Search This Blog

Dec 31, 2021

பிரதோஷப் பாடல் - 44

பிரதோஷப் பாடல் - 44



அங்கை தன்னில் கங்கெடுத்து ஆடுகின்ற அம்பலன் 

மங்கை தன்னை இடமிருத்தி பங்களித்த புண்ணியன்    

ஐங்கரற்கு அருள்புரிந்து ஆனை  முகத்தை அளித்தவன்

திங்கள்தன்னை  தலையில் ஏந்தி தக்ஷ சாபம் தீர்த்தவன் 

----------லிங்க உருவில் கோவில் கொண்ட இறைவனை வணங்குவோம்


வெங்கண் வீச்சில் தவம் தடுத்த காமனை எரித்தவன் 

பொங்கும் கங்கை நதியைத் தலையில் தங்கவைத்த தற்பரன்

கங்குல் இரவில் காட்டின்  நடுவில் நடனமாடும் நாயகன் 

இங்கு மங்கும் என்றிலாது  எங்கணும் இருப்பவன் 

----------லிங்க உருவில் கோவில் கொண்ட இறைவனை வணங்குவோம் 



 

Dec 23, 2021

இரை தேடிய பறவை

 இரை தேடிய பறவை 

முகநூலில் நண்பரொருவர் சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்த அருமையான ஒரு புகைப்படம் இது.

இந்தப் படத்திற்கு எழுதிய பாடல் இது!

அன்புடன் 

ரமேஷ் 






கரைவிட்டு இரைதேடி பறக்கின்ற தோர்பறவை

நுரையலையில் நனைந்தெழுந்த காலையிளங் கதிரைத்தன் 

இரையென்று எண்ணிப் பறந்தரு கிலேவந்து 

விரைந்தலகால்  கவ்வமுனைந் தேமாந்த காட்சியிதே ! 



Dec 16, 2021

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள் 

இரண்டு நாட்கள் முன்பு உலக அளவில் சாதனை புரிந்த இரு இந்தியப் பெண்கள் இவர்கள்!

இவர்களுக்கு கிடைத்த பாராட்டுகளிலும் , பரிசுகளிலும்  எவ்வளவு வித்தியாசம்!

என் நண்பர் முரளிதரன் எங்கள் வாட்ஸப் குழுவில் பகிர்ந்து கொண்ட ஆதங்கத்தின் தூண்டுதலில் எழுந்த பாடல் இது 

அன்புடன் 

ரமேஷ்   


சாதனையாளர்கள் 

தேதி - 14-12-2021


ஹர்னாஸ் சந்து - பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதலிடம்  

நீனா குப்தா - கணித மேதை ராமானுஜம் பரிசு 



 

இந்திய மங்கையர் இருவர் இந்நாள் 

தத்தம் துறையினில் சாதனை செய்தார்.

அழகுப் போட்டியில் வென்றார் ஒருவர் 

அறிவுப் போட்டியில் வென்றார் ஒருவர் 

முந்தையர் முதலிடம் பெற்ற செய்திகள்

முதலாம் பக்கச் செய்தியாய் மிளிர 

பின்னவர் பெற்ற பதக்கச் செய்தி 

பின்னொரு பக்கம் புதைக்கப் பட்டதே!                                                                                                                                                                     

அழகுப் போட்டியில் வென்ற  வருக்கோ 

ஆயிர மாயிரம் பாராட்டு களாம்!

அறிவுப் போட்டியில் முதலிடம் பெற்றால் 

வருமோ இத்தகு வாழ்த்துகள் எல்லாம் ?


எண்கணி தத்தில் ஏற்றம் கண்டு 

எவர்க்கும் இயலா தேற்றத் தீர்வை 

கண்டு பிடித்த காரிகை இவரை 

வந்து அடைந்த புகழ்மிகக் குறைவே!


முப்பன் னிரண்டு மேலும் கீழும் 

இருபன் னிரண்டோ  இடையின் அளவு!

இந்தக் கணிதம் மட்டும் அறிந்தோர் 

எண்கணி தத்தை எங்கனம் அறிவார்?


பளிச்சென மின்னும் வெளிப்புற அழகை 

மட்டும் மதித்து மற்றவை மறந்தார்!

உள்ளொளிர் திறமையை மதித்துப் போற்றும் 

காலம் வருமெனக் காத்துக் கிடப்போம்!








 



Dec 15, 2021

மார்கழி மாதத்து மாண்பு

 மார்கழி மாதத்து மாண்பு

நாளை  மார்கழி மாதத்தின் முதல் நாள்.

ஒரு வெண்பாப் பாடல் போட்டிக்காக , "மார்கழி மாதத்து மாண்பு" என்ற சொற்றொடரை ஈற்றடியாகக் கொண்டு நான் எழுதிய பாடல் இது! 

