Search This Blog

Mar 30, 2023

இராம நவமிப் பாடல்

இராம நவமிப் பாடல் 

இன்று ராமநவமி ! ராமபிரானின் அருள் வேண்டி ஒரு பாடல் 

அன்புடன் 

ரமேஷ் 


கானகம் சென்றுதன் தந்தைசொல் காத்தானை, 


வானரச்   சேனைகளின்  துணையோடு சமர்செய்து  

தானவரைக்*  கொன்றழித்து தருமத்தை நிலைநாட்டி         *தானவர்=அரக்கர் 

சானகனின்*  திருமகளை சிறைமீட்டு வந்தானை,                  * சனகன் 


வானகத்  துறைதேவர் வணங்கித் தொழுவானை, 


நானிலமும் போற்றவிந்  நவமித் திருநாளில் 

மானவனாய்*  இந்த மண்ணில் பிறந்தானை,                             * மானவன்= மனிதன் 




நானகத்திலே இருத்தி நவமியிந்   நன்னாளில் 

பானகமும் மோர்நீரும் படைத்தே பணிந்திடுவேன் 

ஞானமெனை  அடைந்து சேர.



  


  


 

 


Mar 29, 2023

ஸ்ரீராமநவமி

நாளை  ஸ்ரீராமநவமி.

இந்த நாளையொட்டி இரு சிறு பாடல்கள் 

அன்புடன் 

ரமேஷ் 



 
பெற்றவன்  சொல்காக்க கான்சென்று தன்னுடன்
உற்றவளை மீட்கவே வில்லேந்தி - தெற்காளும்
கொற்றவனைக் கொன்றவளை மீட்ட அவதாரம்
பொற்புடை ராமனுடைத் தே ! 

ஒரு விகற்ப நேரிசை வெண்பா )




இலக்குமியின் மலர்க்கரம்     பற்றி அவள் இடப்புறம்.
இளையநம்பி இலக்குவன்     இருப்பதவன்  வலப்புறம். 
இலக்கென்றும்   இழக்காத     கோதண்டம் தோளிலே. 
இலங்கையை எரித்திட்ட      அனுமந்தன் தாளிலே. 
வலக்கையை உயர்த்தியே   வரங்கள் வழங்குவான் !
கலக்கங்கள் விலக்கிடும்     ஸ்ரீராமன் தரிசனம்.



Jan 17, 2023

பூரி ஜகன்னாதர்

பூரி ஜகன்னாதர் 

சென்ற மாதம் 50 PLUS VOYAGERS என்ற நிறுவனத்தாரால்  ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சுற்றுலாப் பயணத்தில் நானும் என் மனைவியும் பங்கேற்றோம். ஆறு நாட்கள் பயணித்து ஒரிசா மாநிலத்தின் பல இடங்களுக்குச் சென்றோம். இவற்றில் ஒன்று புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோயில்.

சாதாரணமாக எல்லா கோவில்களிலும், கடவுளர்கள் தத்தம் மனைவியருடனே சேர்ந்திருந்து அருள்பாலிப்பதையே  ( சிவன்-பார்வதி, விஷ்ணு-லட்சுமி, முருகன்-வள்ளி,தெய்வானை ) பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தக்கோவிலிலே ஒரு வித்தியாசமாக மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவுடன் சேர்ந்து தரிசனம் தராமல் , தனது சகோதரன் பலராமனோடும், சகோதரி சுபத்திரையுடனும் சேர்ந்து தரிசனம் தருகிறார்! இதன் தாத்பரியம் சரியாகப் புரியவில்லை! தெரிந்தவர் யாரேனும் சொல்லுங்களேன்!

கூடப் பிறந்தோருடன் கண்ணன் தரிசனம் தருவதை பற்றி ஒரு சிறு பாடல், வெண்பா வடிவில்!

அன்புடன் ரமேஷ் 




தன்னுதிரத் தோடுதித்த  தங்கை தமையனையும்

தன்னுடனே கர்ப்ப கிரஹத்தில் கூட்டிவைத்து 

கண்ணனவன் காட்சிதரும் மாட்சியினைப் பெற்றதுவாம் 

மன்னுபுகழ் பூரித் தலம் 


(பல விகற்ப இன்னிசை வெண்பா)


Dec 27, 2022

கடலோரக் காட்சி

 

கடலோரக் காட்சி 

நண்பர் அரவிந்த் பகிர்ந்து கொண்ட படம். அது பற்றி ஒரு பாடல்.

இப்பாடலுக்கு விளக்கம் தேவையில்லை.

அன்புடன் 

ரமேஷ் 





அரவம் இன்றி இரவின் மடியில் 

-----இன்னும் உறங்கும் நகரங்கள் 

இருளைப் பிளந்து கண்கள் சிமிட்டும் 

-----தெரு ஓரத்து மின்மினிகள் 

சிறிதே வெளுத்து சாம்பல் நிறத்தில்

-----சிற்றலை ததும்பும் சமுத்திரங்கள் 

அருணன் வரவை மறைக்கும் சிறுதிரை 

-----அரைச் சாம்பல்நிற மேகங்கள் 

பிறிதோர் காலை அரும்புமித் தருணம் 

-----செந்நிறச் சாயலில் ஒளிர்வானம் 

பரிதியின் கதிர்முழு வான்நிறைக்  கும்வரை  

-----மேலே மிதக்கும் மேகங்கள் 

தரிசனம் செய்ய இக்காட்சியின் அழகை 

-----இவ்விரு கண்கள் போதாதே  

Dec 22, 2022

எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை

எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை 


இந்த மார்கழித் திங்களன்று அதிகாலையில் எழுந்து கண்ணனை வணங்கக்  கூறும் ஒரு சிறு பாடல் - தமிழ் வாக்கிய வடிவமைப்பைக் குறிக்கும் சில வார்த்தைகளின் -  (எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை ) --சிலேடைப்  பயன்பாட்டுடன் !

