Search This Blog

Jun 27, 2020

கோவில்பட்டி கொடூரங்கள்

கோவில்பட்டிக்  கொடூரங்கள்

குறிப்பிடப்பட்ட நேரத்தில் கடையடைப்புச் செய்யவில்லை என்ற காரணத்திற்காகக் கோவில்பட்டியில்  கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தந்தை, அவரைக் காண காவல் நிலையம் சென்றிருந்த - மகன், இருவரும் காவலர்களின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் மினியாபோலிஸுக்கு  நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டுகிறார்களோ?

ரமேஷ் 



விதம்விதமாய்  வதைசெய்து பதம்பார்க்கும் முறைகளிலே  
முதலிடத்தை அடைந்துள்ள கோவில்பட்டிக் காவலர்க்கு 
புதியவொரு இலச்சினையை* பதிவிடுவோம் அதுவேயோர் 
குதத்தில் நுழைத்த கம்பு.  

* இலச்சினை= LOGO






Jun 24, 2020

இடுக்கண் வருங்கால்- எனது பதில்

இடுக்கண் வருங்கால்- எனது பதில் 

இடுக்கண் வருங்கால் ------ என்ற தலைப்பில் நான் பதித்த கவிதை மிக்க எதிர்மறைக் கருத்துக் கொண்டதாகவும், மிகுந்த மன அழுத்தத்தை விளைவிப்பதாகவும் இருப்பதாக சிலர் கருத்துத் தெரிவித்து இருந்தனர். 
அதற்கு பதில் சொல்லும் முறையில் எதை எழுதினேன். சம்பத்தப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பியிருக்கிறேன். இதை மற்றோருக்கு அனுப்புவதாக இல்லை. 
என்றாலும், முழுமை கருதி இந்த blog - இல் இணைத்திருக்கிறேன். 


கருத்துக்கு நன்றி! வருத்தங்கள் வேண்டாம்.
நெருப்பென்று  சொன்னால் நா சுடுவதில்லை!
திருந்தாமல் திரிகின்ற மனிதற்கோர் பாடம்
சிரிப்புடன் சேர்த்து சொல்லவே முயன்றேன்!
கருப்பு நகைச்சுவையின் குறிக்கோளும்  அதுவே!
விருப்புடன் பலரும் விரும்பிப் படித்து
நேர்மறைக் கருத்துகள் பலவும் நிறைத்து 
வேறுபல பாடல்கள்  தரவும்  முனைவேன்

Jun 23, 2020

இடுக்கண் வருங்கால் ---

இடுக்கண் வருங்கால் ---

கொரானாவுக்குப் பயந்து எல்லாரும் தலையில் கை  வைத்துக் கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், கொஞ்சம் சிரித்தால் என்ன?

இரண்டு பாடல்கள், கொரானாவை மையப்படுத்தி- நீங்கள் சிரிப்பதற்காக!

முதலாவது - ஒரு லிமெரிக். Black Humour வகையைச் சார்ந்தது. 

அதைப்  படித்து முகத்தைச் சுளிப்பவர்களுக்கு  ( என் வீட்டிலேயும்  உண்டு!)  அடுத்த பாடல் --- ஆங்கிலச் சொற்கள் கலந்த ஒரு நேரிசை வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் 


பாடல் -1

மூக்கை முகத்தை மூடுகின்ற  கவசம் 
கிருமிக்கு     எதிராய்     ஓர்         துவசம் *
----------வெளியில்  போகும்   போது 
----------போட்டு    முகத்தை      மூடு!
போடாவிட்டால்  அடுத்த வருஷம் திவசம்!