அன்புடன்

ரமேஷ்

பி.கு :

சென்ற ஆண்டின் மார்கழியின் போது நான் எழுதிப் பதித்த மற்றோர் பாடலின் இணைப்பையும் இங்கு தந்திருக்கிறேன்.  படித்துப் பாருங்களேன்!

https://kanithottam.blogspot.com/2020/12/blog-post_20.html





வாசலிலே கோலமிட்டு பூசணியின் பூவைத்து
பூசனைகள் செய்கின்ற மாசமிது -- கேசவனின்
பேர்பாடிக் காலையிலே ஊர்கோலம் போகுதலே
மார்கழி மாதத்து மாண்பு

Dec 11, 2021

கருகிப் போன கருவறைக் கனவுகள்

 கருகிப் போன கருவறைக் கனவுகள்

மலர்ந்து சிரிக்கும் இவள் மதிமுகத்தின் பின்னே மறைந்து சிதைந்த  இவள் கனவுகளை பற்றி!

அன்புடன் 

ரமேஷ் 





       உடுத்த பட்டுப் புடவையின் இடுப்பு 

        மடிப்புக ளிடையே சேர்த்துச் சொருகி

        மறைத்து ஒளித்த  இவள்மனத் தாசைகள்  

        ஒருவரும் அறியாக் கருவறைக் கனவுகள் !

            

நேரிய பார்வையும் நிமிர்நன்  நடையும் 

உள்ள உறுதியும் உடையவள் இவளே. 

தூரிகை எடுத்துவோர் ஓவியன் தீட்டிய 

சித்திரம் ஒத்த காரிகை இவளே!

வெளிப் பார்வையிலே இவள் ஒளிர்ந்தாலும் 

உ(ள்)ளத்தில்  ஒளித்து(ள்)ள உண்மைகள் பலவாம்!

வாய்மொழி திறந்தவள் உரைக்கா உண்மைகள் 

விழிமொழி வழியே வழிந்திடக் காண்பீர்!


நித்திரை தொலைத்தும் நிம்மதி இழந்தும் 

பத்தினி இவளே பலசுமை பொறுப்பாள் 

வாழ்க்கைத் துணையுடன் வழக்கிடும் சுமைகள் 

தாய்மைப் பொறுப்பைத் தாங்கிடும் சுமைகள் 

குடும்பப் பிணைப்புகள் விலகி விடாமல் 

இழுத்துப் பிடித்து இணைக்கும் சுமைகள் 

மொத்தச் சுமையையும் முகங் கோணாமல் 

நித்தம் சுமப்பாள் நல்லாள் இவளே!


கலகல வென்னும் கைவளை ஒலியும் 

சலசல வெனும்பட் டாடையின் ஒலியும் 

மல்லிகை மணமும் வழலை*யின் சுகந்தமும்            *வழலை=soap

என்றோ கருதிய  தாவணிக்  கனவுகள் 

எஞ்சியின் றிருப்பதோ அவற்றின் நினைவுகள்!


அகங்குலைந்து மங்கையவள் அழுகின்ற நேரத்தில்

முகம்மறைக்கும் முந்தானை கண்ணீரைக் கழுவிவிடும்..

சுகமாகச் சிரிக்கின்ற சமயத்தி லும்கூட 

சிரிப்பொலிகள் சிதறாமல் வாய்பொத்த உதவும்- இவள்

சுகிக்கின்ற நேரங்கள் ஆனாலும் குறைவே! - மனம்

தகித்து அழுகின்ற நேரங்கள் தாம்மிகவே!

 

காதிலே லோலாக்கு மூக்கிலே புல்லாக்கு 

நெற்றியில் நவமணிச் சுடர்விடும்  சுட்டி 

சங்குக் கழுத்தில் தொங்கும் அட்டிகை 

மூங்கிற் கரங்களில் மாட்டிய கங்கணம் 

சொலிக்கும் கண்களில் பளிச்சிடும் விவேகம் 

பேரழ கின்முழு உருவம் இவள்தானே எனினும் -


        பட்டாடையில் இவள் புதைத்து மறைக்கின்ற  

        சோகச் சுமைகளை யாரேதான் அறிவார்  ? - இவள் 

        கட்டிய பட்டுப் புடவையின் மடிப்பில் 

        கருகிச் சிதைந்தன  கருவறைக் கனவுகள்!










Dec 3, 2021

பிரதோஷப் பாடல் 43

 பிரதோஷப் பாடல் 43


நேற்றைய பிரதோஷதினப் பாடல் 

அன்புடன் 

ரமேஷ் 








நந்தியை நகரவைத்து நந்தனுக்கு தரிசனம் 

தந்தசிவன் அன்பருக்கு காட்டிடுவான் கரிசனம் 

அய்ந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தால் அனுதினம் 

வந்துசேரும் வளங்கள்யாவும் வாழ்வினிலே நிச்சயம்