Search This Blog

Apr 15, 2017

ஜாய் - பிஜாய்

ஜாய் - பிஜாய்

அனைவருக்கும் ஹேவிளம்பி வருட புத்தாண்டு  வாழ்த்துக்கள்.

புத்தாண்டு புகும் இந்த நேரத்தில், இரட்டிப்பு மகிழ்ச்சியாக , ஒரு புது மனை புகு விழாவும் நடந்தது. எங்கள் தாத்தா கட்டிய ஜாய் - பிஜாய் என்னும் "இரட்டைக் குழந்தை" வீடுகளை புதுப்பித்து நாலு மாடிக் கட்டிடமாக ஆக்கி எங்கள் குடும்பத்தினர் புது மனை புகும் விழா நடத்தினர். அந்த நிகழ்வின் போது என் சித்தியின் (சாந்தா) உந்துதலால் நான் எழுதி , என் மற்றோர் சித்தி (கீதா) படித்த பாடல் இது.

இதை படிக்கும் உறவினர்களுக்கும்  குடும்ப நண்பர்களுக்கும் பல பழைய நினைவுகளை இது கொண்டு சேர்க்கும். 

சொந்தங்களுக்கே  உரிய ஒரு அந்தரங்கமாக இருந்தாலும் , அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் தவறில்லை என்பதால் பதிவு செய்கிறேன். 

அன்புடன் 

ரமேஷ் 

ஜாய் - பிஜாய்

எழுபத்தி ஏழாண்டு  முன்னாலே எம்பாட்டன்
அழகாகக் கட்டிய வீடு
சருக்காத்த அம்மனின் கோயிலின் முன்னாலே
தெருமுக்கில் திகழும் வீடு.

அஞ்சு தலைமுறையை அழகாக என்பாட்டி
வளர்த்து வாழ்ந்த வீடு
பிஞ்சுப் பிள்ளைகள் பெரியோர்கள் எல்லோரின்
நெஞ்சையவள் நிறைத்த வீடு.

மேல்மாடித் தளத்தினிலே உப்பரிகை இருக்கையிலே
வெண்சுருட்டுப் பெட்டி  யுடனே
கால்மேலே கால்போட்டு மேல்துண்டு வேட்டியுடன்
தாத்தா இருந்த வீடு.

வேப்பமரம் , தென்னைமரம் , பாக்குமரம் பாதாம்மரம்
பப்பாளி மரங்க ளுடனே
பவழமல்லி பாரிஜாதம் மணம்வீசும் மனோரஞ்சம்
இவையெல்லாம் இருந்த வீடு .

காந்தா வசந்தா கோபால் லலிதா   
சாந்தா கீதா எனும் 
ஆறுபேரும் அவர்  குடும்பத் தினர்பலரும் 
சேர்ந்து  வளர்ந்த வீடு.

கல்யாணம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள்
எல்லாம் நடந்த வீடு
பலபேரக் குழந்தைகளின் பிரசவங் களைப்பார்த்து 
ஆசிகள் தந்த வீடு

உற்றார் உறவினர்கள் யாருக்கும் தன்கதவைத்
திறந்தே வைத்த வீடு.
வருவோரும் போவோரும் விருந்தினரும்  எப்போதும்
"கலகலெ"னப் புழங்கிய வீடு.

வீடென்ன அஃறிணையோ? வீட்டுக்கும் உயிரிருந்து .
வாய்திறந் து பேசும் என்றால் 
நாம் மறந்த நல்லபல நிகழ்வுகளை அதுகூறி 
ஞாபகப் படுத்தும் அன்றோ?

பலவருடம் முன்னாலே போட்டவிதை வளர்ந்தின்று 
நான்மாடிக் கட்டிட மாக 
தலைநிமிர்ந்து நிற்கையிலே மனைபுகுவோர் அனைவருமே 
நலம் வாழ இறையுரு ளவே .

புத்தாண்டு புகும்நாளே மனைபுகும் நாளாதல் 
மெத்தச் சிறந்த தன்றோ?
ஹேவிளம்பி வருடமதில் ஜெயவிஜயம் நாமடைய 
விளம்புகிறேன் நல்வாழ்த் துக்கள் .







2 comments:

  1. My grand parents also had a house like you have described at Brindavan
    Street Mylapore bought in 1930.I spent my childhood years there.It was sold in 1985 since my uncle's could not agree on division.It was nostalgia for me to read your poem.
    Thanks Ramesh.

    ReplyDelete
  2. ஜாய் பிஜாய் இந்த பெயர் உன்னுடன் படித்த நண்பர்கள் பலருக்கும் பல இனிய நினைவுகளை தரும் பெயர். அந்த பவிழ மல்லி செடியின் நினைவுகள் இன்றும் மனதில் நிறைந்து இனிய நினைவு மணங்களை ஏற்படுத்துகின்றது . ஆரம்ப பள்ளி நாட்களில் ( 5வது வகுப்பு வரை ), அப்பொழுது நாம் வெவ்வெறு பள்ளிகளில் , தினமும் ஜாய் பிஜாய் வழியாக செல்லும் பொழுது ஒரே மாதிரியான அந்த இரண்டு வீடுகளையும் கண்டு பிரமித்த நாட்களும் இன்னும் நினைவில் உள்ளன . அந்த இனிய எண்ணங்களை தூண்டி விட்டதற்கு நன்றிகள் பல நண்பனே.
    இனிய நினைவுகளுடன் ராமஸ்வாமி ஜாய் பிஜாய் இந்த பெயர் உன்னுடன் படித்த நண்பர்கள் பலருக்கும் பல இனிய நினைவுகளை தரும் பெயர். அந்த பவிழ மல்லி செடியின் நினைவுகள் இன்றும் மனதில் நிறைந்து இனிய நினைவு மணங்களை ஏற்படுத்துகின்றது . ஆரம்ப பள்ளி நாட்களில் ( 5வது வகுப்பு வரை ), அப்பொழுது நாம் வெவ்வெறு பள்ளிகளில் , தினமும் ஜாய் பிஜாய் வழியாக செல்லும் பொழுது ஒரே மாதிரியான அந்த இரண்டு வீடுகளையும் கண்டு பிரமித்த நாட்களும் இன்னும் நினைவில் உள்ளன . அந்த இனிய எண்ணங்களை தூண்டி விட்டதற்கு நன்றிகள் பல நண்பனே.
    இனிய நினைவுகளுடன் ராமஸ்வாமி

    ReplyDelete