* துவசம் = கொடி , flag

பாடல் - 2

இக்கட்டு கள்மிக்க வாழ்வென்ற  ஆட்டத்தில் 
விக்கெட்டு* வீழ்வது  எப்போதோ  ---  பக்கட்டை
காலாலே  நாம்உதைக்கும் காலம்**  வரும்வரையில்
வேலா யுதனே துணை 

* Wicket
** Kicking the bucket





Jun 20, 2020

கொரானாவுக்கு டிக்கெட்டு

கொரானாவுக்கு டிக்கெட்டு  

இன்றைய செய்திகள் - 

1. வீட்டடைப்பு விதிகளை மீறி சென்னை வாசிகள் சொந்த ஊருக்குத் திரும்புவதால் மற்ற மாகாணங்களிலும் நோய் பரவுதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


2. அண்டை மாவட்டங்கள் சென்னையிலிருந்து மக்கள் வருவதையும் , சென்னைக்கு மக்கள் செல்வதையும் தடை செய்துள்ளன .

3. சென்னை வாசி -
"நம்ம சென்னையை ஒருவழி செஞ்சாச்சு! மத்த இடங்களையும்  ஒருவழி                                                    செ-ஞ்ஞ்ஞ்- சிடுவோம்"  

ரமேஷ் 



சொன்னதைக் கொஞ்சமும் கேட்கா திருந்ததால் 
சென்னையில் முற்றிய நோயினை - இன்றவர்
பக்கத்து ஊர்சென்று திக்கெட் டிலும்பரவ 
டிக்கெட் அளிக்கிறார் பின்பு !

(இருவிகற்ப நேரிசை வெண்பா)


Jun 18, 2020

பிரதோஷப் பாடல் - 34

பிரதோஷப்  பாடல் - 34

இன்றைய  பிரதோஷ தினத்தன்று ஒரு மறுபதிவு

அன்புடன்

ரமேஷ்


சிவ பதிகம்

விடைவா கனமேறி வீற்றிருந் துமையவளை
இடமணிந்து  பாதியாய்  இணைத்தவனை  - சடைமுடிமேல்
படமெடுக்கும் அரவணிந்த பரமனைப் பணிந்தவரை
இடரெதுவும் தீண்டாது காண்.!                                                1.

   
ஆல மரத்தடியில் அமர்ந்த்திருந்து மோனத்தவக்
கோலம் தரித்த குருநாதன் -- நால்வேத
நாயகன்  தட்சிணா  மூர்த்தியின்  திருநாமம்
வாயுரைத்தல் நாளும் நலம்.                                                       2.

   
நெடிதுயர்ந்து விசுவத்தை நிறைத்திட்ட பசுபதியின்
அடிமுடியைக் காணவே முயன்றிட்டு --- முடியாமல்
பிரமனும்  நெடுமாலும் முடிதாழ்த்தி வணங்கிட்ட
பரமசிவன் பாதம்பணி வோம். .                                                 3.


பாகீ  ரதன்செய்த பெருந்தவத்தின்  பரிசாக
ஆகாய கங்கைதனை மேலிருந்து கொணர்ந்தவளின்.
வேகத்தைத்  தடைசெய்து  சடைமுடியில் பிடித்திட்ட
ஏகனை மனமே பணி .                                                              4.


ஒருகையில் உடுக்கெடுத்து ஒரு கையில் மானேந்தி
ஒரு கையில் சூலமெடுத்து ---  பிறைமதியை
விரிசடையில்   முடிதரித்து களிநடம் புரிகின்ற
திரிபுராந்  தகனைத்   துதி.                                                          5,


அவிமறுத்து அவமதித்த தக்ஷனின்  யாகத்தை
அழித்துப்பின் அருந்தவத்தில் அமர்ந்தவன்மேல்  தேவர்களின்
மன்னுதலால் மலரம்  பெறிந்தமன்  மதனைத்தன்
கண்ணுதலால் எரித்தோன் துணை.                                            6.


காலம் முடிந்ததெனக்  காலன் அழைத்திட்ட
பாலன்மார்க் கண்டேயன் உயிர்தனைப்-- பாலித்து
காத்தவற்கு சாகா வரம்தந் தருள்புரிந்த
கூத்தனடி நெஞ்சே  பணி .                                                          7.


நிலையிலது   இவ்வுலகு நிலையிலது   இவ்வாழ்வு
விலையற்ற  இவ்வுண்மை   விளக்குமுக மாகவே
இடுகாட்டின்  சுடுசாம்ப லுடல்முழு திலும்பூசி
நடமாடு வோனைத் துதி. .                                                           8.  


