Search This Blog

May 24, 2021

பிரதோஷப் பாடல் - 38


பிரதோஷப் பாடல் - 38


உண்ணுதலும்,  உண்டுப்பின்  உறங்குவதும்,   தினந்தினமும்

உண்டியலின்  பொற்காசை  எண்ணுவதும்,   இச்செயல்கள்  

பண்ணுதலே  இப்பிறப்பின்  பயனென்று  எண்ணாமல் 

கண்ணுதலின்  கனலாலே   காமனை  எரித்தானை 

தண்புனலாள்  கங்கையினைத்  தலையில்  தரித்தானை 

எண்குணத்தான்  ஈசன்  எம்மானை  மனதிருத்தி 

எண்ணுவதே  நாளும்  நலம்!


அன்புடன் 

ரமேஷ் 


May 22, 2021

கோலம்

அதிகாலையில் சாலையில் நடை பழகும்போது கண்ட ஒரு காட்சியைப்  படம் பிடித்தேன் - 

என் கேமராவால் மட்டுமல்ல, கவிதையால் கூட! 

அன்புடன் 

ரமேஷ் 


கோலம் 




தள்ளாத வயதினிலும் உள்ளார்வம் குறையாமல் 

வெள்ளி முளைக்குமுன்னே பள்ளி விட்டெழுந்து 

தள்ளிக் குப்பைகளை வாசல் தெருக்கூட்டி 

தெள்ளிய நீர்பிடுத்து வாளியிலே  நிரப்பி 

உள்ளங்கை பள்ளத்தில் அள்ளி அதை எடுத்து 

மெள்ளமெல்லத் தெளித்து தெருவாசல் கூட்டிப்பின் 

எள்ளளவும் பிசகாமல் புள்ளிக் கணக்கிட்டு 

வெள்ளைப் பொடித்தூவி வரைகின்றாள் மாக்கோலம்!

May 20, 2021

மணநாள் வாழ்த்து

மணநாள் வாழ்த்து 

இன்று என் பள்ளித்தோழன் எம்.என் .ராமசாமியின் ஐம்பதாவது மணநாள்!

ராமசாமி - ரேவதி தம்பதியருக்கு என் வாழ்த்துக்கள்!

அன்புடன் 

ரமேஷ்  



பூதப் பாண்டி எனும்சிற் ரூரிலுன்  

காதல் மனைவியின் கைத்தலம் பற்றி 

அரைநூ றாண்டுகள் ஆகும் இன்னாளில் 

நிறைவுடன் வாழ நண்பனின் வாழ்த்து!


ஒருவரோ டொருவர் புரிதல் பெருக்கி 

இருமனம் இணைந்து இனிதே வாழ்ந்தீர் !

குடும்ப வாழ்வில் ஒருசில நேரம் 

இடுக்கண் வருகையில் இணைந்தெதிர் கொண்டீர்!


இருகரு விழியிணை* இருபெண் மகவை               *விழி இணை 

பெற்றே வளர்க்கும் பெரும்பே ருற்றீர் !

பெற்றவர் இருவரும் பெருங்களிப் படைய 

வெற்றிபெற் றவரும்  வாழ்வினில் சிறந்தார்!


எடுத்த கடமைகள் அனைத்தையும் நன்றாய் 

முடித்தபின் மீண்டும் தொடங்கிய வாழ்க்கை, 

உடல்திடம் மனநலம் நிம்மதி யோடு 

தொடர்ந்திட இறைவன் நல்லருள் புரிக!


May 16, 2021

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

என்னுடைய மாமி திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் எண்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நான் எழுதிப்  படித்த பாடல் இது.

அவர்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 


பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நாலிரு பத்து அகவைகளை என்    

-----மாமன் மனைவிநீ  அடைகின்ற   இன்னாள்! 

காலடி  புதியதோர்  ஆண்டில்  பதிக்கையில் 

-----கூடியே  அனைவரும் வாழ்த்துக ளுரைப்போம்! 

கலைமகள் கடைக்கண் பார்வையின் அருளால் 

-----கருநா  டகஇசைப் புலமை கண்டாய்!

புலம்பெயர் இந்தியர் பலருக் கதையே 

-----பயிர்ப்பித்  திடுமோர் நற்செயல்  செய்தாய் ! - உன்    

குலம்தழைத் தோங்கி நலம்பல பெறவும், 

-----உடலுறை  குறைகள்  சடுதியில் விலகவும்  

வாலிபம் மனதினில் என்றும் நிலைத்து 

-----குன்றா நலன்கள்  என்றும் கூடவும் , 

மேலினும் பற்பல ஆண்டுகள் கணவன் 

-----மகன்மரு மகளுடன் இணைந்து வாழவும் ,  

வேலொரு கையில் ஏந்தி இருக்கும் 

------பாலகன் முருகன் திருவருள் புரிக!


Apr 15, 2021

ரீப் மோட்டாரின் சாதனை!

ரீப் மோட்டாரின் சாதனை!