அன்புடன் 

ரமேஷ் 





எழுமின் திசை*யில் கதிரவன் எழுமுன் 

எழுவாய் தினமுமிம் மார்கழி மாதம். 

குழுவாய்க் கோவில் சென்றே தொழுவாய்  

குழலூ திடுவோன் கண்ணன் கழலை. 


வியலகம்** வாழும் உயிர்நிலை அனைத்தும் 

உயர்நிலை அடைய வணங்கித்  ^^ துதித்தல் 

செயப்படு(ம்) பொருளை பாடுதல் அன்றி 

அயலுரை*** யேதும் பயனிலை,  இலையே !


எழுமின் திசை = கிழக்கு 

** வியலகம் = பூமி 

*** அயலுரை = பிற பேச்சுகள் 

^^  துதித்தல் செயப்படு(ம்) பொருள் = துதிக்கப்படும் இறைவன் 

Dec 7, 2022

எனக்குப் பின்னால் என்னாகும்?

 எனக்குப் பின்னால் என்னாகும்?




 

படிப்பேன் என்று வாங்கிவைத்து 
-----புதிதாய் இன்னும் படிக்காமல் 
அடுக்கி வைத்த புத்தகங்கள் 
-----எனக்குப் பின்னல் என்னாகும்?

விரைவாய் ஒருமுறை எழுதியபின் 
-----வரைவு நிலையிலே காத்திருக்கும் 
பழுதைத்  திருத்தா எழுத்துக்கள் 
-----எனக்குப் பின்னல் என்னாகும்?

வேலை செய்யும் காலத்தில் 
-----வாங்கித் தெய்த்த வெளியாடை 
இணங்கும் வண்ண வடிவமைப்பில் 
-----அழகாய் அமைந்த கீழாடை 

துணிஅடுக்கிலே இடமடைக்கும்.    
------தூக்கி எறியென்றால்   மனம் துடிக்கும்- அக்  
கோட்டும் சூட்டும் கழுத்துப்பட்டையும்      
----- எனக்குப் பின்னல் என்னாகும்?

வெளிநாடு சென்ற வேளைகளில் 
------வாங்கிய அருங்கலைச்  சின்னங்கள்*          *curios  
நிறையடுக்குகளை நிறைக்கு மிவைகள்
------ எனக்குப் பின்னல் என்னாகும்?

ஒருக்கால்  வருநாள் உதவுமென      
------- பரணையில் திரட்டிய  பொருள்களையே   
ஒருநாளும்  நான்  எடுத்ததில்லை -- இவை 
-------எனக்குப் பின்னல் என்னாகும்?


இவ்வினாக் களுக்கெலாம்  விடைகிடைக்கலாம்        
-------விடையே தெரியாக் கேள்வியிதே !
ஒவ்வோர் நாளும் எனைநான் கேட்பேன்      
-------நானே என்பின் என்னாவேன்? 


அன்புடன் 

ரமேஷ் 




Nov 23, 2022

ராமேஸ்வரம் கஃபே

ராமேஸ்வரம் கஃபே 

நானும் எனது குடியிருப்பில் இருக்கும் சில மூத்த குடிமக்களும் (senior citizens) இரண்டு நாட்களுக்கு முன் அருகிலிருக்கும் ராமேஸ்வரம் கஃபே விற்குச் சென்றிருந்தோம். அங்கு நாங்கள் உண்ட சுவைமிக்க சிற்றுண்டிகளைப் பாராட்டி ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு : சில வருடங்களுக்கு முன் சென்னை ரத்னா கஃபே யின் இட்லி சாம்பார் பற்றிய ஒரு பாடலும் இத்தத்துடன் இலவச இணைப்பு! இட்லிப் பிரியர்களுக்கு சமர்ப்பணம்! 

 https://kanithottam.blogspot.com/2019/11/blog-post_18.html









வெள்ளை வெளேர் என்று வட்ட வடிவில் சுட்டு 
நல்நறும் நெய்யை அதன்மேல் நிறையவே  நன்றாய் ஊற்றி
செவ்வண்ணப் பொடியைத் தூவி தட்டி(லி)ட்ட இட்லியின்  
                                                                                          சுவையை
எவ்வண்ணம் எடுத்துரைப்பேன் ?  சொல்வண்ணம் 
                                                                            என்னிடமில்லை!




மொறுமொறுவென மேற்போர்வை போர்த்திட்ட மெதுவடையை
சிறுமிளகைச் சேர்த்திட்ட நறுமணநெய்ப் பொங்கலினை
உறுதுணையாய் அதற்கமைந்த  சாம்பாரைச்  சட்டினியை
ஒருமுறை உண்டதன்பின் மறுமுறையும்  வேண்டிடுமே!



வறுத்தெடுத்த  கொட்டையிலே பொடிசெய்து வடித்தெடுத்த
கருத்த நிறக்  குழம்பியிலே*  கொதிக்கின்ற பாலிட்டு
பொருத்த மாய்   அளவுடனே  சக்கரையைச் சேர்த்திட்டு
நுரைததும்பக் கோப்பையிலே குடித்திடுதல்  பேருவகை. 

*குழம்பி = decotion