நிலமாகக்   காஞ்சியிலும் வளியாக ஹஸ்தியிலும்
ஜலமாக திருவானைக்  காவல் தலத்திலும்
ஒளிர்நெருப்   பாய்த்திரு வண்ணா மலையிலும்
வளியாக தில்லைத்திருச் சிற்றம் பலத்திலும்                                         


ஏகாம்ப ரேசனாய்  காளஹஸ் தீசனாய்
ஜம்புகே சுவரனாய் அண்ணா மலையனாய்
அம்பலத்தில் தாண்டவ நடமிடும் ராசனாய்
அமர்ந்தஐம்  பூதனைப் பணி.                                                        9.
.      

அசுரர்களும் தேவர்களும் அடிபணியும் வேதியனை
விசும்புவெளி படைத்தவற்றைக் காக்குமொளிச் சோதியனை
அணங்குதனை இணங்கித்தன் உடல்கொண்ட பாதியனை
வணங்கியே    முக்தியடை வோம்,                                                     10    



Jun 15, 2020

வேண்டாத விருந்தோம்பல் (அ ) உயிர் உதிர் காலம்.

வேண்டாத விருந்தோம்பல் (அ ) உயிர் உதிர் காலம்.


விருந்தோம்பல் தமிழரின் பண்பாடு! 

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று புகழ் பெற்ற  தமிழர் தலைநகரின் மக்கள், இன்று கொரோனா நோயை விரும்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்  - அரசு அறிவித்திருக்கும் எந்தக் கட்டுப்பாட்டையும் மதிக்காமல் !  

பாதிப் பேர் முகக்கவசம் அணிவதே இல்லை! 

அப்படி அணிந்தாலும் முகத்தையும் மூக்கையும் மறைத்து  மாட்டாமல் கழுத்தைச் சுற்றி தொங்கவிட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

இதற்கு  முன்பு "தலைக் கவசம் அணிந்துதான் இருசக்கர ஊர்திகள் ஓட்டவேண்டும்"  என்ற விதிமுறையை " மயிர் உதிர்ந்துவிடும்" என்று காரணம் கூறி மீறித் திரிந்தார்கள்.

இன்று முகக் கவசம் அணியாமல் இருந்தால் " உயிர் உதிர்ந்துவிடும்" என்று எப்போது உணருவார்கள்?

ரமேஷ் 







வேண்டாத விருந்தோம்பல் 

மருந்தில்லா நோயொன்று மாந்தரைக்  கொன்று 
விருந்துண்ண வந்துள்ள தின்று - விரும்பி 
விருந்தோம்பல் செய்கிறார் மூக்கைத்  திறந்து   
திரிகின்ற மூடர்  அதற்கு 
                                                                             (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)



Jun 11, 2020

நிறவாதம்

நிறவாதம்


அமெரிக்காவில், மினியாபோலிஸில் நடந்த ஒரு சம்பவம் இன்று அந்த நாட்டை தலைகீழாகப்  புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. கருப்பு நிறத்தாரையும், ஏன், பொதுவாக வெள்ளைத்  தோல் இல்லாதவரையும், கீழாக எண்ணும் - நடத்தும் - போக்கு அமெரிக்கர்களுக்குப் புதியதில்லை என்றாலும் , இந்த நிகழ்ச்சி எல்லையை மீறிவிட்டது என்றே கூறலாம். 

இன்று உலகைப் பீடித்திருக்கும் கொரானா நோய் இன்னும் சில மாதங்களில் அல்லது வருடங்களில் ஒழிந்துவிடும் என்று நம்பலாம். 
ஆனால் பல நூற்றாண்டுகளாக அங்கு பரவியிருக்கும் நிறவாத நோய்க்கு என்று முடிவு வரும்?

