-----ஐம்பத்தை* எட்டுகையில்                       * ஒரு நூறு ஐம்பத்து- 150

கனித்தோட்ட மரங்களிலே
-----காய்த்தஅக்  கவிதைகளை
நன்றென்று பாராட்டி
-----மன்றத்திலே பதித்த

நல்லோர்க்கு பன்முறையும்
-----நவிலுகிறேன்  நன்றியுரை.
எல்லோரும் இதையேற்று
-----எனைவாழ்த்த வேண்டுகிறேன்.

என்கவிதைப்  பாதங்கள்
-----இன்னும்பல காதங்கள்
சயனிக்கும் நாள்வரையில்
-----பயணிக்க நான்வேண்டி

மயனத்தில்* நின்றாடும்                    * " மயானத்தில்" என்று பொருள் கொள்க.
-----சிவநாதன்  இடம்உறையும்
கயல்விழித் தாயவளின்
-----கழற்பாதம் பற்றுவனே!






Apr 15, 2017

ஜாய் - பிஜாய்

ஜாய் - பிஜாய்

அனைவருக்கும் ஹேவிளம்பி வருட புத்தாண்டு  வாழ்த்துக்கள்.

புத்தாண்டு புகும் இந்த நேரத்தில், இரட்டிப்பு மகிழ்ச்சியாக , ஒரு புது மனை புகு விழாவும் நடந்தது. எங்கள் தாத்தா கட்டிய ஜாய் - பிஜாய் என்னும் "இரட்டைக் குழந்தை" வீடுகளை புதுப்பித்து நாலு மாடிக் கட்டிடமாக ஆக்கி எங்கள் குடும்பத்தினர் புது மனை புகும் விழா நடத்தினர். அந்த நிகழ்வின் போது என் சித்தியின் (சாந்தா) உந்துதலால் நான் எழுதி , என் மற்றோர் சித்தி (கீதா) படித்த பாடல் இது.

இதை படிக்கும் உறவினர்களுக்கும்  குடும்ப நண்பர்களுக்கும் பல பழைய நினைவுகளை இது கொண்டு சேர்க்கும். 

சொந்தங்களுக்கே  உரிய ஒரு அந்தரங்கமாக இருந்தாலும் , அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை என்பதால் பதிவு செய்கிறேன். 

அன்புடன் 

ரமேஷ் 

ஜாய் - பிஜாய்

எழுபத்தி ஏழாண்டு  முன்னாலே எம்பாட்டன்
அழகாகக் கட்டிய வீடு
சருக்காத்த அம்மனின் கோயிலின் முன்னாலே
தெருமுக்கில் திகழும் வீடு.

அஞ்சு தலைமுறையை அழகாக என்பாட்டி
வளர்த்து வாழ்ந்த வீடு
பிஞ்சுப் பிள்ளைகள் பெரியோர்கள் எல்லோரின்
நெஞ்சையவள் நிறைத்த வீடு.

மேல்மாடித் தளத்தினிலே உப்பரிகை இருக்கையிலே
வெண்சுருட்டுப் பெட்டி  யுடனே
கால்மேலே கால்போட்டு மேல்துண்டு வேட்டியுடன்
தாத்தா இருந்த வீடு.

வேப்பமரம் , தென்னைமரம் , பாக்குமரம் பாதாம்மரம்
பப்பாளி மரங்க ளுடனே
பவழமல்லி பாரிஜாதம் மணம்வீசும் மனோரஞ்சம்
இவையெல்லாம் இருந்த வீடு .

காந்தா வசந்தா கோபால் லலிதா   
சாந்தா கீதா எனும் 
ஆறுபேரும் அவர்  குடும்பத் தினர்பலரும் 
சேர்ந்து  வளர்ந்த வீடு.

கல்யாணம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள்
எல்லாம் நடந்த வீடு
பலபேரக் குழந்தைகளின் பிரசவங் களைப்பார்த்து 
ஆசிகள் தந்த வீடு

உற்றார் உறவினர்கள் யாருக்கும் தன்கதவைத்
திறந்தே வைத்த வீடு.
வருவோரும் போவோரும் விருந்தினரும்  எப்போதும்
"கலகலெ"னப் புழங்கிய வீடு.

வீடென்ன அஃறிணையோ? வீட்டுக்கும் உயிரிருந்து .
வாய்திறந் து பேசும் என்றால் 
நாம் மறந்த நல்லபல நிகழ்வுகளை அதுகூறி 
ஞாபகப் படுத்தும் அன்றோ?

பலவருடம் முன்னாலே போட்டவிதை வளர்ந்தின்று 
நான்மாடிக் கட்டிட மாக 
தலைநிமிர்ந்து நிற்கையிலே மனைபுகுவோர் அனைவருமே 
நலம் வாழ இறையுரு ளவே .

புத்தாண்டு புகும்நாளே மனைபுகும் நாளாதல் 
மெத்தச் சிறந்த தன்றோ?
ஹேவிளம்பி வருடமதில் ஜெயவிஜயம் நாமடைய 
விளம்புகிறேன் நல்வாழ்த் துக்கள் .







Apr 8, 2017

கல்யாண சமையல் சாதம்

கல்யாண சமையல் சாதம் 

நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்து ரசித்த ஒரு படம் மாயா பஜார். 
அதில் கடோத்கஜன் ( எஸ்.வீ.ரங்காராவ்) பாடும் ஒரு பிரபலமான பாட்டு " கல்யாண சமையல் சாதம்". பல விதமான உணவு வகைகளை கடோத்கஜன் விழுங்குவதை ரசித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
என் வயதையொத்த பலருக்கும் இந்தப் படமும், அதில் வரும் இந்தப் பாடலும் நினைவில் இருக்கும்.