உற்பத்தி தொடங்கி ஒருவருடத்திற்குள்ளாகவே மின்கல ஊர்திகளை உற்பத்தி செய்யும் பணியில் இந்திய நிறுவனங்களிலேயே நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது நண்பன் துரைராசின் ரீப் மோட்டார் நிறுவனம்!

சுற்றுச்சூழலைச்  சிதைக்காமல் நகர் வலம் வந்து  வீதிகளைச்  சுத்தம் செய்யும் நற்பணியில் ஈடுபட்டுள்ள உர்பேசர் - ரீப் நிறுவனங்களை பாராட்டி சில மாதங்களுக்கு முன் நான் எழுதி வைத்து பதிக்க  மறந்த ஒரு கவிதை இது!

இந்தத் தருணத்தில் இக்கவிதையைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 













தெருக்குப்பை தனைக்கூட்டி துப்புரவு செய்தொழிலில் 
உருபேசர்* நிறுவனத்துக் குறுதுணையாய் இருக்கின்ற,   *urbaser
சுற்றுச் சூழலையே சற்றும் சிதைக்காமல் 
முற்றுமதைக் காக்கின்ற மின்கலத்து ஊர்திகளை,
உற்ற நம்நண்பன் துரைராசின் தொழிற்கூடம்   
உற்பத்தி செய்கின்ற நற்பணியைச் செய்கிறதாம்!
பெற்றிகள்  பலபெற்று வெற்றிகள் வந்தடைய 
கற்றவர் உன்கூட கரந்தட்டி வாழ்த்துகிறோம்!

Apr 14, 2021

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


சார்வரி ஆண்டின் ஊர்வலம் முடிந்து 

பிலவம்  உலவத் தொடங்கும் இந்நேரம் 

கலவரம் ஊட்டும் கொடுநோய்த் தாக்கம் 

உலகினை விட்டு அகலவே வாழ்த்து !


சுலபம் இல்லை இச்செயல் எனினும் 

பிலவ ஆண்டும் விலகும் வரையில் 

வாயையும்  மூக்கையும் நன்றாய் மூடி 

நோய்பர வுதலை நிறுத்திட வாழ்த்து.


முகத்தைக் கவசம் மூடிய போதும் 

அகத்தை அனைவரும் அகலத்  திறந்து 

மதமின  மொழியெனும் வேற்றுமை மறந்து 

நிதமும் நலமுடன் வாழநல் வாழ்த்து!


அன்புடன் 

ரமேஷ் 

Feb 14, 2021

வேலன்டைன் தினம்

வேலன்டைன் தினம்  

"இதழா, இலையா?" என்ற என்னுடைய பதிவிற்கு வந்த சில கருத்துக்கள் " என்ன, ரமேஷுக்கு இளமை திரும்பிகிறதா?" என்ற  ரீதியில் இருந்தன! உதாரணம் - சுந்தர், வரதராஜன் ஆகியோருடைய கருத்துக்கள்!

Initial reaction was - Ramesh is becoming Romantic! - Sundar

Your imagination has brought out your your sensuous side! - B.Varadarajan

என்னுடைய பதில் - 

With Valentine's day approaching, can Romance be far behind?

வயதானவர்கள் காதலைப் பற்றி முன்பு எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை மீள்பதிவாக பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்

ரமேஷ் 

வயதானவர்களுக்கும் வேலன்டைன் 
(அல்லது)  
தயங்காமல் காதல் செய்வீர்.
  


 


வேலன்டைன் கொண்டாட்  டங்கள்   
வாலிபர் களுக்குத்  தானா?
வயதானோர்க்  கில்லை யென்ற 
நியதிகள் எதுவும உண்டோ??

காதலை முதலில் செய்து 
சாதிகள் சேரா ததனால் 
பாதியில் அதனை விட்டு 
மீதிக்கு மாறு வோரும்  

டைம்பாஸ் மட்டும் செய்ய  
கேர்ள்பிரெண்  டோடு  தினமும் 
கடற்கரை மணலில் அமர்ந்து  
கடலையைப்  போடு வோரும்  

ஆசையாய்  சிலநாள் மட்டும் 
அன்பைப்  பரிமாறிப் பின்னால் 
பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் மாற்றி 
சிங்கிள்எனச் சொல்லும் சிலரும் 

ஒருவருக்  கொருவர்  இன்று 

வேலன்டைன் கொடுக்கும் போது 

திருமணம் முதலில்  செய்தும்  

காதலைப் பின்பே  செய்தும்  

கருத்துக்கள் முழுதும்  ஒத்துப் 

போகவே இல்லை  எனினும்  
புரிதலுடன் ஒருவர்க்கொருவர்  
விட்டுக் கொடுத்து வாழும் 

நரைமயிர் தம்பதிகளுமே  

வெட்கத்தை விட்டு இன்று 
வருடத்திற் கொருநா ளேனும் 
வேலன்டைன் அளித்துக்  கொள்வீர்*.

வேலன்டைன் கொண்டாட் டங்கள்   
வாலிபர்க்கு மட்டும் இல்லை 
வயதாகிப் போனால்  என்ன? 
தயங்காமல் காதல் செய்வீர்.