ரமேஷ் 


நிறவாதம்  




சாவினின்* முட்டிக்கால்  தொண்டையின்  மேலழுத்த 
சாவினைச் சந்தித்தான்  ப்லாயிட்டும்**---  கோவிடையும்
மீறும் நிறவாத நோயொன்று யூஎஸ்^ -சில்
சீறியெழக்  காணுகிறோம் நாம் .


(இருவிகற்ப நேரிசை வெண்பா)

* சாவின் - Derek Chavuin 
** ப்லாயிட்-  George Floyd
^  யூஎஸ் - united states 





Jun 9, 2020

அழையா விருந்தினர்?

அழையா விருந்தினர்?

புலம் பெயர்ந்த தொழிலார்கள் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டுக்கு செல்லதற்கு  படும்
பாட்டைப் பற்றி எழுதாத ஏடில்லை, உரைக்காத ஊடகமில்லை பதைக்காத மனமில்லை.

ஒரு வழியாக நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது என்று நாம் நினைக்கையில்
அதன் மற்றொரு பரிமாணம் விரியத் தொடங்கியிருக்கிறது.

ஊர் திரும்பும் இவர்கள் ,ஊராருக்கு நோயைக் கொடுக்கக் கூடும் என்ற அச்சத்தால்,
ஊர்மக்கள் இவர்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற செய்திகளைக் கேட்கிறோம்!

இவர்கள் அழையா விருந்தினராக ஆகிவிட்டார்கள்!

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி!

இதுபற்றி இரண்டு பாடல்கள்!

அன்புடன் 

ரமேஷ் 


அழையா விருந்தினர்?

வேலைதேடி வீடுவிட்டு வேறு இடம் சென்றவர்கள்
சாலைவழி நெடுந்தூரம் நடந்து வந்து ஊர்சேர்ந்து
பாலையிலே ஊருணியைப்  பார்த்தவர்போல்  மனமகிழ்ந்தார்!
மாலையிட்டு மலர்தூவி  வரவேற்பார் என்ற அவர் 
எண்ணத்திலே மண்தூவி ஊராரும் உறவினரும் 
"மண்ணுடைய  மைந்தன்தான்  என்றாலும் உன்னுடன்நீ 
கொண்டு வந்த கொடுநோய்க்கு அனைவருமே   அஞ்சுவதால்
வரவேண்டாம் உள்ளே நீ  ! வெளியே போ! போய்விடெ"னெ 
விரட்டித் துரத்துவதால் திரிசங்காய்த்* தொங்குகிறார்.

* தன்னுடைய மானுட உடலோடு சொர்க்கத்தை அடைய விரும்பிய திரிசங்கு , விஸ்வாமித்ர
முனிவரை நாட,அவரும் ஒரு யாகம் செய்து அவனை இந்திரலோகத்திற்கு அனுப்புகிறார்.
ஆனால் மானிட உடலோடு வரும் திரிசங்குவை இந்திரன் உள்ளே அனுமதிக்காததால் கீழே
விழும் திரிசங்குவை நடுவானத்தில் தடுத்து நிறுத்திகிறார் விஸ்வாமித்திரர்.
இங்கும் இல்லாமல், அங்குமில்லாமல் நடுவிலே தொங்கி அவதிப்பட்டான்  திரிசங்கு!
இதுதான் அந்த  புலம்பெயர்ந்தோரின் நிலைமை!
( பின்பு அதே இடத்தில் முனிவர் அவனுக்கு ஒரு தனி சொர்க்கம் அமைத்து , அதிலே திரிசங்கு
தலைகீழாகத் தொங்குகிறான் என்பது புராணம்!)


இதே கருத்தை உட்கொண்ட ஒரு பலவிகற்ப இன்னிசை வெண்பா !

பொருளீட்ட மாநகரைத் தேடியே ஒடினோர்      
திரும்ப வருகின்ற  வேளையிலே   வந்தவரை  
வேண்டா  விருந்தெனவே வீட்டோர்  விரட்டுவதால் 
தொங்குகிறார் அந்தரத்தில்  இன்று .