சில நாட்களுக்கு முன், என் உறவினர் ஒருவரின் கல்யாணத்திற்குச் சென்று மூன்று வேளை வயிறு முட்ட விருந்துண்ட போது , இது மீண்டும் நினைவுக்கு வந்தது. அப்படி என்னதான் இருந்தது அந்த விருந்தில்? 

படித்தும் , கேட்டும் ரசி(ருசி?)யுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 



கல்யாண சமையல் சாதம் 

                      நெருங்கிய உறவொன்றின் இல்லமண நிகழ்ச்சிக்கு
                      வருந்தியவர் அழைத்த தாலும் - கூடவே
                      இருந்தவர்க்கு* வேண்டும்பல விதமான உதவிகளை
                      செய்யஅவர் கேட்ட தாலும்               (*இருந்து அவர்க்கு)
                      மூன்றுவே ளைகளும்  காலைமுதல் மாலைவரை
                      விருந்தங்கு உண்ண லாச்சு.
                      நான்அன்று அங்குண்ட  விருந்துணவு வகைகளை
                      இங்குயிக் கவிதை கூறும்.

காலைச்  சிற்றுண்டி 

வட்டவடி வம்கொண்டு  சுட்டவடை வெண்பொங்கல்
இட்டலி அவைக ளுடனே - பல  
சட்டினி வகைகளும்  அதனுடன் கூடவே 
தொட்டுண்ண சாம்பா ருமே! - பொங்கி 
உப்பிய பூரியுடன் உருளைக் கிழங்குகறி  
இருவகை தோசை குருமா - இவைகளை  
சப்புக் கொட்டியே சாப்பிட்ட பின்னரோ  
கப்*பிலே  கொதிக்கும் காஃபி.                             * cup 

                       மங்கலநாண் கட்டியபின் மலரரிசியைத் தூவி 
                     மொய்ப் பரிசை அளிக்கும்  போது 
                      மறக்காம லேமதிய  உணவுண்ண வேண்டுமென 
                      உறவுகள்  உரைத்த தாலும் - மிகவும் 
                      நீண்ட வரிசையிலே நெடுநேரம் நின்றதால் 
                      உண்டது செரித்த தாலும் - மீண்டும் 
                      கொஞ்சம்பசி தலைதூக்கி தொல்லைப்  படுத்தவே 
                      லஞ்ச்*ஹாலை    நோக்கி நகர்ந்தேன்.       *lunch 

மதிய உணவு 

வாடாத வெண்மல்லிப் பூவின் நிறத்திலே   
சூடான  சாதம் இட்டு  - கூடவே 
உருகின  நெய்விட்டுப்  பிசைந்தோர் குழிசெய்து  
பருப்புசாம் பாரை யூற்று .

இருவகைப் பொரியலுடன்   பொரித்த அப்பளம் 

நொருக்கியத னோடு கலந்து - விரும்பியே 
உண்டபின் னேவரும் மோர்க்குழம்  பும்வாசம் 
கொண்டதக் காளிரச மும்.

பல்வகைப் பச்சடிகள் பன்னீர்ப் பாயசம் 

அல்வா இனிப்பு வகைகள் - சில்லென்ற  
கட்டித் தயிரோடு வத்தல் குழம்பின்னும் 
தொட்டுக்க ஊறுகாய் வகை 

இத்தனையும் சாப்பிட்டு எழுந்துகை கழுவியபின் 
பத்தாது இதுவென் றின்னும் - பத்துவகை 
பாக்குசீ வல்போட்டு மடித்தபான்* சுருளைகள்          *paan 
சாக்லேட்டு ஐஸ்க்ரீ *முடன்.                                                         *choclate icecream 


                        இருவேளை இலைபோட்டு உண்டி படைத்தபின் 

                      இரவுணவு சுயசேவை யாம்.
                      ஒருகையில் முள்கரண்டி மறுகையில் தட்டேந்தி 
                      விரும்பியதை நீயுண்ண லாம்.

இரவு உணவு 

பிரியாணி பச்சிடி கலந்த சாதங்கள்  
வறுத்தபூக் கோசு*த் துண்டு - பொறித்த                   *cauli - flower 
வருவல் பப்படங்கள்  சப்பாத்தி நான்வகைகள் 
குருமா தயிர்ப் பச்சடி- கூடவே 
சீனத்து நூடுலும்* கோபிமஞ் சூரியன்#              *noodle # gopi manchurian 
பானி-பேல்  பூரி* வகைகள்-இதன்பிறகு            *pani poori , bhel poori 
குல்பி*ஐஸ் கிரீமுடன் வெட்டிய பழத்துண்டு          *kulfi 
குலோப்ஜான் இனிப்பு வகைகள் .

இதன் பிறகு ?

                        நாக்கின் சுவைக்கு நானடிமை ஆகியே 
                      மூக்குப் பிடிக்க வேளை - மூன்றுமே   
                      பாக்கியே வைக்காமல் பந்தாவும்  பாராமல் 
                      சாக்கெதுவும் சொல்லா மலே - உண்டபின்
                      தேக்கியே வைத்துள்ள தேகக் கொழுப்பால் 
                      சீக்குப்பிடிக் காதிருக்கக்  -  காலையில் 
                      வாக்கிங்*  போகின்ற  நேரத்தை நாளைமுதல்      *walking 
                      ஆக்குவேன்  இருமடங் காய்.