Jun 5, 2020

உயிர்காணும் உறவுகள் - கொரானா பாசிடிவ் -3

உயிர்காணும்  உறவுகள் - கொரானா பாசிடிவ் -3

தொடரும் வீட்டடைப்பு நேரத்தில் உருப்படியாய் செய்வது, சென்ற பதிவில் கூறியிருந்தபடி , புத்தகங்களை தூசி தட்டி எடுத்துப் படிப்பது மட்டுமல்ல; விட்டுப்போன உறவுகளையும் , எட்டிப்போன நட்புகளையும் கூட தூசி தட்டி புதுப்பித்துக்கொள்ள இது ஒரு சிறந்த நேரம்!
செய்வோமா?
அன்புடன் 
வீ. ரமேஷ் 

உயிர்காணும்  உறவுகள்

பரணையிலே போட்டிருந்த பெட்டியினைக் கீழிறக்கி
திறந்ததனுள் மறைந்திருந்த  படத்தொகுப்பைப்  பார்த்ததனால்
மறந்திருந்த உறவுகளை  மறுபடியும் உயிர்ப்பிக்க
உரமிட்டு உதவிட்ட ஊரடங்குக்குக் கோர்நன்றி .

Jun 3, 2020

பிரதோஷப் பாடல் - 33

பல நாட்களுக்குப்பின் மீண்டும் ஒரு பிரதோஷப் பாடல்!

அன்புடன்

ரமேஷ்

பிரதோஷப் பாடல் - 33

ஆதி  சங்கரர் காசியில் கங்கையில் நீராடிய பிறகு  கோயிலுக்குச் செல்லுகையில், எதிரே ஒரு புலையன் கையில் நான்கு நாய்களுடன் வருகிறான். அவன் கோவிலுக்குப் பூசை செய்யச் செல்லும் தன்மீது பட்டு வீடாக கூடாதே என்று சங்கரர் அவனைத் தள்ளிப் போ, தள்ளிப் போ என்று கூறுகிறார்! அது கேட்ட அப்புலையன், சங்கரரைக் கேட்கும் கேள்வி இது.

ஏ முனிபுங்குவரே! என்னைத் தீண்டாத தகாதவன் என்று கருதி, தள்ளிப் போ , தள்ளிப் போ என்று சொல்லுகிறீர்களே, எதைத் தள்ளிப் போகச் சொல்லுகிறீர்கள்? உணவை உண்டு ஆக்கப்பட்ட என்னுடைய இந்த  உடலை, அதே போன்று உணவை உண்டு ஆக்கப்பட்ட உங்கள் உடலிலிருந்தா, அல்லது என்னுள்ளிருக்கும் ஆத்மாவை உங்களுக்குள்ளிருக்கும் ஆத்மாவிலிருந்தா? கூறுங்கள்!

 O great ascetic! Tell me . Do you want me to keep a distance from you, by uttering ’go away’ ’go away’ taking me to be an outcaste ? Is it addressed from one body made of food to another body made of food, or is it consciousness from consciousness — which, O, the best among ascetics, you wish should go away, by saying “ Go away, go away”? Do tell me.

இது கேட்ட சங்கரர் , புலையன் வடிவில் வந்து தனக்கு அறிவு புகட்டுவது  சிவபெருமானே என்று உணர்ந்தார். தான் உணர்ந்ததை மானிஷா பஞ்சகம் என்ற பெயரில் ஒரு பாடலாகப் புனைந்தார். 

சங்கரருக்கு புலையன் வடிவத்தில் வந்து சிவபெருமான் உபதேசித்த நிகழ்வைப் பற்றியது .

இது குறித்த பாடல் , இன்றைய பிரதோஷ தினத்தன்று!


"தள்ளிப்போ தள்ளிப்போ" என்றேநீ  சொல்லுவதென்
உள்ளிருக்கும் ஆத்மனையா தோல்போர்த்த யாக்கையையா 
சொல்லிடென்ற கேள்வியினால்  சங்கரரின் கண்திறந்த
தில்லைஜக   தீசன் துணை    
                                                                               ( பலவிகற்ப இன்னிசை வெண்பா)